Enable Javscript for better performance
சிவராத்திரி விரதம் அறிந்து கொள்வோம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  முகப்பு ஆன்மிகம் கட்டுரைகள்

  சிவராத்திரி விரதம் அறிந்து கொள்வோம்

  By   |   Published On : 28th February 2019 09:55 AM  |   Last Updated : 28th February 2019 09:55 AM  |  அ+அ அ-  |  

  paravathamalai-Siva-Temple-68

  சிவராத்திரி விரதம் இருக்குமன்று அதாவது நாளை  முழுதும் எதுவும் சாப்பிடக்கூடாது. நாள் முழுதும் உபவாசம் இருந்து மனதை சிவனின் மீது வைத்து, இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து சிவாலயங்களில் நடைபெறும் 4 ஜாம பூஜைகளிலும் பங்கேற்க வேண்டும். இன்றைய ஒரு நாள் வழிபாடு ஆயிரம் நாள் சிவபூஜை செய்த பலனை அளிக்கும் என்பது அருளாளர்கள் வாக்கு.

  சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஸ்வாமியை தரிசித்து வழிபாடு செய்ய முடியாவிட்டால் கூட, ‘லிங்கோற்பவ’ காலமாகிய இரவு 11.30 மணி முதல் 1மணி வரை உள்ள காலத்திலாவது சிவதரிசனம் செய்து வழிபட வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் தான் சிவன் ஜோதிலிங்கமாக தோன்றிய நேரமாக கருதப்படுகிறது.

  மகாசிவராத்திரியன்று முறையாக விரதம் இருந்து, இரவு முழுவதும் கண்விழித்து இறைவனின் நாமத்தை சொல்லி வழிபடுவதால் அளவற்ற நன்மை கிடைக்கும். சிவராத்திரி வழிபாட்டினால் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், நல்ல மக்கட்பேறு பெறலாம். தீரா நோய்கள் நீங்கும். முடிவாக இனிப் பிறவா தன்மை பெறலாம் என முன்னோர்கள் கூறுகின்றனர்.

  விரதத்தை சாஸ்திர சம்பிரதாயங்களில் கூறியுள்ளபடி அனுஷ்டிக்க பயந்து பலர் விரதமிருக்க முயற்சிப்பதில்லை. இன்றைய சூழ்நிலையில் 100% உண்மையான விரதத்தை எடுத்தவுடன் அனுஷ்டிப்பது எவராலும் இயலாது. விரதமிருந்து உடலையும் மனதையும் பழக்கவேண்டும். ஒவ்வொரு மகா சிவராதிரியின்போதும்  முந்தைய சிவராத்திரியைவிட சிறப்பாக அனுஷ்டிக்க சங்கல்பம் செய்துகொண்டால் கொஞ்சம் கொஞ்சமாக  விரதம் கைவரப்பெறும்.

  இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு தான் விரதம் இருக்க வேண்டுமா? என்று நீங்கள் கேட்பது நம் காதில் விழுகின்றது? மனதில் தூய எண்ணத்துடன் மாசு நீக்கி, இன்று ஒரு நாள் சிவ சிந்தனையில் இருந்தால் கூட போதும்., இரவில் கண் விழித்து விரதம் இருக்க முடியாதவர்கள், நாளை முழுதும் உபவாசம் இருந்து, மாலை தங்கள் வீட்டின் அருகில் உள்ள சிவாலயம் சென்று, முதல் கால பூசையாவது கண்டு இன்புறுங்கள். மற்றவர்கள் கண்டிப்பாக 4 கால பூசை பார்க்கவும்.

  நாங்களும் விரதம் இருக்க விரும்புகின்றோம்? வீட்டிலேயே விரதம் இருக்க முடியுமா? என்றால் நிச்சயமாக முடியும். கோவிலுக்கு செல்லாமல் வீட்டில் விரதம் இருப்பவர்கள் திருவிளையாடல்,திருவருட்ச்செல்வர்,கந்தன் கருணை போன்ற பக்திப் படங்களை பார்த்தும், சிவபுராணம், கந்த புராணம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம் போன்ற பொக்கிஷங்களை படித்தும் சிவ சிந்தனையில் இருக்கலாம்.


  அனைத்து புண்ணியப் பலன்களையும் இந்த சிவராத்திரி பூஜை தந்துவிடும்; அறிந்து பாவங்கள் செய்திருந்தாலும்,அறியாமல் பாவங்கள் செய்திருந்தாலும் அனைத்து பாவங்களையும், கர்மவினைகளையும் அழித்துவிடும் இந்த  சிவராத்திரி விரதம்.

  சித்திரை மாதத்தில் வரும் இரண்டு சிவராத்திரிகளிலும் ஒருவன்/ஒருத்தி தனது ஆயுள் முழுவதும் செய்து வந்தால், அங்கங்களின் குறைகள் நீங்கும்; உடலின் குறைகள் நீக்கப்பட்டு, ருத்திர கணங்கள் வந்து சிவலோகத்திற்கு அழைத்துச் செல்வார்கள்;

  வைகாசி மாதத்தில் வரும் இரண்டு சிவராத்திரி பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால், நாம் சாப்பிடுகின்ற மருந்து நம் உடலில் ஒட்டும்; சாப்பிடுகின்ற மருந்து உடலில் ஒட்டினால் தான் நம் நோய் நீங்கி ஆரோக்கியம் வரும்;

  ஆனி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால், தேவதைகள் எல்லாம் நடனம் ஆடி நம்மை வணங்கி தேவலோகத்திற்கு அழைப்பார்கள்:

  ஆடி மாதத்தில் வரும் இரு சிவராத்திகளில் பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால், அம்பிகையுடன் சேர்ந்து சிவராத்திரி பூஜை செய்த பலன் கிட்டும்;

  ஆவணி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜைகளை செய்தால் வேதம் ஓதிய பலன் கிட்டும்; பூணூல் அணிந்து வேதம் ஓதிய பலன் கிட்டும்;மேல் உலகில் வேதம் ஒதியவருக்கு கொடுக்கின்ற மதிப்பைக் கொடுப்பார்கள்:

  புரட்டாசி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் ஆயுள் முழுக்க பூஜை செய்தால்,செல்வம் பெருகும்;

  ஐப்பசி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் ஆயுள் முழுக்க பூஜை செய்தால்,நாம் என்றுமே பசியால் வாடித் தவித்து அலைய மாட்டோம்; வாழ்நாள் முழுவதும் பசியால் அவதிப்படமாட்டோம்; அதாவது உணவிற்காக என்றுமே கையேந்தி நிற்கும் நிலை வராது;

  சிவபக்தன் என்று சொல்லிக் கொள்கின்ற ஒவ்வொருவரும் அவசியம் செய்ய வேண்டியது,
  கார்த்திகை மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளிலும் பூஜைகள் செய்திடவேண்டும்; சிவராத்திரி விரதம் இருந்திடல் வேண்டும்; கார்த்திகை மாதத்து சிவராத்திரி பூஜையைப் பற்றி விவரிக்க ஒரு 100 ஆண்டுகள் போதாது;

  மார்கழி மாதத்தில் வரும் இரு சிவராத்திரி பூஜையை ஆயுள் முழுக்க செய்தால், பிறருக்காக தவறுகள் செய்ய மாட்டார்கள்: ஒரு மனிதன் அதுவரை செய்த அனைத்துவிதமான தவறுகளையும் அழிக்கின்ற சிவராத்திரி மார்கழியில் வரும் சிவராத்திரியாகும்;

  தை மாதத்தில் வரும் இரு சிவராத்திரி பூஜைகளை ஆயுள் முழுக்க செய்தால்,நெல் முதலான தானியங்கள் நன் கு விளையும்;அள்ளி வழங்கிய தானப் பலன் கிடைக்கும்;

  மாசி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜையை மனைவி செய்தால், பிற பெண்களை நாடும் கணவன் திருந்திவிடுவான்;கணவன் செய்தால், பிற மாதரை நாடும் எண்ணத்தில் இருந்து நிச்சயம் மீண்டு வர முடியும்;

  பங்குனி மாதத்தில் வரும் இரு சிவராத்திரிகளில் பூஜை செய்தால்,சிவபெருமானின் பங்குனி உத்திர நடனத்தைக் காணும் அளப்பரிய பாக்கியம் கிடைக்கும்; பங்குனி உத்திர நடனத்தைப் பார்ப்பதற்கு 3 கோடி முறை மனிதப் பிறப்பு எடுத்து சிவசிந்தையோடு வாழ்ந்தால் தான் கிட்டும்; அதை ஒரே ஒரு பிறவி பங்குனி மாத சிவராத்திரி பூஜைகளைப் பின்பற்றுவதன் மூலமாக கிடைத்துவிடுகின்றன;

  நமது பிறந்த நட்சத்திரமும், சிவராத்திரியும் சேர்ந்து வரும் நாளில் சிவராத்திரி பூஜை+விரதம் இருந்தாலே போதும்; கலியுகத்தில் மானுடப் பிறவி எடுத்தமைக்கான லட்சியத்தை அடைந்துவிட்டதாக அர்த்தம்;

  ஒருவேளை பிறந்த நட்சத்திரமும் சிவராத்திரியும் இணைந்து வராவிட்டாலும் கூட, பிறந்த கிழமையும் சிவராத்திரியும் இணைந்து வரும் நாளில் கூட சிவராத்திரி விரதம் இருந்து சிவபூஜை செய்வது மிகுந்த புண்ணியம் தரும்;


  செய்யவேண்டியது:

  1) சிவாலயத்தில் இருந்தபடி நான்கு கால பூஜைகளையும் பார்ப்பது

  2) சிவ சிந்தனையுடன் உபவாசம் இருத்தல்

  3) சிவ நாமத்தை மனதுக்குள் தியானித்தபடி இருத்தல்

  4) பக்தி இலக்கியங்களையும் பக்தி நூல்களையும் படித்தல் (இன்று பன்னிரு திருமுறைகளுள் “போற்றித்திருத்தாண்டகம்” பாடுவது மிகச் சிறந்தது.

  5) சிவராத்திரி தரிசனத்திற்கு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உதவுவது; ஆலய நிர்வாகத்திற்கு உதவுவது

  6) ஆலயத்தில் விழித்திருந்து துப்புரவு பணிகளை மேற்கொள்வது

  7) சிவபூஜை செய்பவர்களுக்கு கூட மாட உதவுவது

  8) கோ-சம்ரோக்ஷனம் செய்வது

  9) தான தர்மங்களை (அடுத்த நாள்) மேற்கொள்வது. – இவைகளை அவசியம் கடைபிடிக்கவேண்டும்.

  கண்டிப்பாக சிவராத்திரி அன்று அன்னதானம் போன்ற தானங்களை செய்ய வேண்டாம். அன்றைய தினம் உடலும் மனமும் சுத்தமாக வேண்டும். தானம் செய்கின்றேன் என்று நீங்கள் அன்னதானம் செய்தால் அது உண்பவர்களை தியானத்தில் ஆழ்த்தாது.

  எனவே தான் அடுத்த நாள் இது போன்ற தான தர்ம செயல்களை அடுத்த நாள் செய்யவும். மொத்தம் சிவராத்திரி அன்று நான்கு கால பூசை நடைபெறும்.

  ஒரு ஜாமம் என்பது 3 மணி நேரம் ஆகும்;நான்கு ஜாமப் பூஜைகள் சிவராத்திரி இரவில் நடைபெறும்; இதையே நான்கு காலப் பூஜை என்றும் அழைக்கின்றனர்;

  முதல் ஜாமப்பூஜை என்ற முதல் கால பூஜை சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை செய்வர்;

  இரண்டாம் ஜாமப்பூஜை என்ற இரண்டாம் கால பூஜை இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 மணி வரை செய்வர்;

  மூன்றாம் ஜாமப்பூஜை என்ற மூன்றாம் கால பூஜை நள்ளிரவு மணி 12.01 முதல் பின்னிரவு 3.00 மணி வரை செய்வர்;

  நான்காம் ஜாமப்பூஜை என்ற நான்காம் கால பூஜை பின்னிரவு மணி 3.01 முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை செய்வர்;

  முதல் கால பூஜை(சிவராத்திரி அன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை) பசும்பால் (கிராமங்களில் தேடிப்பார்த்து வாங்குங்கள்; பாக்கெட் பால் உண்மையான பால் அல்ல); தேன், பசுநெய், பசும் சாணம், கோஜலம் (பசுவின் சிறுநீர்) இவைகள் ஐந்துமே பஞ்சகவ்யம் என்று அழைக்கப்படுகிறது; சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய பஞ்ச கவ்யம் அளித்தவர்கள் யாரும் பஞ்சத்தால் வாடமாட்டார்கள்;

  சிவலிங்கத்திற்கு சந்தனப்பூச்சு செய்து வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்; இதனால், வேத நாயகனின் ஆசி கிட்டும்; பச்சைப்பயிறு நைவேத்தியமாக வைக்க வேண்டும்; இதனால், பெரும் புண்ணியம் கிட்டும்; இதனால்,அவர்களுடைய பிள்ளைகள் நன்றாக வாழ்வார்கள்; எதிர்காலத்தில் தங்கள் பெற்றோர்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாகச் செய்வார்கள்;
  பஞ்சகவ்யம் வாங்கித்தர இயலாதவர்கள், சிவராத்திரி பூஜைக்கு பணம் அன்பளிக்காக் கொடுக்கலாம்;

  இந்த முதல் ஜாமப் பூஜையில் ரிக் வேதம் பாராயணம் செய்ய வேண்டும்; ரிக் வேதம் சொல்லத் தெரியாவிட்டால், ரிக் வேதிகளை அழைத்து வந்து ஓதச் சொல்லலாம்;
  அதுவும் இயலாதவர்கள் ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சரத்த்தை இந்த முதல் ஜாமம் முழுவதும் ஜபிக்க வேண்டும்; இதனால்,ருத்ரம், ரிக் வேதம், சாம வேதம் சொன்ன பலன் கிட்டும்;

  ஓம்நமச்சிவாயமே உணர்ந்து மெய் உணர்ந்தபின்
  ஓம்நமச்சிவாயமே உணர்ந்து மெய் தெளிந்தபின்
  ஓம்நமச்சிவாயமே உணர்ந்து மெய்ப் புணர்ந்த பின்
  ஓம்நமச்சிவாயமே உணர்ந்து உட்கலந்து நிற்குமே!


  இரண்டாம் ஜாம(கால)பூஜை(இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 வரை)

  இரண்டாம் ஜாமத்தில் ஈசனை தரிசித்தால், நம்முடைய பிறவி முடிந்து, மீண்டும் மறுபிறவி எடுத்த பலன் கிட்டுகின்றது;

  பால், தேன், சர்க்கரை, நெய், தயிர் கலந்த ரச பஞ்சாமிர்தம் ஆகும்; ஈசனாகிய சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும்;
  இந்த அபிஷேகத்திற்கு, பால் கொடுத்தால் தாய்ப்பால் இல்லாதவள், தாய்ப்பால் பெறுவாள்; சுத்தமான பசும்பாலில் தான் அபிஷேகம் செய்ய வேண்டும்; காரம்பசுவின் பால் எனில் மிகவும் சிறப்பு; கிறிஸ்தவ ஆங்கிலேயனின் 300 ஆண்டுச் சதிகளால் மாவட்டத்திற்கு ஒரு ஊரில் தான் காரம்பசுவே இருக்கின்றது;

  சர்க்கரை கொடுத்தவருக்கு சர்க்கரை நோய் வராது;

  தயிர் கொடுத்தவருக்கு தயிர் திரண்டு உருவாவது போல,செல்வம் பெருகும்;

  சிவலிங்கத்திற்கு அகில் குழம்பு பூச்சு சார்த்த வேண்டும்; இதனால்,லட்சுமிதேவி நம்மைவிட்டு விலகாமல் இருப்பாள்; தாமரைப்பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்; நைவேத்தியமாக பாயாசம் வைக்க வேண்டும்; நைவேத்தியத்தை அனைவருக்கும் பகிர்ந்து தரவேண்டும்; இதன் மூலமாக நம்முடைய குழந்தைகள் நற்குணத்துடன் தானாய் வளரும்;

  இந்த இரண்டாம் கால பூஜை சமயத்தில் (இரவு 9.01 முதல் நள்ளிரவு 12 வரை) யஜீர் வேதம் பாராயணம் செய்ய வேண்டும்; க்ருஷ்ண யஜீர்,சுக்ல யஜீர் என்று இரு பெரும் யஜீர் வேதப்பிரிவுகள் இருக்கின்றன; இருவருமே கூடி அவரவர் யஜீர் வேதத்தை ஓத வேண்டும்; இதனால்,நாடு சுபிட்சமடையும்; நாமும் நன்றாக இருப்போம்; இன்று தேசபக்தியுடன் கூடிய தெய்வபக்திதான் தேவை;

  ஒருவேளை,யஜீர் வேதம் தெரியாவிட்டால் அல்லது யஜீர் வேதம் தெரிந்தவர்கள் கிடைக்காவிட்டால் வருத்தப்படவேண்டியதில்லை; சிவாய நம என்று இந்த இரண்டாம் காலம் முழுவதும் ஜபிக்க வேண்டும்;

  செம்பு பொன்னாகும் சிவாயநம வென்னீற்
  செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
  செம்பு பொன்னாகும் ஸ்ரீயும்,கிரீயுமெனச்
  செம்பு பொன்னான திரு அம்பலமே!

  இதையே நமது தாத்தா பாட்டிகள் பழமொழியாக எழுதி வைத்துள்ளனர்; சிவாய நம என்று சிந்தித்திருப்போர்க்கு ஒரு நாளும் துன்பமில்லை;


  மூன்றாம் ஜாம(கால) பூஜை (நள்ளிரவு 12 முதல் பின்னிரவு 3.00 மணி வரை)

  இந்த காலத்தில் சிவலிங்கத்திற்கு கொம்புத்தேனால் அபிஷேகம் செய்ய வேண்டும்;
  சிவலிங்கத்திற்கு மேல் பூச்சு அரைத்த பச்சைக் கற்பூரம் சார்த்த வேண்டும்; வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்; நைவேத்தியமாக எள் சாதம் படையல் இடவேண்டும்;

  சாம வேதம் பாடவேண்டும்; சாமவேதம் தெரியாவிட்டால், சிவயசிவ என்று நள்ளிரவு 12 முதல் பின்னிர்வு 3 மணி வரை ஜபிக்க வேண்டும்;

  போகின்ற உயிரை நிறுத்தவும், விரும்பிய துவாரத்தின் வழியாக உயிரைச் செலுத்தவும் வல்லது இந்த சிவயசிவ என்ற மந்திரமாகும்;

  இதில் இரவு 10.54 முதல் நள்ளிரவு 12.24 மணி வரையிலான நேரத்திற்கு லிங்கோத்பவ நேரம் என்று பெயர்;இந்த நேரத்தில் யார் “சிவயசிவ; சிவயசிவ” என்று ஓதுகிறார்களோ, அவர்களுடைய ஆவி பிரிகின்ற போது அளவற்ற சிவகடாட்சம் உண்டாகும்;


  நான்காம் ஜாம(கால) பூஜை(பின்னிரவு 3.01 முதல் மறுநாள் காலை 6 மணி வரை)

  கரும்புச்சாறு கலந்த அபிஷேகம் சிவலிங்கத்திற்குச் செய்ய வேண்டும்; மேல் பூச்சு அரைத்த குங்குமப்பூ பூச வேண்டும்; வில்வத்தாலும், நீலோற்பவ மலர்களாலும் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும்; இன்று நைவேத்தியமாக சுத்தமான அன்னம் படையல் இடவேண்டும்; பச்சரிசி சாதம் வடித்து, அதில் குறைந்தது இரண்டு கரண்டி பசுநெய் விடவேண்டும்; இதுவே சுத்த அன்னம் இடவேண்டும்;

  அதர்வண வேதம் பாடவேண்டும்; அதர்வண வேதத்தை எட்டு வருடங்கள் குரு அருகில் இருந்தே ஜபித்துப் பழகவேண்டும்; குரு அருகில் இல்லாமல் இந்த அதர்வண வேதத்தின் ரகசிய மந்திரத்தை ஜபித்தால்,உடனே உயிர் உடலைவிட்டுப் பிரிந்துவிடும்;

  அதர்வண வேதம் தெரியாவிட்டால்,பின்வரும் திருமூலரின் திருமந்திரப் பாடலைப் பாடினால் போதுமானது;

  சிவசிவ என் கிலர் தீவினை யாளர்
  சிவசிவ என்றிட தீவினை மாளும்
  சிவசிவ என்றிட தேவரும் ஆவர்
  சிவசிவ என்றிட சிவகதி தானே!

  இதையும் பாட இயலாதவர்கள் சிவசிவ என்று ஜபித்தாலே போதுமானது; பின்னிரவு 3 மணி முதல் விடிகாலை 6 மணி வரை இப்படி ஜபிக்க வேண்டும்;

  இவ்வாறு நான்கு ஜாம(கால) பூஜைகளையும், சிவராத்திரி விரதங்களை யாரொருவர் 24 ஆண்டுகள் தொடர்ந்து செய்கின்றார்களோ, அவர்கள் இறுதியாக வேதியர்களுக்கு ஸ்வர்ண தானம், பூ தானம், கோதானங்களை அன்புடன் செய்ய வேண்டும்; அனைவருக்கும் அன்னதானம் போன்ற தான தருமங்களைச் செய்ய வேண்டும். அதுவும் சிவ தலங்களில் அன்னதானம் செய்ய வேண்டும்; இப்படிச் செய்து முடிப்பவர்கள் முக்தி அடைவார்; அவர்களின் பரம்பரையும் குருவோடு சொர்க்கத்தை அடைவார்கள்;

  சிவராத்திரியின் மகிமையை சுக்ரதேசாத்திரியில் சாஸ்திரம் கூறுகின்றது; இதன் படி, மகாசிவ ஆகமங்களும், சிவபுராணங்களும் விவரிக்கின்றன;சிவராத்திரி மகிமைகளைக் கேட்டவர் சிவனாய் ஆவார்;சொன்னவர் சிவன் நாமத்தில் என்றும் திளைப்பார்; கேட்டு மகிழ்கின்றவரும் சிவனாய் ஆவார்; இதனைச் செய்கின்றவர்களுக்கு சிவலோகப் பிராப்தம் உண்டு;
   

  ராகேஸ் TUT - 7904612352


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp