பித்ருதோஷம் போக்கும் திண்ணக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் திருக்கோயில்

திண்ணக்கோணம் அருள்மிகு கோவிந்தவல்லி அம்மன் உடனுறை சுயம்பு பசுபதீசுவரர் திருக்கோயில், பித்ருதோஷம் போக்கும் பரிகாரத்தலமாக  விளங்கி வருகிறது.
அருள்மிகு கோவிந்தவல்லி அம்மன் உடனுறை சுயம்பு பசுபதீசுவரர்
அருள்மிகு கோவிந்தவல்லி அம்மன் உடனுறை சுயம்பு பசுபதீசுவரர்

"நெற்குன்றம் ஓத்தூர் நிறை நீர் மருகல், நெடுவாயில் குறும்பலாநீடு திரு
நற்குன்றம் வலம்புரம் நாகேச்சுரம், நளிர் சோலையும் சேனைமாகாளம் வாய்மூர்
கற்குன்றம் ஒன்றேந்தி மழை தடுத்த, கடல் வண்ணனும் மாமலரோனுங் காணாச்
சொற்கு என்றும் தொலைவிலாதான் உறையும், குடமூக்கு என்று சொல்லி குலாவுமினே''
  (2-39-9)

என்று திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற வைப்புத்தலமான திருநெற்குன்றம் என்றழைக்கப்படும் திண்ணக்கோணம் அருள்மிகு கோவிந்தவல்லி அம்மன் உடனுறை சுயம்பு பசுபதீசுவரர் திருக்கோயில், பித்ருதோஷம் போக்கும் பரிகாரத்தலமாக  விளங்கி வருகிறது.

நான்கு வேதங்களும் கோயில் கருவறையிலுள்ள நான்குத் தூண்களாகக் கருதப்படும் சிறப்பு, வசந்த நவராத்திரிப் பெருவிழா நடைபெறும் திருக்கோயில், முன்னிரு கால்கள் மடிந்த நிலையிலுள்ள நந்தியெம்பெருமான்,  சிறப்பு வாய்ந்த சொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதி போன்ற பல்வேறு சிறப்புகளை இக்கோயில் கொண்டிருக்கிறது.

முதல் பராந்தகச் சோழர் காலத்து கல்வெட்டுகளில் திருவிரற்குன்றம், திருநற்குன்றம் என்றும், சுவாமியின் பெயர் திருமாடத்து கூனனார், சடனாண்டார் என்றும் குறிக்கப்பட்டுள்ளதாக கல்வெட்டு அறிஞர்கள் கூறுவர். தற்போது இந்த ஊர் திருநெற்குன்றம், திண்ணக்கோணம் என்றழைக்கப்பட்டு வருகிறது.

திண்ணக்கோணம் அருள்மிகு சுயம்பு பசுபதீசுவரர் திருக்கோயில் நுழைவுவாயில் கோபுரம்.
திண்ணக்கோணம் அருள்மிகு சுயம்பு பசுபதீசுவரர் திருக்கோயில் நுழைவுவாயில் கோபுரம்.

கோயிலின் வரலாற்றுச் சிறப்பு

முன்பு ஒரு சமயத்தில் கைலாயத்தில் பரமேசுவரன் தன் தேவிக்கு வேதசிவாகமப் பொருளை உணர்த்திக் கொண்டிருந்தபோது,  அம்பிகையின் கவனம் மாறும்படியாக காமதேனு அவ்வழியே செல்ல, தேவியின் கவனம் அந்த காமதேனு மீது மாறுவதை உணர்ந்து கோபமடைந்த ஈசன், அம்பிகையை நோக்கி "பூலோகத்தில் திருநெற்குன்றம் என்னும் திண்ணக்கோணம் அடைந்து  பங்குனி மாத வளர்பிறையில் வரும் வசந்த நவராத்திரி என்னும் ஒன்பது ராத்திரி நாள்கள் நீ தவமிருக்கும்போது, நான்  பசுவாக உனக்கு காட்சியளிப்பேன். அதன் பின் என்னை வந்து நீ அடைவாயாக" எனக் கூறி, பார்வதிதேவிக்கு காட்சியளித்த வரலாறு கொண்ட திருக்கோயில் இது.

