ராகு - கேது தோஷ நிவர்த்தி பெற நாகூர் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில்

ராகு காலத்தில் அருள்மிகு நாகநாத சுவாமியையும், நாகவல்லித் தாயாரையும், ராகு பகவானையும் வழிபட்டால், ராகு -கேது தோஷ நிவர்த்தியுடன், திருமணத் தடை விலகும், குழந்தைப் பேறு அமையும் என்பது இத்தலத்தின் சிறப்பு.
மூலவர் அருள்மிகு நாகநாத சுவாமி
மூலவர் அருள்மிகு நாகநாத சுவாமி

தொன்மை இனமான நாகர்கள் வாழ்ந்து, ஆட்சி செய்த இடங்களாக அறியப்படும் பகுதிகளில் குறிப்பிடத் தக்கவை நாகப்பட்டினம் மற்றும் நாகூர். நாகர் ஊர் என்ற பெயர் நாகூராக மருவியிருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கூற்று. இந்த வரலாற்றுக் கூற்றை ஆன்மிக ரீதியாக உறுதி செய்வதாக உள்ளது, நாகராஜன் வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாகக் கூறப்படும் நாகூர் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறந்து விளங்கும் தலங்களில் ஒன்றாகவும், காசிக்கு இணையானதாகவும், ராகு, கேது, காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும், இந்திரன், சந்திரன், நாகராஜன், சமுத்திரராஜன், துர்வாச முனிவர் மற்றும் சப்த ரிஷிகள், யுகங்கள்தோறும் வழிபட்ட தலமாகவும் விளங்குகிறது நாகூர் ஸ்ரீ நாகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயில்.

நாகூர் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில் ராஜகோபுரம் 
நாகூர் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில் ராஜகோபுரம் 

புன்னாகவனம், சந்திர தீர்த்தம், உருத்திர நதி, சுப புண்ணிய மலை, விசுவகன்மிய விமானம் என்ற ஆறு மங்கலங்களும் பொருந்திய மகாதலம் என்ற சிறப்புப் பெற்றது இத்தலம்.

சந்திர புஷ்கரணி தீர்த்தம்
சந்திர புஷ்கரணி தீர்த்தம்

இங்கு, இறைவன் ஸ்ரீ நாகநாதர் என்ற திருப்பெயரில் காட்சியளிக்கிறார். அம்பாள் ஸ்ரீ நாகவல்லி என்ற திருப்பெயருடன் தெற்கு நோக்கி, தனி சன்னதி கொண்டு காட்சியளிக்கிறார். ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமையப் பெற்றுள்ளது இக்கோயில். சுவாமியின் வலப்புறத்தில் ஸ்ரீ சந்திரசேகரர், கல்யாணசுந்தரர் (உற்சவர்), தியாகராஜர், இடப்புறத்தில் காட்சிக் கொடுத்த நாயனார், ஸ்ரீ நடராஜர், ஸ்ரீ ஐயப்பன் ஆகியோர் தனி சன்னதிகளில் காட்சியளிக்கின்றனர்.

பிரகாரத்தில் தனி சன்னதிகொண்டு காட்சியளிக்கும் ஸ்ரீ வலம்புரி விநாயகர். ஓடத்தில் வந்ததாகக் கூறப்படும் இவருக்குத் தோணியப்பர் என்றும் பெயர்
பிரகாரத்தில் தனி சன்னதிகொண்டு காட்சியளிக்கும் ஸ்ரீ வலம்புரி விநாயகர். ஓடத்தில் வந்ததாகக் கூறப்படும் இவருக்குத் தோணியப்பர் என்றும் பெயர்

முதல் சுற்று பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி, நாகர்கள், வலம்புரி விநாயகர், சுப்பிரமணியர், அண்ணாமலையார், சண்டிகேசுவரர் மற்றும் ஸ்ரீ காசி விசுவநாதர் தனி சன்னதிகளில் காட்சியளிக்கின்றனர்.

மேற்குப் புறத்தில் ஜூரதேவர், ஈசான லிங்கம், தத்புருஷ லிங்கம், அகோர லிங்கம், வாமதேவ லிங்கம், ஸ்ரீ ஐவேலி நாதர், மகாலட்சுமி மற்றும் நால்வரும் கோயிலின் கன்னி பாகத்தில் ஸ்ரீ நாககன்னி மற்றும் ஸ்ரீ நாகவல்லி சமேதராக ஸ்ரீ ராகு பகவானும் காட்சியளிக்கின்றனர்.

ஸ்ரீ நாகநாதசுவாமி கோயிலில் கம்பீரமாகக் காட்சியளிக்கும் நந்தியம் பெருமான்.
ஸ்ரீ நாகநாதசுவாமி கோயிலில் கம்பீரமாகக் காட்சியளிக்கும் நந்தியம் பெருமான்.

கோயிலின் முன் மண்டபத்தில் அமையப் பெற்றுள்ள சிவபூஜை செய்யும் நாகராஜன் சிலை, தல வரலாற்றை உணர்த்துவதாக உள்ளது. இக்கோயிலின் தல விருட்சமாகக் கோயில் பிரகாரத்தில் புன்னாகவனம் அமைந்துள்ளது. அதனைச் சுற்றி நாகர்கள், நாககன்னிகள் சிலைகள் அமையப் பெற்றுள்ளன. ஸ்ரீ மகாவிஷ்ணுவுக்கு இறைவன் சிவபெருமான் இத்தலத்தில் வைகாசி மாதம் பௌர்ணமி நட்சத்திர நாளில் காட்சியளித்தார் இடம், இந்தப் புன்னாகவனம் எனக் குறிப்பிடப்படுகிறது.

நாகூர் ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலின் பின்புறத் தோற்றம்
நாகூர் ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலின் பின்புறத் தோற்றம்

பிரம்ம தேவரின் ஆலோசனைப்படி, சந்திர பகவான் இத்தலத்தில் நாகநாத சுவாமியை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதுடன், இங்கு தங்கியிருந்து ஆனி மாத பௌர்ணமியையொட்டி 10 நாள்கள் விழா எடுத்துள்ளார் என்ற ஐதீகம் உள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் சந்திரனால் உருவாக்கப்பட்டதாகவும், அதனால் சந்திர தீர்த்தம் என்ற பெயர் விளங்குவதாகவும் தல புராணத்தில் குறிப்பிடப்படுகிறது.

இதேபோல, இந்திரன் இத்தலத்தில் நாகநாத சுவாமியை வழிபட்டு 10 நாள்கள் விழா எடுத்து சாப விமோசனம் பெற்றார் எனவும், நாகராஜன், சமுத்திரராஜன் ஆகியோரும் இத்தலத்தில் தங்கியிருந்து நாகநாத சுவாமிக்கு விழா எடுத்துள்ளனர் எனவும் தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

நாகூர் ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில் உற்சவர்
நாகூர் ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில் உற்சவர்

நாகராஜன் சாப விமோசனம்

தவத்தில் சிறந்து விளங்கிய சம்புபத்தன் என்பவரும் அவரது மனைவி மற்றும் 5 வயது மகனும் காட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். சம்புபத்தனின் மகன் ஒரு நாள் காட்டில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது, அந்தக் காட்டில் நாகராஜனும் அவனது மனைவியும் இணைந்திருப்பதை அந்தச் சிறுவன் கண்டுவிட்டான். இதையறிந்த நாகராஜன், தன் முன்வினையின் காரணமாக, சம்புபத்தனின் மகனைத் தீண்டினான். நாகராஜனின் கொடிய விஷத்தால் தீண்டப்பட்ட அந்தச் சிறுவன் அங்கேயே மாண்டான்.

நாகராஜன் சிவபூஜை செய்யும் காட்சியாக அமைந்துள்ள சிலை
நாகராஜன் சிவபூஜை செய்யும் காட்சியாக அமைந்துள்ள சிலை

விளையாடச் சென்ற தன் மகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததையடுத்து, சம்புபத்தன் தன் மகனைத் தேடி அலைந்தான். அப்போது, காட்டில் தன் மகன் இறந்து கிடப்பதைப் பார்த்தான். தன் மகன் விஷம் தீண்டி இறந்ததற்கு நாகராஜனே காரணம் என்பதைத் தன் தவ வலிமையால் அறிந்த சம்புபத்தன், நாகராஜன் நாகலோகத்தை விட்டு நீங்கி, வலிமையற்றுத் தனிமைப்பட்டவனாய் காட்டில் திரியச் சாபமிட்டான்.  

புன்னாகவனத்தில் அமைந்துள்ள நாகர் லிங்கத் திருமேனி, நாகர் சிலைகள்.
புன்னாகவனத்தில் அமைந்துள்ள நாகர் லிங்கத் திருமேனி, நாகர் சிலைகள்.

தன் தவறை உணர்ந்த நாகராஜன், சம்புபத்தனை வணங்கித் தனக்கு  சாப விமோசனம் அருள வேண்டினான். அப்போது 1,000 ஆண்டுகளுக்குப் பின்னர் நாகராஜன் தன் தந்தை காசிப முனிவரை கண்டு, சாப விமோசனம் பெறலாம் என சம்புபத்தன் தெரிவித்துள்ளான்.

இதன்படி, காட்டில் தனித்துத் திரிந்த நாகராஜன், 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு காசிப முனிவரை கண்டு, அவரிடம் சாப விமோசனம் வேண்டினார். அப்போது, மாசி மாத மகாசிவராத்திரி நாளின் முதல் காலத்தில் கும்பகோணம் வில்வ வனத்தில் உள்ள ஸ்ரீ நாகநாத சுவாமியையும், இரண்டாம் காலத்தில் திருநாகேசுவரம் செண்பக ஆரண்யத்தில் உள்ள நாகநாத சுவாமியையும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரம் வன்னி வனத்தில் உள்ள ஸ்ரீ நாகநாதரையும், நான்காம் காலத்தில் நாகூர் புன்னாகவனத்தில் காட்சியளிக்கும் ஸ்ரீ நாகநாதரையும் வழிபட்டால் சாப விமோசனம் கிட்டும் என அருளியுள்ளார்.

புன்னாகவனத்தில் அமைந்துள்ள 4 அடி உயர நாகர் சிலை.
புன்னாகவனத்தில் அமைந்துள்ள 4 அடி உயர நாகர் சிலை.

இதன்படி, மாசி மாத மகாசிவராத்திரி நாளில் முதல் மூன்று காலங்களில் முறையே கும்பகோணம், திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் கோயில்களில் வழிபாடு மேற்கொண்ட நாகராஜன், 4-ஆம் காலத்தில் புன்னாகவனத் தலமான நாகூரில் சந்திர புஷ்கரணியில் நீராடி, ஸ்ரீ நாகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ நாகநாத சுவாமியை வழிபட்டு நின்றபோது, சிவபெருமான் விடைமேல் வந்து காட்சியளித்து, நாகராஜனுக்கு சாப விமோசனம் அளித்து ஆட்கொண்டார் என்பது இத்தல வரலாறு.

இந்த ஐதீகப்படி, இத்தலத்து இறைவன் நாகநாத சுவாமி, நாகராஜனால் பூஜிக்கப்பட்டவர் என்பதால், இத்தலம் ராகு, கேது மற்றும் கால சர்ப்ப தோஷ நிவர்த்தித் தலமாக விளங்குகிறது.  

புன்னாகவனத்தில் அமைந்துள்ள நாகர் சிலைகள்
புன்னாகவனத்தில் அமைந்துள்ள நாகர் சிலைகள்

மேலும், இங்குள்ள புன்னாகவனத்தின் கீழே நாகலோகம் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்கு நாகர் லிங்கமும் அதைச் சுற்றி இரு நாகங்கள் இணைந்து சிவலிங்க பூஜை செய்வதைப் போன்ற 20-க்கும் மேற்பட்ட நாகர்கள் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. நாகர் லிங்கத்துக்கு வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் சாற்றி வழிபட்டால் மாங்கல்ய தோஷம், நாக தோஷம் நிவர்த்தியாகும் என்பது இத்தலத்து நம்பிக்கை.

கன்னி ராகு

இக்கோயிலின் கன்னி பகுதியில் ஸ்ரீ நாககன்னி, ஸ்ரீ நாகவல்லி சமேதராக ஸ்ரீ ராகு பகவான் காட்சியளிக்கிறார். கன்னி ராசியில் ராகு அமைந்தால் ராஜயோகம் என்ற ஜோதிட சாஸ்திரப்படி, இத்தலத்தில் கன்னி பகுதியில் ராகு பகவான் தனது தேவியருடன் காட்சி அளிப்பது சிறப்புக்குரியதாகக் குறிப்பிடப்படுகிறது.

புன்னாகவனத்தில் அமைந்துள்ள நாகர் சிலைகள்
புன்னாகவனத்தில் அமைந்துள்ள நாகர் சிலைகள்

ராகு கால நேரத்தில் இத்தலத்து மூலவர் பெருமான் ஸ்ரீ நாகநாத சுவாமியையும், நாகவல்லித் தாயாரையும் வணங்கி, ராகு பகவானுக்கும் அவரது தேவியருக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டால், ராகு கேது தோஷ நிவர்த்தியுடன், திருமணத் தடை விலகும், குழந்தைப்பேறு அமையும் என்பது இத்தலத்தின் சிறப்பு. ஸ்ரீ ராகு பகவானுக்கு நீல வஸ்திரம் சாற்றி வழிபடுவது சிறப்புக்குரியதாகக் கூறப்படுகிறது.

தோஷ நிவர்த்தி

காசிக்கு இணையானதாகக் குறிப்பிடப்படும் இத்தலம், பிதுர்தோஷ நிவர்த்தி தலமும் ஆகும்.

இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி, தர்ப்பணம் அளித்து, தான தர்மங்கள் செய்தால் கயாவில் வழிபாடு செய்த பலனும், பிதுர்தோஷ நிவர்த்தியும் கிட்டும் எனக் கூறப்படுகிறது. இங்கு, கிருத்திகை நட்சத்திர தினத்தில் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் மேற்கொண்டால் சர்வதோஷ நிவர்த்தி கிட்டும் என்பது இத்தலத்து ஐதீகம்.

கன்னி பாகத்தில் இரு தேவியருடன் காட்சியளிக்கும் ராகு பகவான் சிலை
கன்னி பாகத்தில் இரு தேவியருடன் காட்சியளிக்கும் ராகு பகவான் சிலை

ஸ்ரீ நாகநாத சுவாமி சன்னதியில் போடப்படும் கோலங்கள் மீது பாம்புகள் ஊர்ந்து சென்ற தடங்களும், மூலவர் கருவறையில் பாம்பு வந்து சென்றதற்கான தடங்களும், கோயிலின் பல பகுதிகளில் பாம்பு உரித்த சட்டைகளும் அவ்வப்போது காணப்பட்டாலும் கோயிலுக்குள் யாரும் பாம்பைக் கண்டதில்லை எனக் கூறப்படுகிறது. இத்தலத்தில் யாரும் விஷம் தீண்டி இறப்பதில்லை என்ற நம்பிக்கை உள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் தினமும் 6 கால பூஜைகள் நடைபெறுகின்றன. காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், பிற்பகல் 4 மணி முதல் 8.30 மணி வரையிலும் கோயிலின் நடை திறந்திருக்கும். ஞாயிறுதோறும் மாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான ராகு காலத்தில் ஸ்ரீ ராகு பகவானுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறுகிறது. ஞாயிறு பிரதோஷ நாளில் மட்டும் இந்தச் சிறப்பு அபிஷேகம் மாலை 4 மணிக்கு மேல் 4.30 மணிக்குள் நடைபெறுகிறது.

 நாகநாத சுவாமியைத் தரிசித்தவாறு நேர்க்கோட்டில் காட்சி தரும் நவக்கிரகங்கள்
 நாகநாத சுவாமியைத் தரிசித்தவாறு நேர்க்கோட்டில் காட்சி தரும் நவக்கிரகங்கள்

விரைவில் குடமுழுக்கு

இத்திருக்கோயிலில் குடமுழுக்கு விழா திருப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்து சமய அறநிலையத் துறை ஒருங்கிணைப்பில், திருப்பணியாளர்களின் உதவியுடன் இந்தத் திருப்பணிகள் நடைபெறுகின்றன. வரும் வைகாசி மாதத்தில் கோயிலின் குடமுழுக்கு விழா நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

 ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் உற்சவர்.
 ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில் உற்சவர்.

திருக்கோயிலுக்குச் செல்ல

நாகை நகராட்சிக்கு உள்பட்ட பகுதியாக உள்ள நாகூருக்கு பல்வேறு வழித்தடங்களிலிருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அயல் நாடுகளிலிருந்து வருவோர் திருச்சி விமான நிலையம் வந்தடைந்து, அங்கிருந்து தஞ்சை, திருவாரூர் வழியாக சுமார் 145.5 கி.மீட்டர் தொலைவு பயணித்து நாகூரை அடையலாம்.

கோயிலுக்கு நேரில் வர இயலாதவர்கள், பரிகார பூஜைகளுக்காகக் கோயில் நிர்வாகத்தை கடிதம் மூலம் தொடர்பு கொள்ளலாம். 

முகவரி

ஸ்ரீ நாகநாத சுவாமி திருக்கோயில்
நாகூர், நாகை மாவட்டம் - 611002
தொடர்பு எண்:  04365 - 224488

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com