நோய் தீர்க்கும் கரந்தை கருணாசுவாமி திருக்கோயில்

இம்மூர்த்தியை வழிபட்டால் பாவங்களிலிருந்து விடுதலையும், நல்ல மன  உறுதியும் கிடைக்கும்.
ஸ்ரீ வசிஷ்டேசுவரர் - பெரியநாயகி
ஸ்ரீ வசிஷ்டேசுவரர் - பெரியநாயகி

தஞ்சாவூரின் வட திசையிலுள்ள நகரப் பகுதி கரந்தை என்கிற கருந்திட்டைக்குடி. இப்பகுதி வெண்ணாற்றுக்குத் தெற்கிலும், வீரசோழ வடவாற்றுக்கு வடக்கிலுமாக  இரு ஆறுகளுக்கிடையே அமைந்த வளமான பகுதி. தஞ்சாவூருக்கு எவ்வளவு பழைமை இருக்கிறதோ, அதைவிட மிகப் பழைமையான பெருமை இக் கருந்திட்டைக்குடிக்கு  உண்டு.

கோயில் முகப்புக் கோபுரம்
கோயில் முகப்புக் கோபுரம்

இக்கரந்தையின் கிழக்குப் பகுதியின் மையத்தில் இருக்கிறது ஸ்ரீவசிஷ்டேசுவரர் என்கிற ஸ்ரீகருவேலநாதர் என்கிற ஸ்ரீகருணாசுவாமி கோயில்.

இக்கோயிலிலுள்ள கல்வெட்டுகள் இரண்டாம் பராந்தகனாகிய சுந்தர சோழன், முதலாம் ராசராசன், முதலாம் ராஜேந்திர சோழன், இரண்டாம் இராஜாதிராஜ சோழன்  என நான்கு சோழர் அரசர்களின் காலத்தைச் சார்ந்தவையாக உள்ளன.

இக்கோயிலில் முதலாம் ராசராசனின் தந்தையாகிய சுந்தர சோழன் காலத்துக் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. இதில், சுந்தரசோழன் இக்கோயிலுக்கு செய்த  திருப்பணிகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, இக்கோயில் முதலாம் ராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோயிலுக்கு முந்தைய பழைமையானது  என்கின்றனர் கல்வெட்டு ஆய்வாளர்கள். மேலும், சுந்தரசோழன் காலத்தில் இக்கோயில் சிதிலமடைந்து, திருப்பணி செய்ய வேண்டிய நிலையில் இருந்திருக்கிறது.

கோயில் முகப்புக்கு எதிரேயுள்ள நந்திகேசுவரர்
கோயில் முகப்புக்கு எதிரேயுள்ள நந்திகேசுவரர்

இதன் மூலம், இக்கோயில் சுந்தர சோழன் காலத்துக்கும் முந்தையாக இருக்க வேண்டும் எனவும், ஏழாம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என்ற கருத்தும்  வரலாற்று ஆய்வாளர்களிடையே நிலவுகிறது. இதற்குச் சான்றாக, 

நற்குடிமேல் விடையுயர்ந்த நம்பன் செம்பங்

குடிநல்லக் குடிநளிநாட்டியத்தான் குடி

கற்குடிதென் களக்குடிசெங் காட்டங் குடி

கருந்திட்டைக் குடி கடையக் குடி காணுங்கால்

விற்குடிவேள் விக்குடிநல் வேட்டக் குடி வேதிகுடி

மாணிகுடி, விடைவாய்க்குடி

புற்குடிமா குடிதேவன் குடிநீலக் குடி புதுக்குடியும்

போற்றவிடம் போகுமன்றே

என திருநாவுக்கரசர் தனது திருத்தாண்டகத்தில் பாடியுள்ளார்.

மேலும், ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் அடிகள் இக்கருந்திட்டைக்குடி நாயனார் கோயிலை வைப்புத் தலமாக வைத்துப் போற்றி பாடல் புனைய வேண்டுமெனில் இக்கோயிலின் புகழ் எங்கும் பரவியிருக்க வேண்டும் என்பது தெரிய வருகிறது.

தஞ்சாவூரை கி.பி. 6, 7 ஆம் நூற்றாண்டுகளில் முத்தரையர்கள் ஆண்டு வந்தனர். எனவே, இக்கோயில் கி.பி. 6, 7 ஆம் நூற்றாண்டுகளில் முத்தரையர் காலத்தில் எழுப்பப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவுகிறது. பழுதடைந்த இக்கோயில், பிற்காலச் சோழர் காலத்தில் ஒவ்வொரு பகுதியாகப் புதுப்பிக்கப்பட்டிருக்கலாம். முதலாம் ராசராச சோழன் காலத்தில் இக்கோயிலில் மீண்டும் முழுமையாகத் திருப்பணி செய்யப்பட்டிருக்கிறது. ராசராச சோழனின்  தமக்கையார் குந்தவை பிராட்டியாரும் இக்கோயிலுக்குப் பல நிவந்தங்கள் செய்துள்ளார்.

 கோயிலின் கிழக்கிலுள்ள கருணாசுவாமி குளம்
 கோயிலின் கிழக்கிலுள்ள கருணாசுவாமி குளம்

எனவே, இக்கோயில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த முத்தரையர் காலத்தில் சிறு கோயிலாக இருந்து, கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் சிதிலமடைந்திருக்கலாம். பின்னர் இக்கோயிலில் கி.பி. 10, 11 ஆம் நூற்றாண்டுகளில் சுந்தர சோழன், மதுராந்தகன், ராசராசன், குந்தவையார் உள்ளிட்டோரால்  திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. பிற்காலத்தில் 15, 16ஆம் நூற்றாண்டுகளில் அடியார்களால் மண்டபங்கள் கட்டப்பட்டிருக்க வேண்டும் எனவும் ஆய்வாளர்கள்  குறிப்பிடுகின்றனர்.

இக்கோயிலில் மூன்று வாயில்களில் ஒன்று கிழக்குத் திசையில் குளத்தை நோக்கி அமைந்துள்ளது. மற்றொன்று தெற்கு நோக்கி உள்ளது. இதன் வழியே பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேற்கு நோக்கிய வாயில் ஒன்றும் இருக்கிறது.

இறைவன் - இறைவி

இக்கோயிலிலுள்ள இறைவன் பெயர் ஸ்ரீவசிஷ்டேசுவரர் என்கிற ஸ்ரீகருவேலநாதர் என்கிற ஸ்ரீகருணாசுவாமி. கருவறையிலுள்ள வசிஷ்டேசுவரர் என்கிற கருந்திட்டைக்குடி மகாதேவர் சிவலிங்க வடிவில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவி பெயர் ஸ்ரீபெரியநாயகி என்கிற ஸ்ரீதிரிபுரசுந்தரி.

வசிஷ்டர் - அருந்ததி

கருவறையின் தென்புறத் தெய்வ மாடப்புரையில் ஆலமர்கடவுளாக அமர்ந்த கோலத்தில் காணப்படும் குரு தட்சிணாமூர்த்தி சிற்பம் உள்ளது. அவருக்கு வலப்புறம்  வசிஷ்டர் ரிஷி காணப்படுகிறார். யார் கண்களுக்கும் புலப்படாத வகையில் வசிஷ்டரின் ரிஷி பத்தினி அருந்ததி, அவருக்கு அருகே ஒடுங்கி ஒளிந்து சிற்ப வடிவில்  இருக்கிறார்.

ஸ்ரீ வசிஷ்டேசுவரர் - அருந்ததி
ஸ்ரீ வசிஷ்டேசுவரர் - அருந்ததி

இது, உலகில் காணக் கிடைக்காத அரிய காட்சியாகும். அக்கமாலையும், குண்டிகையும் கைகளில் ஏந்தித் தாமரை மனைப் பலகையில் அமர்ந்திருக்கிறார் வசிஷ்டர். வேறெந்த சிவன் கோயிலிலும் காண முடியாத அரிய காட்சி இது. அகத்தியரும் இக்கோயிலில் உள்ளார். வசிஷ்டரும், அருந்ததியும்  இத்தலத்தில் தம்பதியாய் ஈசனை பூஜித்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

அர்த்தநாரீஸ்வரரின் அதிசய சிற்பம்

கருவறையில் மேற்கு தெய்வ மாடப்புரையில் லிங்கோத்பவர் காணப்படுகிறார். நான்முகனும், திருமாலும் உடனாகக் காட்டப்பட்டுள்ளனர். லிங்கோத்பவரின் வலப்புறச் சுவரில் கங்காளரும், இடப்புறத்தில் அர்த்தநாரீஸ்வரரும் உள்ளனர். இந்த அர்த்தநாரீஸ்வரர் திருமேனி அதிசயமானது. பொதுவாக இடப்பாகத்தையே  அம்மைக்கு வழங்கும் சைவ நெறியிலிருந்து மாறுபட்டு, இங்கு வலப்பாதியை அம்மை பெற்றுள்ளார். இது, வேறெங்கும் காண முடியாத புதுமைப் படைப்பு.

