சுடச்சுட

  

  அருளை அள்ளித்தரும் நவயோகி, தவ யோகி, சிவ யோகி ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் - பகுதி I

  Published on : 22nd January 2019 10:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sadanangaswamigal

  ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் 

  உலக மக்களின் அறியாமை என்னும் இருளை அகற்றவும்,அறிவு ஒளி பெருகவும்,ஆன்ம ஒளி நல்கிடவும் சித்தர்களும்,மகான்களும் அவ்வப்போது தோன்றி மக்களை வழி நடத்திக் கொண்டு வருகின்றார்கள். இந்த புண்ணிய பூமியாம் தமிழ் நாட்டிலே பிறந்ததற்கு நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும். ஓரளவேனும் புண்ணியம் இருந்தால் தான் நாம் தென்னாட்டிலே பிறக்க முடியும். அப்படி பிறந்த நாம், வாழ்கின்ற நாட்களில் சித்தர்கள்,மகான்கள் பற்றியும்,அவர்களது அருளாசி பற்றியும் அறிந்து இருளகற்றி , அறிவு ஒளி பெருக்கிட வேண்டும்.

  சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புறத்திலுள்ள சித்தர்கள் மற்றும் மகான்கள் வரிசையில் இவருக்கு தனி இடம் உண்டு.சொல்ல சொல்ல இனிக்குதடா என்பதற்கேற்ப இந்த சித்தரின் பெயரை சொல்ல சொல்ல நம்மிடம் குரு பக்தி உயரும். தெய்வ பக்தி சாதிக்காததை குரு பக்தி சாதிக்கும். அதனை ஒட்டிய பதிவு ஏற்கனவே நம் தளத்தில் பதிவாகி உள்ளது.மீண்டும் ஒரு முறை படித்து குருவின் அருமை.பெருமைகளை உள்வாங்கினால் தான் சே! என்னடா வாழ்க்கை இது என்று நாம் துயருறும் போது,குருமார்கள் நம்மை வழி நடத்துவார்கள்.

  மாதா,பிதா,குரு,தெய்வம் என்று கேட்டிருப்போம். நம்மை பத்து மாதங்கள் சுமந்து பெற்ற அன்னை தான் தந்தையை காட்டுகின்றார். தந்தையானவர் குருவினை காட்டுகின்றார். குருவானவர் மட்டுமே இறையை,தெய்வத்தை காட்டுகின்றார்.தெய்வத்தை அடைய குரு வழிகாட்டல் தேவை.குருவின் தாள் பணிவோம். இறைவனை அடைவோம்.

  ஒவ்வொரு மனிதனின் பிறப்புக்குமே ஒரு காரணம் இருக்கும். ஆனால் அந்த பிறப்பிற்கான காரணத்தை உணராமலே பல மனிதர்கள் வாழ்ந்து மடிகிறார்கள். தன்னை வென்றவன் இந்த உலகையே வென்ற வீரனை விட உயர்வானவன். தன்னை தானே வென்ற பல வீர துறவிகளை நாம் பார்த்து கொண்டு வருகிறோம்.

  இவர் தஞ்சையில் உதித்த ஞானமனி. இவர் ஒரு பெரிய ராஜ குடும்பத்தில் பிறந்தவர். இவர் குடும்பம் ராயல் குடும்பம் மட்டுமல்ல. ராயர் குடும்பமும் கூட. ரங்கராயர் என்பவருக்கு மகனாக சுமார் 130 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையில் அவதாரம் செய்தார். நன்றாக படித்தார். மிக புத்திசாலி மாணவர் என்று பெயர் வாங்கினார். பள்ளிகளில் நடந்த விளையாட்டு போட்டிகள், வீர போட்டிகள் என அனைத்திலும் இவர் ஒப்பார், மிக்கார் இல்லாதவராக திகழ்ந்தார். படித்த பின் ரயில்வே துறையில் உயர் அதிகாரி ஆனார். 

  இவர் 3,4 வயது குழந்தையாக இருக்கும் பொழுது எல்லாம் கொட்டாவி விட்டு சுடக்கு போட்டால். இவர் வீட்டில் வேலை பார்க்கும் வேலையாள் யாராவது எஜமான் கூப்டீங்களா என்று ஓடி வந்து இவர் முன் கை கட்டி பவ்யத்துடனும், பயத்துடனும் நிற்பானாம். சதானந்தர் நான் ஒன்னும் உன்னை கூப்பிடவில்லை. இது அதிகார சுடக்கு அல்ல, கொட்டாவி சுடக்கு என்பாராம். 

  அன்று பெரும்பாலான வீடுகளில் வேலையாட்களை பெயர் சொல்லி கூட அழைக்க மாட்டார்கள். சுடக்கு போட்டு தான் அழைப்பார்கள். எஜமான் 3 வயது. வேலையாள் 35 வயது என்றாலும் 35 வயது உள்ள வேலையாள் மரியாதையாக கை கட்டி கூனி, குறுகி பயந்து நடுங்கி கொண்டு தான் தனது எஜமானரிடம் பேசுவான். அன்று எஜமானர்கள் வார்த்தைகளில் வேலையாட்களை அதிகாரம் செய்தல் ரொம்ப கம்மி. பார்வையாலேயே அதிகாரம் செய்வார்கள். அந்த பார்வையை பார்த்தே வேலையாட்கள் எஜமானருக்கு பயந்து நடுங்கி கொண்டு சேவகம் செய்வார்கள். 

  அது போன்ற ஒரு கால கட்டத்தில் அதுவும் ராஜ குடும்பத்தில் சதானந்தர் அவர்கள் பிறந்து. பின்னர் கவெர்மென்ட் உத்யோகம். ரயில்வே அதிகாரினா சும்மாவா. அந்த ராஜ வாழ்க்கை, அரசாங்க உத்யோகம் அனைத்தையும் உதறி தள்ளி விட்டு அவர் ஒருநாள் சன்யாசி ஆனார். இறைவன் இந்த உலகில் ஒவ்வோர் உயிரையும் ஒரு காரணத்திற்காக படைத்து உள்ளார். சதானந்த சுவாமிகள் இந்த புவியில் அவதாரம் செய்ததன் நோக்கம். ராஜ போகத்தை அனுபவிக்க அல்ல. அதனினும் உயர்ந்த ராஜ யோகத்தை அனுபவிக்க என்பதை இறைவன் இவருக்கு உணர்த்தினார். 

  நாம் சந்நியாசியாக ஆக வேண்டும் என்றால் நமக்கு சந்யாச தீட்ஷை கொடுக்க ஒரு தகுதியான குரு தேவை. அத்தகைய தகுதியான குருவிற்கு நாம் எங்கே? போவது. அவரை எப்படி? கண்டு பிடிப்பது. 

  அனைத்து வினாக்களுக்கும் விடை ஆழ்மனதில் உண்டு. உண்மையில் Google Search சில் கிடைக்காத பல விடைகள் ஆழ்மன தியானம் மூலமாக கிடைக்கும். சுவாமிகள் சிறு வயதில் இருந்தே ஆழ்மன தியானத்தில் மிக வல்லவர். அவர் தனது கண்களை மூடி கொண்டு ஆழ்மன தியானம் செய்தார். அந்த ஆழ்மன தியானத்தின் மூலம் கிடைத்த பதிலின் வாயிலாக அவர் சேந்தமங்கலம் சென்று. அங்கே இருக்கும் அவதூத் சுயம் பிரகாச மௌன சுவாமிகளின் பாதார விந்தங்களில் சரண் அடைந்தார். என்னை தங்களது சீடனாக ஏற்று கொள்ள வேண்டும் என்றார். மௌன சுவாமிகள் நீ இங்கு வருவாய் என்பது எனக்கு முன்பாகவே தெரியும். உன்னை யாம் எனது சீடனாக ஏற்று கொண்டோம் என்றார். 

  சதானந்த சுவாமிகளின் குருவான அவதூத் ஸ்வயம் பிரகாச மௌன சுவாமிகள் நாமக்கல் நகரிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது சேந்தமங்கலம். இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க தத்தாத்ரேயர் ஆலயம் அமைந்துள்ளது. முற்காலத்தில் சன்னியாசி கரடு என்றும் சன்னியாசி குன்று என்றும் அழைக்கப்பட்ட இந்த ஸ்தலம், தற்போது தத்தகிரி முருகன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

  ஞானம் பெற்ற பல முனிவர்கள், தவசிகள், யோகிகள், அருளாளர்கள், ஆன்மீகவாதிகள், சித்தர்கள் எனப் பலர் இங்கு தவத்தில் இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இத்திருக்கோயிலில் 29.12.1948 அன்று சதானந்தரின் குரு அவதூத் சுயம் பிரகாச மௌன சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்தார். 

  ஏற்கனவே அம்பத்தூர் மௌன சுவாமிகள் பற்றிய பதிவில் சொல்லியிருக்கிறேன். மிகப்பெரிய புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே பிரும்மா, விஷ்ணு, சிவன் என மூவரின் சொரூபமாய் விளங்கும் தத்தாத்ரேயரை வழிபடும் பாக்யம் கிடைக்கும். அதனால் தான் வடக்கிலும் சரி, தெற்கிலும் சரி தாத்தாத்ரேயர் கோவில்கள் கம்மியாகவே இருக்கு. சென்னை சேலையூரில் அமைந்துள்ள ஸ்கந்தாஸ்ரமத்தில் 18 அடி உயர பிரும்மாண்ட தத்தாத்ரேயரை நாம் கண்டு வழிபடலாம். 

  சதானந்த ஸ்வாமிகள்  பற்றி அறிய வேண்டும் என்றால் நாம் நாராயண ஸ்வாமி  பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.ஏனெனில் சில குருமார்களின் புனிதம் அறிய அவர்களின் சீடர்களின் மகத்துவம் போதும்.சீடர் தயாராக இருந்தால்,குரு தானாக வந்து வழிகாட்டுவார்.அது போன்ற ஒரு நிகழ்வுகளில் தான் சதானந்த சுவாமிகளின் அருள் நிலை வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

  நாராயண ஸ்வாமி என்பவர் தான் சுவாமிகளை 1909 ஆம் ஆண்டு ஆலப்பாக்கத்திற்கு அழைத்து வந்துள்ளார். சாது திரு நாராயணஸ்வாமி சில ஆண்டுகளுக்குப் பின்னால் தானும் வேலையை ராஜினமா செய்து விட்டு தனது குருவான திரு சதானந்த ஸ்வாமி அவர்களை அழைத்துக் கொண்டு ஆலப்பாக்கத்திற்கு வந்து விட்டாராம்.திரு நாராயணஸ்வாமிக்கு பிறந்த மூன்று குழந்தைகளில் ஒருவரான  திரு துளசிங்கம் மூலமாகவே நமக்கு ஆலப்பாக்கம் திரு சதானந்த ஸ்வாமிகளின் வாழ்க்கைப் பற்றிய செய்தி கிடைத்து உள்ளது.  தற்போது திரு துளசிங்கம் அவர்களும் சமாதி அடைந்து விட்டார்.

  தொடரும்...

  கட்டுரை உதவி: ராகேஸ் TUT

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai