திருமணத்தடை நீக்கும் திருமணமேடு ஐயாறப்பர் திருக்கோயில்

திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக ஐயாறப்பர் திருக்கோயில் திகழ்கின்றது.
அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனுறை ஐயாறப்பர் சுவாமி
அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனுறை ஐயாறப்பர் சுவாமி

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், திருமணமேடு கிராமத்திலுள்ள அருள்மிகு அறம்வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் சுவாமி திருக்கோயில். திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.

ராஜராஜநாராயணநல்லூர், திருக்களீசுவரம் என்றழைக்கப்படும் திருமணல்மேடு என்ற இந்த ஊர் பின்னர் மருவி, தற்போது திருமணமேடு என்றழைக்கப்படுகிறது. திருமணமேடு கிராமத்தின் நடுவே, சற்றே மலைபோன்ற உயரமான இடத்தில் கிழக்கு நோக்கி இக்கோயில் அமைந்துள்ளது.

கோயிலின் நுழைவுவாயில் பகுதி
கோயிலின் நுழைவுவாயில் பகுதி

பிற்காலச் சோழர் கட்டமைப்பில் ஒருதள திராவிட விமானத்தைக் கொண்டுள்ளது அருள்மிகு ஐயாறப்பர் சுவாமி திருக்கோயில். ஐயாறப்பர் கோயில் விமானத்திலும், முகமண்டபத்திலுமிருந்தும் ஒன்பது கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. களஆய்வின் போது, டாக்டர் மா. ராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்து ஆய்வர்கள் இதுவரையிலும் படியெடுக்கப்படாத முதற்குலோத்துங்கரின் கல்வெட்டொன்றைக் கண்டறிந்து படியெடுத்தனர். இப் பத்துக் கல்வெட்டுகளும் இக்கோயிலின் வரலாற்றையும், அதன் வழியாக திருமணல்மேட்டின் வரலாற்றையும் விரிவாக எடுத்துரைக்கின்றன.

கல்வெட்டுகள்
கல்வெட்டுகள்

இக்கோயிலிலிருந்து படியெடுக்கப்பட்ட கல்வெட்டுகளுள் காலத்தால் முற்பட்ட முதற்குலோத்துங்கரின் கல்வெட்டுகளாகும். இவை தவிர விக்கிரமசோழர், இரண்டாம் ராஜராஜர், மூன்றாம் ராஜராஜர், மாறவர்ம குலசேகர காலக் கல்வெட்டுகளும் உள்ளன. கோயிலிலிருந்து படியெடுக்கப்பட்ட பத்துக் கல்வெட்டுகளுள் காலத்தால் பழைமையான கல்வெட்டு கி.பி.1107-ஆம் ஆண்டுக்குரியதாகும்.  பல்வேறு கல்வெட்டுகளாலும், தற்போதுள்ள கட்டமைப்பாலும் திருமணமேடு திருக்கோயில் ஏறத்தாழத் தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கட்டுமானத்தைச் சேர்ந்தது என்பது தெளிவாகிறது.

இரண்டாம் பாண்டியப் பேரரசு காலம் வரை சமுதாயத்தின் பல்வேறு தள மக்களுடைய கொடைகளைப் பெற்றுச் செழிப்புடன் திகழ்ந்தது இக்கோயில்.

ஐயாறப்பர் சுவாமி சன்னதி விமானம்
ஐயாறப்பர் சுவாமி சன்னதி விமானம்

இறைவன் ஐயாறப்பர்

கோயிலின் அர்த்த மண்டபத்தைக் கடந்து சென்றால், கருவறையில் இறைவன் ஐயாறப்பர் லிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். கருவறையின் முகப்பின் இருபுறங்களிலும் விநாயகர் திருமேனிகள் உள்ளன. ஐயாறப்பர் எனத் தமிழில் அழைக்கப்படும் இத்திருக்கோயில் இறைவன், சமஸ்கிருதத்தில் பஞ்சநதீசுவரர் என்றழைக்கப்படுகிறார். இவர்  திருமணத் தடையை நீக்கும் இப்பரிகாரத் திருக்கோயிலின் அதிபதியாகவும் திகழ்கிறார்.

ஐயாறப்பர் சுவாமி சன்னதி விமானம்
ஐயாறப்பர் சுவாமி சன்னதி விமானம்

மேலும் இத்திருக்கோயில் இறைவன், இறைவிக்கு விளக்கேற்றி வழிபட்டால் ராகு- கேது தோஷம், சர்ப்ப தோஷத்திலிருந்தும், கடன் தொல்லையிலிருந்தும் விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் குழந்தைப்பேறு வேண்டுபவர்களும் இத்திருக்கோயில் இறைவன்-இறைவியை வணங்கிச் செல்வர்.

ஐயாறப்பர் சுவாமி
ஐயாறப்பர் சுவாமி

இறைவி அறம்வளர்த்த நாயகி அம்மன்

உள் பிரகாரத்தின் வலதுபுறத்தில் அருள்மிகு அறம்வளர்த்த நாயகி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. இவர் சமஸ்கிருதத்தில் தர்மசம்வர்த்தினி என்றழைக்கப்படுகிறார்.

அறம் வளர்த்த நாயகி அம்மன் சன்னதி விமானம்
அறம் வளர்த்த நாயகி அம்மன் சன்னதி விமானம்

நான்கு கரங்களுடன் காட்சியளிக்கும் தர்மசம்வர்த்தினி அம்மனின் முன் இரு கைகள் காக்கும் குறிப்பிலும், அருட்குறிப்பிலும் அமைய, மேல் கரங்கள் தாமரை மலர்களைத் தாங்கிக் காட்சியளிக்கின்றன. தெற்கு நோக்கிய சன்னதியில் எழுந்தருளியுள்ள அறம்வளர்த்த நாயகி அம்மன், தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றித் தரும் தாயாகத் திகழ்கிறார்.

அறம் வளர்த்த நாயகி அம்மன்
அறம் வளர்த்த நாயகி அம்மன்

திருமணத்தடை நீக்கும் இறைவன்-இறைவி

இத்திருக்கோயில் இறைவன் ஐயாறப்பரும் இறைவி அறம்வளர்த்தநாயகியும் திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தம்பதியராகத் திகழ்கின்றனர்.

ஜாதக ரீதியாக திருமணத் தடையுள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து தங்களது ஜாதகத்தை சுவாமி, அம்மன் திருவடியில் வைத்து பூஜை செய்து, தேங்காய்-பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

ரிஷிப வாகனத்தில் அறம்வளர்த்தநாயகி அம்மன்- ஐயாறப்பர் சுவாமி
ரிஷிப வாகனத்தில் அறம்வளர்த்தநாயகி அம்மன்- ஐயாறப்பர் சுவாமி

இதைத் தொடர்ந்து கோயில் பிரகாரத்திலுள்ள சித்தி விநாயகர், வள்ளி-தேவசேனா சமேத சுப்பிரமணியர் சன்னதியிலும் வழிபாடு செய்து, பிரகாரம் வலம் வந்து வழிபட வேண்டும். தொடர்ந்து சுவாமி, அம்மன் சன்னதியில் உடைக்கப்பட்ட தேங்காய்- பழம் பிரசாதமாக வழங்கப்படும்.

இந்த வழிபாடு முடித்துச் சென்றால், ஜாதக ரீதியாக திருமணத் தடையுள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பதும் ஐதீகம். திருமணம் முடிந்த பின்னர், பரிகார நிவர்த்தியாக தம்பதி சகிதமாக திருமணமேடு கோயிலுக்கு வந்து, சுவாமி-அம்மனுக்கு வேட்டி-புடவை சாத்தி வழிபாடு மேற்கொள்ள வேண்டும். இதை இன்றளவும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

நந்தியெம்பெருமான்
நந்தியெம்பெருமான்

குழந்தைப்பேறு பிரார்த்தனை

திருமணம் முடிந்து குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்யலாம். குழந்தைப்பேறு இல்லாத பெண் இக்கோயிலுக்கு வந்து, அம்மன் சன்னதி முன்பு மண்டியிட்டு வழிபாடு செய்ய வேண்டும். அப்போது அம்மன் சன்னதியிலிருந்து அவர்களுக்கு பூ மற்றும் எலுமிச்சை வழங்கப்படும். அதைப் பூஜைக்குப் பின்னர் வீட்டுக்குக் கொண்டுசென்று, பிரார்த்தனை செய்தால் விரைவில் அவர்களுக்கு குழந்தைப்பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை உணர்த்தும் வகையில், திருமணமேடு கோயிலுக்கு வந்து பிரார்த்தனை செய்து, குழந்தைப்பேறு அடைந்தவர்கள் தங்களது குழந்தைகளுக்கு சுவாமி, அம்மன் பெயரையே வைத்துள்ளனர்.

சித்தி விநாயகர்
சித்தி விநாயகர்

கோயிலின் அமைப்பு

ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொருவிதமான சிறப்பை பெற்றிருக்கும். திருப்பைஞ்ஞீலியில் ஞீலிவனேசுவரரையும், எமதர்மராஜனையும் தரிசனம் செய்ய நாம் மேலிருந்து கீழே இறங்கித்தான் செல்ல வேண்டும். ஆனால், திருமணமேட்டில் கோயிலுக்கு செல்வது முதல் இறைவன், இறைவியைத் தரிசிக்கும் வரை அனைத்துக்கும் படிக்கட்டில் ஏறிச் சென்று தரிசிக்கும் நிலை உள்ளது. கோயிலின் உள்ளே நுழைந்தால் எதிரில் விநாயகர் சன்னதி அமைந்துள்ளது. அதைத் தொடர்ந்து பலிபீடமும், சுவாமி சன்னதியின் நேர் எதிரில் நந்தியெம்பெருமான் சன்னதியும் அமைந்துள்ளது.

வள்ளி-தெய்வசேனா சமேதராய் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியர் சுவாமி
வள்ளி-தெய்வசேனா சமேதராய் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியர் சுவாமி

சமயக் குரவர்கள் சன்னதி

கோயிலின் உள் மண்டபத்தின் இடதுபுறத்தில் சமயக்குரவர்களுடன் சேக்கிழார் பெருமானும் எழுந்தருளியிருக்கிறார். திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார் ஆகியோரது திருமேனிகள் இந்த சன்னதியில் எழுந்தருளப்பட்டிருக்கின்றன.

திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார் சன்னதி
திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார் சன்னதி

அகத்தியர் தம்பதி சன்னதி

மற்ற கோயில்களில் இல்லாத தனிச்சிறப்பு இக்கோயிலுக்கு உண்டு. அகத்திய மகரிஷி சுவாமிகள், தனது மனைவி ஸ்ரீலோப முத்ராவுடன் தனி சன்னதியில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து வருவது இங்குதான்.

மனைவி ஸ்ரீலோப முத்ராவுடன் அகத்திய மகிரிஷி சுவாமி
மனைவி ஸ்ரீலோப முத்ராவுடன் அகத்திய மகிரிஷி சுவாமி

இதுபோன்று கோயிலின் உள்பிரகாரத்தில் கிழக்கு நோக்கியவாறு அருள்மிகு சித்தி விநாயகர், அருள்மிகு வள்ளி-தேவசேனா சமேத சுப்பிரமணியர் சுவாமி, கஜலட்சுமி ஆகியோர் தனித்தனி சன்னதிகளைக் கொண்டு, பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர். இதைத் தவிர, இறைவனின் தேவகோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீசுவரர், பிரம்மா, விஷ்ணு துர்க்கை ஆகியோரும் எழுந்தருளியுள்ளனர்.

தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி

வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேசுவரர் சுவாமி சன்னதி அமைந்துள்ளது. மேலும் கோயின் மண்டபத்தின் கிழக்குத் திசைப் பகுதியில் நவக்கிரக நாயகர்கள் சன்னதி, பைரவர், சூரியன், சந்திரன் சன்னதிகளும் தனித்தனியே அமைந்துள்ளன.

நர்த்தன விநாயகர்
நர்த்தன விநாயகர்

தல விருட்சம்

கோயிலின் தல விருட்சமாக வில்வமரம் அமைந்துள்ளது. இறைவன் ஐயாறப்பருக்கு வில்வ இலைகளைக் கொண்டு பூஜை நடத்தப்பட்டு வருவதோடு, பக்தர்களுக்கு இதர பூக்களுடன் வில்வமும் வழங்கப்படுகிறது.

தல விருட்சம் - வில்வமரம்
தல விருட்சம் - வில்வமரம்

திருவிழாக்கள்

மாசி மாத உத்திர நட்சத்திரத்தன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு வெகு சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி, அம்மனை வழிபடுவர்.

கஜலட்சுமி
கஜலட்சுமி

திருக்கல்யாண வைபவம்

பஞ்சமூர்த்திகள் புறப்பாட்டையொட்டி, மாசி மாத உத்திர நட்சத்திரத்தன்று திருக்கல்யாண வைபவம் மாலை 6 மணிக்கு நடைபெறும். ஐயாறப்பர் சுவாமி - அறம்வளர்த்தநாயகி அம்மனுக்கு நடைபெறும் திருக்கல்யாணத்தில் பங்கேற்று வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

விஷ்ணு துர்க்கை
விஷ்ணு துர்க்கை
சண்டிகேசுவரர்
சண்டிகேசுவரர்

இக்கோயிலில் பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கோயிலின் உள்பிரகாரத்திலும், வெளிப் பிரகாரத்திலும் சுவாமி உலா வருவார். எட்டுத் திசைகளிலும் நைவேத்தியம் செய்யப்பட்டு, சுவாமி சனி மூலைக்கு வரும் போது சிவனடியார்களால் பஞ்ச புராணம் பாடப்படும்.

