Enable Javscript for better performance
திருமணப்பேறு அருளும் திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில்- Dinamani

சுடச்சுட

  

  திருமணப்பேறு அருளும் திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில்

  By சி. ராஜசேகரன்  |   Published on : 07th May 2021 10:40 AM  |   அ+அ அ-   |    |  

  thirukannamangai

  ஸ்ரீ பக்தவத்சல பெருமாள்- ஸ்ரீ அபிஷேக வல்லி தாயார் - ஸ்ரீதேவி பூமிதேவி தாயார்கள் மற்றும் ஆண்டாள்


   

  பெரும்புறக்கடலை யட லேற்றினைப்

  பெண்ணை யானை - எண்ணில் முனிவர்க்

  கருள் தருந்தவத்தை முத்தின் திரட்கோவையைப் பத்தராவியை நித்திலத் தொத்தினை

  அரும்பினையலரை யடியேன் மனத் தாசையை

  அமுதம் பொதியின் சுவை கரரும்பினைக் கனியைச் சென்று நாடி

  கண்ணமங்கையுள் கண்டு கொண்டேனே

  என திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனப் பாசுரம் பாடப்பெற்ற தலம்.

  கோயிலின் முன்புறத்தோற்றம்

  பெருமாளுக்கும் பிராட்டிக்கும் திருமணம் நடைபெற்ற கிருஷ்ணமங்கள ஷேத்திரம். 108 வைணவ திவ்ய தேசங்களில் 27ஆவது தலம் என்ற சிறப்புகளை உடையது திருக்கண்ணமங்கையிலுள்ள அருள்மிகு பக்தவத்சலப் பெருமாள் திருக்கோயில்.

  திருமணப்பேறு, பதவி உயர்வு, வேண்டுவன யாவையும் தரக்கூடிய தலம் எனப் போற்றப்படும் இக்கோயிலின் மூலவர் பெரும்புறக்கடல் என்றும் உத்ஸவர் பக்தவத்சலப் பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அதேபோல், கண்ணமங்கை நாயகி தாயார் மூலவராகவும், அபிஷேக வல்லி தாயார் உத்ஸவராகவும் விளங்குகிறார்.

  இந்த கோயிலுக்கும் சென்று வரலாம்: ஜென்ம பாவங்கள் நீக்கும் திருக்கோடிக்காவல் திருக்கோடீஸ்வரர் திருக்கோயில்

  இந்த கோயிலுக்கு ஸப்தாம்ருதஷேத்ரம் என்று பெயர். அதாவது, விமானம், மண்டபம், அரண்யம், ஷேத்ரம், தீர்த்தம், ஆறு, நகரம் ஆகிய ஏழு லட்சணங்களும் ஒருங்கே அமையப் பெற்றதால் இவ்வாறு வழங்கப்படுகிறது.

  விமானம் - உத்பலாவதக விமானம்

  மண்டபம் - வேத மண்டபம்

  அரண்யம் - கிருஷ்ணாரண்யம்

  ஷேத்திரம் - கிருஷ்ண மங்கள் ஷேத்திரம்

  தீர்த்தம் - தர்சன புஷ்கரணி (தீர்த்தத்தை கண்களால் கண்ட மாத்திரத்தில் பாப விமோசனம் தரக்கூடியது)

  ஆறு - விருத்த காவேரி எனப்படும் வெட்டாறு

  நகரம் - கண்ணமங்கை மாநகர்

  கோயில் கொடிமரம் 

  புராண வரலாறு

  பாற்கடலை கடைந்தபோது, மஹாலட்சுமி அவதரித்தார். அவரோடு உதித்த யானை, குதிரை, பாரிஜாதம் உள்ளிட்டவற்றை தேவர்களுக்குக் கொடுத்த திருமால், லட்சுமியின் அழகிய உருவத்தைக் கண்டு அவரை மணக்க நினைத்தார். இதேபோல், மஹாலட்சுமியும் திருமாலை மணக்க எண்ணி, தவம் செய்ய விரும்பினார். தவம் செய்வதற்கு ஏற்ற தலமாக திருக்கண்ணமங்கையைத் தேர்ந்தெடுத்து, தர்சன புஷ்கரணிக் கரையை அடைந்து தவம் மேற்கொண்டார்.

  கொடிமரத்துடன் ராஜகோபுரம்

  அவரின் தவத்தை மெச்சிய திருமால், உத்பலாவதகம் என்ற விமானத்தில் ஏறி, தர்சன புஷ்கரணி கரைக்கு வந்தார். கரையின் மேல் திசையில் நின்றுகொண்டு, கீழ்த்திசையில் தவம் செய்த லட்சுமியைக் கண்டார்.

  இந்தக் கோயிலுக்கும் சென்றுவரலாம்: குழந்தைப் பேறு அருளும் வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில்

  பின்னர், விஷ்வக்சேனரிடம் ஓலை எழுதி, லட்சுமிக்கு அனுப்பினார். அதில், நான் மேற்குக் கரையில் நின்று கொண்டிருக்கிறேன் என எழுதியிருந்தது. திருமாலின் இங்கிதத்தை கண்டு மகிழ்ந்த லட்சுமி, பெருமாளிடம் தோழிகள் சகிதமாக வந்து வணங்கினார். பின்னர், ரிஷிகள், தேவர்கள், கந்தவர்கள், கின்னரர் ஆகியோர் அனைவரும் ஒன்று சேர்ந்து, லட்சுமி-திருமாலின் திருமண வைபத்தை நடத்தி வைத்தனர். தேவர்கள், ஒன்று கூடி பகவானுடைய பட்டமகிஷியாக மஹாலட்சுமியை தர்சனபுஷ்கரணி தீர்த்தங்களால், பட்டாபிஷேகம் செய்து வைத்தனர். அதனால், மஹாலட்சுமிக்கு அபிஷேகவல்லி என்ற பெயர் ஏற்பட்டது. லட்சுமி தவம் செய்ததால், இது லட்சுமி வனம் என்றும் வழங்கப்படுகிறது.

  ஸ்ரீ அபிஷேகவல்லி தாயாருடன் ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள்

  பக்தவத்சலனும், பிரம்மாவும்

  முன்னொரு நாளில், மது, கைடபர் என்ற இரு அசுரர்கள், பிரம்மதேவனிடமிருந்து வேதங்களை அபகரித்துக்கொண்டு, கடலில் மறைந்தனர். வேதங்களை மீட்கும் பொருட்டு, உதவிகேட்க திருமாலிடம் சென்றார் பிரம்மன். பாற்கடலிலுள்ள திருமாலுடைய கோயில் காப்பான் ஸநந்தன் என்பவன், பகவான் பாற்கடலில் இல்லை, மஹாலட்சுமி தர்சன புஷ்கரணிக் கரையில் தவம் செய்வதால், அவருக்காக திருக்கண்ணமங்கையில் தர்சன புஷ்கரணியின் மேற்குத் திசையில் உள்ளார் என்று கூறினான்.

  ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமாள், ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன் சன்னதி

  இதைக்கேட்ட பிரம்மன் பாற்கடலின் வடப்புறத்தில் திருமாலை நினைத்து தவம் புரிந்தார். தவத்தின் பயனாக, திருமால் விரைந்து வந்து, அசுரர்களை வதம் செய்து, வேதங்களை மீட்டுத் தந்தார். பின்னர் தன்னை வணங்கிய பிரம்மனிடம் அவர், இந்த லட்சுமி ஷேத்ரம் மஹாபுண்யமானது. என் ஸ்ரீபாத தீர்த்தமே தர்சன புஷ்கரணி. பிராட்டியோடு நான் இங்கு நித்யவாசம் செய்கிறேன். இந்த புஷ்கரணிக் கரையில் தரிசனம் கொடுத்தபடியால், இதற்கு தர்சன புஷ்கரணி எனப் பெயர் ஏற்படும் என்றார்.

  தீர்த்த சிறப்பு

  இந்த புஷ்கரணிக்கு விஷ்ணு பாதகங்கை என்ற பெயரும் உண்டு. மஹாபலியின் யாகசாலைக்கு வாமன ரூபத்துடன் சென்று மூன்றடி மண் கேட்டபோது, அவன் கொடுக்க இசைந்தவுடன் த்ரிவிக்ரம அவதாரம் எடுத்தார். அப்போது, அவர் பாதத்திலிருந்து பெருகி வந்த விஷ்ணுபதி என்ற கங்கா தீர்த்தம், பெருமாளுடைய கால் பெருவிரலால் பள்ளமாக்கச் செய்து இங்கே நிறுத்தப்பட்டது. அதுவே தர்சன புஷ்கரணி. இது கங்கையைக் காட்டிலும் புனிதமானது. இந்த புஷ்கரணியில் ஒருமுறை நீராடுபவர்கள் கூட நற்பேறு பெறுவார்கள்.

  அனுமன் வாகனத்தில் பெருமாள்

  இந்தக் கோயிலையும் தரிசிக்கலாமே: ராகு - கேது தோஷம் நீக்கும் காளஹஸ்தி திருக்காளத்தீசுவரர் திருக்கோயில்

  இந்த புஷ்கரணியை ஸ்தாணு என்ற சிவன், பிரம்மன், முருகன், விநாயகர் ஆகியோர் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு திக்குகளில் காத்து வருகின்றனர். நடுவில், ஷேத்ர பாலகனோடு இந்திராதி தேவர்கள் அவர்களுக்குரிய திக்குகளில் காவல் புரிகின்றனர். மேலும், முப்பத்து முக்கோடி தேவர்கள், வசிஷ்டர், வாமவர், ஜாபாலி, காச்யபர், பராசரர், வியாசர், விஸ்வாமித்திரர், அஷ்டவக்ரர் ஆகிய பிரம்ம ரிஷிகள் திசைதோறும் நின்று தீர்த்த சேவை புரிவதாகப் புராணம் தெரிவிக்கிறது.

  மணவாள மாமுனிகள் சன்னதி

  கோயில் அமைப்பு

  கிருஷ்ண மங்கள ஷேத்திரமான பக்தவத்சலப் பெருமாள் கோயில் 4 பிரகாரங்களைக் கொண்டது. முதல் கோபுரமான மொட்டை கோபுரத்தை கடந்து உள்ளே சென்றால், பலிபீடமும் கொடிமரமும் உள்ளன. இடது புறம் ஆழ்வார்கள் சன்னதி. வலது புறம் ஸ்ரீ மணவாள மாமுனிகள் சன்னதி. இதைத்தொடர்ந்து ராஜகோபுரம் உள்ளது. இதைக் கடந்தால் முதல் பிரகாரம் வரும். செண்பக பிரகாரம் என அழைக்கப்படும் இந்த வெளிச்சுற்றில் நந்தவனமானது, கோயிலுக்கு மாலை போல அமைந்துள்ளது. இப்பிரகாரத்தின் வடபுறத்தில் திருக்கண்ணமங்கையாண்டான் திருவரசும், தலவிருட்சமாகிய மகிழமரமும் உள்ளன.

  ஸ்ரீ ஆழ்வார்கள் சன்னதி

  பலிபீடத்தின் மேல்புறத்தில் இரண்டாவது ராஜகோபுரம் உள்ளது. கோபுரத்துக்கு உட்புறம் கருடாழ்வார் சன்னதி பெருமாளை நோக்கி உள்ளது. இங்கு கருடாழ்வார் கூப்பிய கரங்களுடன் நின்ற கோலத்தில் சங்கு சக்கரம் தரித்தபடி காட்சியளிக்கிறார். கருடாழ்வாரை வணங்கி, தென்புற பிரகாரத்துக்குச் சென்றால், தென்கிழக்குப் பகுதியில் விசாலமான திருமடைப்பள்ளியையும், மடைப்பள்ளி நாச்சியாரையும் காணலாம்.

  அதையடுத்து திருவந்திக்காப்பு மண்டபம் உள்ளது. இதன் மேல்புறத்தின் இரண்டு பக்கங்களிலும் கருடன் சிலை காணப்படுகிறது. இம்மண்டபத்தில் பஞ்சவர்ண புறப்பாடுகளில் அந்திக்காப்பு பூஜை நடைபெறும்.

  இதையும் படிக்கலாம்: நாக தோஷம் போக்கும் நாகராஜா திருக்கோயில்

  தாயார் சன்னதி

  தாயார் சன்னதியானது, கர்ப்பகிருஹம், அர்த்த மண்டபம், மஹா மண்டபம் ஆகிய அமைப்புகளைக் கொண்டது. கர்ப்பகிருஹத்தில் அபிஷேகவல்லித்தாயார், வீற்றிருந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். அர்த்த மண்டபத்தில் தெற்கு வடக்கு சுவர்களில் செவ்வக வடிவில் உள்ள சாளரத்தில் தேன்கூடு காணப்படுகிறது. பெருமாள் தாயார் திருக்கல்யாணத்தைக் காண வந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு வண்டாக இருப்பதாக ஐதீகம்.

  ஆண்டாள் சன்னதி

  ஆண்டாள் சன்னதி

  இரண்டாம் சுற்றின் வடக்கு பிரகாரத்தில் மேற்குப் பகுதியில் ஆண்டாள் சன்னதி அமைந்துள்ளது. போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் ஆகிய நாள்களில் ஆண்டாள் புஷ்கரணிக்கு எழுந்தருளி, அங்குள்ள மண்டபத்தில் எழுந்தருளி நீராட்டு உற்சவம் கண்டருளுவார்.

  சொர்க்கவாசல்

  சொர்க்கவாசல்

  இந்தப் பிரகாரத்தின் தென்புறம் நடுப்பகுதியில் சொர்க்கவாசல் கோபுரத்துடன் காணப்படுகிறது. இதன் வழியாகவே வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் எழுந்தருள்வார். இவ்வாசலின் கிழக்குப் பகுதியில் ஒரு மேடை அமைக்கப்பட்டு, திருமாலின் இரண்டு பாதங்கள் உள்ளன. இதனையடுத்த பிரகாரத்தின் வடபுறத்தில் தேசிகர் சன்னதி, நவநீதகிருஷ்ணன் சன்னதி, கோதண்டராமர் சன்னதி, யாகசாலை ஆகியவை வரிசையாக தெற்கு நோக்கி அமைந்துள்ளன. தேசிகர் சன்னதிக்கு எதிரில் உள் சுற்றுச்சுவரில் லட்சுமி, நரசிம்மர் யாழ் மீட்டும் நங்கையின் உருவங்கள் உள்ளன.

  வசந்த மண்டபம்

  பெருமாள் சன்னதி

  கருடாழ்வாரைச் சேவித்து வலமாக பெருமாள் சன்னதிக்கு உள்ளே செல்ல வேண்டும். முதலில் விசாலமான மகா மண்டபம், அதையடுத்து அர்த்த மண்டபம், அதற்குப்பிறகு கருவறை என்ற அமைப்புடன் விளங்குகிறது.

  மகா மண்டபம் விசாலமாக நான்கு உயர்ந்த தூண்களால் நிறுவப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் பக்தவத்ஸலப் பெருமாளுக்கும் அபிஷேக வல்லித் தாயாருக்கும் திருக்கல்யாணம் நடந்ததாகப் புராணம் தெரிவிக்கிறது. திருக்கல்யாண வைபவத்தை முன்னின்று நடத்திய பிரம்மா, நான்கு வேதங்களையும் நான்கு தூண்களாக நிறுத்தி, ஸ்ரீ மண்டபமாக அமைத்தார் என்பது வரலாறு. மகாமண்டபத்தின் நுழைவுவாயிலில் இடது கைப்பிடிச் சுவரில் திருக்கோயில் காப்பானாகிய சிறுதெய்வம் காணப்படுகிறது.

   ஹயக்ரீவப் பெருமாள் சன்னதி (வேறு கோணம்)

  அர்த்த மண்டபம் நீள் சதுர அமைப்பில் உள்ளது. அர்த்த மண்டபமும் கருவறையும் சேருமிடத்தில் வலப்புறத்தில் சக்கரமும், இடப்புறத்தில் சங்கும் உள்ளன. மண்டபத்தின் வலப்புறத்தில் ஆழ்வார் ஆசார்யர்களின் உத்ஸவர்களும், விஷ்வக்ஸனர் 2 திருக்கைகளோடும் வீற்றிருந்த கோலத்தில் எழுந்தருளியுள்ளனர். அடுத்துள்ள கர்ப்பகிருஹம் சதுர வடிவில் உள்ளது. இங்குப் பெரிய பெருமாளான மூலவர், 16 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இரண்டு புறத்திலும் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்கள் உள்ளனர்.

  இந்த கோயிலுக்கும் செல்லலாம்: நோய்கள் தீர்க்கும் திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில்

  108 திவ்ய தேசங்களில் இவரே பெரிய பெருமாள். இப்பெருமாள் வருணனுக்கும், மார்க்கண்டேயருக்கும் சேவை சாதித்ததால், இவர்கள் இருந்த கோலத்தில் கூப்பிய கையுடன் எதிரெதிராக கருவறைக்குள் அமர்ந்துள்ளனர். இப்பெருமாள் பிராட்டியின் திருமணக் கோலத்தைக் காண வந்த தேவர்களின் சிற்பங்கள் கருவறையின் நான்கு புறச்சுவர்களிலும் உள்ளனர்.

  ஸ்ரீ பட்சிராஜன் சன்னதி

  வேண்டியதைத் தரும் பட்சிராஜன்

  ராஜகோபுரத்தை கடந்தால் ஸ்ரீ மண்டபம். அதில் பட்சிராஜன் சன்னதி அமைந்துள்ளது. இங்கு பட்சிராஜன் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவரைப் பிரார்த்தித்தால், கைமேல் பலன் கிடைக்கும். எந்தக் காரியம் குறித்து வேண்டிக்கொண்டாலும், உடன் முடித்துக் கொடுக்கக்கூடியவர் பட்சிராஜன். இவருக்கு 9 கஜம் கட்டம் போட்ட கறுப்பு நூல் கலக்காத புடவை சாற்றுவது மரபு. நாள்தோறும் பிரார்த்தனை, திருமஞ்சனம் நடைபெறும். பட்சிராஜனுக்கு பிரார்த்தனை, திருமஞ்சனம் ஆகியவை இங்கு மட்டும்தான் என்பது கூடுதல் சிறப்பு.

   சுவரில் பதிக்கப்பட்டுள்ள சுவாமி உருவங்கள்

  திருமணப்பேறு அருளும் கருடாழ்வார்

  நின்ற கோலத்தில் சங்கு, சக்கரம் தரித்தவாறு காட்சியளிக்கும் கருடாழ்வார், பக்தர்களின் வேண்டுகோளை உடனுக்குடன் பூர்த்தி செய்வதால், கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறார். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணப்பேறு அளிக்கிறார். ஞாயிறு, வியாழன் ஆகிய கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்தன்றும் இவருக்கு திருமஞ்சனம் செய்து அம்ருத கலசம் நிவேதனம் செய்வது வழக்கம்.

  இந்த கோயிலுக்கும் சென்று வரலாம்: வயிற்றுநோய் போக்கும் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில் 

  கோயில் சுவரில் உள்ள சீனிவாசர் உருவம்

  பாவங்களைப் போக்கும் தர்சன புஷ்கரணி

  தர்சன புஷ்கரணி என்பது கங்கையாகும். மேலும், கங்கை, யமுனை, நர்மதை, கெளமுதி, கோதாவரி, கிருஷ்ணவேணி, துங்கபத்ரை, சரஸ்வதி, அஸிக்நி, சதக்நி, ஷீரிணி, வேதவதி, ஸரயு, காவேரி, தாமிரபரணி, மஹாநதி, வாராஹி, சிந்து ஆகிய 18 தீர்த்தங்களும் தர்சன புஷ்கரணியில் வந்து தங்கியுள்ளன. எனவே, பிரம்மஹத்தி பிடித்தவன், வீரனைக் கொன்றவன், பசுவைக் கொன்றவன் ஆகியோர் இந்த புஷ்கரணியைத் தரிசித்த மாத்திரத்தில் புனிதனாவான். மஹாமகத்தில் நீராடுபவன் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டவனாகிறான். சந்திராயனம், அஸ்வமேத யாகம் செய்த பலன்களைப் பெறுகிறான் என்று ஸ்கந்த புராணத்திலும், ஆடக ஷேத்ரமகாத்மியத்திலும் விஷ்ணுபதி கங்கை என்று தர்சன புஷ்கரணியின் சிறப்பு கூறப்பட்டுள்ளது.

