ஜாதக ரீதியிலான தோஷங்களை நீக்கும் ஆமூர் ரவீசுவரர் திருக்கோயில்

ஜாதக ரீதியிலான தோஷங்களை நீக்கும் திருத்தலமாக ஆமூர் ரவீசுவரர் திருக்கோயில் விளங்குகிறது.
ஆனந்தவல்லி அம்மன் உடனுறை ரவீசுவரர்
ஆனந்தவல்லி அம்மன் உடனுறை ரவீசுவரர்

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், ஆமூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் உடனுறை ரவீசுவரர் சுவாமி திருக்கோயில். ஜாதக ரீதியிலான தோஷங்களை நீக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.

திருச்சியிலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் ஆமூர் கிராமத்தில் அமைந்துள்ள இத்திருக்கோயிலில், தன் பெயராலேயே லிங்கத்தை ஸ்தாபித்து சூரியபகவான் வழிபட்டிருக்கிறார். மேலும் சிறப்பு வாய்ந்த இரட்டை வாகனப் பைரவரும் இத்திருக்கோயிலில் எழுந்தருளிக் காட்சியளிப்பதும் சிறப்புக்குரியது.

திருக்கோயில் நுழைவுவாயில்
திருக்கோயில் நுழைவுவாயில்

ரவீசுவரர் சுவாமி எழுந்தருளியுள்ள ஆமூருக்கு திருஆதவத்தூர் என்ற பெயரும் உண்டு. சூரியனின் வெப்பத்தைத் தணித்த ஆமூர். நவக்கிரக நாயகர்களில் ஒருவரான சூரிய பகவான், தாங்க முடியாத அளவின் வெப்பம் காரணமாக உஷ்ணத்தால் தகித்துக் கொண்டிருந்தார்.

கோயிலின் வெளிப் பிரகாரம்
கோயிலின் வெளிப் பிரகாரம்

தனது உஷ்ணத்தைத் தணிக்க பிரம்மாவிடம் சூரிய பகவான் முறையிட, ஆமூர் என்ற ஊரை அடைந்து, அங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவனை வழிபட்டால், உனது உஷ்ணம் நீங்கும் என்றாராம்.

ஆதிமூல கணபதி
ஆதிமூல கணபதி

அதன்படி, ஆமூர் நோக்கி சூரிய பகவான் வந்து கொண்டிருந்தார். அப்போது சூரிய பகவானின் பார்வைபட்டு எதிரில் இருந்தவர்கள் எல்லாம் பஸ்பமாகிக் கொண்டிருந்தனர். ஆமூர் கோயிலுக்குள் வந்த போது சூரிய பகவானின் பார்வையால் தல விருட்சமாக இருந்த வில்வமரம் சாம்பலாகி, பஸ்பமானது. இதனால், தன் உஷ்ணத்தை தணிக்க தொடர்ந்து ஆமூர் கோயிலில் குடிகொண்ட இறைவனை சூரிய பகவான் மார்போடு அணைத்து பற்றிக் கொண்டதால், சூரியனின் உஷ்ணம் தணிந்தது. அவர் தனது இயல்பு நிலைக்குத் திரும்பினார்.

அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் உடனுறை ரவீசுவரர் சுவாமி
அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் உடனுறை ரவீசுவரர் சுவாமி

இதைத் தொடர்ந்து உன் சன்னதிக்கு நேர் எதிரியிலேயே எனக்குக் காட்சியளித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றும் நான் உன்னை வழிபட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என இறைவனிடம் (சிவபெருமான்) சூரிய பகவான் முறையிட்டார். ஆனால், எனது சன்னதிக்கு நேர் எதிரில் நந்தியெம்பெருமான் மட்டுமே எழுந்தருளியிருப்பார். அதனால் தம்பதி சகிதமாக உனக்கு நான் காட்சியளிக்கிறேன் என இறைவன் கூற, இக்கோயிலில் தம்பதி சகிதமாக சூரிய பகவானுக்கு காட்சியளிக்கின்றனர். இவ்வாறு பல்வேறு சிறப்புகளைக் கொண்டது இத்திருக்கோயில்.

கருவறை சன்னதி முன்பு எழுந்தருளியுள்ள நந்தியெம்பெருமான்
கருவறை சன்னதி முன்பு எழுந்தருளியுள்ள நந்தியெம்பெருமான்

இறைவன் ரவீசுவரர் சுவாமி

ரவீசுவரம் என்றால் சூரியனைக் குறிக்கும். தன் பெயராலேயே லிங்கத்தை ஸ்தாபித்து சூரியன் வழிபட்டதால், இக்கோயில் ரவீசுவரம் என்றழைக்கப்படுகிறது. சூரியன் வழிபட்ட திருக்கோயில் இது என்பதால் இதற்கு பாஸ்கரேசுவரம் என்ற பெயரும் உண்டு.

ரவீசுவரசுவாமி சன்னதி விமானம்
ரவீசுவரசுவாமி சன்னதி விமானம்

கிழக்குத் திசை நோக்கி இறைவன் ரவீசுவரர் சன்னதி கொண்டுள்ளார். ஜாதக ரீதியில் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ தோஷம் உள்ளவர்கள், தங்களது தோஷங்கள் நீங்க ஆமூர் அருள்மிகு ரவீசுவரர் சுவாமி திருக்கோயிலுக்குத் தொடர்ந்து 11 நாள்கள் வந்து,  சுவாமி சன்னதியில் தங்களது ஜாதகத்தை வைத்து, வழிபாடு செய்து சென்றால்,  திருமணத் தடை நீங்குதல் உள்ளிட்ட பல்வேறு தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது  ஐதீகமாகும்.

இதுபோல, படிப்புக்கேற்ற நிலையான வேலை கிடைக்க வேண்டும் எனில், இந்த சன்னதியில் 7 நெய் தீபமேற்றி வழிபட வேண்டும். அவ்வாறு செய்தால் உரிய பலன்களைப் பெறுவர்.

ரவீசுவரர் சுவாமி
ரவீசுவரர் சுவாமி

இறைவி ஆனந்தவல்லி அம்மன்

தெற்குத் திசை நோக்கிய சன்னதியில் சாந்த சொரூபியாக நின்ற கோலத்தில், அழகின் உருவமாய் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார் அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன்.

இந்த அம்மனும், திருவானைக்கா அகிலாண்டேசுவரி அம்மனும் சகோதரிகள்  என்றும்,  முன்பு  ஒருகாலத்தில் ஆமூர் கோயிலில்  பூஜைகள், நைவேத்தியம் செய்யப்பட்ட பின்னர், திருவானைக்கா கோயிலில் பூஜைகள் நடைபெற்று வந்ததாகவும், காலப்போக்கில் இந்த வழிபாட்டு முறைகள் நின்று போனதாகவும் கூறப்படுகிறது.

ஆனந்தவல்லி அம்மன் சன்னதி விமானம்
ஆனந்தவல்லி அம்மன் சன்னதி விமானம்

திருமணமான பெண்கள் இத்திருக்கோயிலுக்கு  வெள்ளிக்கிழமைகளில் வந்து, ரவிக்கை, குங்குமச்சிமிழ், சீப்பு, கண்ணாடி உள்ளிட்டவற்றைக் கொண்டு வழிபாடு செய்து பிறருக்கு வழங்கினால், ஆண்டு முழுவதும்  செய்த பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, வெள்ளிக்கிழமைகளில் இக்கோயிலில் அம்மனுக்கு வழிபாடு நடத்தி, இப்பொருள்களை அளிப்பது நடைபெற்று வருகிறது.

ஆனந்தவல்லி அம்மன்
ஆனந்தவல்லி அம்மன்

மற்ற கோயில்களில் இறைவன், இறைவி சன்னதி வெவ்வேறு பகுதிகளில் இருக்கும். குறிப்பிட்ட சில கோயில்களில் மட்டும்தான் ஒரே மண்டபப் பகுதியில் இறைவன் - இறைவி எழுந்தருளியிருப்பர். அந்த வகையில் ஆமூர் கோயிலில் இறைவன்-இறைவி சன்னதி ஒரே மண்டபப் பகுதிக்குள் அமைந்துள்ளதால், ஒரே நேரத்தில் இருவரையும் வழிபடலாம்.

தம்பதி சகிதமாக சூரியனுக்கு காட்சியளித்தல்

சூரிய பகவானின் வேண்டுகோளை ஏற்று, ஆனந்தவல்லி அம்மன் உடனுறையாக ரவீசுவரர் சுவாமி (சிவபெருமான்-பார்வதி) தம்பதி சகிதமாக எழுந்தருளி, அவருக்கு நேர் எதிரில் காட்சியளிப்பதால், இத்திருக்கோயில் தனி பிரசித்தி பெற்று விளங்குகிறது.

சிறப்பு வாய்ந்த இரட்டை வாகன பைரவர்

பொதுவாக இறைவன் சன்னதி மண்டபத்துக்கு வெளியே தெற்குத் திசை நோக்கி தான் பைரவர் எழுந்தருளியிருப்பார். ஆனால், ஆமூரில்  இறைவன் சன்னதி மண்டபப் பகுதியில் மேற்குத் திசை நோக்கி இரட்டை வாகனத்தில் பைரவர் எழுந்தருளியிருக்கிறார். இது மிகவும் விசேஷமானது.

இரட்டை வாகன பைரவர்
இரட்டை வாகன பைரவர்

பைரவரின் வாகனம் நாய் (சமஸ்கிருதத்தில் சுனம்). ஆனால்,  இக்கோயிலில் வலதுபுறத்தில் சுனம் வாகனத்துடனும், இடதுபுறத்தில் ரிஷப வாகனத்துடனும் பைரவர் எழுந்தருளியிருப்பதால், இவர் இரட்டை வாகன பைரவர் என்றழைக்கப்படுகிறார்.

இவ்வாறு பைரவர் எழுந்தருளியிருப்பதால், அவர் கல்விக்கு அதிபதியாக போற்றப்படுகிறார். தேர்வுகளை எழுதுவோர் இந்த சன்னதியில் வந்து பைரவரை வழிபட்டுச் சென்றால் கல்வியில் சிறந்து விளங்குவர், அவர்கள் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

மேலும் திக்கிப் பேசும் குழந்தைகள், படிக்காத குழந்தைகளுக்கு இக்கோயிலின் பைரவர் சன்னதியில் நாவில் தேன் வைத்து செல்லுதல் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

அப்பர், ஞானசம்பந்தர், இரட்டை  வாகன பைரவர்,  சூரிய பகவான்
அப்பர், ஞானசம்பந்தர், இரட்டை  வாகன பைரவர்,  சூரிய பகவான்

சூரியனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வில்வமரம்

தன் பார்வையால் பஸ்பமாகிய வில்வமரத்தை, இறைவன் ரவீசுவரசுவாமி தரிசனத்துக்குப் பிறகு சூரிய பகவான் மீண்டும் பிரதிஷ்டை செய்தார். இந்த வில்வமரம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. இந்த மரத்துக்கு ஒரு குடம் தண்ணீர் ஊற்றி, மரத்துக்கு அருகிலுள்ள லிங்கத்தை (சிவபெருமான்) மூன்று முறை வலம் வந்து வழிபட வேண்டும். அவ்வாறு வழிபட்டால் நம் வாழ்வு செழிக்கும் என்பதும்  ஐதீகம். அதனால், இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஒரு குடம் தண்ணீரை ஊற்றி, லிங்கத்தை  வழிபாடு செய்து செல்லும் நிகழ்வு இன்றும் நிகழ்ந்து வருகிறது.

ஆமூர் ரவீசுவரர் திருக்கோயிலின் சிறப்பை விளக்கும் பாடல்
ஆமூர் ரவீசுவரர் திருக்கோயிலின் சிறப்பை விளக்கும் பாடல்

ஞாயிற்றுக்கிழமை வழிபாடு

சூரியனுக்கு உகந்த நாள் ஞாயிற்றுக்கிழமையாகும். எனவே தங்களது தோஷங்கள் நீங்க, வேண்டுதல்கள் நிறைவேற ஞாயிற்றுக்கிழமைகளில் இக்கோயிலுக்கு வந்து,  இறைவன்- இறைவியை வழிபட்டுச் சென்றால் உரிய பலன் கிடைக்கும் என்பதால்,  பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.

தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி

தெற்குத் திசை நோக்கியவாறு திருக்கோயிலின் வெளிப் பிரகார கோஷ்டத்தில் நர்த்தன கணபதியும்,  தட்சிணாமூர்த்தியும் எழுந்தருளியுள்ளனர். கிழக்குத் திசை நோக்கி கன்னிமூல கணபதி,  அருள்மிகு வள்ளி- தேவசேனா சமேத சுப்ரமணியசுவாமி  தனித்தனி சன்னதி கொண்டும் காட்சியளிக்கின்றனர்.

நர்த்தன கணபதி
நர்த்தன கணபதி

வெளிப் பிரகார கோஷ்டத்தில் வடக்குத் திசை நோக்கி பிரம்மா, துர்க்கையம்மனும், தெற்குத் திசை நோக்கி தனி சன்னதி கொண்டு சண்டிகேசுவரரும் எழுந்தருளியிருக்கின்றனர்.  கோயிலின் உள்பிரகார நுழைவுவாயில் பகுதியில் நந்தியெம்பெருமான் சன்னதியும், இறைவன் சன்னதி மண்டபத்துக்கு வெளிப் பகுதியில் நவக்கிரக நாயகர்கள் சன்னதியும் அமைந்துள்ளது. கருவறை சன்னதி மண்டபப் பகுதியில் அப்பர், ஞானசம்பந்தர், இரட்டை வாகனப் பைரவர், சூரியபகவான் எழுந்தருளியுள்ளனர்.

சூரியனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வில்வமரம்
சூரியனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட வில்வமரம்

சூரிய பூஜை வழிபாடு

சூரியன் வழிபட்ட திருக்கோயில் என்பதால், இக்கோயிலில் சித்திரை மாத 1,2,3-ஆம் தேதிகளில் சூரிய பூஜை வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி, வளர்பிறை சஷ்டி வழிபாடு, அன்னாபிஷேகம், பிரதோஷ வழிபாடு போன்றவையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பிரம்மா
பிரம்மா

குடமுழுக்கு

பழமையான இக்கோயிலில் 1971, ஜூன் 11-ஆம் தேதி திருப்பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், 1972, நவம்பர் 11-ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, 26 ஆண்டுகள் கழித்து, 1998 ஏப்ரல் 13-ஆம் தேதி மீண்டும் குடமுழுக்கு நடைபெற்றது. அதன் பின்னர் குடமுழுக்கு நடத்தப்படாத நிலையில்,  24 ஆண்டுகள் கழித்து மீண்டும் குடமுழுக்கு நடத்துவதற்கான பணிகள், கடந்த மாதம் தொடங்கின. ஏப்ரல் 28,29-ஆம் தேதிகளில் விமான பாலாலயம் மற்றும் திருப்பணிகள் தொடக்கப் பூஜைகள் நடைபெற்றன.

கன்னிமூல கணபதி
கன்னிமூல கணபதி

எப்படிச் செல்வது?

மதுரை, தேனி, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் போன்ற தென் மாவட்டங்கள், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை போன்ற டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்கா, நெ.1.டோல்கேட், நொச்சியம்,  துடையூர், சிறுகாம்பூர், வாய்த்தலை, குணசீலம் வழியாக ஆமூர் சென்றடையலாம்.

துர்க்கையம்மன்
துர்க்கையம்மன்

சென்னை, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சமயபுரம், நெ.1.டோல்கேட், நொச்சியம்,  துடையூர், சிறுகாம்பூர், வாய்த்தலை, குணசீலம் வழியாக ஆமூர் வந்து சேரலாம்.

வள்ளி-தேவசேனா சமேத சுப்ரமணியசுவாமி
வள்ளி-தேவசேனா சமேத சுப்ரமணியசுவாமி

கரூர், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி போன்ற மேற்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் முக்கொம்பு, ஜீயபுரம் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் வந்து, திருவானைக்கா, நெ.1 டோல்கேட், நொச்சியம் வழித்தடத்தின் வழியாகவோ அல்லது குளித்தலையில் இறங்கி முசிறி வந்து அங்கிருந்தும் ஆமூரை வந்தடையலாம்.

சண்டிகேசுவரர்
சண்டிகேசுவரர்

நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தொட்டியம், முசிறி வழியாக வந்து, கோயிலுக்கு வரலாம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஆமூருக்கும் ஆமூர் வழியாகவும் நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையத்திலிருந்து  ஆட்டோ, கார் போன்ற வாகன வசதிகள் உள்ளன.

நவக்கிரக நாயகர்கள் சன்னதி
நவக்கிரக நாயகர்கள் சன்னதி

தொடர்புக்கு:

இக்கோயிலுக்கு வருபவர்கள் கோயில் குருக்கள் ஆர். ஹரிசுப்ரமணியனை 98655 27538 என்ற  செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு முகவரி
அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் உடனுறை ரவீசுவரர் திருக்கோயில்,
ஆமூர்,
முசிறி வட்டம்,
திருச்சி மாவட்டம்.

படங்கள்: எஸ். அருண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com