பைரவர்
பைரவர்

இதைத் தொடர்ந்து சுவாமி கோயிலுக்குள் வந்தவுடன், பக்தர்களின் மீது தீர்த்தம் தெளிக்கும் நிகழ்வு நடைபெறும். இது இன்றளவும் இக்கோயிலில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். இவை தவிர, மகா சிவராத்திரியன்று நான்கு கால பூஜை நடைபெற்று வருகிறது.

நவக்கிரக நாயகர்கள் சன்னதி
நவக்கிரக நாயகர்கள் சன்னதி

நாகம் வழிபட்ட சிவலிங்கம்

இக்கோயிலிலுள்ள இறைவன் ஐயாறப்பரை நாகம் வந்து வழிபட்டுச் செல்வதாக பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதை உணர்த்தும்விதமாக, கோயிலின் உள்பிரகாரப் பகுதியில் பாம்பின் சட்டம் வைக்கப்பட்டுள்ளது.

நாகத்தின் சட்டம் வைக்கப்பட்டுள்ள பகுதி
நாகத்தின் சட்டம் வைக்கப்பட்டுள்ள பகுதி

பல ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி இக்கோயில் குடமுழுக்கு நடைபெற்றது.

அர்த்தநாரீசுவரர்
அர்த்தநாரீசுவரர்

இவ்விழா முடிந்த 18-ஆவது நாளில் இக்கோயில் இறைவன் ஐயாறப்பரின் சன்னதிக்கு வந்த 7 அடி நாகம், தனது சட்டத்தை இறைவன் பாணத்தைச் சுற்றி வைத்து விட்டுச் சென்றதாம். இதைப் பக்தர்கள் தெரிந்துகொள்ளும் வகையில், பாம்பின் சட்டம் தனியே காட்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வப்போது நாகம் கோயிலுக்கு வந்து செல்வதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

சந்திரன்
சந்திரன்

சப்த ஸ்தானங்களில் ஒன்று

திருத்தவத்துறை எனப்படும் லால்குடியைச் சுற்றி அமைந்துள்ள சப்தஸ்தானங்களில் திருமணமேடு ஐயாறப்பர் கோயிலும் ஒன்று. லால்குடி அருள்மிகு சப்தரிஷீசுவரர் திருக்கோயிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் திருவிழாவின்போது, சப்த ஸ்தானங்களுக்கும் சென்று எழுந்தருள்வார். அவ்வாறு திருமணமேட்டுக்கு வரும் சப்தரிஷீசுவரர், ஐயாறப்பரை எதிர்கொண்டு காட்சியளிப்பார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமிகளைத் தரிசனம் செய்வர்.

இந்தக் கோயிலையும் வலம் வரலாம்.. நவக்கிரக தோஷம் போக்கும் தஞ்சை சக்கரத்தாழ்வார்

சூரியன்
சூரியன்

எப்படிச் செல்வது?

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 24 கி.மீ. தொலைவிலும், நெ.1. டோல்கேட்டிலிருந்து 9 கி.மீ. தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது. தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் மத்திய, சத்திரம் பேருந்து நிலையங்கள், திருவானைக்கா, நெ.1 டோல்கேட், தாளக்குடி, வாளாடி, பச்சாம்பேட்டை வளைவு வழியாக திருமணமேடு வந்தடையலாம்.

சென்னை போன்ற வடமாவட்டங்கள், சேலம், தருமபுரி, நாமக்கல் போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்களும், கரூர், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற மேற்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்களும் நெ.1 டோல்கேட், தாளக்குடி, வாளாடி, பச்சாம்பேட்டை வழியாக கோயிலுக்கு வந்தடையலாம்.

பலிபீடம் அருகிலுள்ள விநாயகர்
பலிபீடம் அருகிலுள்ள விநாயகர்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருமணமேடு, பச்சாம்பேட்டை, இடையாற்றுமங்கலம் போன்ற வழித்தடங்களில் இயக்கப்படும் நகரப் பேருந்துகள் இக்கோயில் வழியாகச் செல்லும். இதைத் தவிர வாளாடி, லால்குடியிலிருந்து ஆட்டோ வசதியும் உள்ளது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையத்திலிருந்து ஆட்டோக்கள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக கோயிலுக்கு வரலாம்.

தொடர்புக்கு: திருமணமேடு ஐயாறப்பர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், இக்கோயிலின் குருக்கள் கிருஷ்ணமூர்த்தியை 94431-54861, ஓதுவார் சிவ சசிகுமாரை 97903-81329 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு முகவரி

அருள்மிகு அறம்வளர்த்தநாயகி அம்மன் உடனுறை ஐயாறப்பர் சுவாமி திருக்கோயில்,
திருமணமேடு,
லால்குடி வட்டம்,
திருச்சி மாவட்டம்.

படங்கள் : எஸ்.அருண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com