  கோயிலின் முன்புறம் உள்ள குளம் (தர்சன புஷ்கரணி)

  இங்கு மாசி மாதத்தில் ஒருநாளில் ஸ்நானம் செய்து மந்திர ஜபம் செய்தால், பிரயாகையில் ஸ்நானம் செய்த பலன் கிடைக்கும். இந்த லட்சுமி ஷேத்திரத்தில் விரதமிருந்து ஸ்நானம் செய்து ஓர் அந்தணனுக்கு போஜனமளிப்பது ஐஸ்வர்யத்தை அளிக்கும்.

  திருவிழாக்கள்

  சித்திரை- 10 நாள் பிரம்மோத்ஸவம் சித்ரா பெளர்ணமியில் நிறைவு

  வைகாசி - 13 நாள்கள் வசந்த உத்ஸவம்

  ஆடி, ஏகாதசி, கேட்டை நட்சத்திரத்தில் ஜேஸ்டாபிஷேகம் (பெரிய திருமஞ்சனம்).

  ஆவணி - ஸ்ரீ ஜயந்தி, உரியடி

  கருட வாகனத்தில் பெருமாள்

  இந்த கோயிலையும் பார்க்கலாம்ராகு - கேது சர்ப்ப தோஷங்கள் நீக்கும் திருப்பாம்புரம் பாம்புரநாதர் திருக்கோயில்

  புரட்டாசி - நவராத்திரி. புரட்டாசி திருவோணத்தை இறுதியாகக் கொண்டு 10 நாள்கள் ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் திருநட்சத்திர மஹோத்ஸவம். திருவோணத்தன்று ஸ்ரீ தேசிகன் சன்னதிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் எழுந்தருளல். 

  ஐப்பசி - திருப்பவித்ரோத்ஸவம் 3 நாள்கள். ஸ்ரீ மணவாள மாமுனிகள் 10 நாள் உற்ஸவம்

  மார்கழி - அத்யயன உத்ஸவம், அத்தியாயன உத்ஸவம், வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு

  பங்குனி - உத்திர நட்சத்திரத்தில் பெருமாள், தாயார் திருமஞ்சனம், திருக்கல்யாண உத்ஸவம்.

   சுவரில் பதிக்கப்பட்டுள்ள சுவாமி உருவங்கள்

  கோயில் அமைவிடம்

  திருவாரூர் கும்பகோணம் சாலையில் திருவாரூரிலிருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. திருவாரூர் அல்லது கும்பகோணத்திலிருந்து பேருந்தில் செல்லலாம்.

  பக்தர்கள் பங்களிக்கலாம்

  ஆலய நித்தியப்படி பூஜைக்கு ஒரு காலத்துக்கு ஆகும் செலவை ஏற்கும் வகையில், ரூ.3000 வங்கியில் முதலீடு செய்தால், அதிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு, பக்தர்கள் விரும்பும் தினத்தில் அவர்களின் பெயரில் பூஜை, அர்ச்சனை செய்யப்பட்டு, திருக்கோயில் பிரசாதம் பரம்பரையினருக்கும் அனுப்பி வைக்கப்படும். நன்கொடை மற்றும் நித்திய கால கட்டளைக்கு கீழேயுள்ள முகவரிக்கு அனுப்பிவைக்கலாம்.

  முகவரி

  அருள்மிகு பக்தவத்சலப் பெருமாள் கோயில் 

  திருக்கண்ணமங்கை - 610104

  திருவாரூர் மாவட்டம்

  தொலைபேசி: 04366 - 278070
   

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp