எம பயம் நீக்கும் திருவையாறு ஐயாறப்பர் திருக்கோயில்

விஷஜந்து, பில்லி, சூனியம் இருப்பதாகக் கருதுவோர் ஆட்கொண்டாருக்கு குங்கிலியம் வாங்கிப் போட்டால் தீவினை அண்டாது. இக்கோயிலில்  சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் செய்துகொள்வது மிகவும் சிறப்பு.
ஐயாறப்பர் - அறம் வளர்த்த நாயகி
ஐயாறப்பர் - அறம் வளர்த்த நாயகி

மிகவும் பழமை வாய்ந்தது திருவையாறு அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில். இக்கோயிலில் ஐயாறப்பர் எழுந்தருளியுள்ள காவிரிக் கோட்டம் உள்ளது. தெற்கே தென் கயிலாயம், வட திசையில் வட கயிலாயம் என ஒரே இடத்தில் மூன்று சிவன் கோயில்கள் அமைந்துள்ளன.

கோயில் கிழக்கு வாயில் கோபுரம்
கோயில் கிழக்கு வாயில் கோபுரம்

இதைச் சுற்றி பெரிய திருமதில்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஏறத்தாழ 15 ஏக்கர் பரப்புள்ள இத்திருக்கோயில், பரப்பளவில் தஞ்சைப் பெரியகோயிலைவிட மூன்று மடங்கு பெரியது.

அம்மன் கோயில் கோபுரம்
அம்மன் கோயில் கோபுரம்

ஐயாறப்பர் எழுந்தருளியிருக்கும் கோயில் பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்டது. மூன்றாம் திருச்சுற்று கிழக்குக் கோபுரம் விக்கிரம சோழனால் எழுப்பப்பட்டது. மேற்குக் கோபுரம் முதல் சுற்று, நடை திருமாளிகை பத்தி, சூரிய புஷ்கரணி, தெற்குக் கோபுரம் போன்றவை ஆணைய பிள்ளையும், அவருடைய தம்பி வைத்தியநாதரும் எழுப்பியவை. இங்குள்ள வட கயிலாயம் என்ற லோகமாதேவீச்சரம், முதலாம் ராஜராஜ சோழனின் மனைவி லோகமாதேவியால் கட்டப்பட்டது.

கோயில் கோபுர வரிசை
கோயில் கோபுர வரிசை

தென் கயிலாயத் திருக்கோயிலோ கங்கைகொண்டான் என்றழைக்கப்படும் முதலாம் ராஜேந்திர சோழனின் மனைவி பஞ்சவன்மாதேவியால் கட்டப்பட்டது. மேலும், நெய்யால் ஏற்றப்படும் நந்தா விளக்குகள், சந்தி விளக்குகள் ஏற்றப்பட்டன. திருவமுதாக பருப்பமுது, பானகம், சர்க்கரை அமுது, அப்பமுது போன்றவை படைக்கப்பட்டன.

முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் இந்த ஊர் பொய்கைநாட்டுத் திருவையாறு என அழைக்கப்பட்டது. சோமாஸ்கந்தர் திருக்கோயிலில் சோழ மன்னர்கள் திருப்பணி செய்துள்ளனர்.

தென் கயிலாயம்
தென் கயிலாயம்

பாண்டியன் கோனேரின்மை கொண்டான் 108 வேலி நிலமும், சுந்தரபாண்டியன் பல காணி நிலமும் அளித்தனர். இங்கு ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என அனைத்து நாயன்மார்களும் பாடியுள்ளனர். இந்தத் திருக்கோயிலுக்கு நிறையப் பதிகங்கள் பாடப்பட்டுள்ளன.
  
கோயில் அமைப்பு

இக்கோயிலில் மொத்தம் 5 திருச்சுற்றுகள் உள்ளன. முதல் திருச்சுற்றில் மூலவரும், அனைத்துப் புடைசூழ் தெய்வத் திருமேனிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் திருச்சுற்றில் சோமாஸ்கந்தருக்கு தனிக் கோயிலும், அதன் அருகில் செப்பேசுர மண்டபமும், பஞ்ச பூதலிங்கங்களும், ஏழு கன்னியர்களும், ஆதி விநாயகரும், நவக்கிரக கோயில்களும் அமைந்துள்ளன. இந்தச் சுற்றின் திருமதில்களில் புராணங்களைச் சித்திரிக்கும் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்தச் சுற்றிலேயே விநாயகர், வில்லேந்திய வேலவர், நடராஜர், ஏழூர் திருநகர் லிங்கங்களும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன.

ஐயாறப்பர் கோயில் முழு அமைப்பு
ஐயாறப்பர் கோயில் முழு அமைப்பு

மூன்றாம் திருச்சுற்றில் அவை மண்டபம், சைவச் சமயச் சொற்பொழிவு மண்டபம், வேள்விச் சாலை, மடப்பள்ளி, கொடி மரம் போன்றவை உள்ளன. இந்தச் சுற்றுப்பாதையின் கிழக்கிலும், தெற்கிலும் இரு கோபுர வாயில்கள் உள்ளன. இந்தச் சுற்றின் தென்மேற்கு மூலையில் இறைவனின் திருப்பெயரான ஐயாறா எனச் சொல்லி அழைத்தால் ஏழு முறை எதிரொலியாக ஒலிப்பது இத்திருக்கோயிலின் தனிச்சிறப்பு.

வட கயிலாயம்
வட கயிலாயம்

நான்காம் திருச்சுற்றின் தெற்குப் பகுதியில் சூரிய புஷ்கரணி தீர்த்தம் என அழைக்கப்படும் திருக்குளம், அப்பர் கயிலைக் காட்சி நல்கிய பஞ்சவன் மாதேவியால் கட்டப்பட்ட தென் கயிலாயம், ஒலோகமா தேவியால் கட்டப்பட்ட வட கயிலாயம் போன்றவை உள்ளன. இந்தச் சுற்றின் கீழ், மேல் திசைகளில் சிற்பக் கலைகளால் அழகாக அமைக்கப்பட்ட வானுயர் ராஜகோபுரங்களும், தென் கோபுர வாயிலில் ஆட்கொண்டார் சன்னதியும் இடம்பெற்றுள்ளன.

ஐயாறப்பர் மூலவர் திருக்கோயிலுக்கு ஈசானத்தில் அறம் வளர்த்த நாயகியின் திருக்கோயில் உள்ளது. இந்தத் திருக்கோயிலின் இரு திருச்சுற்றுகளும் அழகிய வேலைப்பாடு அமைந்த வானுயர் முகப்புக் கோபுரம் அமைந்துள்ளது. திருக்கோயிலின் கிழக்குக் கோபுரத்துக்கும் அறம்வளர்த்தநாயகி திருக்கோயிலுக்கும் நடுப்பகுதியில் நூற்றுக்கால் மண்டபத்தில் தண்டபாணித் திருக்கோயிலும், ஆட்கொண்டார் சன்னதியை அடுத்து உள்பகுதியில் திருக்குளத்தையொட்டி காசி விசாலாட்சி திருக்கோயிலும் அமைந்துள்ளன.

 தண்டபாணி மண்டபம் (நூறு கால் மண்டபம்)
 தண்டபாணி மண்டபம் (நூறு கால் மண்டபம்)

இறைவன்  ஐயாறப்பர்

காவிரியின் வடகரையில் அமைந்துள்ள 63 தலங்களில் 51 ஆவது தலம் திருவையாறு. இத்தலத்தின் அருகில் காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய 5 ஆறுகள் ஓடுகின்றன. இத்தலத்து இறைவனுக்கு இந்த 5 ஆறுகளின் நீரினால் அபிஷேகம் செய்யப்படுவதால் திரு ஐ ஆறு என அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இக்கோயிலில் வீற்றியிருக்கும் ஐயாறப்பர் சுயம்பு மூர்த்தமாகும். சுவாமிக்கு ஐயாறப்பர், செம்பொற்சோதியார், செப்பேசர், கயிலைநாதர், பிரணதார்த்திஹரர், பஞ்சநதீசுவரர், மகாதேவ பண்டராகரர் எனப் பல திருநாமங்கள் வழங்கப்படுகின்றன. இங்குள்ள லிங்கம் பிருத்வி (மண்) லிங்கம். எனவே, இக்கோயிலிலுள்ள லிங்கத்துக்கு அபிஷேகம் இல்லை. ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். லிங்கத் திருமேனிக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்படும்.

ஐயாறப்பர் - அறம் வளர்த்த நாயகி (உற்சவர்)
ஐயாறப்பர் - அறம் வளர்த்த நாயகி (உற்சவர்)

இறைவி - அறம் வளர்த்த நாயகி

இக்கோயிலில் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ள அம்மன் அறம் வளர்த்த நாயகி என அழைக்கப்படுகிறார். இவருக்கு திரிபுரசுந்தரி, தருமாம்பிகை, தர்மசம்வர்த்தினி, திருக்காமகோட்டத்து ஆளுடைய நாச்சியார் போன்ற திருநாமங்களும் உள்ளன. மற்ற சிவாலயங்களில் அம்பாள் நின்ற திருக்கோலத்தில் நான்கு கைகளுடன் அபய, வரத ஹஸ்தங்களுடன் காணப்படுகிறாள். ஆனால், இத்தலத்தில் அறம்வளர்த்த நாயகி இடக்கரம் வரத ஹஸ்தமாக அமையாமல், இடுப்பில் ஊன்றியுள்ளபடியும், மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரம் போன்றவையும் காணப்படுவதால் இங்கு அம்பிகை மஹா விஷ்ணு ரூபத்தில் தோற்றமளிக்கிறாள்.

தென் வாயிலிலுள்ள ஆட்கொண்டார் சன்னதி முகப்பு
தென் வாயிலிலுள்ள ஆட்கொண்டார் சன்னதி முகப்பு

ஆட்கொண்டார்

கெளதமீ தீரவாசி சுசரிதன் என்ற அந்தணச் சிறுவனின் தந்தையும், தாயும் அவனது சிறு வயதிலேயே இறந்துவிடுகின்றனர். வருத்தம் மேலோங்கிய அச்சிறுவன் தல யாத்திரைக்குப் புறப்பட்டான். அவ்வாறு செல்லும் வழியில் திருப்பழனம் சென்று தங்கிய அவனுக்கு அன்றிரவு கனவில் எமன் தோன்றி, இன்றிலிருந்து ஐந்தாம் நாள் மரணம் அடைவாய் என்றார். அதைக் கேட்டு அஞ்சிய சுசரிதன் திருவையாறுக்குச் சென்று சிவ தரிசனம் செய்வதே தகுந்த பரிகாரம் எனத் தேற்றிக்கொண்டு சென்றான்.

ஆட்கொண்டார்
ஆட்கொண்டார்

அங்கு வசிட்டர் அருளியபடி சிவ தரிசனம், பஞ்சாக்கர ஜபம் போன்றவை செய்து வந்த சுசரிதன் முன், தான் கூறியபடி ஐந்தாம் நாளில் எமன் தோன்றினான். எம பயத்தை நீக்கிக்கொள்ளத் தெற்குக் கோபுர வாயிலில்  இருந்து சுசரிதனை ஜபிக்கும்படி பணித்த வசிட்டர் தானும் ஜபித்தார். அச்சிறுவனின் உயிரைக் காக்க சிவபெருமான் தன் தென்வாயில் காப்போனான ஆட்கொண்டாரைக் கொண்டு எமனைத் தண்டித்தார். மேலும், எம பயம் நெருங்காது இருக்குமாறு ஆட்கொண்டாரைப் பணித்தார் சிவபெருமான்.

ஆட்கொண்டார் சன்னதி முன் குங்கிலியம் இடும் பக்தர்கள்
ஆட்கொண்டார் சன்னதி முன் குங்கிலியம் இடும் பக்தர்கள்

இங்கு ஆட்கொண்டாருக்குத் தெற்கு வாயிலில் ஒரு சன்னதி உண்டு. இதில், எமனைக் காலின் கீழ் வைத்து வதைக்கும் திருக்கோலத்தில் ஆட்கொண்டார் எழுந்தருளியுள்ளார். இவ்வூர் மக்களின் காவல் தெய்வமாகவும் ஆட்கொண்டார் விளங்குகிறார். இச்சன்னதி எதிரே எப்போதும் புகைந்துகொண்டிருக்கும் குங்கிலியக் குண்டம் இருக்கிறது. வீட்டில் விஷ ஜந்து, பில்லி சூனியம் இருப்பதாகக் கருதும் மக்கள் ஆட்கொண்டாருக்குக் குங்கிலியம் வாங்கிப் போட்டால் தீவினை அண்டாது என நம்புகின்றனர்.

இதனால், இச்சன்னதியில் நாள்தோறும் ஏராளமானோர் குங்கிலியம் வாங்கிப் போட்டு வருகின்றனர். மேலும், திருக்கடையூர் கோயிலைப் போன்று, இக்கோயிலிலும் சஷ்டியப்தபூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளை இறைவன் சன்னதியில் செய்து கொள்வது சிறப்பு.

அப்பர் கயிலைக் காட்சி விழா - 1
அப்பர் கயிலைக் காட்சி விழா - 1

அப்பர் கயிலைக் காட்சி

தேவார மூவரில் திருநாவுக்கரசருக்கு ஒருமுறை கயிலாய மலைக்குச் சென்று சிவனைத் தரிசிக்கும் ஆவல் ஏற்பட்டது. திருநாவுக்கரசர் மேலும் பல காலம் தமிழ் பேசும் நல்லுலகில் இருந்து பல பாடல்களைப் பாட வேண்டும் என சிவபெருமான் கருதினாரோ என்னவோ, அவரை வழியிலேயே தடுத்து நிறுத்தி, இந்தப் பூதவுடலுடன் கயிலை செல்வது சாத்தியமில்லை என்று சொன்னார். அதற்கு அப்பர் 'ஆளும் நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால், மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்' என மறுத்தார்.

அப்பர் கயிலைக் காட்சி விழா - 2
அப்பர் கயிலைக் காட்சி விழா - 2

அதற்கு ஒரு முனிவர் வடிவம் தாங்கி வந்திருந்த சிவபெருமான், அப்பரிடம் அங்கிருந்த ஒரு பொய்கையில் மூழ்கித் திருவையாற்றில் கயிலைக் காட்சியைக் காண்பாயாக! எனப் பணித்தார். அப்போதே பொய்கையில் மூழ்கிய அப்பர், திருவையாற்றில் ஒரு நீர்நிலையில் எழுந்திருக்க அங்கே சிவன் - பார்வதி தேவியுடன் ரிஷப வாகனத்தில் தோன்றி கயிலைக் காட்சி அருளினார். ஆடி அமாவாசை நாளில் இக்கோயிலில் நடைபெறும் கயிலைக் காட்சித் திருவிழா மிகவும் புகழுடையது. அதனால்தான் திருவையாற்றைத் தென் கயிலாயம் என அழைக்கின்றனர்.

கோயில் பிரகாரம்
கோயில் பிரகாரம்

ஏழூர் வலம் வருதல்
 
சப்தஸ்தானத் தலங்களாக திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்கள் அழைக்கப்படுகின்றன. இவற்றில் முதல் தலமான திருவையாறில் சித்திரை மாதம் பௌர்ணமி விசாகத்தில் சப்தஸ்தான பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஏழு ஊர் இறைவனும் எழுந்தருளி அருள்புரியும் காட்சியை ஆயிரக்கணக்கானோர் ஒவ்வோராண்டும் கண்டு களிக்கின்றனர்.

இக்கோயிலுக்குச் செல்லும் வழி

தருமபுர ஆதீனத்தின் பரிபாலனத்துக்கு உள்பட்ட தேவஸ்தானங்களில் இத்திருக்கோயிலும் ஒன்று. தஞ்சாவூரிலிருந்து 14 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து 33 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது இக்கோயில்.

தஞ்சாவூரிலிருந்தும் கும்பகோணத்திலிருந்தும் பேருந்துகள் உள்ளன. ரயிலில் வருவோர் தஞ்சாவூர் அல்லது கும்பகோணத்தில் இறங்கி, அங்கிருந்து பேருந்து மூலம் சென்றடையலாம். விமானத்தில் வருவோர் திருச்சிக்குச் சென்று அங்கிருந்து சாலை வழியாக இத்திருத்தலத்தை அடையலாம்.

மேலும் விவரங்களுக்கு 04362 - 260332, 9443008104.

முகவரி 

அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில்,

திருவையாறு -  613 204

தஞ்சாவூர் மாவட்டம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com