அதன்படி மானுட உருவம் கொண்டு இடையர் குலத்தில் அம்பிகை பிறந்து,  ஈசனை நோக்கி தவமிருந்து வரம் பெற்றதும் இக்கோயிலில்தான்.

அருள்மிகு சுயம்பு பசுபதீசுவரர் திருக்கோயில் கருவறை விமானம்.
அருள்மிகு சுயம்பு பசுபதீசுவரர் திருக்கோயில் கருவறை விமானம்.

இந்த ஊரைச் சேர்ந்த இடையன், குன்றுப் பகுதிக்கு மேய்ச்சலுக்காக மாடுகளை ஓட்டிச் சென்று வரும்போது, ஒரு பசு மட்டும் பால் கறப்பதில்லை. அதற்கான காரணத்தை அறியும் போது, மேய்ச்சல் முடிந்து திரும்பி வரும் போது  ஒரு குறிப்பிட்ட பசு குன்றின் மேல் பால் பொழிவதைக் கண்ட இடையன்,  அதைத்  தடியால் அடிக்க அந்த பசு இறந்தது.

அன்றிரவு அந்த பகுதியை ஆண்ட பராந்தகச் சோழ மன்னர் கனவில் வந்த இறைவன், குறிப்பிட்ட அந்த இடத்தில் கோயில்கட்ட வேண்டும். கோயில் கட்டி லிங்கம் பிரதிஷ்டை செய்யும் நாளில் லிங்கத் திருமேனியை நிருதி மூலையில் பிரதிஷ்டை செய்ய, அசரீரி கருவறையில் சுயம்பு மூலவராய் நானே எழுந்தருள்வேன் என்றாராம்.

அவ்வாறாக பராந்தகச் சோழ மன்னரால் கட்டப்பட்ட இத்திருக்கோயில், பல்வேறு சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. கருவறையில் முகவாயைத் தரையில் வைத்துப் படுத்திருக்கும் பசுவின் திருமேனி (பசுமாடு படுத்திருக்கும் தோற்றத்தில் கர்ப்பகிரஹத்தை) இக்கோயில் கொண்டுள்ளது.

திண்ணக்கோணம் அருள்மிகு சுயம்பு பசுபதீசுவரர்.
திண்ணக்கோணம் அருள்மிகு சுயம்பு பசுபதீசுவரர்.

இறைவன் சுயம்பு பசுபதீசுவரர்

பசு - பதி என்றால்  உயிர்களுக்கெல்லாம் தலைவர் என்று பொருளாம். மற்ற திருக்கோயில்களில் அந்தந்த திருக்கோயிலின் லிங்கத் திருமேனியில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஆனால், திண்ணக்கோணம் கோயிலில் இறைவன் சுயம்பு பசுபதீசுவரர் முகவாயைத் தரையில் வைத்துப் படுத்திருக்கும் பசுவின் திருமேனியாய்  (அதாவது  யானை படுத்திருக்கும் நிலையில் பின்பகுதியில் உள்ளது போன்று) எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். மேலும் கருவறையில் லிங்கத் திருமேனியும் எழுந்தருளப்பட்டிருக்கிறது.

திண்ணக்கோணம் அருள்மிகு கோவிந்தவல்லி அம்மன் உடனுறை சுயம்பு பசுபதீசுவரர் திருக்கோயில்  முழுத் தோற்றம்.
திண்ணக்கோணம் அருள்மிகு கோவிந்தவல்லி அம்மன் உடனுறை சுயம்பு பசுபதீசுவரர் திருக்கோயில்  முழுத் தோற்றம்.

தட்சிண கேதார்நாத்

பசுவின் திருமேனி கொண்டு முகவாயைத் தரையில் வைத்து படுத்திருக்கும் நிலை போன்று சிவபெருமான் கேதார்நாத்தில்தான் காட்சியளிக்கிறார்.

எனவே கேதார்நாத் சிவாலாயத்துக்குச் செல்ல முடியாதவர்கள், திருநெற்குன்றம் கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டால், அங்குச் சென்று வந்ததன் பலன் கிடைக்கும் என்றும், இத்திருக்கோயிலை தட்சிண கேதார்நாத் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.

அருள்மிகு சுயம்பு பசுபதீசுவரர் திருக்கோயில் கருவறை விமானம்.
அருள்மிகு சுயம்பு பசுபதீசுவரர் திருக்கோயில் கருவறை விமானம்.

வேத சிவாகமப் பொருளை உணர்த்தும் போதுதான், தேவியின் கவனம் காமதேனு மீது சென்றதால் பரமேசுவரனால் சாபம் பெற்ற தேவி, இக்கோயிலில் தவமிருந்து இறைவனை மீண்டும் அடைந்தார். அந்த வகையில் நான்கு வேதங்களின் பெருமைகளையும் உணர்த்தும் வகையில், இக்கோயிலின் கருவறைத் தூண்கள் நான்கும் வேதங்கள் நான்கை எடுத்துரைப்பதாகக் கூறப்படுகின்றன. மேலும் இக்கோயிலின் கர்ப்பகிரஹம் கஜபிர்ஷட கர்ப்பகிரஹம் எனவும் அழைக்கப்படுகிறது.

பித்ருக்களால் விடப்பட்ட சாபம், தோஷம், களத்ர தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும் பரிகாரத்தலமாக திண்ணக்கோணம் சுயம்பு பசுபதீசுவரர் திருக்கோயில் விளங்குகிறது.

அமாவாசை தினத்தில் இக்கோயில் இறைவன் சுயம்பு பசுபதீசுவரர், இறைவி கோவிந்தவல்லி அம்மனுக்கு அபிஷேக, அர்ச்சனைகள் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினால் அவர்களது சாபம் நீங்கும் என்பது பரிகாரமாகும்.

அதன்படி, மாதந்தோறும் அமாவாசை தினத்தில் இறைவன், இறைவிக்கு அபிஷேக, அர்ச்சனைகளும், மற்ற சன்னதிகளில் அர்ச்சனைகளும் செய்து, தங்களது பரிகாரத்தை நிவர்த்தி செய்து, பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்குகின்றனர். இக்கோயிலில் மாதந்தோறும் இந்த பரிகார வழிபாடு நடைபெற்று வருகிறது.

அருள்மிகு கோவிந்தவல்லி அம்மன்
அருள்மிகு கோவிந்தவல்லி அம்மன்

இறைவி கோவிந்தவல்லி அம்மன்

அழகே உருவாக எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார் இறைவி கோவிந்தவல்லி அம்மன். சிவகாமசுந்தரி, கோவர்த்தனாம்பிகை அம்மன் போன்ற பல்வேறு பெயர்களும் இத்திருக்கோயில் இறைவிக்கு உண்டு.

கோவிந்தவல்லி என்றால் உயிர்களுக்கெல்லாம் தலைவி என பொருள் உண்டாம். சிவபெருமானால் சாபம் விட்டு, மானுட வேடம் பூண்டு,  பின்னர் தவமிருந்து தேவி அவரிடம் இணைந்த திருக்கோயில் என்பதால், பங்குனி மாத வளர்பிறையில் வசந்த நவராத்திரி உற்ஸவம் இறைவிக்கு நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் கோவிந்தவல்லி அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிப்பார். வசந்த நவராத்திரி உற்ஸவம் இக்கோயிலில் தொடர்ந்து வெகுசிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

கோவிந்தவல்லி அம்மன் சன்னதி முன் மண்டபம்.
கோவிந்தவல்லி அம்மன் சன்னதி முன் மண்டபம்.

ஸ்ரீஓமாம் சித்தர் அவதாரத் திருக்கோயில்

திண்ணக்கோணம், கன்னிகோணம், பரிதிகோணம் என்பவை  சூரியபகவான் இந்த பூ மண்டலத்தில் வர்ஷிக்கும் மூன்று முக்கிய கோணச் சக்திகளாகும்.

கன்னிகோண சக்திகள் காலையில் சூரியன் உதிக்கும் போது பூமியைத் தழுவும். திண்ணக்கோணம் என்பது நண்பகலில்  சூரியன் தலைக்கு நேராக செங்குத்தாக இருக்கும் போது தோன்றும் ஆதவ சக்திகளாகும். பரிதிகோணம் என்பது சூரியபகவான்  பகல் பொழுதின் நிறைவாக மீளூம் கோண சக்திகளாகும். இதில் திண்ணக்கோண சக்திகள் பொங்கிப் பெருகும் நேரமே அபிஜித் முகூர்த்தம் எனப்படுகிறது. இத்தகைய மங்கள சக்திகள் நிறைந்த அபிஜித் முகூர்த்தத்தில் தோன்றியவர்தான் ஸ்ரீஓமாம்சித்தர். இந்த சித்தர் தோன்றிய அவதாரத் திருக்கோயில் திண்ணக்கோணம்.  

ஆதிலிங்கேசுவரர் - சாமரக்கன்னிகா
ஆதிலிங்கேசுவரர் - சாமரக்கன்னிகா

ஓமாம் சித்தர் திண்ணக்கோணம் அருகிலுள்ள ஆமூர் ஸ்ரீரவீசுவரர் திருக்கோயிலில் கன்னி மூலையில் சிவலிங்க மூர்த்தியில் ஐக்கியம் அடைந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.

முன்னிரு கால்கள் மடிந்த நிலையில் காட்சியளிக்கும் நந்தியெம்பெருமான்.
முன்னிரு கால்கள் மடிந்த நிலையில் காட்சியளிக்கும் நந்தியெம்பெருமான்.

முன்னிரு கால்கள் மடிந்த நிலையில் நந்தியெம்பெருமான்

நந்தி இல்லாத சிவாலயங்கள் இல்லை. கோயிலின் நுழைவுவாயில் பகுதியிலோ,  இறைவன் சன்னதிக்கு நேர் எதிரில் கொடிமண்டபம் அருகிலோ நந்தியெம்பெருமான் எழுந்தருளியிருப்பார்.  அதிகாரநந்தி, பிரதோஷ நந்தி என வெவ்வேறு சிறப்புகளில் அவர் எழுந்தருளியிருப்பார்.

திண்ணக்கோணம் கோயில் பாடல்
திண்ணக்கோணம் கோயில் பாடல்

ஆனால், திண்ணக்கோணம் கோயிலில் முன்னிரு கால்களும் மடிந்த நிலையில், இறைவன் சன்னதிக்கு நேர் எதிரில் நந்தியெம்பெருமான் எழுந்தருளியிருக்கிறார். மேலும் அவரது வலது காதும் மடிந்து காணப்படுவதும் சிறப்புக்குரியதாகும்.

தொடர்ந்து 11 பிரதோஷங்களில் பங்கேற்று, நந்தியெம்பெருமானை மனமுருகி வேண்டினால், நினைத்த காரியங்கள் அனைத்தும் நடைபெறும் என்பது பக்தர்களின் கூற்றாக உள்ளது.

ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்.
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்.

ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்

பொதுவாக சிவாலயங்களில் பைரவரை வழிபாடு செய்த பின்னர், மற்ற சன்னதிகளுக்குச் சென்று வழிபட வேண்டும் எனக் கூறுவர்.  ஒவ்வொரு கோயிலுக்கும் ஏற்றவாறு பைரவர், கால பைரவர் என  எழுந்தருளியிருப்பர்.

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பை அடுத்து,  திண்ணக்கோணம் அருள்மிகு சுயம்பு பசுபதீசுவரர் திருக்கோயிலில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைவரர் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.

ஸ்ரீசண்டிகேசுவரர்.
ஸ்ரீசண்டிகேசுவரர்.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. பில்லி, சூனியம், ஏவல் நீங்க, தனம், தானியம் கிடைக்க இப்பூஜையில் பங்கேற்று வழிபாடு செய்தால் உரிய பலன் கிடைக்கும்  என்பது நம்பிக்கை. மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியன்று சொர்ண ஆகர்ஷண  பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

அகத்தியர்.
அகத்தியர்.

அகத்தியர்  சன்னதி

இக்கோயிலில் பல ஆண்டுகள் அகத்தியர் தவமிருந்து, இறைவனை வழிபட்டிருக்கிறார்.  இறைவனும், இறைவியும் அவருக்கு காட்சியளித்திருக்கின்றனர். இக்கோயிலில் சிவசக்தி வேலவன் சன்னதிக்கு அருகில் அகத்தியர் சன்னதி அமைந்துள்ளது.

அருள்மிகு லிங்கோத்பவ வலம்புரி விநாயகர்.
அருள்மிகு லிங்கோத்பவ வலம்புரி விநாயகர்.

லிங்கோத்பவ வலம்புரி விநாயகர்

தன்னுடைய தந்தையின் உருவமான லிங்கத்தைக் கொண்டு, விநாயகர் இக்கோயிலில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.  அதனால்தான் இவர் லிங்கோத்பவ வலம்புரி விநாயகர் என அழைக்கப்படுகிறார். 4 அடி உயரத்தில் புடைப்புச் சிற்பத்தில் லிங்கோத்பவ வலம்புரி விநாயகர் காட்சியளிக்கிறார். இவைத் தவிர,  கோயிலின் கோஷ்டத்தில் ஸ்ரீ நர்த்தன கணபதியும், சுவாமி சன்னதிக்கு அருகிலும் கணபதியும் எழுந்தருளியுள்ளனர்.

வள்ளி-தெய்வசேனா சண்முக வேலவன்.
வள்ளி-தெய்வசேனா சண்முக வேலவன்.

சிவசக்தி வேலவன்

தமிழ்க் கடவுளாம்  முருகப்பெருமான், வள்ளி - தெய்வசேனா சமேதராய் சிவசக்தி வேலவன் என்ற திருநாமம் கொண்டு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். பக்தர்கள் வேண்டும் வரங்களைத் தந்தருளும் வேலவனை ஏராளமான பக்தர்கள் தரிசித்துச் செல்கின்றனர்.

வீணா தட்சிணாமூர்த்தி.
வீணா தட்சிணாமூர்த்தி.

வீணா தட்சிணாமூர்த்தி

குருவுக்கு அதிபதியான தட்சிணாமூர்த்தி, கோயிலின் கோஷ்டத்தில் அமைந்துள்ளார்.  அவருக்கு வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

அதே நேரத்தில் கோயிலின் உள்பிரகார மண்டபப் பகுதியில் வீணையுடன் தட்சிணாமூர்த்தி எழுந்தருளியிருப்பதும் தனி சிறப்புக்குரியது. நின்ற கோலத்தில் வீணா தட்சிணாமூர்த்தி எழுந்தருளியிருக்கும் நிலையில், அவர்  யோக குரு என அழைக்கப்படுகிறார்.

ஸ்ரீதுர்காம்பிகை
ஸ்ரீதுர்காம்பிகை

துர்க்கை அம்மன்

இக்கோயிலின் கோஷ்டத்தில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் சன்னதியில் வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகுகால பூஜை நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் பங்கேற்று, தங்களது வேண்டுதல்களை நிறைவேறக் கோரி வணங்கிச் செல்கின்றனர்.

லட்சுமியுடன் எழுந்தருளியுள்ள லட்சுமி நாராயணர்.
லட்சுமியுடன் எழுந்தருளியுள்ள லட்சுமி நாராயணர்.

லட்சுமியுடன் லட்சுமி நாராயணர்

சுயம்பு பசுபதீசுவரர் சன்னதி கருவறை முன்புள்ள கோபுரத்தின் இடதுபுறத்தில்  சமயக் குரவர்கள் நால்வரும், ஆதிலிங்கேசுவரர்,  சாமரக் கன்னிகாவும் எழுந்தருளியுள்ளனர்.  ராஜாக்களுக்கு சாமரம் வீசும் பணிப்பெண்கள் போல, இறைவனுக்கு சாமரம் வீசும் கோலத்தில் இவர் எழுந்தருளியிருக்கிறார். இதனால் இவர் சாமரக்கன்னிகா என அழைக்கப்படுகிறார்.

சங்கரநாராயணர், லட்சுமியுடன் எழுந்தருளியுள்ள லட்சுமி நாராயணர், சாஸ்தா,  வீணா தட்சிணாமூர்த்தி.
சங்கரநாராயணர், லட்சுமியுடன் எழுந்தருளியுள்ள லட்சுமி நாராயணர், சாஸ்தா,  வீணா தட்சிணாமூர்த்தி.

கருவறை சன்னதியின் வலதுபுறத்தில் சங்கர நாராயணர்,  லட்சுமியுடன் லட்சுமி நாராயணர்,  சாஸ்தா,  வீணா தட்சிணாமூர்த்தி ஆகியோர் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.

கோயிலில் எழுந்தருளியுள்ள சப்த மாதாக்கள்.
கோயிலில் எழுந்தருளியுள்ள சப்த மாதாக்கள்.

மேலும் கோயிலில் சப்தமாதாக்கள், நவக்கிரகங்கள் சன்னதி  அமைந்துள்ளன. இவைத் தவிர சனிபகவான் தனி சன்னதி கொண்டும்,  சூரியன், சந்திரப்  பகவான்கள் தனித்தனி சன்னதி கொண்டும் இக்கோயிலில் எழுந்தருளியிருப்பது தனிச் சிறப்புக்குரியது.

சூரிய பகவான் - சந்திர பகவான்
சூரிய பகவான் - சந்திர பகவான்

சனிக்கிழமைகளில் சனீசுவர பகவானுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.

வெளிகோஷ்டத்தில் எழுந்தருளியுள்ள பிச்சாடன மூர்த்தி.
வெளிகோஷ்டத்தில் எழுந்தருளியுள்ள பிச்சாடன மூர்த்தி.

பிச்சாடன மூர்த்தி

வழக்கமாக சிவாலயங்களின் கோஷ்டத்தில் பிரம்மா எழுந்தருளுவதுதான் வழக்கம். ஆனால்,  திண்ணக்கோணம் கோயிலின் கோஷ்டத்தில் பிச்சாடன மூர்த்தி மட்டுமே எழுந்தருளியிருப்பதும் தனி விசேஷம். மேலும், இறைவன் சன்னதியின் பின்பகுதியில் அர்த்தநாரீசுவரரும் எழுந்தருளியுள்ளார்.

கருவறை சன்னதிக்கு பின்பகுதியில் எழுந்தருளியுள்ள அர்த்தநாரீசுவரர்.
கருவறை சன்னதிக்கு பின்பகுதியில் எழுந்தருளியுள்ள அர்த்தநாரீசுவரர்.

திருப்பைஞ்ஞீலி அருள்மிகு ஞீலிவனேசுவரர் திருக்கோயிலிலும் இதுபோன்றே, இறைவன் சன்னதிக்கு பின்பகுதியில் அர்த்தநாரீசுவரர் எழுந்தருளி, காட்சியளித்து வருகிறார்.

கோயிலின் தல விருட்சம் வில்வ மரம்.
கோயிலின் தல விருட்சம் வில்வ மரம்.

கோயிலின் தல விருட்சமாக வில்வம் அமைந்துள்ளது.  அது மட்டுமல்லாது, 27 நட்சத்திரங்களுக்குரிய மரக்கன்றுகளும் திருக்கோயில் வளாகத்தில்  அமைந்துள்ளன.

கோயிலின் வெளிப் பிரகாரத்தில் உள்ள 27 நட்சத்திரங்களுக்கான மரக்கன்றுகள்.
கோயிலின் வெளிப் பிரகாரத்தில் உள்ள 27 நட்சத்திரங்களுக்கான மரக்கன்றுகள்.

திருவிழாக்கள்

வசந்த நவராத்திரி உற்ஸவம் இக்கோயிலில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதைத் தவிர அகத்தியர் பூஜை ஆயில்ய நட்சத்திரத்தில் நடத்தப்பட்டு வருகிறது. மாசி  மகம், விஜயதசமி வழிபாடு, கார்த்திகைத் தீபத் திருவிழா  போன்ற திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.

வெளிகோஷ்டத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி.
வெளிகோஷ்டத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி.


மாதந்தோறும் பிரதோஷ, பௌர்ணமி வழிபாடு, சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு,  சங்கடஹரசதுர்த்தி,  கிருத்திகை, கிரிவலம் போன்ற வழிபாடுகள் மாதந்தோறும் நடைபெற்று வருகின்றன. இவைத் தவிர 108 கோ பூஜையும் நடத்தப்பட்டு வருகிறது.

திருக்கோயிலின் வெளிப் பிரகாரப் பகுதி.
திருக்கோயிலின் வெளிப் பிரகாரப் பகுதி.

நடைத்திறப்பு 

இக்கோயிலில்  இரு கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 8 மணிக்குத் திறக்கப்படும் கோயிலின் நடை இரவு 7.30 மணிக்கு மூடப்படும்.

ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் சன்னதி
ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரின் சன்னதி

எப்படிச் செல்வது?

திருச்சி விமான நிலையத்திலிருந்து சுமார் 46 கி.மீ. தொலைவிலும், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 38 கி.மீ. தொலைவிலும் திண்ணக்கோணம் அமைந்துள்ளது.

நவக்கிரக சன்னதி
நவக்கிரக சன்னதி

தெற்கு, மத்திய மாவட்டங்களிலிருந்து கார், வேன் போன்ற வாகனங்களில் வருபவர்கள் திருச்சி மத்திய, சத்திரம் பேருந்து நிலையங்கள், திருவானைக்கா, நெ.1 டோல்கேட்,  நொச்சியம்,  சிறுகாம்பூர், வாய்த்தலை, குணசீலம், ஆமூர், ஏவூர் வழியாக திண்ணக்கோணம் கோயிலை வந்தடையலாம்.

அருள்மிகு சுயம்பு பசுபதீசுவரர் திருக்கோயில் கருவறை விமானம்.
அருள்மிகு சுயம்பு பசுபதீசுவரர் திருக்கோயில் கருவறை விமானம்.

சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் நெ.1. டோல்கேட், நொச்சியம்,  சிறுகாம்பூர்,  வாய்த்தலை, குணசீலம், ஆமூர் வழியாக கோயிலை வந்தடையலாம்.

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர், கோவை, ஈரோடு போன்ற மேற்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் முசிறி வந்து, அங்கிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள திண்ணக்கோணத்துக்கு வேளகாநத்தம், ஏவூர் வழியாக வரலாம். ரயில், விமானங்கள் மூலம் வருபவர்கள் இதே வழித்தடத்தில் வாகனங்களில் வரலாம்.

பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கும் கோயிலின் குருக்கள் ஆர். பிரகதீசுவரன்.
பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கும் கோயிலின் குருக்கள் ஆர். பிரகதீசுவரன்.

தொடர்புக்கு

திண்ணக்கோணம் அருள்மிகு சுயம்பு பசுபதீசுவரர் திருக்கோயிலுக்கு வருபவர்கள் கோயில் அர்ச்சகர்கள் சோ. ராமராஜ் குருக்களை  94437 89557, பிரகதீசுவரன் குருக்களை  8056850650 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கோயில் வளாகத்தில் நடைபெற்ற கோ பூஜை (கோப்புப் படம்).
கோயில் வளாகத்தில் நடைபெற்ற கோ பூஜை (கோப்புப் படம்).

தொடர்பு முகவரி

அருள்மிகு சுயம்பு பசுபதீசுவரர் உடனுறை கோவிந்தவல்லி அம்மன் திருக்கோயில்,
திண்ணக்கோணம், 
முசிறி வட்டம்,
திருச்சி மாவட்டம்.

படங்கள்: எஸ். அருண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com