சர்வ தோஷம் போக்கும் செந்தலை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்

சர்வ தோஷங்களை போக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்.
மீனாட்சி சுந்தரேசுவரர்
மீனாட்சி சுந்தரேசுவரர்

காவிரியின் கிளை நதியான குடமுருட்டியாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது செந்தலை கிராமம். சோழர் காலக் கல்வெட்டுகள் இவ்வூரைச் சந்திரலேகை சதுர்வேதிமங்கலம் எனக் குறிப்பிடுகின்றன. இந்த ஊரின் நடுவில் அமைந்த சிவன் கோயிலைத் திருப்பெருந்துறை மகாதேவர் திருக்கோயில் என கல்வெட்டுகள் குறிப்பிடுவதால், சந்திரலேகைக்கு திருப்பெருந்துறை என்ற பெயர் வழக்கத்தில் இருந்ததும் அறிய முடிகிறது.

ராஜகோபுரம்
ராஜகோபுரம்

சந்திரலேகை சதுர்வேதி மங்கலம் பெருங்குறி மகா சபையால் நிர்வகிக்கப்பட்டது என்றும், அவ்வூர் ஆர்க்காட்டுக் கூற்றத்தில் பிரம்மதேயமாக விளங்கியதும் பராந்தக சோழனின் கல்வெட்டு மூலம் தெரிகிறது.

பல்லவப் பேரரசர்களாலும், முத்தரைய மன்னர்களாலும், சோழப் பேரரசர்களாலும் போற்றப்பட்டதுதான் இந்த சந்திரலேகையில் உள்ள திருப்பெருந்துறை மகாதேவர் ஆலயம். இக்கோயிலின் கிழக்கு ராஜகோபுரம் கட்டுமான அமைப்பால் எழில்மிகு தோற்றத்துடன் விளங்குவதோடு பல வரலாற்று புதிர்களையும் கொண்டுள்ளது.

கோயில் முகப்பில் உள்ள கொடி மரம்
கோயில் முகப்பில் உள்ள கொடி மரம்

பிரஸ்தளம் வரை கருங்கற் கட்டுமானத்தோடும், அதற்கு மேலாகச் செங்கற் கட்டுமானமாக ஏழுநிலை கொண்டு இக்கோபுரம் விளங்குகிறது. ஏழு அடுக்குகளையும் சுதைச்சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. இவை அனைத்தும் சிவபுராணக் கதைகள், சந்திரலேகை சதுர்வேதி மங்கலத்து தல புராணக் கதைகளை விவரிக்கும் வகையில் உள்ளன.

ஆதி விநாயகர்
ஆதி விநாயகர்

கோபுரத்தின் அடித்தளமான உப பீடம், அதிஷ்டானம், பிரஸ்தளம் வரை உள்ள கருங்கற் கட்டுமானங்கள் அனைத்தும் புதிதாக எழுப்பப்படுகிற கோபுரத்துக்காக வடிவமைக்கப்பட்ட அமைப்பாக இல்லாமல், முன்பே திகழ்ந்த ஒரு கட்டுமானத்தின் கற்களைக் கொண்டு எழுப்பப்பட்டுள்ளதைக் கூர்ந்து நோக்கும்போது அறிய முடிகிறது.

செந்தலை கோபுரத்தின் கட்டுமானம் கி.பி. 15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. ஆனால், அதிஷ்டானத்திலிருந்து பிரஸ்தளம் வரை உள்ள கட்டுமானம் சிற்ப அமைப்பு முற்காலச் சோழர்களின் கலைக் கூறுகளைக் காட்டுகின்றன. இக்கோயிலின் பெரிய கோபுரத்தைக் கட்டியவர் கி.பி.15 ஆம் நூற்றாண்டில் ஆண்ட விஜயநகரப் பேரரசர் இரண்டாம் தேவராயரின் சகோதரரும் தமிழகத்தில் மகாமண்டலேசுவரராகவும் பணிபுரிந்த சாளுவ திப்பதேவ மகாராயர் என்பதை உறுதி செய்துள்ளனர்.

முகப்பு மண்டபம்
முகப்பு மண்டபம்

செந்தலை ஆன சந்திரரேகை

திருப்பெருந்துறை மகாதேவர் என்ற பெயர் பெற்றிருந்த இக்கோயில் சந்திரலேகை என்ற கந்தர்வபெண்ணால் பூஜிக்கப்பட்டதால், சந்திரரேகை என்று மருவி, தற்போது செந்தலை என அழைக்கப்படுகிறது.

ப்ரும்மகைவத்தம் என்ற புராணத்தில் இத்தல மகிமையை 20 அத்தியாயங்களாக கூறப்பட்டுள்ளது. இத்தலமானது கிருதாயுகத்தில் பிரம்மவளம், பிரம்மாரன்யம் என்றும் திரேதா யுகத்தில் ஜம்புகாச்வரம் என்றும் துவாபரயுகத்தில் பிருகத்கச்சம் என்றும் கலியுகத்தில் சந்திரரேகை (செந்தலை) என்றும் நான்கு யுகங்களாக வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கி அருள்பாலித்து வருகிறது.

சுந்தரேசுவரர்
சுந்தரேசுவரர்

குடமுருட்டி பெயர்க் காரணம்

இத்தலத்தில், பிரம்மா தான் அடைந்த அகங்காரம் (ஆணவம்) தொலைய இறைவனுக்கு கோயில் அமைத்து, குடமுழுக்கு செய்ய கடங்கள் வைத்து ஹோமங்கள் செய்து தியான நிலையில் அமர்ந்திருக்கும் காலத்தில், காவேரியானவள் பிரம்மாவினுடைய பூஜையை பார்க்க ஆவலோடு அதிவேகமாக வருகிறார். அப்போது, சில கடங்களை உருட்டிக் கொண்டு சென்றபடியால் இந்தக் கோயிலுக்கு வடபுறம் அருகில் ஓடும் நதிக்கு (காவிரி) குடமுருட்டி என பெயர் பெற்று விளங்குகிறது. இந்த நதியில் நீராடி மகாதேவர் என்கிற அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் மற்றும் யோகாம்பிகை என்ற ஸ்ரீ மீனாட்சியையும் தரிசித்தால் சசல பாக்கியங்களும் உண்டாகும். பிரம்மாவுக்கு சிவ இடர்தோஷம் நீக்கிய தலம் இது.

பிரம்மா
பிரம்மா

சந்திரலேகை பூஜித்த தலம்

ஒரு காலத்தில் காவிரியின் கிளை நதியான குடமுருட்டி ஆற்றின் கரையில் ஒரு முனிவர் தவம் செய்து வந்தார். அந்நாளில் பூவுலகைச் சுற்றிப் பார்க்க வந்த சந்திரலேகை என்கிற தேவகன்னி மேலே பறந்து சென்று கொண்டிருந்தாள். அவர் கீழே தவம் செய்யும் முனிவரைக் கண்டாள். விளையாட்டாக அவர் முன் ஆடிப்பாடி அவரது தவத்தைக் கலைத்தாள். அவளது இந்த செயலால் தவம் கலைந்த முனிவர் அவளைப் பூவுலகில் ஆடல் மகளாய் பிறக்கும்படி சாபம் அளித்தார்.

அதைக் கேட்ட சந்திரலேகை நடுநடுங்கிவிட்டாள். முனிவரின் காலில் வீழ்ந்து தன்னை மன்னிக்கும்படி மன்றாடி வேண்டினாள். அப்போது மனமிறங்கிய முனிவர், நீ இத்தலத்தில் பிறந்து இறைவனை ஆடல், பாடல்களால் மகிழ்வித்து வாழ்வாய். ஒரு நாள் இக்கோயில் பெருமானை நீ தொடும்போது உனது சாபம் நீங்கி முந்தைய தேவகன்னிகை வடிவத்தை மீண்டும் பெற்று உனது உலகம் செல்வாய் என்றார்.

தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி

அதன்படியே அவர் மண் மீது வந்து பதியிலார் குலத்தில் பிறந்து பெருமானுக்குப் பணி செய்து வாழ்ந்து வந்தாள். ஒருமுறை ரத சப்தமி நாளில் பெருமானுக்கு சிறப்பான அபிஷேகம் நடைபெற்றது. கோயில் பணிப் பெண்ணாக இருந்த அவள், அங்கே இருந்து உதவி செய்து வந்தாள்.

அபிஷேகத்தால் பொலிந்திருந்த பெருமானின் திருமேனி அழகு அவளைக் கவர்ந்தது. அவளது உள்ளத்தில் பெருமானின் நெற்றியில் கஸ்தூரி திலகம் இட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. கை நிறைய சந்தனத்தையும், கஸ்தூரித் திலகத்தையும் எடுத்தாள். பெருமானின் நெற்றிக்கு மேல் உள்ளங்கையால் ஈரம் போக அழுத்தித் துடைத்தாள்.

சப்த கன்னிகள்
சப்த கன்னிகள்

பெருமான் மீது அவரது கைப்பட்ட உடனே அவளுக்குப் பூர்வ ஜன்ம நினைவுகள் வந்துவிட்டன. பின்னர், சந்தனத்தையும், திலகத்தையும் பெருமானுக்கு அணிவித்து வழிபட்டாள்.

அப்போது, தன் முன் சந்திரசேகரனாகத் தோன்றிய பெருமானை அவள் பணிந்து வணங்கினாள். அவளிடம் பெருமான் வேண்டியதைக் கேள் என்றார். அவள் பெருமானைப் பணிந்து நான் தொட்டதை நினைவுகூரும் வகையில் இந்த ரத சப்தமி நாளில் தங்கள் நெற்றியில் லலாடம், ஜடாமகுடத்தின் கீழ்ப் பகுதி ஆகியவற்றில் என் கை பதிந்ததை நினைவூட்டும் வகையில் ரேகைகள் தோன்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாள். அப்படியே ஆகட்டும் என்றார் பெருமான்.

நவகிரகங்கள்
நவகிரகங்கள்

ரத சப்தமி நாளில் பெருமான் அபிஷேக அலங்காரம் முடிந்து அதிகாலையில் கோபுர தரிசனம் தருகிறார். இதுவே சந்திரலேகைக்கு அருள் புரிந்து சாப நிவர்த்தி அளித்த தலமாகும். பின்னர் பெருமான் பரிவாரங்களுடன் குடமுருட்டியாற்றுக்கு சென்று தீர்த்தம் அளிக்கிறார். சந்திரலேகைக்கு அருள் புரிந்ததை நிலையாகக் காட்டும் வகையில் இந்த ஊருக்கு சந்திரலேகை சதுர்வேத மங்கலம் எனப் பெயர் சூட்டினார்.

இப்போதும் தெரியும் ரேகைகள்

இப்போதும் தை மாத ரத சப்தமி நாளில் அபிஷேக நேரத்தில் நெற்றியில் லலாடம், ஜடாமகுடத்தின் கீழ்ப் பகுதி ஆகியவற்றில் செம்புமயமான சோமாஸ்கந்தரின் திருமேனியில் கருத்துவிடுவதும், சில நேரத்துக்குப் பிறகு இயல்பு நிலைக்கு மாறிவிடுவதையும் காண முடிகிறது.

சோமாஸ்கந்தர் - அபிஷேக நேரத்தில் கருத்துவிடும் நெற்றிப்பகுதி
சோமாஸ்கந்தர் - அபிஷேக நேரத்தில் கருத்துவிடும் நெற்றிப்பகுதி

அன்றைய நாளில் காவிரியில் (குடமுருட்டி) நீராடி அருள்மிகு சோமாஸ்கந்தரை வழிபட்டால் மோட்சம் கிடைப்பதாக ஐதீகம். அதனால் ரத சப்தமி நாளில் ஏராளமான பக்தர்கள் திரண்டு இறைவனை வழிபடுகின்றனர்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்

முன்னொரு காலத்தில் பாண்டிய மன்னன் சமண சமயத்தைத் தழுவி, மதுரையில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலை பூட்டிவிட்டார். சிவ மதத்தைத் தழுவிய பாண்டியனின் மனைவி கனவில் அருள்மிகு மீனாட்சி அம்பிகை தோன்றி, நாங்கள் இருவரும், பிரம்மாரன் சேத்திரத்தில் (செந்தலை) இருப்போம் எனக் கூறினார். மதுரையை விட்டு இங்கு வந்துவிட்டபடியால், இறைவன் பெயர் சுந்தரேஸ்வரர் என்றும், அம்பிகையின் பெயர் மீனாட்சி எனவும் விளங்குகிறது.

மீனாட்சி அம்மன்
மீனாட்சி அம்மன்

இத்திருக்கோயில், திருமூர்த்தி தலம் என வழங்கப்படுகிறது. பிரம்மா தம்முடைய அகங்காரம் ஒழிய இறைவனை வடபுறம் நோக்கி வழிபடுகிறார். திருமால் தன்னுடைய நரசிம்ம அவதாரத்தில் இறைவனை தெற்கு முகமாக வழிபடுகிறார்.

துர்க்கை
துர்க்கை

இத்தலத்தில் சப்த கன்னிகள் உள்ளனர். தட்சிணாமூர்த்தி நேர் எதிரே சப்த கன்னிகள் அமைந்திருப்பதால் சிறப்புடையது. இதனால், தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் நீங்கா செல்வம் உண்டாகும். சப்த கன்னிகளை திருமணம் ஆகாதவர்கள், குழந்தைப்பேறு இல்லாதவர்கள், தீராத வியாதியால் அவதிப்படுகிறவர்கள் 48 நாட்கள் விளக்கு ஏற்றி வழிபட்டால், அவர்களது வேண்டுகோள் நிறைவேறுவது இன்றும் நிகழ்ந்துவரும் உண்மை. இது, கண்கூடாக இன்றும் நடந்து வருகிறது.

பஞ்சமுக சிவபெருமான்
பஞ்சமுக சிவபெருமான்

இத்திருக்கோயிலில் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் மிகவும் சிறப்புடையது. ஆடலரசனை (நடராஜப் பெருமாள்) திருவாதிரையில் வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் குறையாமல் வாழ்ந்து வருகின்றனர் என்பது இங்கு நடைமுறையில் தெரிகிறது. இதனால், பக்தர்கள் வெளியூர்களிலிருந்தும் திரண்டு வந்து வழிபடுகின்றனர். அதனால் ஏற்படும் பலனை அளவிட்டுக் கூற இயலாது.

நடுவில் உஷா, பிரதியுஷாவுடன் சூரியன்
நடுவில் உஷா, பிரதியுஷாவுடன் சூரியன்

ஒவ்வொரு மாதமும் அமாவாசையில் காவிரியில் (குடமுருட்டி) நீராடி இறைவனை வழிபட்டு சகல பாக்கியங்களைப் பெற்று வருகின்றனர். இக்கோயில் அம்பாள் சன்னதியில் திருமணம் நடத்தினால், கணவன் - மனைவி எந்த தோஷமும் இன்றி இன்புற்று வாழலாம் என்பது ஐதீகம். இக்கோயில் பஞ்சமுக சிவபெருமானை வணங்கினால் சர்வ தோஷமும் நீங்கும்.

இத்தல வரலாற்றை இராஜகோபுரத்தின் தென் பாகத்தில் பார்த்தால், நான்கு யுகங்களிலும், பூஜை செய்தவர்களை அதாவது முறையே பிரம்மா, குதிரைகள், பிரகத்கச்சம் என்ற மகிரிஷி, சந்திரலேகை என்ற கந்தர்வ பெண் ஆகியோர் பூஜை செய்து வருவது இன்றும் காணலாம்.

முருகன்
முருகன்

இறைவன் - சுந்தரேஸ்வரர்

இக்கோயில் இறைவன் சுந்தரேஸ்வரர் சுயம்புவாகத் தோன்றியவர். சுயம்பு மூர்த்தத்தில் இவர் முதன்மையானவர். அதாவது ஆதியில் தோன்றியவர்.

இறைவி திருப்பெயர் மீனாட்சியம்மன்

இத்தலத்தில் அம்பாள் பாதம் முன்னும் பின்னும் அமைந்திருப்பது வேறு எங்கும் காணக்கிடைக்காத ஒன்று. அம்பாள் சன்னதியில் திருமணம் நடத்தினால் கணவன் - மனைவி எந்த தோஷமும் இன்றி இன்புற்று வாழலாம் என்பது ஐதீகம்.

குடை விநாயகர்
குடை விநாயகர்

இக்கோயிலில் துர்கைக்கு தனி சன்னதி உள்ளது. சூரியன் தனது இரு மனைவிகளான உஷா, பிரதியுஷா உடன் சன்னதி கொண்ட திருத்தலம். சிவன், விஷ்ணு, பிரம்மா அமைந்த மும்மூர்த்திகள் தலம்.

ஸ்தல விருட்சம் -  வாகை மரம்

தீர்த்தம் - சந்திர தீர்த்தம்

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம், மார்கழி மாதத்தில் திருவாதிரை, தை மாதத்தில் ரத சப்தமி, சங்கராந்தி, மாசி மாதத்தில் சுக்லபட்ச அமாவாசை உள்ளிட்டவை விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. பொங்கல் திருநாளன்று நடைபெறும் சங்கராந்தி திருவிழாவின்போது, சுவாமி புறப்பாடாகி வீதி வலம் வந்த பிறகுதான் வீடுகளில் பொங்கல் வைக்கும் மரபு இப்போதும் தொடர்கிறது.

பத்மநாப பெருமாள்
பத்மநாப பெருமாள்

எப்படிச் செல்வது?

தஞ்சாவூர் - கண்டியூர் - திருக்காட்டுப்பள்ளி சாலையில் 25 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. தஞ்சாவூரிலிருந்து திருவையாறு சாலையிலுள்ள கண்டியூரிலிருந்து மேற்கு திசை நோக்கி கல்லணை சாலையில் செல்ல வேண்டும். கும்பகோணம், அரியலூரிலிருந்து வருபவர்கள் திருவையாறு, கண்டியூர் வழியாக வர வேண்டும். இந்தக் கோயிலுக்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கல்லணை, திருக்காட்டுப்பள்ளி நோக்கிச் செல்லும் பேருந்துகளில் செல்லலாம். கும்பகோணம், அரியலூரிலிருந்து வருபவர்கள் திருவையாறு வழியாக கண்டியூருக்குச் சென்று, அங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி வழித்தடப் பேருந்துகளில் செல்லலாம்.

சண்டேஸ்வரர்
சண்டேஸ்வரர்

செந்தலை தேரடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி மேற்கு நோக்கி 100 மீட்டர் தொலைவுக்கு நடந்து சென்று இக்கோயிலை அடையலாம். வெளியூரிலிருந்து ரயிலில் வருபவர்கள் தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து மூலம் வரலாம். அல்லது பூதலூர் ரயில் நிலையத்திலிருந்து திருக்காட்டுப்பள்ளி வழியாக 5 கி.மீ. தொலைவில் இக்கோயிலை அடையலாம். விமானத்தில் வருபவர்கள் திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை வழியாக இக்கோயிலுக்குச் சென்றடையலாம்.

முகவரி

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
செந்தலை,
திருவையாறு வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்.

நடை திறக்கப்படும் நேரம்: காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரை. மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.

தொடர்புக்கு: 8110955290

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com