வயிற்றுநோய் போக்கும் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில்

வயிற்று நோயுள்ளவர்கள் இத்தல இறைவனை முறையாக வணங்கி நோயிலிருந்து விடுபடலாம். 
உற்சவர் அக்னீஸ்வரர் - சௌந்தரநாயகி
உற்சவர் அக்னீஸ்வரர் - சௌந்தரநாயகி


தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைத் தரணியில் இரு திருக்காட்டுப்பள்ளிகள் உள்ளன. மேற்கிலும், கிழக்கிலும் உள்ள இத்தலங்கள் தேவாரம் பாடல் பெற்ற முக்கியச் சிவதலங்கள்.

மேற்கே தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டத்தில் இருப்பது மேலைத் திருக்காட்டுப்பள்ளி. இப்போது திருக்காட்டுப்பள்ளி என அழைக்கப்படுகிறது. கிழக்கில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டத்தில் உள்ள மற்றொரு தலம் இப்போதும் கீழத் திருக்காட்டுப்பள்ளி என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

ராஜ கோபுரம்
ராஜ கோபுரம்

மேலத் திருக்காட்டுப்பள்ளியில் (திருக்காட்டுப்பள்ளி) உள்ள செளந்தரநாயகி அம்பாள் உடனுறை அருள்மிகு அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 72 ஆவது தலம் இது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 9ஆவது தலம்.

 கொடி மரம்
 கொடி மரம்

இத்தலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சங்க காலத்துக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இத்தலத்தில் பிற்காலத்தில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகிய நாயன்மார்கள் பாடியுள்ளனர். இத்திருக்கோயிலில் சோழ மன்னர்களாலும், பாண்டிய மன்னர்களாலும், விஜயநகர மன்னர்களாலும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.

சுவாமி சன்னதி பிரகாரம்
சுவாமி சன்னதி பிரகாரம்

இந்த ஊரில் நான்கு புறங்களிலும் கோட்டை மதில்கற்களால் சூழப் பெற்றிருந்தது. இதற்குச் சான்றாக தெற்கு, மேற்கு மதில் கோட்டை மதிலாகவே இப்போதும் காட்சியளிக்கிறது. மேலும், இந்த ஊரில் திருநாவுக்கரசரின் தேவாரத்தைkd காது கொடுத்துக் கேட்ட கிழக்கு கோட்டை வாயில் பகுதியில் செவிசாய்த்த கோட்டை விநாயகர் சன்னதி உள்ளது. இதன் நினைவாக இந்த விநாயகர் கோயிலின் அருகில் அப்பர் சுவாமி மடமும் அன்பர்களால் அமைக்கப்பட்டுள்ளது.

நர்த்தன விநாயகர்
நர்த்தன விநாயகர்

மேலும், இங்கு எழுந்தருளியுள்ள அழகமர் மங்கை (செளந்தரநாயகி) கோயிலைச் செம்பியன் பல்லவராயன் என்பவன் சோணாடு வழங்கிய சுந்தரபாண்டியன் காலத்தில் கட்டி கி.பி. 1223 ஆம் ஆண்டில் குடமுழுக்குச் செய்துள்ளான் என இக்கோயிலிலுள்ள கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. இப்பல்லவராயன் கல்வெட்டில் திருக்காட்டுப்பள்ளி உடைய நாயனாருக்குத் திருக்காமக் கோட்டமுடைய பெரிய நாச்சியார் பிரதிஷ்டை என்ற தொடர் வருகிறது. எனவே, காமக்கோட்டமுடைய பெரிய நாச்சியார் என்பது காமாட்சி அம்மனைக் குறிக்கிறது. காமாட்சி அம்மன் எழுந்தருளியுள்ள காமக்கோட்டம் ஒன்பதில், செளந்தரநாயகி அம்பாள் எழுந்தருளி இருக்கும் திருக்காட்டுப்பள்ளியும் ஒன்று.

பள்ளத்தில் இருக்கும் நந்திகேசுவரர் 
பள்ளத்தில் இருக்கும் நந்திகேசுவரர் 

இறைவன்

இத்தலத்தின் இறைவன் அழலாடியப்பர், தீயாடியப்பர், வன்னி வனநாதர், அக்னீஸ்வரர், திருக்காட்டுப்பள்ளி உடையார் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். மூலவர் அக்னீஸ்வரர் கருவறை தரைமட்டத்திலிருந்து பள்ளமான பகுதியில் இருக்கிறது.

அக்னீஸ்வரர் சன்னதி முகப்பு
அக்னீஸ்வரர் சன்னதி முகப்பு

மூலவர் அக்னீஸ்வரர் சுயம்புவாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சிவலிங்கம் உருவத்தில் சிறியது. லிங்கத்தின் சிரசு மீது 5 நாகங்கள் படமெடுக்கும் தோற்றத்துடன் உள்ளது. சற்றுத் தாழ்வான பள்ளத்தில் உள்ள மூலவரை வெளியிலிருந்து தரிசனம் செய்யும் விதமாக அமைந்துள்ளது.

இறைவி

இத்தலத்திலுள்ள இறைவி அழகமர் மங்கை, வார்கொண்ட முலையாள், செளந்தரநாயகி என அழைக்கப்படுகிறார். கோயிலில் அம்மன் சன்னதியையே முதலில் காண முடிகிறது.

சௌந்தரநாயகி அம்பாள் சன்னதி முகப்பு
சௌந்தரநாயகி அம்பாள் சன்னதி முகப்பு

தல விருட்சம்

வன்னி மரம், வில்வ மரம்.

தீர்த்தம்

அக்னி தீர்த்தம், காவிரி நதி தீர்த்தம், தீர்த்த கிணறு.

கிணறு வடிவில் உள்ள அக்னி தீர்த்தம்
கிணறு வடிவில் உள்ள அக்னி தீர்த்தம்

சிறப்பு மூர்த்தி

யோக குரு பகவான்

யோக குரு பகவான்
யோக குரு பகவான்

புராணச் சிறப்பு

அக்னி பகவான் யாகங்களில் உண்ட நெய்யால், அவருக்கு வயிற்று வலியும், பொருள்களைச் சுட்டெரித்த பாவமும் ஏற்பட்டது. இவற்றை நீங்க வேண்டி இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனை அக்னி பகவான் வேண்டி வந்தார். அப்போது, இறைவனின் கட்டளைப்படி, இத்திருக்கோயிலின் கிழக்கே அக்னி தீர்த்தம் என்கிற தீர்த்தத்தை ஏற்படுத்தி, அத்தீர்த்த நீரால் இறைவனை நீராட்டி, வயிற்று நோயையும் பாவங்களையும் நீங்கப் பெற்றார் அக்னி பகவான்.

தாழ்வாக உள்ள கருவறை விமானம்
தாழ்வாக உள்ள கருவறை விமானம்

மேலும், எம்மால் தோற்றுவிக்கப்பட்ட அக்னி தீர்த்தத்தில் நீராடி உம்மை வழிபட்டால், அவர்களது பாவங்களையும், வயிற்று நோயையும் போக்கி, அவர்களுக்கும் உம் திருவடியை அடையும் பேற்றினையும் அருள வேண்டும் என வேண்டிக்கொண்டார். அக்னி தேவனின் வேண்டுகோளை இறைவனும் ஏற்று, வேண்டிய வரங்களைத் தந்தருளினார். அன்று முதல் இத்தலம் அக்னீஸ்வரம் என்ற பெயர் பெற்றது. எனவே, வயிற்று நோயுள்ளவர்கள் இத்தல இறைவனை முறையாக வணங்கி நோயிலிருந்து நீங்கி வளம் பெறலாம்.

சோமாஸ்கந்தர்
சோமாஸ்கந்தர்

வழிபட்டுப் பேறு பெற்றவர்கள்

இக்கோயிலிலுள்ள அக்னீஸ்வர சுவாமியை இந்திரன், திருமால், பிரம்மன், சூரியன், அக்னிதேவன், பகீரதன், உறையூர் சோழனின் முதல் மனைவி ஆகியோர் வழிபட்டுப் பேறு பெற்றனர். பிரம்மனுக்கும் திருமாலுக்கும் சுவாமி அக்னி வடிவில் காட்சி தந்த தலம் இது.

பிரம்மன்
பிரம்மன்

உரோமரிஷி சித்தர் வழிபட்ட தலம்

பண்டைய காலச் சித்தர்களில் ஒருவரான உரோமரிஷி என்பவர் இத்திருத்தலத்தில் இறைவனை வழிபட்டதற்குச் சான்றாக மூன்றாம் பிரகாரத்தில் உரோமரிஷி சித்தர் இறைவனை மலர்கொண்டு பூஜை செய்வது போன்ற விக்ரகம் அமைந்துள்ளது. இது, உரோமரிஷி இத்திருத்தலத்தில் இருந்து இறைவனை வழிபட்டதற்குச் சான்று. அதுபோல, பிரம்மதேவன் மகா சிவராத்திரி நாளன்று மூன்றாம் காலத்தில் இத்திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள அக்னீஸ்வரரை வழிபட்டு இறையருள் பெற்றுள்ளார் என்பதும் தெரிய வருகிறது.

உரோமரிஷி சித்தர்
உரோமரிஷி சித்தர்

சோழர் காலத்தில் கோயிலை அமைத்து இறைவனை வழிபட்டோரின் வடிவத்தை, சிவலிங்கத்தை அவர்கள் வழிபடுவதுபோல மூர்த்தம் அமைத்து, அக்கோயில்களில் வைத்துள்ளனர். அதுபோலவே இத்திருக்கோயிலிலும் உரோமரிஷி வழிபடுவதுபோல சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. எனவே, இங்குள்ள தீயாடியப்பரும் (அக்னீஸ்வரசுவாமி), அகத்தியரின் சீடாராகிய உரோமரிஷி சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கோயிலின் உரோமரிஷி சித்தர் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.

தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி

பிரதமை திதி தோஷ நிவர்த்தி தலம்

இத்திருக்கோயில் பிரதமை திதி தோஷ நிவாரண தலமாக விளங்கி வருகிறது. பிரதமை திதியின் அதிபதி அக்னி தேவன். அவன் வழிபட்ட தலமாதலால், அந்தத் திதியில் பிறந்தவர்கள் இத்திருக்கோயிலை வழிபட்டால், பிரதமை திதி தோஷம் விலகும். எனவே, இதை பிரதமை திதி தோஷ நிவர்த்தி தலம் எனவும் அழைக்கப்படுகிறது.

 அர்த்தநாரீஸ்வரர்
 அர்த்தநாரீஸ்வரர்

கல்வியில் மேன்மை பெற

இத்திருக்கோயிலின் சிறப்பு மூர்த்தியாக யோக குருபகவான் திகழ்கிறார். இவருக்கு வாரந்தோறும் வியாழக்கிழமையில் 5 நெய் தீபங்களை ஏற்றி வழிபட்டால் கல்வியில் மேன்மை பெறலாம். மேலும் திருமணத் தடை விலகுகிறது என்ற நம்பிக்கையும் பக்தர்களிடையே உள்ளது. இதற்காக கோயிலின் முகப்பில் தீப மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அங்கு விளக்கேற்றி வழிபடலாம்.

 தீப மண்டபம் 
 தீப மண்டபம் 

திருவிழாக்கள் மற்றும் வழிபாடு

இக்கோயிலில் காலைச் சந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தயாமம் என நான்கு கால பூஜைகள் நடைபெற்று, வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

துர்க்கையம்மன்
துர்க்கையம்மன்

இங்கு நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா 10 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. பங்குனி மாத வளர்பிறையில் கொடியேற்றம் செய்யப்பட்டு, 10 நாள்களும் சுவாமி, அம்பாள் வீதி புறப்பாடு நடைபெறும். இதன் பிறகு பெளர்ணமி நாளன்று பங்குனி உத்திரத் திருவிழாவாகக் காவிரியாற்றில் வெகு விமரிசையாக இன்னிசைக் கச்சேரி, வாண வேடிக்கைகளுடன் நடைபெறுகிறது. இறைவன் இறைவியைத் திருமணம் செய்து கொண்ட நாள் பங்குனி உத்திரமாகும். எனவே இந்தப் பங்குனி உத்திரத் திருவிழா வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது.

கால பைரவர்
கால பைரவர்

இறைவி செளந்தரநாயகி அம்மன் பிறந்த ஊர் அருகிலுள்ள நாகாச்சி கிராமம். எனவே, மாசி மாதத்தில் மக நட்சத்திரத்தில் அக்னீஸ்வரர் செளந்தரநாயகியுடன் நாகாச்சி என்ற ஊரில் எழுந்தருளி அருள்பாலிக்கும் விழாவும் சிறப்புடையது. இதில், பஞ்சமூர்த்தி சுவாமிகளுடன் சுவாமி, அம்பாள் நாகாச்சி கிராமத்தில் ஒரு நாள் இரவு தங்கும் வைபவம் நடைபெறும்.

பஞ்ச மூர்த்திகள்
பஞ்ச மூர்த்திகள்

இத்திருவிழாவை நாகாச்சி கிராம மக்களும் வெகு விமரிசையாகக் கொண்டாடுவர். தவிர, மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு, தமிழ் வருடப் பிறப்பு, சித்ரா பெளர்ணமி, ஆடி அமாவாசை, ஆடிப்பெருக்கு, திருக்கார்த்திகை, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட மாதாந்திர விழாக்களும் நடைபெறுகின்றன.

சைவ சமய ஆச்சார்யார்கள்
சைவ சமய ஆச்சார்யார்கள்

செல்லும் வழி

இத்திருக்கோயிலுக்கு நான்கு திசைகளிலிருந்தும் செல்லலாம். கிழக்கில் தஞ்சாவூரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. தெற்கே பூதலூரிலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், மேற்கே திருச்சி, ஸ்ரீரங்கத்திலிருந்து கல்லணை வழியாக 32 கி.மீ. தொலைவிலும், வட கிழக்கே திருவையாற்றிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும் இத்திருத்தலத்தை அடையலாம். ஆனால், எந்தத் திசையிலிருந்து வந்தாலும் ஊர் எல்லையிலேயே கோயில் கோபுரம் தெரியும். மேலும், ஊருக்குள் சென்ற பிறகு பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே இக்கோயில் உள்ளது.

 நவகிரகங்கள்
 நவகிரகங்கள்

பண்டைய திருக்குளம் இருந்த இடம் காலப்போக்கில் பேருந்து நிலையமாகிவிட்டது. எனவே, அக்னி தீர்த்தம் என்ற திருக்குளம் சுருங்கி கிணறாக உள்ளது. இந்தக் கிணறு பேருந்து நிலைய முகப்பில் உள்ள விநாயகர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது.

சூரிய பகவான்
சூரிய பகவான்

திருச்சி, தஞ்சாவூர், பூதலூர், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து இத்திருக்கோயிலுக்குப் பேருந்து அல்லது கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் சென்றடையலாம். பேருந்து வசதி எந்நேரமும் உள்ளது. ரயிலில் வருபவர்கள் பூதலூர் ரயில் நிலையத்தில் இறங்கிச் செல்லலாம். விமானத்தில் வருபவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கி செங்கிப்பட்டி, பூதலூர் வழியாக இத்திருத்தலத்தை அடையலாம்.

கோயில் வளாகத்திலுள்ள கோசாலை
கோயில் வளாகத்திலுள்ள கோசாலை

முகவரி

அருள்மிகு அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில்
திருக்காட்டுப்பள்ளி அஞ்சல்,
பூதலூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் - 613 104.

மேலும் விவரங்களுக்கு: 04362 - 287487 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com