தீராத நோய்களைத் தீர்க்கும் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்

தீராத நோய்களைத் தீர்த்துவைக்கும் திருத்தலமாக சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் விளங்குகிறது.
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன்
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன்

அநீதிகளையும், தீமைகளையும் அழித்து, தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருச்சி மாவட்டம், சமயபுரத்திலுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில். அம்மன் வழிபாட்டில் முதன்மை பெற்று விளங்கும் இத்திருக்கோயில், காவிரியின் வடகரையில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

மகாவிஷ்ணுவின் தசாவதாரத்தில் கிருஷ்ணர் அவதாரம் முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்த அவதாரத்தில் தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் அவதரிக்கின்றனர். அவ்விரு குழந்தைகளும் இறைவனின் எண்ணத்தால் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இதனை கம்சன் அறிந்துகொண்டாலும், குழந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதை அறிய இயலாதவனாகிறான்.

சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் மாரியம்மன்
சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் மாரியம்மன்

குழந்தையைக் கொல்லத் துணிந்த கம்சன், தேவகியின் அறைக்குச் சென்று குழந்தையைத் தூக்க முற்படுகின்றான். ஆனால், அருகில் நெருங்க முடியாதபடி அக்குழந்தை தன் உண்மையான அவதாரத்தைக் காட்டி நின்றது. அன்னையின் அற்புதத் தோற்றத்தைக் கண்ட கம்சன் பின் சம்ஹாரம் செய்யப்பட்டான். மகா சக்தியாக தோன்றிய அம்மன் தனது எட்டுக் கரங்களிலும் எண்ணற்ற ஆயுதங்களைத் தாங்கி, இவ்வுலகைக் காக்க அவதரித்து நின்றாள், இத்தேவியே மகாமாரி என்னும் மாரியம்மனாக கண்கண்ட தெய்வமாக மக்களால் சமயபுரம் மாரியம்மனாக பூஜிக்கப்படுகிறாள்.

மேலும், ஒரு கூற்றாக ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலிலிருந்த அம்மனின் திருமேனி உக்கிரம் மிகுந்து இருந்தமையால், அங்கு அப்போது இருந்த ஜீயர் சுவாமிகள் அம்மனின் திருவுருவத்தை மற்றொரு இடத்துக்கு மாற்ற ஏற்பாடு செய்தார். அதன்படி பணிவிடை புரிவோர் அத்திருவுருவத்தை எடுத்துக்கொண்டு வடக்கு நோக்கி வந்து, ஒரு இடத்தில் இறக்கி வைத்துவிட்டு இளைப்பாறினர். அவர்கள் இளைப்பாறிய அந்த இடம் இப்போது சமயபுரம் என்ற பெயரில் உள்ளது.

சித்திரைத் தேரோட்டத்தில் குவிந்த மக்கள் கூட்டம்
சித்திரைத் தேரோட்டத்தில் குவிந்த மக்கள் கூட்டம்

அதன் நினைவாகவே, இப்போதும் இத்திருக்கோயிலின் திருவிழாவில் எட்டாம் நாளில் அம்மன் அங்கு சென்று ஓர் இரவு ஓய்வு கொள்வது நடைபெற்று வருகிறது. இளைப்பாறிய அப்பணிவிடையாளர்கள் அங்கிருந்து தென்மேற்காக வந்து, கண்ணனூர் அரண்மனை மேட்டில் அன்னையின் திருவுருவத்தை வைத்துவிட்டுச் சென்று விடுகின்றனர். அவ்வாறு அவர்கள் வைத்த இடம் மாரியம்மனின் அருளாலயமாகத் திகழ்கிறது. மேலும் அவர் கண்ணனூர் மாரியம்மன் என்ற திருப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார்.

திருத்தலத்தின் சிறப்பு

திருக்கடையூரில் மார்க்கண்டேயனின் அதீத பக்திக்கு மயங்கி, கால சம்ஹார மூர்த்தியாக அவதரித்து எமதர்மனை சிவன் அழிக்கவே, உலகில் ஜனன- மரண நிலையில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது. அந்த நிலையில், எமதர்மன் சபையில் மூத்த அமைச்சராகவும், நோய்களின் அதிபதியாகவும் இருந்த மாயாசூரன் பூவுலகில் இறப்பு நின்றுவிட்ட நிலையில், நோய்களைப் பரப்பி மக்களைத் துன்புறுத்தினான். அதர்மம் அழிந்து, தர்மம் தழைத்தோங்க மும்மூர்த்திகளின் வேண்டுகோளுக்கிணங்க மாயாசூரனையும் அவனது சகோதரர்களையும் வதம் செய்து, அவர்களது  தலையை ஒட்டியாணமாக அணிந்து நோய்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றிய சிறப்புமிக்கது இத்திருக்கோயில்.

இன்றும் கருவறையில் உள்ள அம்மனின் வலது பொற்கமலத் திருப்பாதம் மாயாசூரனின் தலைமீது எழுந்தருளியிருப்பதைக் காணலாம். மேலும் இத்திருக்கோயில் தீராத நோய்களைத் தீர்க்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது.

சித்திரைத் தேரோட்டம் -  பால்குடம், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்
சித்திரைத் தேரோட்டம் -  பால்குடம், அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்

கோயிலின் அமைப்பு

ஆகம, சிற்ப, வாஸ்து சாஸ்திரங்களுக்கேற்ப அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இது செழிப்பையும், வளத்தையும் உணர்த்துவதாகக் கூறுவர். கோயில் முகப்பில் உள்ள நீண்ட பெருமண்டபம் பார்வதி கல்யாண மண்டபம் என்றழைக்கப்படுகிறது. மூன்று திருச்சுற்றுகளைக் கொண்ட இத்திருக்கோயிலின் கிழக்கிலுள்ள சன்னதித் தெருவில் அருள்மிகு விநாயகர் திருக்கோயிலும், தெற்கில் அருள்மிகு முருகன் திருக்கோயிலும் அமைந்துள்ளன. தேரோடும் வீதியின் வடக்கே மீண்டும் ஒரு விநாயகர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கில் அருள்மிகு ராஜகோபால சுவாமி பிரதிஷ்டை செய்திருப்பது மற்றொரு சிறப்பாகும்.

திருக்கோயிலின் இரண்டாம் திருச்சுற்றில் அருள்மிகு விநாயகர் சன்னதி, நவராத்திரி மண்டபம், அபிஷேக அம்மன் சன்னதி, யாகசாலை, தங்கரத மண்டபம் உள்ளிட்டவை அடங்கியுள்ளன. இரண்டாம் திருச்சுற்று முடிவடைந்த பின்னர் உள்ளே சென்றால் கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றையும், அதனைத் தொடர்ந்து மாவிளக்கு மண்டபத்தையும் காணலாம். கருவறைக்குச் செல்லும் வாயிலின் இருபுறமும் துவார  சக்திகளின் சுதை உருவத்தைக் காணலாம். வலதுபுறம் அருள்மிகு கருப்பண்ணசுவாமியின் சன்னதி உள்ளது. கருவறைக்கும், மாவிளக்கு மண்டபத்துக்கும் இடைப்பட்ட பகுதிகள் மகா மண்டபம் மற்றும் அர்த்த மண்டபம் என்றழைக்கப்படுகின்றன.

திருக்கோயிலின் முகப்பு மண்டப நுழைவுவாயில் பகுதி
திருக்கோயிலின் முகப்பு மண்டப நுழைவுவாயில் பகுதி

கருவறையைச் சுற்றி பிரகாரம் காணப்படுகிறது. இப்பிரகாரத்தில் விமானத்தின் அதிஷ்டான பகுதியில் தொட்டி போன்று அமைக்கப்பட்டு அதில் நீர் நிரப்பப்பட்டுள்ளது. அம்பாள் கருவறையில் குளிர்ச்சியாக இருப்பதற்காக, உக்கிரத்தைத் தணிப்பதற்காக இத்தகைய முறை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கருவறையின் இடதுபுறம் உற்சவ அம்மனின் சன்னதி  உள்ளது. இத்திருமேனிக்கு நாள்தோறும் சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. சமயபுரம் அருகிலுள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயிலுக்குரிய திருமேனிக்கும் இங்கு நாள்தோறும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

உற்சவ  அம்மனுக்கு  தினமும் 6 கால பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. காலை 7.30 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தம் வடக்குப் பிரகாரத்தில் பக்தர்கள் மீது தெளிக்கப்படுகிறது. இதனால் அம்மை நோய் கண்டவர்கள் மற்றும் உடல்நலக் குறைவு உள்ளவர்கள் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு விரைவில் நலம் பெறுகின்றனர்.

மூர்த்தி

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் கருவறையில் அம்மன் வீற்றிருப்பது வழக்கமானதாக இருப்பினும், மற்றக் கோயில்களை விட இங்கு மாறுபட்ட வடிவம் கொண்டு அருளாட்சி வழங்குகிறாள். மூலவரின் திருவுருவம் மரத்தால் ஆனதென்றாலும் அதன்மேல் சுதை வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது புதுமையான ஒன்றாகும்.  தங்கஜடா மகுடம் மற்றும் குங்கும மேனி நிறத்தில் நெற்றியில் அழகிய வைரப்பட்டைகள் மின்ன, கண்களில் அருளொளி வீச வைரக் கம்மல்களுடனும், மூக்குத்தியுடனும் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்  மாரியம்மன். ஆதிசக்தியான அம்மன் தனது எட்டுக் கைகளில் இடப்புறமாக கபாலம், மணி, வில், பாசம், வலப்புறமாக கத்தி, சூலம், அம்பு மற்றும் உடுக்கை ஆகிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளாள். இடது காலை மடக்கி வைத்து, வலது காலை தொங்கவிட்ட நிலையில் சுகாசனத்தில் அமர்ந்து பக்தர்களின் குறைகளை நீக்கி அருள் வழங்கிக் கொண்டுள்ளார் மாரியம்மன்.

பூச்சொரிதலையொட்டி அம்மனுக்கு சாத்துவதற்காக கொண்டு வரப்படும் பூக்கள்
பூச்சொரிதலையொட்டி அம்மனுக்கு சாத்துவதற்காக கொண்டு வரப்படும் பூக்கள்

தீர்த்தங்கள்

இக்கோயிலில் உள்ள தீர்த்தங்கள் மகா சிறப்புப் பெற்றவை. பெருவளை வாய்க்கால் புனித சக்தி தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. திருக்கோயிலின் வடமேற்கே திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் சமயபுரத்துக்கு இடப்புறம் மகமாயி தீர்த்தமும், திருக்கோயிலின் வடமேற்கேயுள்ள வாயு மூலையில் சர்வேசுவரன் தீர்த்தமும், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் உபகோயிலான ஆனந்தவள்ளி உடனுறை போஜீசுவரர் திருக்கோயிலில் அக்னித் தீர்த்தமும், அருள்மிகு கனகாம்பிகை உடனுறை முக்தீசுவரர் திருக்கோயிலின் தெற்குப் பகுதியிலும், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் தென்கிழக்குப் பகுதியில்  ஜடாயு தீர்த்தமும் அமைந்துள்ளது. மேலும், இத்திருக்கோயிலின் மற்றொரு உபகோயிலான அருள்மிகு உஜ்ஜயினி ஓம் காளியம்மன் திருக்கோயிலின் கிழக்குப் பகுதியில் அமைந்திருப்பது கங்கைத் தீர்த்தமாகும்.

திருவிழாக்கள்

தைப்பூசத் திருவிழா, பூச்சொரிதல், சித்திரை பெருந்திருவிழா, புரட்டாசியில் நவராத்திரி பெருவிழா ஆகியவை முக்கியமான திருவிழாக்கள் ஆகும். தை மாதத்தில் 11 நாள்கள் தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. பத்தாம் திருநாளில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலிலிருந்து மாரியம்மன் சீர் பெறுதல் வைபவம் நடைபெறுகிறது. மாசி மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்குப் பூச்சொரிதல் நடைபெறுகிறது. மகிசாசுரனை வதம் செய்து பாவம் தீரவும், தன் கோபம் அடங்கவும் தவம் செய்து, பச்சைப் பட்டினி விரதமிருந்து  சாந்த சொரூபியாய் மாரியம்மன் என்று பெயர் கொண்டு மக்களுக்கு காட்சியளிக்கிறார்.

உள்பிரகார மண்டபத்தின் மேல்பகுதியில் வரையப்பட்டுள்ள  அம்பிகையின் விஸ்வரூபக் காட்சி
உள்பிரகார மண்டபத்தின் மேல்பகுதியில் வரையப்பட்டுள்ள  அம்பிகையின் விஸ்வரூபக் காட்சி

அம்மன் பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்ளும் 28 நாள்களுக்கும் நைவேத்தியம் கிடையாது. இந்த காலத்தில் மாரியம்மனுக்கு இளநீர், கரும்புச்சாறு, துள்ளுமாவு போன்றவை மட்டுமே படைக்கப்படும். பூச்சொரிதல் விழா நடைபெறும் நாள்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு பகுதிகளிலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மனை எழுந்தருளச் செய்து,  பூத்தட்டுகளையும், பூக்கூடைகளையும் ஏந்தி ஊர்வலமாக வந்து மாரியம்மனுக்கு பூக்களைச் சாத்தி வழிபாடு செய்வர்.

பங்குனி கடைசி ஞாயிற்றுக்கிழமையில் சித்திரைத் தேர்த் திருவிழாவுக்கான கொடியேற்றமும், சித்திரை முதல் செவ்வாய்க்கிழமை சித்திரைப் பெருந் திருவிழா தேரோட்டமும்  நடைபெறுகிறது. பச்சைப்பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன், சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று, படைத்தல் (கொடியேற்றம் - முதல் திருநாள்), காத்தல் - ரிஷப வாகனத்தில் காட்சியளித்தல் (ஐந்தாம் திருநாள்), அழித்தல் - திருத்தேர் (பத்தாம் திருநாள்), மறைத்தல் - ஊஞ்சல் பல்லக்கு உற்சவம் (பதினோராம் திருநாள்), அருள்பாலித்தல் - தெப்பம் (பதிமூன்றாம் திருநாள்) என ஐந்து தொழில்களையும் சித்திரைப் பெருந்திருவிழா நாள்களில் அம்மன் அருள்புரிந்து வருவது இத்திருக்கோயில் மற்றும் சித்திரைத் திருவிழாவின் தனிச் சிறப்பாகும்.

மின்னொளியில் சமயபுரம் மாரியம்மன் கோயில்
மின்னொளியில் சமயபுரம் மாரியம்மன் கோயில்

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் சித்திரை மாத முதல் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறும். இந்த நாளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்துச் செல்வர். மேலும் அலகு குத்திக் கொண்டும், பால்குடம் எடுத்தும், அக்னிச்சட்டி ஏந்தியும் வந்து அம்மனை வழிபடுவர்.

வைகாசி மாதத்தில் 15 நாள்கள் பஞ்சப் பிரகாரத் திருவிழா நடைபெறுகிறது. ஆடி மாதத்தில் ஆடிப்பூரத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அம்பாள் தீர்த்தவாரிக் கண்டருளி, இரவு ரிஷப வாகனத்தில் காட்சியளித்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

ஆவணி மாதத்தில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் யானை, தங்க சிம்மம், காமதேனு, ரிஷபம் ஆகிய வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வருதல் நடைபெறுகிறது. புரட்டாசியில் நவராத்திரி உத்ஸவம்,  ஐப்பசியில் மகாளய அமாவாசை, கார்த்திகை மாதத்தில் தீபத் திருவிழா, மார்கழி மாதத்தில் திருவாதிரைப் பெருவிழா ஆகியவை நடைபெறுகிறது.

மோகினி அலங்காரத்தில் உற்ஸவர் அம்மன்
மோகினி அலங்காரத்தில் உற்ஸவர் அம்மன்

பரிகாரம்

அம்மை நோய் கண்டவர்கள் இக்கோயிலில் தங்கி, நோய் நீங்கும் வரை இருந்து வழிபாடு செய்கின்றனர். இவர்கள் மீது அபிஷேக தீர்த்தம் தெளிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

அம்மையால் பாதிக்கப்பட்டவர்களும், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களும் தங்களது வேண்டுதலை மாரியம்மனிடம் தெரிவித்து, அது நிறைவேறிய பின்னர் அம்மனுக்கு உருவம் வைத்து வழிபடுதல் (அம்மன் போன்று சிறிய வடிவில் முழு உடல் பகுதி, கண் போன்ற பகுதிகளாக செய்யப்பட்டவை), கோழி, ஆடுகளைக் காணிக்கையாக செலுத்துதல் போன்றவற்றையும் பக்தர்கள் மேற்கொள்கின்றனர்.

பாத யாத்திரையாக வந்து வேண்டுதலை நிறைவேற்றுதல்

தை, மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் மாலை அணிந்து, விரதமிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தங்களது  வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக நேர்த்திக்கடனை செலுத்தி வழிபடுவர். மற்ற மாதங்களைக் காட்டிலும் பங்குனி, சித்திரை மாதங்களில் பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படும். இவ்வாறு வரும் பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் நீர்மோர், பானகம் போன்றவற்றை பொதுமக்கள் வழங்கி, பக்தர்களை இளைப்பாறச் செய்கின்றனர்.

பால்குடங்கள் எடுத்தும், விமானக் காவடியில் அலகுகுத்திக் கொண்டு வரும் பக்தர்கள்
பால்குடங்கள் எடுத்தும், விமானக் காவடியில் அலகுகுத்திக் கொண்டு வரும் பக்தர்கள்

அமாவாசை  வழிபாடு

அமாவாசை நாளில்ல் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தங்கி, மறுநாள் காலை வழிபட்டுச் சென்றால் காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்ற நம்பிக்கை பக்தர்கள் மத்தியில் காணப்படுவதால், இக்கோயிலில் அமாவாசை நாளன்று தங்கி வழிபடும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இவர்களின் வசதிக்காக, கோயில் வளாகப் பகுதியில் அமாவாசை மண்டபமும் கட்டப்பட்டுள்ளது.

இதைத் தவிர,  திருமலை திருப்பதி கோயிலில் உள்ளது போன்று பக்தர்களை அறைகளில்  காத்திருக்க வைத்து, அதன் பின்னர் தரிசிக்க அனுமதிக்கும் திட்டம் திருக்கோயில் நிர்வாகத்திடம் உள்ளது.  அதற்கான அறைகள் கட்டப்பட்டு, மற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருவிழாக் காலங்கள், கூட்டம் அதிகம் காணப்படும் நாள்களில் இந்த முறையில் பக்தர்களை அனுமதிக்க திருக்கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

பக்தர்களின் மனம் குளிரும் ஓவியங்கள்

ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயிலின் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதால்,  2010-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி குடமுழுக்குக்கான பணிகள் தொடங்கப்பட்டு, 2017 பிப்ரவரி 6-ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட்டது. குடமுழுக்கு நடைபெற்ற பின்னர், இரண்டாம்  உள் பிரகாரப் பகுதி விசாலமான இடமாக மாறியுள்ளது. இப்பகுதியின் மேல்தளத்தில் மிகப்பெரிய அளவில் அம்மனின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. 56 அடி நீளம், 36 அடி அகலத்தில் அம்பிகையின் விஸ்வரூபக் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது. சமயபுரம் மாரியம்மனைச் சுற்றி அன்னப்பூரணி, ராஜராஜேசுவரி, கருமாரி, மூகாம்பிகை, தேவி கருமாரி,  அபிராமி, மகாலட்சுமி, பிருத்யங்கிராதேவி அம்மன் ஓவியங்கள் அமைந்துள்ளன.

தென்கிழக்குப் பகுதியில் விநாயகர் சன்னதிக்கு அருகில் மிகவும் நேர்த்தியாக, எத்திசையில் நின்று பார்த்தாலும் சிவலிங்கத்தை தரிசிக்கும் வகையில் வரையப்பட்டிருக்கும் ஓவியமும் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறது. மேலும் பக்திகணபதி, பாலகணபதி உள்ளிட்ட 8 வகை விநாயகர்களுடன் முருகன், விநாயகர் வழிபடும் வகையில் வரையப்பட்டுள்ள ஓவியமும் பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

உற்சவர் அம்மன்
உற்சவர் அம்மன்

தலவிருட்சம்

இத்திருக்கோயிலின் தல விருட்சமாக விளங்கி வருவது வேம்பாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் இம்மரம், தற்போது திருக்காப்பு விண்ணப்பச் சீட்டை விண்ணப்பிக்கும் முதன்மை இடமாகத் திகழ்கிறது.

எப்படிச் செல்வது?

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள  இக்கோயிலுக்கு தென் மாவட்டங்களிலிருந்தும், டெல்டா மாவட்டங்களிலிருந்தும் வருபவர்கள் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்கா, நெ.1 டோல்கேட்,  கூத்தூர், பனமங்கலம் வழியாக கோயிலை வந்தடையலாம்.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் முசிறி, நொச்சியம், நெ.1டோல்கேட், கூத்தூர், பனமங்கலம் வழியாக சமயபுரம் வந்தடையலாம். கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்கா, நெ.1 டோல்கேட், கூத்தூர், பனமங்கலம் வழியாக கோயிலை வந்தடையலாம். சென்னை , விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை போன்ற வட மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் பெரம்பலூர், சிறுகனூர், இருங்களூர் வழியாக சமயபுரம் கோயிலுக்கு வந்து சேரலாம்.

தொடர்பு முகவரி
அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம்,
மண்ணச்சநல்லூர் வட்டம்,
திருச்சி மாவட்டம்- 621112.
தொலைபேசி எண் :0431- 2670460

படங்கள்: எஸ். அருண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com