கருங்குஷ்டம் நீங்க

கருங்குஷ்ட நோயில் துன்பப்பட்ட சோழ மன்னனுக்கு சிவனார் வேங்கை வடிவில் தோன்றி விரட்டிய பின் அருகிலிருந்த குளத்தில் மறைந்துவிடுகிறார். மன்னன்  அக்குளத்தில் மூழ்கி எழுந்ததும், அவனுக்கிருந்த குஷ்ட நோய் ஈசனின் கருணையால் நீங்கப்பெற்ற அற்புத தலம் இது. எனவே, கடுமையான சுரம் போன்ற  நோயுற்றவர்கள் திருக்குளத்திலிருந்தோ அல்லது கோயில் கிணற்றிலிருந்தோ நீர் கொண்டு வந்து ஜுரஹரேஸ்வரர் அமைந்துள்ள தொட்டியில் நிரப்பி வழிபட  நோயின் கடுமை குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கருணாசுவாமி குளத்துக்கு ஏறத்தாழ அரை கி.மீ. தொலைவில் உள்ள வடவாறிலிருந்து தண்ணீர் வருவதற்குப் பூமிக்கடியில் சுரங்க நீர்வழிப்பாதை இருந்தது.  மன்னர் காலம் வரை இருந்த இந்தச் சுரங்க நீர்வழிப் பாதைக் காலப்போக்கில் ஆங்காங்கே சேதமடைந்து, முற்றிலும் மறைந்துவிட்டது.

இதனால், இந்தக் குளத்துக்குத் தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டதால், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக வறண்டு கிடந்தது. சிவனடியார்கள் முயற்சி செய்து, நிதி  திரட்டி இக்குளத்தைத் தூர் வாரினர். பின்னர், இக்குளத்துக்கான சுரங்க நீர்வழிப் பாதையைக் கண்டறிந்து, அதிலிருந்த அடைப்புகளை நீக்கி கடந்த ஜனவரி மாதம்  வடவாற்றிலிருந்து தண்ணீரைக் கொண்டு வந்தனர். தற்போது கோடையின் காரணமாக இக்குளம் வறண்டு கிடக்கிறது. காவிரியில் தண்ணீர் வரும்போது  இக்குளத்துக்கும் தண்ணீர் வர வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையில் பக்தர்கள் உள்ளனர்.

பாவங்களிலிருந்து விடுபட

இத்தலத்தில் உள்ள கங்காள மூர்த்தி சிற்பம் உத்தமசோழன் காலத்தில் நிறுவப்பட்டது. இம்மூர்த்தியை வழிபட்டால் பாவங்களிலிருந்து விடுதலையும், நல்ல மன  உறுதியும் கிடைக்கும். மேலும், எமனைக் காலால் எட்டி உதைத்த கோலத்தில் காலசம்ஹார மூர்த்தி அருள்பாலிக்கிறார். எனவே, இவரை வழிபடும் அடியவர்களுக்கு எம பயம் நீங்கி, நீடித்த ஆயுளுடன் கூடிய சிறப்பான வாழ்வு அமையும். 

 சூரிய பூஜை
 சூரிய பூஜை

திருவிழாக்கள்

இக்கோயிலில் வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திரம் மற்றும் தைப்பூச நாளில் வசிஷ்டர் - அருந்ததி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். இது வேறு எங்கும் காண இயலாத அற்புத நிகழ்ச்சி. வைகாசி மாதம் பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

பங்குனி மாதம் 3, 4, 5 ஆம் தேதிகளில் சூரிய உதயத்தின்போது, சூரிய ஒளி மகாதேவ லிங்கத்தின் மீது விழுந்து வணங்கிப் பூஜிக்கும் நிகழ்வு நடைபெறும். அப்போது, சூரிய பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.

போக்குவரத்து வசதி

இக்கோயிலுக்குச் செல்ல தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கரந்தை வழித்தடத்தில் அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. பழைய பேருந்து நிலையத்திலிருந்து இக்கோயில் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்தால், ஏறத்தாழ அரை கி.மீ. தொலைவில் இக்கோயில்  உள்ளது. ரயிலில் வருபவர்கள் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இறங்கி பழைய பேருந்து நிலையத்துக்குச் சென்று, அங்கிருந்து கரந்தை வழித்தடப் பேருந்தில்  ஏறிச் செல்லலாம். விமானத்தில் வருபவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இறங்கி சாலை வழியாக தஞ்சாவூருக்கு வந்து, இக்கோயிலைச் சென்றடையலாம்.

தொடர்புக்கு: 04362 - 223384

முகவரி

அருள்மிகு கருணாசுவாமி திருக்கோயில்

கரந்தை , தஞ்சாவூர் - 613 002

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com