பிரம்மஹத்தி தோஷம் போக்கும் திருத்தலையூர் சப்தரிஷீசுவரர் திருக்கோயில்

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், திருத்தலையூரில் அமைந்துள்ளது அருள்மிகு குங்கமாம்பிகை அம்மன் உடனுறை சப்தரிஷீசுவரர் திருக்கோயில்.
அருள்மிகு குங்குமாம்பிகை அம்மன் உடனுறை சப்தரிஷீசுவரர்
அருள்மிகு குங்குமாம்பிகை அம்மன் உடனுறை சப்தரிஷீசுவரர்

பிரம்மஹத்தி தோஷம் போக்கும் மற்றும் திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், திருத்தலையூரில் அமைந்துள்ள அருள்மிகு குங்கமாம்பிகை அம்மன் உடனுறை சப்தரிஷீசுவரர் திருக்கோயில்.

தனது  நெற்றிக்கண்ணைத் திறந்தபடி ராவணனுக்கு சிவபெருமான் காட்சியளித்தது, சப்த ரிஷிகள் வழிபட்டது,  புரூரவச் சக்கரவர்த்தி தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை போக்கிக் கொண்டது போன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்டது இக்கோயில்.

தெப்பக்குளத்துடன் காணப்படும் திருத்தலையூர் அருள்மிகு சப்தரிஷீசுவரர் திருக்கோயில்
தெப்பக்குளத்துடன் காணப்படும் திருத்தலையூர் அருள்மிகு சப்தரிஷீசுவரர் திருக்கோயில்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் திருத்தலையூர் அமைந்துள்ளது. ராமாயணக் காலத்துக்கு முந்தைய காலத்துக்கோயில் எனக் கூறப்படுகிறது.

கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலின் நேர் எதிரிலேயே தீர்த்தக்குளம்  பிரம்மாண்டமாய் அமைந்திருப்பதும் சிறப்புக்குரியது. மேலும் அகோரத் திருக்கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.

ராவணன் வணங்கிய சிவலிங்கம் அமைந்துள்ள கோபுரத்தின்  மேல்பகுதியில் காணப்படும்  பத்துத்தலை ராவணனின் சிற்பங்கள்
ராவணன் வணங்கிய சிவலிங்கம் அமைந்துள்ள கோபுரத்தின்  மேல்பகுதியில் காணப்படும்  பத்துத்தலை ராவணனின் சிற்பங்கள்

கோயிலின் வரலாற்றுச் சிறப்பு

ராவணன் தனது தலைகளைத் திருகி யாகத்தில் வீசியதால், ஆதியில் திருகுதலையூர் என்றழைக்கப்பட்டு வந்த இந்த ஊர், காலப்போக்கில் மருவி திருத்தலையூர் என்றானது. இதற்கும் வரலாறு இருக்கிறது.

இலங்கையிலிருந்து ராவணன் கயிலாயம் நோக்கி கிளம்பி வரும் வழியில், இப்பகுதி வனாந்திரமாக இருப்பதைக் கண்டு, இங்கேயே தங்கி விட்டார்.  இப்பகுதியில் யாகம் வளர்த்து, சிவபெருமானை வழிபட்டுக் கொண்டிருந்த சப்தரிஷிகள், பத்துத்தலை ராவணனைக் கண்டவுடன் பயந்து நடுங்கி, மருதமரத்தில் ஐக்கியமாகிவிடுகின்றனர். அந்த மரமே இத்திருக்கோயிலின் தலவிருட்சமாக மாறியது.

அருள்மிகு குங்குமாம்பிகை அம்மன் - அருள்மிகு சப்தரிஷீசுவரர்
அருள்மிகு குங்குமாம்பிகை அம்மன் - அருள்மிகு சப்தரிஷீசுவரர்

ரிஷிகள் வழிபட்ட லிங்கத்தை நான் வழிபடுவதா என எண்ணிய ராவணன்,  உடனடியாக புற்று மண்ணெடுத்துப் புதிதாக அவன் கைகளாலேயே ஒரு பெரிய சிவலிங்கத்தை உருவாக்கி வழிபடத் தொடங்கினான்.

தனக்கு  பரமேசுவரனே (சிவபெருமான்)  நேரில் தரிசனம் தர வேண்டும் என்று யாகங்கள் வளர்த்துத் தொடர்ந்து வழிபட்டான் ராவணன்.  ஆனால், பரமேசுவரனோ தரிசனம் தரவில்லை. நாள்கள் கடந்தும் யாகங்கள் தொடர்ந்தன. மிகவும் வெறுத்துப் போன ராவணன், ஒரு கட்டத்தில் தனது பத்துத் தலைகளில் ஒவ்வொன்றாகத் திருகி யாகத்தில் வீசினான். அப்படி ஒன்பது தலைகளையும் திருகி வீசி, ஒரு தலை மட்டுமே மிஞ்சியது. அப்போதும்  பரமேசுவரன் காட்சித் தராததால், தனது பத்தாவது தலையையும் திருகி யாகத்தில் வீச முயற்சித்தான் ராவணன்.

கோயில் இறைவன் சன்னதி நுழைவுவாயில் மேல்பகுதியில் அமைந்துள்ள காளை வாகனத்தில் எழுந்தருளிய  அருள்மிகு குங்குமாம்பிகை அம்மன் உடனுறை  சப்தரிஷீசுவரரை வணங்கும் சப்தரிஷிக்களின் சிற்பங்கள் 
கோயில் இறைவன் சன்னதி நுழைவுவாயில் மேல்பகுதியில் அமைந்துள்ள காளை வாகனத்தில் எழுந்தருளிய  அருள்மிகு குங்குமாம்பிகை அம்மன் உடனுறை  சப்தரிஷீசுவரரை வணங்கும் சப்தரிஷிக்களின் சிற்பங்கள் 

மனம் கசிந்து போன பரமேசுவரன் (சிவபெருமான்), தனது நெற்றிக்கண்ணைத் திறந்தபடி ராவணனுக்கு காட்சியளித்தார். அதோடு ராவணனால் திருகி வீசப்பட்ட ஒன்பது தலைகளையும் சிவபெருமானே வரமளித்து ராவணனுக்கு ஒட்டவைத்து, மீண்டும் அவனைப் பத்துத் தலை ராவணனாக உருவாக்கினர்.

தான் பிடித்து வைத்த புற்றுமண்ணினால் ஆன சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டு கயிலாயம் புறப்பட்டுச் சென்றான் ராவணன். இத்தகையை சிறப்புகளைக் கொண்டது திருத்தலையூர் சப்தரிஷீசுவரர் திருக்கோயில்.

அருள்மிகு சப்தரிஷீசுவரர் - மூலவர்
அருள்மிகு சப்தரிஷீசுவரர் - மூலவர்


இறைவன் சப்தரிஷீசுவரர்

சிவலிங்க வடிவில் அருள்மிகு சப்தரிஷீசுவரர்  கிழக்கு நோக்கிய சன்னதியில்  எழுந்தருளியுள்ளார்.  கருவறையில் சுயம்பு மூர்த்தமாக ரிஷிகள் வழிபட்ட சிறிதான சிவலிங்கம். கருவறை மூலவராக எளிமையாகக் காட்சியளிக்கிறார். அத்ரி, ப்ருகு, புலஸ்தியர், வசிஷ்டர், கௌதமர், மரிசி, ஆங்கிரஸர் என சப்த ரிஷிகள் வழிபட்டதால், இத்திருக்கோயில் இறைவன் சப்தரிஷீசுவரர் என்றழைக்கப்படுகிறார்.

ராவணன் வழிபட்ட சிவலிங்க சன்னதி முன்பு எழுந்தருளிய நந்தியெம்பெருமான்
ராவணன் வழிபட்ட சிவலிங்க சன்னதி முன்பு எழுந்தருளிய நந்தியெம்பெருமான்

தனக்கு ஏற்பட்ட பிரும்மஹத்தி தோஷம்போக்க திருவண்ணாமலையில் புரூரவச் சக்கரவர்த்தி நீராடி இறைவனை வேண்டியபோது, திருத்தலையூரிலுள்ள பிரம்ம குளத்தில் நீராடி என்னை வந்து தரிசிப்பாயாக, அசீரிரியாக உனக்கு காட்சியளித்து உனது பிரும்மஹத்தி தோஷத்தை போக்குவேன் என சிவபெருமான் கூறியதாகவும், அதன்படி புரூரவச் சக்கரவர்த்தி வந்து வழிபட்டு, தனது தோஷத்தை போக்கியது இக்கோயிலில்தான். இதனால் பிரும்மஹத்தி தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து, இறைவனையும், இறைவியையும் வழிபட்டுச் சென்றால்,  அவர்களது தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

அருள்மிகு குங்குமாம்பிகை அம்மன்.
அருள்மிகு குங்குமாம்பிகை அம்மன்.


இறைவி குங்குமாம்பிகை அம்மன்

இறைவன் சப்தரிஷீசுவரர் சன்னதி அமைந்த பிரகாரத்திலேயே தெற்கு நோக்கிய சன்னதியில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார் அருள்மிகு குங்குமாம்பிகை அம்மன்.  தன்னை நாடிவரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றித்தரும் சாந்த சொரூபியாக, அழகின் உருவமாய் குங்குமாம்பிகை அம்மன் காட்சியளிக்கிறார்.

மேலும் திருமணத் தடையுள்ளவர்கள் இக்கோயில் இறைவனை வணங்கி வழிபட்டு, அர்ச்சனை செய்து சென்றால் அவர்களது திருமணத் தடை நீங்கி விரைவில் கைகூடும் என்பது பலன் பெற்ற பக்தர்களின் கூற்று.  ஒரே நேரத்தில் இத்திருக்கோயிலில் இறைவனையும், இறைவியையும் தரிசித்துப் பலன் பெறலாம்.

ராவணன் வழிபட்ட சிவலிங்கம்
ராவணன் வழிபட்ட சிவலிங்கம்


ராவணன் வழிபட்ட சிவலிங்கம்

சிவபெருமானை நோக்கி தவம் புரிந்த ராவணனுக்கு கடுந்தவத்துக்குப் பிறகு சிவபெருமான், தனது நெற்றிக்கண்ணைத் திறந்து காட்சியளித்தது  இத்திருக்கோயிலில்தான்.

இதையொட்டி கோயில் உள்பிரகார மண்டபத்தில் தனி சன்னதி கொண்டு அமைந்துள்ளது ராவணன் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம்.  பத்துத் தலை ராவணன் உருவாக்கிய சிவலிங்கம் என்பதால், சற்று பெரிதாகவே இருக்கிறது. மேலும் ராவணன் வழிபட்ட சிவலிங்கம் கொண்ட கோபுரத்தின் மேல்பகுதியில் பத்துத் தலைகளைக் கொண்டு ராவணன் எழுந்தருளியிருப்பது போன்று சிற்பங்களும் எழுந்தருளப்பட்டிருக்கின்றன.

அருள்மிகு உருத்திர பசுபதி நாயனார் - அகோர வீரபத்திரர் - விநாயகர்.
அருள்மிகு உருத்திர பசுபதி நாயனார் - அகோர வீரபத்திரர் - விநாயகர்.

அகோர வீரபத்திரர்

திருத்தலையூர் திருத்தலம் அகோரத் தலமாகும். அகோஸ்தரம் மந்திரம் ஜபித்து, யாகம் வளர்த்துதான், இந்தத் திருக்கோயிலில் அமர்ந்து சிவபெருமானை அழைத்தான் ராவணன்.

ராவணனின் மிகக் கடுமையான தவத்தின் விளைவாக இறுதியில் சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து காட்சியளித்தார். சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து அகோர வீரபத்திரர் உதித்த தலம் இது. அதனாலேயே இறைவன் சன்னதியின் வலதுபுறத்தில் அகோர வீரபத்திரர் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

உருத்திர பசுபதி நாயனார் அவதாரத் தலம்

அறுபத்து மூவர் என்றழைக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவரான உருத்திர பசுபதி நாயனார் சோழ மண்டலத்தில்  அவதரித்த ஊர் திருத்தலையூர். இந்த ஊரில் அந்தணர் குலத்தில் பசுபதியார் என்னும் பெயரில் அவதரித்தார். சிவபெருமானின் திருவடிகளில் நிறைந்த அன்பினையே பெருஞ்செல்வமெனக் கொண்டிருந்தார்.

உருத்திர பசுபதி நாயனார்
உருத்திர பசுபதி நாயனார்

இவர்தம் அருந்தவப் பெருமையையும், வேதமந்திர நியதியின் மிகுதியையும் விரும்பிய இறைவன், இந்நாயனாருக்கு தீதிலாச் சிவலோக வாழ்வினை நல்கினார்.  உருத்திர பசுபதி நாயனார் தான் அவதரித்த இந்த திருத்தலத்திலேயே முக்தியும் அடைந்தார்.

புரட்டாசி மாதம் அசுவினி நட்சத்திரத்தன்று உருத்திர பசுபதி நாயனாரின் குருபூஜைவிழா கோயிலில் நடைபெற்று வருகிறது. இந்த நாயனார், அகோர வீரபத்திரருக்கு அருகிலேயே காட்சியளிக்கிறார்.

அருள்மிகு குங்குமாம்பிகை அம்மன் சன்னதி கோபுரம்
அருள்மிகு குங்குமாம்பிகை அம்மன் சன்னதி கோபுரம்

மூன்று விரல்களை மடக்கியபடி காட்சியளிக்கும் திருமால் 

துளசி செடியைத் தலைகீழாகப் பிடித்துக் கொண்டு, கிழவன் தோற்றத்தில் காணப்பட்ட திருமால், ராவணனிடம் உன்னுடைய ஆயுள்காலமான மூன்றரைக்கோடி ஆண்டில் நீ ஏற்கெனவே வரமாகப் பெற்றது மூன்றுகோடி ஆண்டுகளே. மீதமுள்ள அரை கோடி ஆண்டை சிவனாரிடமிருந்து வரமாகப் பெற்று வா என்றார்.

அதையொட்டி ராவணன் கடுந்தவம் மேற்கொண்டான். பிரதட்சணமான சிவபெருமானிடம் தனக்கு அரைக்கோடி ஆண்டு ஆயுள் வேண்டும் எனத் தவறுதலாகக் கேட்டு வரமாகப் பெற்றான்.

மூன்று விரல்களை மடக்கியபடி எழுந்தருளியுள்ள திருமால் 
மூன்று விரல்களை மடக்கியபடி எழுந்தருளியுள்ள திருமால் 

இதனால் ஏற்கெனவே வரமாகப் பெற்றிருந்த மூன்றுகோடி ஆண்டுகளை இழந்தான். இதை குறிக்கும் விதமாக, இத்திருக்கோயிலில் மூன்று விரல்களை மடக்கியபடி திருமால் தனி சன்னதி கொண்டு உள்பிரகார மண்டபத்திலும், கருவறை சன்னதி கோஷ்டத்திலும் காட்சியளிக்கிறார் திருமால்.

அருள்மிகு வள்ளி - தெய்வசேனா சமேத சுப்பிரமணியர்
அருள்மிகு வள்ளி - தெய்வசேனா சமேத சுப்பிரமணியர்

கோயில் கருவறை சன்னதி கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, சண்டிகேசுவரர் எழுந்தருளியுள்ளனர். இதைத் தவிர, திருக்கோயிலின் வெளிகோஷ்டத்தின் தென்மூலையில் மிக உயரமாக விநாயகரும், அடுத்து திருமாலும், அதைத் தொடர்ந்து வள்ளி - தெய்வ சேனா சமேத சுப்பிரமணியரும் தனித்தனி சன்னதி கொண்டு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.  

கோயில் பிரகாரத் தூணில் காணப்படும் ஆஞ்சனேயர் சிற்பம்
கோயில் பிரகாரத் தூணில் காணப்படும் ஆஞ்சனேயர் சிற்பம்

வடமூலையில்  ஒரே கல்லால் ஆன ஜேஷ்டாதேவியின் சிற்பங்களும் எழுந்தருளப்பட்டிருக்கின்றன. மேலும் நவக்கிரக சன்னதி,  பைரவர் சன்னதி, தூணில் எழுந்தருளிய ஆஞ்சனேயர் சிற்பம் ஆகியவையும் அமைந்துள்ளன.

கோயிலின் தல விருட்சமான மருதமரம் 
கோயிலின் தல விருட்சமான மருதமரம் 


சிறப்பு வாய்ந்த தல விருட்சம்


மற்ற கோயில்களைக் காட்டிலும் இத்திருக்கோயில் தல விருட்சம் சிறப்புக்குரியதாக இருக்கிறது.  இங்கு ஸ்தல விருட்ச பூஜையும்  விசேஷமானது என்பர். ராவணனின் உருவத்தைக் கண்டு அஞ்சிய சப்தரிஷிகள், தங்களைக்காத்துக் கொள்ள சிவபெருமானை வேண்டி மருதமரமாக மாறி நின்றனர். அவர்களுக்கு காட்சியளித்த சிறப்புக்குரிய தலவிருட்சம், மிகப்பெரிய மரமாக அமைந்திருக்கிறது. அடிபாகத்தில் முண்டும், முடிச்சுகளுமாகக்  காணப்படுகிறது. அவை அனைத்தும் ரிஷியின் ஐக்கியமான பாகங்கள் என்று கூறப்படுகிறது.

மற்ற மரங்களின் விதைகளைக் கொண்டு  மற்றொரு இடத்தில் போட்டால் அங்கு மரக்கன்று உருவாகி, மரமாகும் என்பதுதான் பொதுவானது. ஆனால், இந்த திருக்கோயிலில் உள்ள மருதமரத்தை வேறு எங்கு நடவு செய்தாலும், அது மரமாகாது எனக் கூறப்படுகிறது.

தெப்பக்குளத்துடன் காணப்படும் திருத்தலையூர் அருள்மிகு சப்தரிஷீசுவரர் திருக்கோயில்
தெப்பக்குளத்துடன் காணப்படும் திருத்தலையூர் அருள்மிகு சப்தரிஷீசுவரர் திருக்கோயில்


கோயில்  தெப்பக்குளம்

பொதுவாக கோயிலுக்குள்ளேயே, வெளிப் பிரகாரம் அல்லது  அருகில்தான் கோயிலின்  தீர்த்தம் அல்லது தெப்பக்குளம் அமைந்திருக்கும். ஆனால், திருத்தலையூரில் கோயிலுக்கு நேர் எதிரிலேயே மிகப் பெரிய அளவில் அமைத்திருக்கிறது தெப்பக்குளம். இந்த குளத்தில் தவளைகளின் சப்தமும் இருக்காது என்பது சிறப்புக்குரியது.

உள் பிரகார மண்டபம்
உள் பிரகார மண்டபம்


குடமுழுக்கு

எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் குடமுழுக்கு நடத்தப்பட்ட நிலையில்,  அதன் பின்னர் நடைபெறவில்லை. இந்நிலையில் மீண்டும் திருப்பணிகள் தொடங்கப்பட்டு, பழைமைமாறாமல் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு,  2020, மார்ச் மாதம் மீண்டும் இக்கோயில் குடமுழுக்கு நடத்தப்பட்டது.

அருள்மிகு தட்சிணாமூர்த்தி
அருள்மிகு தட்சிணாமூர்த்தி

எப்படிச் செல்வது?

தெற்கு, மத்திய மண்டல மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் மத்திய, சத்திரம் பேருந்து நிலையங்கள், திருவானைக்கா, நெ.1.டோல்கேட், நொச்சியம், மண்ணச்சநல்லூர், திருவெள்ளறை, பெரமங்கலம் வழியாக புலிவலம் வந்து, அங்கிருந்து தண்டலை வழியாக திருத்தலையூர் கோயிலை வந்தடையலாம்.

இதே மார்க்கத்தில் வருபவர்களும், வடமாவட்டங்கள், அரியலூர், கடலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்களும்  நெ.1. டோல்கேட்,  நொச்சியம்  வந்து அதன் பின்னர்  துடையூர், சிறுகாம்பூர், வாய்த்தலை, குணசீலம், ஆமூர், ஏவூர், திண்ணக்கோணம், புத்தூர், தண்டலை வழியாக திருத்தலையூர்  வரலாம்.

அருள்மிகு சண்டிகேசுவரர் - கால்களை மடக்கிய நிலையில் கோலம்
அருள்மிகு சண்டிகேசுவரர் - கால்களை மடக்கிய நிலையில் கோலம்

கரூர், திருப்பூர்,கோயம்புத்தூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் முசிறி வந்து, அங்கிருந்து த.புத்தூர் வழியாக தண்டலை சென்று திருத்தலையூரை சென்றடையலாம். 

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

இக்கோயில்  காலை 8.30 மணி முதல் மாலை 6.30 வரை திறந்திருக்கும்.

அருள்மிகு துர்க்கையம்மன்
அருள்மிகு துர்க்கையம்மன்

இக்கோயிலுக்கும் சென்றுவரலாம்.. பித்ரு தோஷம் நீக்கும் பூவாளூர் திருமூலநாதர் திருக்கோயில்

தொடர்புக்கு

திருத்தலையூர் சப்தரிஷீசுவரர் திருக்கோயிலுக்கு வருபவர்கள்  என் . மகுடேசுவரன் குருக்களை 94867 55279,  எம். சப்தரிஷி குருக்களை 970329346 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

குங்குமாம்பிகை அம்மன் சன்னதிக்கு நேரெதிரில் எழுந்தருளியுள்ள நந்தியெம்பெருமான்
குங்குமாம்பிகை அம்மன் சன்னதிக்கு நேரெதிரில் எழுந்தருளியுள்ள நந்தியெம்பெருமான்

தொடர்பு முகவரி

அருள்மிகு குங்குமாம்பிகை அம்மன் உடனுறை சப்தரிஷீசுவரர் திருக்கோயில்,
திருத்தலையூர்,
முசிறி வட்டம்,
திருச்சி மாவட்டம்.

படங்கள் : எஸ். அருண்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com