Enable Javscript for better performance
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தவறாதவர்கள் சனிப் பெயர்ச்சியைக் கண்டு பயப்பட வேண்டாம்!- Dinamani

சுடச்சுட

  

  கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தவறாதவர்கள் சனிப் பெயர்ச்சியைக் கண்டு பயப்பட வேண்டாம்!

  By - அஸ்ட்ரோ சுந்தரராஜன்  |   Published on : 19th December 2017 01:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  shri_sanibhagawan

   

  நீண்ட நாட்களாக சனிப் பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக காலபுருஷனுக்கு எட்டாம் வீடு மற்றும் தனது பகைவனான செவ்வாயின் வீட்டில் பயணம் செய்து, பலருக்கும் பலவிதமான பலன்களை வழங்கிவந்த சனைச்சரன் எனப்படும் சனி பகவான், திருக்கணித பஞ்சாங்கப்படி, கடந்த ஐப்பசி மாதம் 9-ம் தேதி (26.10.2017) முதல் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசியை அடைந்து, அங்கிருந்தபடி தனது சஞ்சாரத்தை தொடர்ந்து வருகிறார். ஆனால், வாக்கிய பஞ்சாங்கபடி இன்று மார்கழி மாதம் 4-ம் தேதி (19.12.2017) அன்று விருச்சிகத்திலிருந்து தனுசு ராசிக்குச் செல்வதாகக் கூறப்பட்டுள்ளது. எந்த பஞ்சாங்கமாக இருந்தால் என்னங்க! இந்த ஆண்டில் சனி மாறுவதால் நல்லதே நடக்கும் என நம்புவோம்.

  ஜோதிடமே தெரியாதவர்கூட சனீஸ்வர பகவானை தெரியாமல் இருக்கமாட்டார்கள். யாருக்குப் பயப்படுகிறார்களோ இல்லையோ, சனியின் பார்வைக்குப் பயப்படாதவர் இருக்க முடியாது. அப்படிப்பட்ட சனைச்சரன் எனப்படும் சனி பகவான் யார்? அவர் நல்லவரா, கெட்டவரா? - இந்தச் சனிப் பெயர்ச்சி நாளில் பார்ப்போம்.

  நவக்கிரகங்களில் சனி பகவானும் ஒருவர். சனைச்சரன் என்றும் மந்தன் என்றும் குறிப்பிடுவர். ‘சனை’ என்றால் மெள்ள, அதாவது மெதுவாக என்று அர்த்தம். ஒரு ராசியில் பயணிக்க சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்கிறார் சனி பகவான். மற்ற கிரகங்களைவிட இவருடைய பயணம் மெதுவாக இருப்பதால், அந்தப் பெயரே பொருந்துகிறது இவருக்கு! விண்வெளியில் அவர் பயணிக்கும் பாதை, எல்லா கிரகங்களையும் தாண்டியதாக இருக்கும். விண்வெளியில் வெகு தொலைவில் இருப்பவர் இவர். சனி பகவானைக் கடந்து இருப்பது நட்சத்திர மண்டலம். அவரிடமிருந்துதான் கிழமைகளின் தோற்றமும் வரிசைகளும் உருவாயின.
   

  ஒரு ஜாதகருக்கு ஜாதக ரீதியான நன்மையான அல்லது தீமையான பலன்கள் தருவதில் முக்கியப் பங்கு வகிப்பவர் சனி பகவான்தான். ஒருவன் யாருக்கு பயப்படுகிறானோ இல்லையோ, சனி பகவானுக்கு பயப்பட்டே ஆக வேண்டும். இவரிடமிருந்து யாரும் தப்ப முடியாது. 'சிவனாக' இருந்தாலும் சரி, 'எமனாக' இருந்தாலும் சரி. அல்லது வேறு 'எவனாக' இருந்தாலும் சரி. தீர்ப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். 

  இவர் அரசனை ஆண்டியாகவும், ஆண்டியை அரசனாகவும் மாற்றக்கூடியவர். மனிதனுக்குத் துன்பம் என்றால் என்ன என்று புரியவைப்பவர். மனிதர்கள் எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும், கஷ்டப்படும் நேரத்தில் ஜாதகத்தை கையில் எடுப்பதற்கும் இவர்தான் காரணம். இவர் அரசனை மட்டும் இல்லை, மனிதனையும் தண்டிப்பவர். இவரிடம் எந்த மந்திரியின் சிபாரிசும் எடுப்படாது. மனிதன் பிறப்பு எடுப்பதே கர்மத்தை தொலைப்பதற்குத்தான். அதனால், இவரின் பிடியில் இருந்து யாரும் தப்பமுடியாது. இந்த உலகமே இவரின் பிடியில்தான் உள்ளது என்றால் அது மிகையில்லை.

  எனவேதான் இவரை தலைமை நீதிபதி என்பார்கள். இவர் தண்டிக்கும் தெய்வம் அல்ல; நம்மை திருத்தும் தெய்வம். இவர் நம் கர்மவினைகளுக்கு ஏற்ப சோதனை கொடுத்து, நம்மை திருத்தி நல்வழிப்படுத்தி, நம்மை சாதிக்க வைப்பார். சனி பகவான் நன்மை மட்டுமே செய்வார். ஆனால், மக்கள் இதை சரியாகப் புரிந்துகொள்ளாமல், இவரைக்கண்டு பயப்படுகிறார்கள். 

  சூரிய புத்திரன்

  சனீஸ்வர பகவான், சூரிய பகவானின் குமாரர். இவருடைய மாதா, சாயா தேவி. சாயா தேவிக்கு நிஷுபா, பிருத்வீ என்னும் பல பெயர்கள் உண்டு. சூரிய பகவானுக்கும், சாயா தேவிக்கும் புதல்வராக அவதரித்த சனீஸ்வர பகவானின் புராண வைபவம் நமக்கு பேரருளையும், செல்வத்தையும் அளிக்கும். சூரியதேவன், த்வஷ்டா என்பவரின் குமாரத்தியான சுவர்ச்சலா தேவியைத் திருமணம் செய்துகொண்டார். சுவர்ச்சலா தேவிக்கு ஸமுக்ஞா, ஸரேணு, ராக்ஞீ, பிரபாஸா என்றும் பல பெயர்கள் உண்டு. சூரிய தேவனுக்கும், சுவர்ச்சலா தேவிக்கும் சிராத்த தேவன் என்று அழைக்கப்படும் வைவசுதமனு, யமதர்ம ராஜன் என்று இரு புதல்வர்களும், யமுனை என்னும் பெயருடைய அதிரூபவதியான புத்திரியும் பிறந்தனர். யமனும், யமுனையும் இரட்டைப் பிறவிகள். சூரிய தேவனின் இல்லறக் கோவிலில் இன்புற்று வாழ்ந்து வந்த சுவர்ச்சலா தேவிக்கு, நாளாக நாளாக சூரிய தேவனின் உக்கிரமான கிரணங்களைத் தாங்கும்படியான சக்தி குறைந்துகொண்டே வந்தது.
   

  சூரியனும் சுவர்ச்சலாவும்

  இந்த நிலையில், சுவர்ச்சலா தேவி தனது துயர நிலையைச் சூரிய தேவனிடம் சொல்வதற்கு சக்தியற்றுப் போனாள். சுவர்ச்சலா தேவி, கானகம் சென்று கடும் தவம் இருந்து உரிய சக்தியைப் பெற்று வருவதற்கு எண்ணினாள். அந்த எண்ணத்தையும் சூரிய தேவனிடம் சொல்லும் ஆற்றல் அவளுக்கு இல்லாமல் போனது. சுவர்ச்சலா தேவி தனக்குள் ஒரு முடிவுக்கு வந்தாள். தனது மனோ சக்தியால் தனது நிழலையே, தன்னைப் போன்ற பேரெழில் கொண்ட பெண்ணாகத் தோன்றச் செய்தாள். நிழலில் நின்றும் உருப்பெற்று வந்த அந்த நளின சிங்கார வனிதை, தன்னைப் போன்ற உருவத்துடன் காணும் சுவர்ச்சலா தேவியைக் கண்டு திகைத்தாள். அவளை நமஸ்கரித்து நின்றாள். சுவர்ச்சலா தேவி அவளைப் பார்த்து, எனது சாயையில் நின்றும் தோன்றியவளே! உனக்கு சாயா தேவி என்று நாமகரணம் சூட்டுகிறேன். உனக்கு நான் சகல சௌபாக்கியங்களையும் அளிக்கிறேன். நான் தவம் செய்யப்போகிறேன். நான் திரும்பி வரும்வரை, நீ என் கணவருடன் சுகித்து வாழ்வாயாக! என் குழந்தைகளான வைவசுதமனு, யமதர்மன், யமுனா ஆகியோரை அன்போடு அரவணைத்து வாழ்வாயாக என்று கூறினாள். சுவர்ச்சலாவின் அன்புக் கட்டளைப்படி, சூரிய தேவனுடன் சாயா தேவி வாழத் தொடங்கினாள்.

  சுவர்ச்சலாவின் நிழல் சாயா தேவி

  சூரிய தேவனின் குழந்தைகளிடம் சாயா தேவி மிகுந்த வாத்ஸல்யம் கொண்டிருந்தாள். கண்ணும் கருத்துமாக அக்குழந்தைகளைக் காத்துவந்தாள். சூரிய தேவனுக்கும், சாயா தேவிக்கும் தபதீ என்னும் புத்திரியும், ச்ருதச்ரவஸீ, ச்ருதகர்மா என்று இரு புதல்வர்களும் பிறந்தனர். ச்ருதகர்மாதான் பின்னால் சனீஸ்வரர் என்று அழைக்கப்படுபவர். சுவர்ச்சலாவின் குழந்தைகளும், சாயா தேவியின் குழந்தைகளும் சாயா தேவியின் அரவணைப்பில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். நாளாக நாளாக, சாயா தேவி தனது குழந்தைகளிடம் சற்று அதிகப்படியான வாஞ்சை செலுத்தினாள். சுவர்ச்சலா தேவியின் மகனான எமதர்மராஜனுக்கு இதனால் மனத்தில் வேதனை மிகுந்தது. தனது தாய்க்கு ஏன் இந்த பாரபட்சம் என்று நினைத்து வருந்தினார்.
   

  எமதர்மனின் கோபம்

  ஒருநாள், எமதர்மராஜனுக்குத் தாயிடம் கோபம் மிகுந்தது. தந்தையாகிய சூரிய தேவனிடம் சென்றார். சிறிது காலமாகத் தாயார் தங்களைத் தரக்குறைவாக நடத்துவதாகச் சொல்லி கண் கலங்கினார். தர்மாத்மாவான யமனின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டார் சூரியதேவன். தருமபுத்திரா, தரும வழியில் நடந்துவரும் உனக்கே கோபம் வருகிறதென்றால், இதில் உண்மை இருக்கத்தான் செய்யும். நான் இப்போதே உனது குறையை நிவர்த்திக்கிறேன் என்று சூரிய தேவன் மகனை அன்போடு அருகே அழைத்து, ஆரத் தழுவி ஆறுதல் சொல்லி, சாயா தேவியிடம் விசாரித்தார். சாயா தேவி மெளனம் சாதித்தாள். சாயா தேவியின் மீது சூரிய தேவன் கடும் கோபம் கொண்டார். அவரது கோபத்தை கண்டு பயந்த சாயா தேவி, நடந்ததைச் சொல்லி தனது பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டினாள். 

  சாயா தேவியின் நிலை

  சாயா தேவி சொன்னதைக் கேட்ட சூரிய தேவன், அவளை மன்னித்தார். எமதர்மராஜனும் சாயா தேவி மீது அனுதாபம் கொண்டார். சூரிய தேவன் தனது ஞானதிருஷ்டியால் சுவர்ச்சலா தேவி தவமிருக்கும் இடத்தை கண்டறிந்து, அங்கு சென்றார். சுவர்ச்சலா தேவியை ஆனந்தத்தால் தழுவினார். சூரிய தேவனின் சக்தியால், சுவர்ச்சலா தேவிக்கு இரு புத்திரர்கள் பிறந்தனர். அவர்கள் அஸ்வினி தேவர்கள் என்று திருநாமம் பெற்றனர். இவர்கள் தேவலோக வைத்தியர்களாக விளங்கினர். ரைவதன் என்று மற்றொரு மகனும் பிறந்தான். சூரிய தேவன், சுவர்ச்சலா தேவியை அழைத்துக்கொண்டு தமது இருப்பிடம் திரும்பினார். சாயா தேவியையும் ஏற்றுக்கொண்டு இரு தேவியர் சமேதராக பத்மாசனத்தில் எழுந்தருளி பாரெல்லாம் பவனி வந்தார்.
   

  சனைச்சரனின் கொடும் பார்வை

  சிருதகர்மாவான சனீஸ்வரர், இளமை முதற்கொண்டே மற்ற சகோதர, சகோதரிகள் எவருக்கும் இல்லாத ஓர் தனித்தன்மை பெற்று விளங்கினார். சனீஸ்வர பகவானின் திருவிழிகளிலே ஓர் அபார சக்தி! அவரது பார்வையிலே தனி தீட்சண்யம்! அவரது பார்வை பட்ட மாத்திரத்திலேயே பல விபரீதங்கள் ஏற்படும்! எவர் மீது அவன் பார்வை பட்டாலும் உடனே ஆபத்து விளையும். சாயா தேவி, குழந்தை சனீஸ்வரனின் நிலை கண்டு கண் கலங்கினாள். தனது புத்திரனால் மற்றவர்களுக்குத் துன்பம் ஏதும் வர வேண்டாம் என்பதற்காக, சனீஸ்வரரை எங்கும் அனுப்பாமல், தனது கண்காணிப்பில் வைத்துக்கொண்டிருந்தாள். சனீஸ்வரரும், சாயா தேவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.

  சனீஸ்வரன், தாயின் அனுமதியுடன் காசி சென்று லிங்கம் ஒன்றை பிரதிஸ்டை செய்து கடுமையான தவம் இருந்தார். சனியின் தவத்தை மெச்சிய பரமன் காட்சி கொடுத்து, 'சிருதகர்மா, உன் தவத்தால் என்னை மிகவும் மகிழ்வித்தாய். இன்று முதல் தேவர்களிலேயே ஈஸ்வரப் பட்டம் உனக்கு மட்டும்தான். மகேஸ்வரனுக்குப் பிறகு ஈஸ்வர பட்டம் சனீஸ்வரனான உனக்குதான். நவக்கிரகங்களில் ஸ்திர நிலையும் உனக்குதான். நீ பூஜித்த லிங்கம் சனீஸ்வரலிங்கம் என்று அழைக்கப்படும். உனக்கேற்ற நாளான சனிக்கிழமையும் ஸ்திரவாரம் என்று அழைக்கப்படும்' என்றார்.

  சிருதகர்மா, அன்று முதல் சனீஸ்வரனாகவும் சனி பகவானாகவும் இருந்து நம்மை எல்லாம் ஆட்டுவிக்கிறார். சனி பகவான் அழிவைத் தருபவர் அல்ல. அழிவு வரும் வேளையைச் சுட்டிக்காட்டுபவர். பிறந்தவனுக்கு இறப்பு உண்டு. இறப்பு இருப்பவனே பிறக்க இயலும். அதுதான் நியதி என்கிறார். ஆன்மா குடியிருக்கத் தகுதியில்லாத நிலையில், உடலுக்கு மறைவு வருகிறது. அந்த வேளையை வரையறுக்கும் பணியை சனி பகவான் சுட்டிக்காட்டுகிறார். நம்மை வளர்த்து, நமக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து, இன்ப - துன்பங்களை கர்மவினைப்படி செயல்படுத்தி, வாழவைப்பவர் சனி பகவான். உடல் வாழத் தகுதியற்ற நிலையில், மறுபிறவி தருவார். பாவமும் புண்ணியமும் அற்றுப் போயிருப்பின், மறைவை இறுதியாக்கி மோட்சம் தருவார். 

  இந்த சனிப் பெயர்ச்சி நாளில், கர்மகாரகனான சனி பகவானின் அருளைப் பெற, அனைவருமே அவரை வணங்குவது நல்லது. சனி பகவானின் பிறப்பையும், அவரது பெருமையையும் படிப்பவர்களுக்கு அவரது பரிபூரண அருள் கிடைக்கும்.

  ஏழரை சனி, அர்தாஷ்டம சனி, அஷ்டம சனி, கண்ட சனி ஆரம்பிக்கப்போவதற்கான அறிகுறிகள்

  1. முதலில் மறதி. எல்லா விஷயங்களிலும் மறதி. அதனால் பொருள் இழப்பு. உதாரணம், கிரெடிட் கார்ட் பில், குழந்தைகள் பள்ளிக் கட்டணம் போன்றவற்றை தவறவிடுவது. அதற்கு அபராதத் தொகை கட்டுவது, இன்ஸூரன்ஸ் பாலிஸி காலாவதி ஆகும் வரை கவனிக்காமல் இருப்பது.

  2. உணவுக் கட்டுபாடு, மனக் கட்டுபாடு இன்றி, மனம்போன போக்கில் உண்பது மற்றும் மது, மாது தொடர்பு, லாகிரி வஸ்துக்கள் உபயோகிப்பது.

  3. மருத்துவர் சொல்வதை எதையும் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது. தேவையான மருந்துகளை மறதியாலோ அல்லது கவனக்குறைவாலோ எடுத்துக்கொள்ளத் தவறுவது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கண்களில் பாதிப்பு போன்ற அறிகுறிகள் தென்படும்.

  4. வாகனங்களில் செல்லும்போது பழுது ஏற்பட்டு பயணத்தில் அவஸ்தை; தேவையான ஆவணங்களை கவனக்குறைவு / மறதியினால் உடன் வைத்துக்கொள்ளாமல் இருப்பது.

  5. நடக்கும்போதே அடிக்கடி காலில் இடித்துக்கொள்வது.

  6. திடீரென குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசை ஏற்பட்டு, அதற்கான முயற்சியில் இறங்குவது, இலவசத்துக்கு ஆசைப்பட்டு அதை அடைய படாத பாடு படுவது; அடுத்தவர் பொருளுக்கு ஆளாய்ப் பறப்பது.

  7. நாம் அணியும் ஆடை எதிர்பாராதவிதமாகக் கிழிவது அல்லது எலி கடிப்பது.

  8. நம்முடைய தூக்கம் குறைவது மற்றும் முரண்பாடான தூக்கம். உதாரணம், பகலில் தூங்கி இரவில் தூங்காமல் இருப்பது.

  9. நம்மிடம் வேலை செய்யும் வேலையாட்களிடம் தகராறு.

  10. நாம் விரும்பாவிட்டாலும் கடன் தேடித் தேடி வருவது. வட்டிக்கு மேல் வட்டிக்கு கடன் வாங்குவது. கடன் வாங்கி ஷேர் மார்க்கெட்டில் பணத்தைப் போட்டுவிட்டு, பெரும் நஷ்டம் ஏற்பட்டு திண்டாடுவது.

  11. கடமைகளை மறப்பது. முக்கியமாக நித்திய கடமைகள், தாய் தந்தை, குழந்தைகள், கணவன்/மனைவி, பித்ருக்கள், வேலை, சமுதாயக் கடமைகளை மறதியாலோ, கவனக்குறைவாலோ மறப்பது.

  12. நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் பலன் கிடைக்காமல் இருப்பது.

  சனி பகவானுக்கான பரிகாரங்கள்

  சனிப்பெயர்ச்சிக்காக இன்று ஒருநாள் ஏதோ ஒரு கோயிலுக்கு முண்டியடித்துக்கொண்டு சென்று வந்துவிட்டாலோ அல்லது ஏதாவது ஒரு ஹோமத்தில் கலந்துகொண்டுவிட்டாலோ சனி தோஷம் நீங்கிவிடுமா? இரண்டரை வருடங்கள் ஒரு ராசியில் இருந்துகொண்டு, அனைவருக்கும் அவரவர் கர்ம வினைப்படி பல்வேறு நன்மை தீமைகளை வழங்க இருக்கிறார் சனைச்சரன் எனும் சனீஸ்வர பகவான்.
   

  கர்ம காரகரான சனீஸ்வர பகவான் நேர்மையானவர். கடமை தவறாதவர். கட்டுபாடு மிக்கவர். எனவே, எவரெல்லாம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தவறாமல் நடக்கிறார்களோ, அவர்களை சனீஸ்வர பகவான் ஒன்றுமே செய்வதில்லை. மாறாக நன்மைகளையே அதிகமாக வாரி வாரி வழங்குவார்.

  சனிப் பெயர்ச்சிக்கு உண்மையாக பரிகாரம் ஒருவர் செய்ய வேண்டும் என நினைத்தால், முதலில் நாம் செய்ய வேண்டிய பல்வேறு கடமைகளைக் குறித்துவைத்துக்கொண்டு அவற்றை சரியான நேரத்தில் செய்யப் பழக வேண்டும். தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்னும் நான்குவித கடமைகளைச் சரிவர செய்ய ஆரம்பித்துவிட்டாலே சனீஸ்வரனை கண்டு பயம் கொள்ளத் தேவையில்லை.

  கண்ணியம் தவறாமல், அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் சுய ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும். 

  உணவுக் கட்டுப்பாடு, உடல் கட்டுப்பாடு, மனக் கட்டுப்பாடு, சுய ஒழுக்கம், இந்திரியங்களின் மீதான கட்டுப்பாடு, சமுதாயக் கட்டுப்பாடு ஆகியவற்றை முறையாகக் கடைப்பிடித்தால், சனிதோஷம் என்பது ஒன்றுமே செய்யாது.

  சனி தோஷத்தால் அவதிப்படுபவர்களின் துன்பங்களை எல்லாம் ஆய்வு செய்து பார்த்தால், அதன் அடிப்படை ஏதாவது ஒருவிதத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இழந்திருப்பது புலனாகும்.

  எனவே, சனீஸ்வர பகவானைக் கண்டு அச்சம் கொள்ளாமல், நமது கடமைகளை கண்ணியத்தோடும், கட்டுப்பாட்டோடும் செய்து வருவதோடு, பெரியோர், குலதெய்வம், பித்ருக்கள் ஆகியவர்களை வணங்கி வருவதோடு, நாம் குடியிருக்கும் இடத்துக்கு அருகில் இருக்கும் பாரம்பரியம்மிக்க ஆலயத்துக்கு அவ்வப்போது சென்று வந்தாலே, சனிதோஷம் நீங்கி சந்தோஷமாக வாழ வழி வகுக்கும் என்பது நிதர்சனம்.

  - அஸ்ட்ரோ சுந்தரராஜன்
  செல்பேசி - 9498098786, 9841595510
  மின்னஞ்சல் - astrosundararajan@gmail.com
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai