Enable Javscript for better performance
எண்ணிய முடிக்கும் கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சனேயர் கோயில்- Dinamani

சுடச்சுட

  எண்ணிய முடிக்கும் கிருஷ்ணகிரி காட்டு வீர ஆஞ்சனேயர் கோயில்

  By  - எஸ்.கே.ரவி  |   Published on : 28th June 2021 12:59 PM  |   அ+அ அ-   |    |  

  WhatsApp_Image_2020-12-29_at_1

  அருள்மிகு காட்டு வீர ஆஞ்சனேயர்

   

  எத்தகைய தோஷங்கள், குறைகள் இருந்தாலும் அவற்றைக் களைந்து, மக்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றும் ஆற்றல் மிகுந்த கோவிலாக விளங்குகிறது கிருஷ்ணகிரி அருள்மிகு காட்டு வீர ஆஞ்சனேயர் திருக்கோயில்.

  இறைவன் படைப்புகளில் சிறந்து விளங்குவது மனிதக் குலம். மனிதனுக்கு சுய அறிவு உண்டு. கடவுள் தந்த உள்ளுணர்வுகள் மூலம் கடவுள் இருப்பதை மனிதன் உணர்கிறான். மனிதன், இறைவனை அடைய மேற்கொள்ளும் பயணமே வாழ்க்கை. மனிதனின் வாழ்க்கைப் பயணத்தில் பல பாலைவன சோலைகளைக் காண்கிறான். அந்தப் பயணத்தில் இளைப்பாறும் இடமாக கோவிலைக் காண்கின்றான்.

  கோவில் என்பது ஒரு பசுஞ்சோலை. கோவிலில் குடியிருக்கும் இறைவன், நமது குறைகளைப் போக்கி மகிழ்கிறான், நம்மையும் மகிழ்விக்கின்றான். இவ்வாறு நம் சங்கல்பம் கடவுளுடன் நிகழும் சங்கமத்தில் நிறைவடைகிறது.

  கிருஷ்ணகிரி, தேவசமுத்திரத்தில் அமைந்துள்ள காட்டு வீர ஆஞ்சனேயர் கோவிலும் கடவுளும் மனிதனும் சங்கமமாகும் ஒரு புனிதத் தலம் என்றால் மாற்றுக் கருத்தில்லை.

  இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே: கோள்களின் குற்றம் நீக்கிய திருக்குவளை கோளிலிநாதர் - நவ கிரகங்களின் தோஷம் அகலும்

  கிருஷ்ணகிரியை ஆண்ட விஜயநகரப் பேரரசு, மன்னர் கிருஷ்ண தேவராயரின் நல்லாட்சியின் கீழ் பல சைவ, வைணவ தளங்களைக் கொண்டு விளங்கின. அம்மன் கோயில்களுக்கும் குறைவில்லை. கிருஷ்ண தேவராயர் காலத்தில் ஆஞ்சனேயர் பக்தி இயக்கம் துவங்கியது. இந்த இயக்கம் தமிழ்நாடு முழுவதும் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. தமிழ்நாட்டில் கல்பாறை என எங்கெல்லாம் இயற்கைப் பொருள்கள் மறைந்து கிடக்கிறதோ அங்கெல்லாம் ஆஞ்சனேயரின் வீரம் ததும்பும் உருவங்கள் செதுக்கப்பட்டன. இவ்வாறு உருவான ஒன்றுதான் காட்டு வீர ஆஞ்சனேயர் கோயில்.

  கிருஷ்ணகிரியையொட்டியுள்ள தேவசமுத்திரம் கிராமத்தில் நெல் வயல் ஒன்றில் ஒரு கற்பாறை மீது காட்டு வீர ஆஞ்சனேயர் உருவம் பொறிக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. அந்த நெல் கழனி வெங்கடராம செட்டியார் என்பவருக்குச் சொந்தமானது. காடு என்பது வீர ஆஞ்சனேயரின் இளமைப் பருவம் கழித்த வனம் ஆகும். எனவே, மூலவர் காட்டு வீரர் என அழைக்கப்படுகிறார். இந்தப் பெயருக்கு ஏற்ப இப்பொழுது கோவிலைச் சுற்றி ஏரிகள், குன்றுகள், நெல் வயல்கள், பசுமைச் சோலைகள் சூழ்ந்துள்ளன. அதுமட்டுமின்றி ஆஞ்சனேயரைப் பார்த்தவண்ணம் மேற்குப் புறம் பொன்மலை என்ற பெயர் பெற்ற ஒரு குன்றின் மீது பெருமாள் கோவில் ஒன்றும் உள்ளது.

  இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே: திருமணத் தடை நீக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர் திருக்கோயில்

  சில நூற்றாண்டுகளுக்கு முன் வியாசராயர் என்ற ஞானி தமிழகத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் பாறைகளில் ஆஞ்சனேயர் உருவத்தைப் பொறிக்க அரும்பாடுபட்டார். இவரது தனிச்சிறப்பு சுவாமி ஆஞ்சனேயரின் வாலில் ஒரு மணி கட்டப்பட்டதற்கான வரைவு இருக்கும். இத்தகைய சிறப்புமிக்க ஆஞ்சனேயரை ஸ்ரீ சேஷகிரி ராவ் என்ற முதியவர், தினமும் எலுமிச்சம்பட்டி என்ற கிராமத்திலிருந்து, அதாவது 19 கிலோ மீட்டர் தொலைவு நடந்து வந்து ஆஞ்சனேயருக்கு பூஜை செய்துவந்தார். பக்தர்கள் வயல் வரப்புகளில் நடந்து வீர ஆஞ்சனேயரைப் பயபக்தியுடன் தரிசித்தனர். இத்தகைய நிலையில், ஆஞ்சனேயரை வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதையடுத்துக் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலைப் பராமரிக்க அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டது.

  இந்த அறக்கட்டளையின் மூலம் கோவிலைச் சுற்றிச் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. கோவிலுக்குப் பக்தர்கள் வந்து செல்லும் பாதை அமைக்கப்பட்டது. மூலவருக்கு என ஒரு கருவறையும் விமானமும் எழுப்பப்பட்டன. கூடவே மகாலட்சுமித்  தாயாரின் கோவிலும் கட்டப்பட்டன. இவ்விரண்டிலும், சுமார் 300 பக்தர்கள் ஒரே நேரத்தில் சுவாமியைத் தரிசிக்கும் வகையில் மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

  இதைத் தொடர்ந்து பக்தர்களின் ஆதரவுடன் இரண்டாவது மண்டபம், தீபஸ்தம்பத்துடன் கட்டப்பட்டது.

  மூலவர் கோயிலுக்கு வலதுபுறம் வெளியே ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமியின் வண்ண ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. அதனையொட்டி ஒரு மாடத்தில் யோக நரசிம்மர் வீற்றிருக்கிறார். அவருடைய மாடத்திற்கு மேல் கோவிலின் மதிலை ஒட்டி சுதர்சனம் எனப்படும் கால பைரவர் காட்சி தருகிறார். மூலவர் கோயிலின் இடதுபுறம் ஒரு பெரிய உருண்டைப் பாறையின் மீது வளரும் நந்தி ஒன்று உள்ளது. இந்த நந்தி  வளர்ந்து வரும் ஓர் அதிசயமாகும். மூலவர் கோயிலுக்குப் பின்புறம் நாகர் கற்கள் பல அமைந்துள்ளன.

  இந்தக் கோயிலுக்கும் சென்றுவரலாம்: குழந்தைப்பேறு அருளும் வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில்

  இந்தக் கோவிலுக்குத் திருவண்ணாமலையிலிருந்து ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீமத் பாலமுருக நரசிம்ம ஸ்வாமி என அழைக்கப்படும் சித்தர் விஜயம் செய்தார். அப்போது இந்த கோவிலில் மறைந்திருந்த ஒரு மகத்துவத்தை அவர் உணர்ந்தார். அதாவது இந்தக் கோயில் ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் தெய்விகத் தன்மை உடையது. ஹரியின் பிரதிநிதியாக மூலவர் ஆஞ்சனேயர் உள்ளார். அதே சமயத்தில் சிவபெருமானின் பிரதிநிதியாக வளரும் நந்தியும் இங்கே ஒரு பெரிய உருட்டு பாறையின் மீது சிற்பமாக உள்ளார்.

  இத்தகைய உண்மைத் தத்துவத்தைக் கொண்ட இந்த கோவிலில் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக மூலவரை வணங்கி தேங்காய் கட்டினால் அவர்களது வேண்டுதல் நிறைவேறும் என அந்த சித்தர் அருள்வாக்கு வழங்கினார். 

  இந்த உண்மையை அறிந்த பக்தர்கள் அப்போது முதல் ஆஞ்சனேயரை வேண்டி த் தேங்காய் கட்டத் தொடங்கினர்.

  குறைகள், தோஷங்களால் சங்கடங்கள், பிரச்சினைகள் இருப்போர் இந்தக் கோயிலுக்கு வந்து தொல்லைகளைக் களையலாம்.

  ஒரு சிவப்பு நிறத் துணிப் பையில் வெற்றிலை, பாக்கு, ஒரு ரூபாய் தட்சிணை மற்றும் தேங்காய் வைத்து சுவாமியின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்படுகிறது.

  பின்னர், இவ்வாறு பூஜித்த தேங்காயைப் பக்தர்கள் கையிலேந்தி ஸ்ரீராம், ஜெயராம், ஜெய ஜெய ராம் என்ற மந்திரத்தை உச்சரித்தபடியே கோவிலை 11 சுற்றுகள் சுற்றி வந்து கட்டுவதன் மூலம் வேண்டுதலை நிறைவேற்றிக்கொள்வது இந்தக் கோவிலின் மிகச்சிறப்பு.

  மூலவர் ஆஞ்சனேயரை மனதார  வணங்கித் தேங்காயைக் கட்டுவதன் மூலம் தங்களது வேண்டுதல் நிறைவேறுகிறது என பக்தர்கள் நம்புகின்றனர்.

  கல்வி, திருமணம், குழந்தைப் பேறு, வேலைவாய்ப்பு, உடல் நலம், செல்வம் எனப்  பல்வேறு வேண்டுதல்களுக்காகப் பக்தர்கள் இந்தக் கோயிலில் தேங்காய் கட்டுகின்றனர். இந்துக்கள் மட்டுமல்லாமல் மாற்று மதத்தினரும் தங்களது வேண்டுதலுக்காகத் தேங்காய் கட்டுவதை இங்கு காணலாம்.

  தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியதும் வந்து கோயில் வளாகத்தில் கட்டிவைத்துள்ள தேங்காய்களைத் திரும்பப் பெற்றுச் செல்வோரும் இருக்கின்றனர். இதற்காகத் தேங்காய்கள் முறையாகப் பாதுகாக்கப்படுகின்றன.

  கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலிருந்து சென்னை, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், சேலம், திருவண்ணாமலை, கடலூர், புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் மற்றும் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலிருந்தும் ஏராளமாகப் பக்தர்கள் வந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

  இந்தக் கோயிலையும் வலம் வரலாம்: சனி தோஷம் நீக்கும் நள்ளாற்று நாயகன் - திருநள்ளாறு திருக்கோவில்

  தினந்தோறும் ஆஞ்சனேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. வடைமாலை அபிஷேகம் இக்கோவிலின் மற்றொரு சிறப்பு அம்சம். பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வெண்ணெய்க் காப்பு மற்றும் சந்தனக் காப்பு அலங்காரங்கள் காண்பதற்கு மிகச் சிறப்பு வாய்ந்தவை.

  வடைமாலை, அபிஷேகம் செய்ய விரும்பும் பக்தர்கள் முன்னதாகவே கோவில் மேலாளரைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

  ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில் ஆஞ்சனேயருக்கு சிறப்புப் பூஜையும் பௌர்ணமி தினத்தன்று மகாலட்சுமி தாயாருக்குச் சிறப்புப் பூஜையும் நடைபெறுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமையும் மாலை கருட சேவையாக கருட வாகனம் செய்யப்பட்டு உற்சவ சிறப்புப் பூஜை செய்து பிரகார வலம் நடைபெறுகிறது. 

  ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு சிறப்புப் பூஜையும் ராமர் சீதா திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. அதுபோல அக்டோபர் மாதத்தில் சீனிவாச திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலையிலும், அமாவாசையன்று காலை கோ பூஜை நடைபெறுகிறது. நவராத்திரியை முன்னிட்டு அக்டோபர் மாதம் ஒன்பது நாள்கள் கொலுபொம்மை வைத்து சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. ரதசப்தமி முன்னிட்டு சிறப்புப் பூஜை செய்து உற்சவர் பிரகார வலம் வந்து சூரிய உதய தரிசனம் சிறப்புப் பூஜை செய்யப்படுகிறது.

  கோவில் வளாகத்திற்கு வெளியே வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளது. இங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுவதில்லை. மேலும் கோவில் வளாகத்திலேயே ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியே கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. கோவிலைச் சுற்றி வரும் வகையில் பக்தர்களுக்குkd கல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது மண்டபத்தை ஒட்டி மேலும் ஒரு விரிவாக்கம் செய்யப்பெற்று அங்கு பக்தர்கள் வேண்டுதலுக்காகத் தரும் தேங்காய்கள் பாதுகாக்கப்படுகின்றன. கோவில் மண்டபத்தின் வடமேற்குப் பகுதியில் கிழக்கு நோக்கி ஸ்ரீ வெங்கடரமண சுவாமி கோவில் திருப்பதியாக அமைந்துள்ளது.

  கிருஷ்ணகிரி,  காட்டு வீர ஆஞ்சனேயர் கோயிலுக்குச் செல்ல:

  சென்னை, சேலம், குப்பம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளிலிருந்து வாகனங்களில் வரும் பக்தர்கள், ஆவின் மேம்பாலம் அருகே, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை நோக்கிச் செல்லும் சர்வீஸ் சாலை வழியாக வர வேண்டும். அங்கிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் சாலையில் ஒரு கிலோ மீட்டர் தொலைவு சென்றால் கோயிலை அடையலாம்.

  ஓசூர் பகுதியிலிருந்து வருபவர்கள் கிருஷ்ணகிரி டோல்கேட், அடுத்து வரும் மேம்பாலத்தைக் கடந்து சர்வீஸ் சர்வீஸ் ரோடு வழியாக வந்து, தரைப் பாலத்தைக் கடந்து மேற்கு நோக்கிச் சென்றால் கோயிலை அடையலாம்.

  டோல்கேட்டில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் கோவில் உள்ளது. விமானத்தில் வருபவர்கள் பெங்களூரு, சென்னை, சேலம் விமான நிலையங்களில் இறங்கி அங்கிருந்து சாலை வழியாகக் கோவிலை அடையலாம்.

  ரயில் தடத்தில் வருபவர்கள் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், சேலம்,  தர்மபுரி, பாலக்கோடு, ஓசூர், ஆந்திர மாநிலம் குப்பம் ஆகிய ரயில் நிலையங்களில் இறங்கி அங்கிருந்து சாலை வழியாகக் கோவிலை அடையலாம்.

  மேலும் விவரங்களுக்கு: தனசேகர், அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் - 93443 57941,  வெங்கடேசன், மேலாளர் - 90426 30892, அருள்மிகு காட்டு வீர ஆஞ்சனேயர் திருக்கோயில், தேவசமுத்திரம், கிருஷ்ணகிரி - 635001


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp