நவக்கிரக தோஷங்களைப் போக்கும் பழூர் விசுவநாத சுவாமி திருக்கோயில்

குழந்தைப் பேறு, திருமணத் தடை. குடும்பப் பிரச்னை உள்ளவர்கள் இக்கோயிலில் உள்ள நவக்கிரக நாயகர்களை வழிபடத் தோஷங்கள் நிவர்த்தியாகும்.
அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை விசுவநாத சுவாமி
அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை விசுவநாத சுவாமி

தங்களது சக்தியர், பீடம், ஆயுதம் போன்றவற்றுடன் நவக்கிரக நாயகர்கள் எழுந்தருளியுள்ள பழூர் அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை விசுவநாத சுவாமி திருக்கோயில் நவக்கிரக தோஷங்களைப் போக்கும் பரிகாரத் தலமாக விளங்கி வருகிறது.

நுழைவுவாயில்
நுழைவுவாயில்

திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இத்திருக்கோயில் சிறியதாக அமைந்திருந்தாலும், மிகப் பழமைவாய்ந்த, பல்வேறு சிறப்புகளை உடைய கோயிலாகத் திகழ்கிறது. தொல்லியல் துறை கருத்துருவின்படி, இக்கோயில் கி.பி.12 அல்லது 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.

இதுபோல, பழூர் கோயில் மற்றொரு சிறப்பையும் கொண்டுள்ளது. சோழர்கள் அரசாண்ட பகுதியில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயிலாக இத்திருக்கோயில் திகழ்கிறது. இதை உறுதி செய்யும் விதமாக, கோயில் உள் பிரகாரச் சுவரில் பாண்டிய மன்னர்களின் அடையாள சின்னமான மீன் சிற்பங்கள் அமைந்துள்ளன.

கோயில் உள் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள நவக்கிரக பாடல்கள்
கோயில் உள் பிரகாரத்தில் வைக்கப்பட்டுள்ள நவக்கிரக பாடல்கள்

இக்கோயிலின் கட்டடக் கலைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக கோயிலின் கற்சிற்பங்கள் அழகு சேர்க்கின்றன. சதுர ஆவுடையார் வடிவமைப்பைக் கொண்ட மூலவர் விசுவநாத சுவாமி, கருவறை சன்னதியில் மத்திம தசானத்தில் நேராக நின்ற கோலத்தில் நான்குக் கரங்களுடன் காட்சியளிக்கும் அருள்மிகு விசாலாட்சி அம்மன் போன்றவை கட்டடக் கலையின் பெருமையை எடுத்துரைக்கின்றன.

கோயிலின் உள்பிரகாரப் பகுதி
கோயிலின் உள்பிரகாரப் பகுதி

பொதுவாக சிவாலயங்கள் என்றாலே பிரம்மாண்டமான மதில் சுவர், உயர்ந்த கோபுரங்கள், விசாலமான பிரகார மண்டபங்கள், பெரிய அளவிலான ஆவுடையாரும், லிங்கத் திருமேனியும் முக்கியமானதாக இருக்கும். ஆனால், இவற்றில் அனைத்திலுமே வேறுபட்டிருக்கிறது பழூர் விசாலாட்சி அம்மன் உடனுறை விசுவநாத சுவாமி திருக்கோயில்.

கோயிலின் முன்மண்டபப் பகுதி
கோயிலின் முன்மண்டபப் பகுதி

இறைவன் விசுவநாத சுவாமி

சுயம்பு மூர்த்தியாக இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ளார் விசுவநாதர். காசிக்குச் செல்ல முடியாதவர்கள் இக்கோயிலுக்கு வந்து இறைவன், இறைவியை வணங்கிச் சென்றால், காசிக்குச் சென்று தரிசனம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். மற்ற கோயில்களில் வட்ட வடிவில் ஆவுடையார் அமைந்திருக்கும் நிலையில், இக்கோயிலில் சதுர வடிவில் ஆவுடையார் அமைந்திருக்கிறது.

விசுவநாத சுவாமி சன்னதி விமானத் தோற்றம்
விசுவநாத சுவாமி சன்னதி விமானத் தோற்றம்

மிகச் சிறிய அளவிலான கருவறை சன்னதியில் சிறிய அளவிலான சுயம்பு லிங்கத் திருமூர்த்தியாக கிழக்கு நோக்கிய சன்னதியில் இறைவன் விசுவநாத சுவாமி எழுந்தருளி, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி அருள்கிறார்.

அருள்மிகு விசுவநாத சுவாமி
அருள்மிகு விசுவநாத சுவாமி

இறைவி விசாலாட்சி அம்மன்

தெற்கு நோக்கிய கருவறை சன்னதியில் மத்திம தசானத்தில் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் விசாலாட்சி அம்மன் எழுந்தருளியிருக்கிறார். கிரீட மகுடம், மகர மகுடம்,  மலர் முகப்புடைய சரம்,  முத்தாரம், பூணூல், மார்புக் கச்சை, தோள்வாளை, காரை, காப்பு உதரப்பந்தம், இடைக்கச்சை, தண்டை பாதசரம் ஆகிய அணிகலன்களை முடி முதல் அடி வரை அணிந்து, பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார் விசாலாட்சி அம்மன்.

விசாலாட்சி அம்மன் சன்னதி விமானத் தோற்றம்
விசாலாட்சி அம்மன் சன்னதி விமானத் தோற்றம்

நீள் சதுரமான அரந்த முகமும், விரிந்த நெற்றியும், கோடிட்ட புருவமும், நீண்ட மலந்த கண்களும், அருள் சுரக்கும் பார்வையும், எடுப்பான மூக்கு போன்ற விசாலாட்சி அம்மனின் உருவமைப்பு, முகப்பொலிவு, அணிகலன்களின் தன்மை, ஆயுத அமைப்பு போன்றவை சோழர் காலக் கலையை உணர்த்துகின்றன.

அருள்மிகு விசாலாட்சி அம்மன்
அருள்மிகு விசாலாட்சி அம்மன்

சிவாலயங்களில் சுவாமி, அம்மன் சன்னதியையும் வெவ்வேறு மண்டப பகுதிகளில்தான் தரிசிக்கும் நிலை காணப்படும். அதில் ஒரு சில கோயில்களில் வேறுபடும். ஒரே மண்டபத்தில் சுவாமி, அம்மனைத் தரிசிக்கும் கோயில்களில் குறிப்பிட்ட அளவில்தான் இருக்கும். அந்த வகையில் ஒரே மண்டபத்தில் கிழக்கு நோக்கிய சன்னதியில் விசுவநாதரும், தெற்கு நோக்கிய சன்னதியில் விசாலாட்சி அம்மனும் எழுந்தருளியிருப்பது விசேஷமானதாகும். அதிலும், பழூர் கோயிலில் அம்மன் கல்யாண கோலத்தில் எழுந்தருளி, தன்னை நாடி வரும் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் சாந்த சொரூபியாகத் திகழ்கிறார்.

கோயில்  உள் பிரகாரத்தில் அமைந்துள்ள கஜலட்சுமி அம்மன் சிற்பம்
கோயில்  உள் பிரகாரத்தில் அமைந்துள்ள கஜலட்சுமி அம்மன் சிற்பம்

நவக்கிரக தோஷ பரிகாரம்

நவக்கிரக நாயகர்கள் எழுந்தருளாத சிவாலயங்கள் இல்லை. சில இடங்களில் நவக்கிரகங்கள் தனிச் சிறப்புப் பெற்று விளங்கும். அந்த வகையில், திருப்பைஞ்ஞீலி அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை ஞீலிவனேசுவரர் திருக்கோயிலில் நவக்கிரகங்கள் இல்லை. மாறாக, இக்கோயிலில் சுவாமி சன்னதிக்கு நேர் எதிரில் கொடிமரத்துக்கு அருகில் அமைந்துள்ள 9 குழிகளே நவக்கிரகங்களாகக் கருதப்படுகின்றன.

நவக்கிரக நாயகர்கள் சன்னதி
நவக்கிரக நாயகர்கள் சன்னதி

திருவக்கரையில் நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்கி எழுந்தருளியிருக்கின்றன. பழூரில் நவக்கிரக நாயகர்கள் நவக்கிரக தோஷங்களை நீக்கும் மூர்த்திகளாகத் திகழ்கின்றனர். இங்கு நவக்கிரக நாயகர்கள்  ராசி மண்டலத்துடன் தம்பதி சகிதமாக தத்தம் தேவியருடன்  எழுந்தருளியிருப்பது தனி விசேஷமானதாகும்.

நாகர்கள் அமைந்துள்ள மண்டபத்தில் விளக்கேற்றி வழிபடும் பக்தர்கள்
நாகர்கள் அமைந்துள்ள மண்டபத்தில் விளக்கேற்றி வழிபடும் பக்தர்கள்

இங்கு நவக்கிரக நாயகர்களில் புதன் ஞானதேவியுடனும், சுக்கிரன் சுகீர்த்தியுடனும், சந்திரன் ரோகிணியுடனும், குரு தாராதேவியுடனும், சூரியன் உஷா-ப்ரத்யுஷாவுடனும், செவ்வாய் எனப்படும் அங்காரகன் சக்திதேவியுடனும், கேது சித்திரலேகாவுடனும், சனி நிலாவுடனும், ராகு ஸீம்ஹீயுடனும் காட்சியளிக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் நவக்கிரக நாயக மூர்த்திகள் தங்களின் ஆயுதங்கள், வாகனங்கள், இயந்திர சக்திகளுடனும் எழுந்தருளியிருப்பதும் இங்கு மட்டும்தான். இந்த நவக்கிரக சிற்பங்களைத் தந்தவர் மைசூர் மகாராஜா என்பதும் தனிச் சிறப்புக்குரியது.

திருக்கோயிலின் முன்பகுதி
திருக்கோயிலின் முன்பகுதி

இந்தக் கோயிலையும் வலம் வரலாம்.. நவக்கிரக தோஷம் போக்கும் தஞ்சை சக்கரத்தாழ்வார்

சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு

ஜாதக ரீதியில் நவக்கிரக தோஷ பாதிப்பு உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் இக்கோயிலுக்கு வந்து நவக்கிரக நாயகர்களை வணங்கி வழிபட வேண்டும். எள் விளக்கேற்றி வழிபாடு செய்வதுடன், நவக்கிரக நாயகர்களின் சன்னதியை 9 முறை வலம் வந்து, தேங்காய்-பழம் அர்ச்சனை செய்தால் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும்.

நவக்கிரகங்களின் தேவியர், தானியம், நிறம், பூ போன்றவை குறித்த விவரங்கள்
நவக்கிரகங்களின் தேவியர், தானியம், நிறம், பூ போன்றவை குறித்த விவரங்கள்

மேலும், குழந்தைப் பேறு இல்லாதவர்கள், திருமணத் தடைப் பாதிப்புள்ளவர்கள், குடும்பப் பிரச்னை  உள்ளவர்கள் இக்கோயில் நவக்கிரக நாயகர்கள் சன்னதிக்கு வந்து வழிபட்டுச் சென்றால், தோஷங்கள் நிவர்த்தியாகி உரிய பலன்களைப் பெறுவர் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இவைத் தவிர, இக்கோயிலில் சனிப்பெயர்ச்சி வழிபாடும் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. சனிப்பெயர்ச்சியன்று இக்கோயில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து, நவக்கிரக நாயக மூர்த்திகளை வணங்கிச் செல்வர்.

காலபைரவர், சூரியன், சனீசுவர பகவான்
காலபைரவர், சூரியன், சனீசுவர பகவான்

குடும்ப நவக்கிரகங்கள்

இக்கோயிலின் உள்பிரகார மண்டபத்தில் காலபைரவர், சூரியன், சனீசுவரர் அருகருகே நின்ற கோலத்தில் இருந்தவாறு காட்சியளிக்கின்றனர். இவர்கள் இவ்வாறாக அருகருகே காட்சியளிப்பதால், இவர்களை குடும்ப நவக்கிரகங்கள் என்றழைப்பர்.  இதனால், பழூர் கோயிலுக்கு வருபவர்கள் நவக்கிரகங்களை வழிபட்டுச் செல்லும் போது, குடும்ப நவக்கிரகங்களை வணங்கிச் சென்றால், அதற்குரிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள விநாயகர்
தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள விநாயகர்

திருக்கோயிலின்  உள்பிரகாரத்தில் கஜலட்சுமி அம்மன் சிறிய அளவிலான சிற்பமாக எழுந்தருளியுள்ளார். தேவக்கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மனும்,  அதன் அருகிலேயே  சண்டிகேசுவரரும், விநாயகரும் தனி சன்னதி கொண்டு எழுந்தருளியுள்ளனர். தென் மேற்கு மூலையிலுள்ள சன்னதியில் அருள்மிகு வள்ளி-தேசசேனா சமேத சுப்பிரமணியர் சுவாமி எழுந்தருளி, வேலுடன் காட்சியளிப்பதும் சிறப்புக்குரியது.

தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி

குடமுழுக்கை எதிர்நோக்கி

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோயிலில் கடைசியாக 07.05.1995-இல் குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது குடமுழுக்கை நடத்தத் திருக்கோயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குடமுழுக்கு நடத்தப்பட்டு 27 ஆண்டுகளாகிவிட்டதால், கோயிலில் மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகள் குறித்து விரிவான திட்ட அறிக்கையைத் தயார் செய்த கோயில் நிர்வாகம், மண்டலக் குழுவில் ஒப்புதல் பெற்ற நிலையில், மாநிலக் குழுவிடம் ஒப்புதல் பெற வேண்டும். அதற்கான பணிகளை கோயிலின் செயல் அலுவலர் மேற்கொண்டு வருகிறார்.

கோயிலிலுள்ள மீன் சிற்பங்கள்
கோயிலிலுள்ள மீன் சிற்பங்கள்

அன்னதானக் கோயில்

தமிழக முதல்வரின் உத்தரவின்படி நாள்தோறும் 50 பக்தர்களுக்கு இக்கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. வருவாய்க் குறைந்த நிலையிலும், பல்வேறு சவால்களுடன் அன்னதானம் வழங்கும் பணியைத் திருக்கோயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஒரு நாளில் 50 பேருக்கு அன்னதானம் வழங்கிட ரூ.1,200 செலுத்த வேண்டும். நன்கொடையாளர்கள் தாங்கள் விரும்பும் நாள்களில் அன்னதானம் வழங்க நிரந்தர வைப்புத் தொகையாகச் செலுத்த ரூ.14, 000 வழங்க வேண்டும்.

சண்டிகேசுவரர்
சண்டிகேசுவரர்

நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியடைந்தவர்கள், மீண்டும் இக்கோயிலுக்கு வந்து அதற்கான வழிபாட்டை மேற்கொள்கின்றனர். மேலும் திருக்கோயில் அன்னதானத் திட்டத்துக்கும் பக்தர்கள் நன்கொடை செலுத்தி வருகின்றனர். அன்னதானத் திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் இக்கோயிலின் செயல் அலுவலரை 6369683495 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

துர்க்கை அம்மன்
துர்க்கை அம்மன்

நடைதிறப்பு

இக்கோயில் சனிக்கிழமையைத் தவிர மற்ற நாள்களில் காலை 7 மணி முதல் 9, மாலை 4 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 7 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

வள்ளி-தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி
வள்ளி-தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி

எப்படிச் செல்வது?

திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு மத்திய, தென் மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் மத்திய பேருந்து நிலையம் மூலம் சத்திரம் பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து தனியார் பேருந்து மூலம் பழூர் வரலாம்.

சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அல்லூர், ஜீயபுரம், முக்கொம்பு, திருப்பராய்த்துறை, பேட்டைவாய்த்தலை வழியாகக் குளித்தலை, இனுங்கூர் போன்ற ஊர்களுக்குச் செல்லும் நகரப் பேருந்துகள், முக்கொம்பு வரை செல்லும் நகரப் பேருந்துகள் போன்றவற்றில் செல்லலாம்.

சென்னை, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்களும் சத்திரம் பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து நகரப் பேருந்துகள் மூலமாக பழூர் கோயிலுக்கு வரலாம். இவைத் தவிர, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் பழூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம். இதுபோல சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் வழியாக நகரப் பேருந்துகளிலும், இதே மார்க்கத்தில் முசிறி, குளித்தலை வழியாகவும் வரலாம்.

திருச்சி மத்திய, சத்திரம் பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையங்களிலிருந்து ஆட்டோ, கார், வேன் போன்ற வாகன வசதிகள் உள்ளன. ஆட்டோ, வேன் போன்ற வாகனங்களில் வருபவர்கள் நேரடியாக கோயிலுக்கு அருகிலேயே செல்லலாம்.

தொடர்புக்கு: பழூர் நவக்கிரக கோயிலுக்கு வருபவர்கள் குருக்கள் கௌரி சங்கரை 9486944150 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு முகவரி

செயல் அலுவலர்,
அருள்மிகு விசாலாட்சி அம்மன் உடனுறை விசுவநாத சுவாமி திருக்கோயில்,
பழூர், ஸ்ரீரங்கம் வட்டம்,
திருச்சி மாவட்டம்.

படங்கள்: எஸ். அருண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com