மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 27)

"கூடாரவல்லி' என்று அழைக்கப்படும் பாசுரம் இது. கீழ்ப்பாசுரத்தில் நோன்புக்கு வேண்டிய உபகரணங்கள் பேசப்பட்டன.
மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 27)

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 27

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்றன்னைப்

பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்

ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவார

கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

பாடியவர் - பவ்யா ஹரி

விளக்கம்:  

"கூடாரவல்லி' என்று அழைக்கப்படும் பாசுரம் இது. கீழ்ப்பாசுரத்தில் நோன்புக்கு வேண்டிய உபகரணங்கள் பேசப்பட்டன. ஆயர் பெண்களைப் பார்த்து, "நோன்பியற்றினால் பரிசுண்டு என்கிறீர்களே, என்ன பரிசு?' என்று கண்ணன் வினவியிருக்கக்கூடும். "பகைவர்களை வெல்கிற கோவிந்தனே, உன்னைப் பாடுவதனால் எங்களுக்குக் கிட்டுகிற பரிசுகளைக் கூறுகிறோம், கேள்' என்று வரிசைப்படுத்துகிறார்கள். கைவளைகள், தோள் வளைகள், செவிப் பூக்கள், தோடுகள், பாதக்கடகங்கள் முதலிய பலவகையானஅணிமணிகளைப் பெறுவோம். புத்தாடைகளை உடுப்போம். பின்னர், உன்னையும் சேர்த்துக்கொண்டு பால் சோறிட்டு, அதனில் நெய் மிக்கு வழியும்படியாக உன்னோடு இருந்து உண்போம். இதுவே எங்கள் உள்ளத்திற்கும் உணர்வுகளுக்கும் குளிர்ச்சி' என்றுரைக்கிறார்கள். 

பாசுரச் சிறப்பு:

"கூடாரை வெல்லுதல்' குறித்து இப்பாசுரம் பேசுவதாலும், பாசுரத்தின் பிற்பகுதியில் கூடியிருந்து குளிர்வதைப் பற்றிக் குறிப்பிடப்படுவதாலும், இந்தப் பாசுரத்திற்கே "கூடாரவல்லி' என்னும் பெயர் ஏற்பட்டுவிட்டது. "கூடாரைவெல்லி' என்பது இவ்வாறு மருவியிருக்கலாம்; அல்லது  "கூடாரம் வல்லி' (கூடாரம்}கூட்டம்) என்பதுமாக இருக்கலாம். இந்த நாளுக்கே, கூடாரவல்லித் திருநாள் என்றுதான் பெயர். தங்களுக்குக் கிடைக்கக்கூடிய பரிசுகளை விவரித்து உரைப்பதாகவே இப்பாசுரம் அமைகிறது. ஐந்து வகையான அணிகலன்கள் கூறப்படுகின்றன. கை வளை } கைக்கு அழகு சேர்ப்பது, கைகூப்புதல்; தோள் வளை - தோளுக்கு அழகு சேர்ப்பது, வைணவ இலச்சினையாகச் சங்கு சக்கரப் பொறி ஒற்றிக் கொள்ளுதல்; தோடு } செவிக்கு முதல் அழகு, மந்திரத்தைச் செவி மடுத்தல்; செவிப் பூ } செவிக்குக் கூடுதல் அழகு, மந்திரத்தின் பொருளை உணர்ந்து உபதேசம் கேட்டல்; பாடகம் } பாதங்களுக்கு அழகு, கோயில்களையும் ஆசார்ய இருப்பிடங்களையும் சுற்றி வருதல். செவி மடலின் கீழ்ப்பகுதியில் அணிவது தோடு; மேல் பகுதியில் கூடுதலாக அணிவது செவிப்பூ. ஆடை என்பது உறை. பால் சோறு என்பது உடைமை; சோற்றுக்குரியவன் சோற்றைப் பயன் கொள்ளுதல் போல், உடைமையை உடையவன் எவ்வாறேனும் பயன் கொள்ளலாம்.  ஒவ்வொரு உயிரும் எம்பெருமானுக்கு உறை என்பதும், "உன்னுடைய உடைமைகளான நாங்கள், உனக்குத் தொண்டு செய்வதில் குளிர்ச்சி பெறுகிறோம்' என்பதும் உள்பொருள் விளக்கங்கள். அணிகலன் அணிவோம், ஆடை உடுப்போம் என்று கூறிய ஆண்டாள், சோறு உண்போம் என்று முடிக்காமல், கூடியிருத்தல் குறித்தே கூறுகிறாள். இப்பரிசுகளைக் காட்டிலும் கண்ணனின் அணுக்கமே முக்கிய நோக்கம் என்பது இதன் தெளிவு. 2ஆவது பாசுரத்தில் ஆணையிடப்பட்ட பாலும் நெய்யும் உண்ணாத நோன்பு, நோன்பின் நோக்கம் நிறைவேற இருப்பதால், பால்சோறு உண்ணும் நிலையை அடைந்துவிட்டது. 

******

ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி - பாடல் 7

அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு

அரிதென எளிதென அமரரும் அறியார்;

இதுஅவன் திருவுரு, இவன்அவன் எனவே

எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்

மதுவளர் பொழில்திருவுத்தர கோச

மங்கையுள் ளாய்! திருப்பெருந்துறை மன்னா!

எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்

எம்பெருமான் பள்ளி எழுந்தரு ளாயே.

பாடலை விளக்குபவர் - இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

பாடியவர்கள் - ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்

விளக்கம்:  

பள்ளியெழுச்சி பாடி, எங்களைப் பணி கொள்ள வேண்டும் என்று விண்ணப்பம் சாற்றுகிற பாடல். இறையனுபவத்தின் சுவை கூறப் பெறுகிறது. இறைவனைப் பழச்சுவை என்று சிலரும் அமுது என்று சிலரும் காண்டற்கும் அறிவதற்கும் அரிது என்று சிலரும் இல்லையில்லை, எளிது என்று சிலரும் விவரிக்கிறார்கள். ஆனால், வானுலகத் தேவர்கள்கூட இறைவனை அறியமாட்டார்கள். "தேன்மலர்ச் சோலைகள் சூழ்ந்த உத்தரகோசமங்கை நகரில் உள்ளவனே, திருப்பெருந்துறை இறைவனே, இதுதான் இறைவுரு என்றும் இதுதான் இறைவன் என்றும் நாங்கள் கண்டு களிக்கும்படியாகத் தோன்றி அருளியவனே, எங்களை அடிமையாகக் கொள்ளும் வழி எது? அந்த வழியில் எம்மைப் பணிகொள்ள வேண்டும்' என்பது இப்பாடலின் பிரார்த்தனை. 

பாசுரச் சிறப்பு:

பழம் சுவையானது; அமுதமும் சுவையானது. ஆயின், பழத்தின் சுவையையும் அமுதின் சுவையையும் வார்த்தைகளில் விவரிக்கச் சொன்னால் முடியுமோ? எப்படி அது முடியாதோ, அப்படியே இறைவனையும் இறையனுபவத்தையும் விவரிக்க முடியாது. அறிவு கொண்டு இறைவனை அறிந்துகொள்ளலாம் என்றால், அதுவும் சாத்தியமில்லை. தேவர்களேஅறியமாட்டாத இறைவன், மானுடர்களான நாங்கள் உணர்ந்து கொள்ளும்படியாகத் திருவுருவம் காட்டியும் செம்மை காட்டியும் எங்களை ஆண்டு கொள்கிறானே, எங்கள் பேறு எத்தகையது என்னும் பெருமை இப்பாடலில் தொனிக்கிறது. திருப்பெருந்துறையிலும் உத்தரகோச மங்கை என்னும் தலத்திலும், உருவம் கொண்டு காட்சி கொடுத்துச்சிவனார் மாணிக்கவாசகருக்கு அருளினார். தமக்கு நேர்ந்த அனுபவங்களை அப்பெருமகனார் உரைக்கிறார் போலும்!  எது எம்மைப் பணிகொள்ளும் வழியோ? என்னும் வினாவை எழுப்புவது, எந்த வழியிலாயினும் பணி கொள்க என்று வேண்டுவதே ஆகும். சாதாரணமாகச் சிவபூஜைக்கு ஆகாத தாழம்பூ, உத்தரகோசமங்கைச் சிவனாருக்குச் சார்த்தப்படுகிறது என்பதும் எவ்வகையிலேனும் இறை அடிமை செய்ய வேண்டும் என்னும் விண்ணப்பமும் நினைத்து உணர வேண்டியவை. இறையனுபவம் மாத்திரமல்ல, அனுபவங்கள் யாவும் இறைவனே என்பதை உணர்த்துகிற பாடல்.  

பாடல் சிறப்பு:

பால் சுவையையும் நெய்ச் சுவையையும் கடவுளுக்கேற்றி ஆண்டாள் பாட, அதே நாளில் பழச்சுவையையும் அமுதச்சுவையையும் ஆண்டவனார்க்கு மணிவாசகர் ஏற்றுகிறார். அருளாளர் இருவரும் ஒரே வழியைக் காட்டுவது அரும்பெரும் சிறப்பு.

-டாக்டர் சுதா சேஷய்யன் 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com