அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் அற்புதங்கள் - பகுதி 2

அன்புருவம் அருள் உருவம் இன்புருவம் பெற்று இந்த மண் உலகத்தில் உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தைச் சிறிது எனினும் கண் உறப்பார்த்தும் செவியுறக் கேட்டும் சிறிதும் பொருக்கமாட்டாமல் உயிர்கள் படும்
அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரின் அற்புதங்கள் - பகுதி 2


திருச்சிற்றம்பலம்

திருஅருட்பிரகாச வள்ளலார் 
அருட்பெருஞ்ஜோதி     அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லாம் செயல் கூடும்

அன்புருவம் அருள் உருவம் இன்புருவம் பெற்று இந்த மண் உலகத்தில் உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தைச் சிறிது எனினும் கண் உறப்பார்த்தும் செவியுறக் கேட்டும் சிறிதும் பொருக்கமாட்டாமல் உயிர்கள் படும் துன்பங்களை நீக்கவும் அகத்தே கருத்து புறத்தே வெளுத்து இருக்கும் இந்த உலக மக்கள் அனைவரையும் இந்த உலகத்தே திருத்துவதற்காக இறைவனால் வருவிக்கவுற்றவர் வள்ளலார்.

வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபில் வந்தவர் வள்ளலார்.  திருமூலர் திருவள்ளுவர் திருநாவுக்கரசர் திருஞான சம்பந்தர் சுந்தரர் மாணிக்க வாசகர் நாயன்மார்கள் ஆழ்வார்கள் சித்தர்கள் பட்டினத்தார் தாயுமானவர் என வாழையடி வாழை என வந்த திருக்கூட்ட மரபில் வந்தவர் வள்ளலார்.  இவரது இயற்பெயர் இராமலிங்கம்.

வள்ளலார் பிறப்பு

கடலூர் மாவட்டம்  சிதம்பரம் வட்டம் மருதூர் என்ற ஊரில் கிராம கணக்கராக பணியாற்றிய சீர்கருணீகர் மரபில் வந்த இராமையாப்பிள்ளை சின்னம்மையார் தம்பதிகளுக்கு ஐந்தாவது மகனாக இராமலிங்கம் பிறந்தார்.

சுபானு வருடம் புரட்டாசி மாதம் 21ஆம் நாள் ஆங்கிலம் தேதி 05101823 ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார்.

வள்ளலார் ஜாதக குறிப்பு

வள்ளலார் உடன் பிறந்தோர்

சபாபதி                   -     அண்ணன்
சுந்தரம்மாள்        -    அக்கா
பரசுராமன்            -    அண்ணன்
உண்னாமலை     -    அக்கா


இளமைப் பருவம்

வள்ளலார் ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது தனது பெற்றோரால் ஆகாயத் தலமான சிதம்பரம் அழைத்துச் செல்லப்பட்டார். சிதம்பரத்தில் அப்பையா தீட்சதர் மூலம் சிதம்பரம் ரகசியம் காட்டப்பட்டார். ஐந்து மாதக் குழவியான இராமலிங்கம் சிதம்பரம் தரிசனம் கண்டு கலகலவென சிர்த்தார். ஐந்து மாதக் குழந்தைக்கு சிதம்பர ரகசியம் ரகசியமாக தெரியவில்லை. வெட்ட வெளியாகத் தெரிந்தது. அப்பையா தீட்சிதர் குழந்தையின் அருள் செய்கையைக் கண்டு ஆச்சரியப்பட்டார். இந்தக் குழந்தை ஞானக்குழந்தை என அன்றே சான்று கொடுத்தார்.

கருவிலே ஏற்பட்ட திருவால் 5 மாதக் குழந்தைக்கு சிதம்பர ரகசியம் வெட்ட வெளிச்சமாக தெரியவந்தது.

வள்ளலார் தோற்றம்:

வள்ளலார் வெள்ளாடைத்துறவி முக்காடு சாமி என்பார்கள். வள்ளலாரே சொல்கிறார் கையுற வீசி நடப்பதை நாணி கைகளை கட்டியே நடந்தேன். மெய்யுறக் காட்ட வெறுவி வெண்துகிலால் மெய் எல்லாம் மறைத்தேன் என்பார்.

தோற்றம்:  வள்ளலார் தோற்றம் பற்றி வள்ளலார்

உடன் இருந்த அனுக்கத் தொண்டர் தொழுவார் வேலாயுத முதலியார் கூறுகிறார்:

    “வள்ளலார் தோற்றப் பொலிவு மிக்கவர்
    மிக மெலிந்த செந்நிறம் உடையவர்
    நடுத்தர உயரம்
    நிமிர்ந்த தோற்றம்
    அழகிய திருமுகம்
    நீண்ட மெல்லிய கூரிய அழகிய மூக்கு
    ஒளி வீசும் பொறி பறக்கும் பரந்த கண்கள்
    கருணை ததும்பும் பார்வை
    இவையே வள்ளலார் திரு உருவம்”

உடை:

வள்ளலார் வெள்ளாடை துறவி துறவிகளின் அடையாளம் காவி உடை. ஆனால் வள்ளலார் இதில் இருந்து மாறுபட்டவர். வள்ளலார் உடை இரண்டு வெள்ளை ஆடைகள் லாங் கிளாத் (டுழபெ ஊடழவா) வகையை உடுத்தினார்.

உணவு:

இளமை முதல் வள்ளலார் உணவில் அதிகம் பற்று இல்லாதவர். சில வேளையே உணவு உண்டார்.  தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை சாப்பிடாமல் இருப்பார். தியானம் உண்டானால் புசிப்பு மாறும். வள்ளலார் தவ வலிமை பெற்றதனால் உணவின் மீது அவருக்கு விருப்பம் ஏற்படவில்லை.

உறக்கம்:

ஒருவன் ஒரு நாளைக்கு 1 மணி நேரம் தூங்கப் பழகினால் அவன் 1000 வருடம் வாழ்வான் என வள்ளலார் கூறியுள்ளார்.  துறவிகளுக்கு தூக்கத்தில் அதிக நாட்டம் கூடாது.  உணவிலும் சுவை அதிகம் விரும்பக்கூடாது.  இளமை காலத்தில் 3 மணிநேரம் தூக்கமும் படிப்படியாக 1 மணி நேரம் தூக்கம் பழக்கம் உடையவராக இருந்தார்.

முக்காடு:

வள்ளலார் முக்காடு போட்டு இருந்தார். மேல் ஆடையை உடல் முழுதும் போர்த்தியிருப்பார்.  தலையைச் சுற்றி முக்காடு அணிந்திருப்பார்.

பாத அணி:

பொதுவாக துறவிகள் கால்களுக்கு மரத்தால் செய்யப்பட்ட பாதக் குறடு அணிவார்கள்.  ஆனால் வள்ளலார் தன் பாதங்களுக்கு ஜோடு அணிந்தருந்தார்.

தலை முடி:

வள்ளலார் தன் தலை முடியை மழித்தலும் இன்றி நீட்டலும் இன்றி இயல்பாக வளர விட்டிருந்தார்.  வள்ளலாருக்கு மாப்பிள்ளை சாமி என்று பெயர்.  கருங்குழி இல்லத்தில் உள்ள பெருமான் படத்தில் மீசையுடன் கூடிய தோற்றத்தில் உள்ள படத்தைக் காணலாம்.

கைகளை எப்போதும் கட்டியே இருப்பார். கையுற வீசி நடப்பதை நாணி கைகளை கட்டியே நடந்தேன் என வள்ளலார் கூறியுள்ளது கவனிக்கத் தக்கது. வள்ளலார் அடக்கத்தின் காரணமாகவே கைகளை கட்டி இருந்தார்.

வள்ளலார் வாழ்க்கை:

வள்ளலார் வாழ்க்கைப் பகுதிகளை பார்ப்போம்:

1.    மருதூர் வாழ்க்கை
2.    பொன்னேரி வாழ்க்கை
3.    சென்னை வாழ்க்கை
4.    கருங்குழி வாழ்க்கை
5.    வடலூர் வாழ்க்கை
6.    சித்தி வளாகம் (மேட்டுக்குப்பம்) வாழ்க்கை

என வள்ளலார் வாழ்க்கை ஊர்கள் பற்றி மேலே குறிப்பிட்டுள்ளோம்.

1.    மருதூர் வழக்கை: 
பிறந்தது முதல் 1 வயது வரையிலான ஓராண்டு வாழ்க்கை இவற்றின் காலம் 1823 முதல் 1824 வரை.
2.    பொன்னேரி வாழ்க்கை: 1824 – 1825 ஓராண்டு காலம்.
3.    சென்னையில் 33 வருடங்கள் வாழ்ந்துள்ளார். சென்னையில் இன்றைய வள்ளலார் நகர் (தங்கசாலை மின்ட் பகுதி) ஏழு கிணறு வீராசாமிப் பிள்;ளைத் தெருவில் 38-ஆம் எண் இல்லத்தில் தான் வள்ளலார் வாழ்ந்து வந்தார்.

சென்னை வாழ்க்கையை இரு பிரிவுகளாக பிரிக்கலாம்:

1.    கந்த கோட்டப் பகுதி
2.    திருவொற்றியூர் பகுதி

1. கந்த கோட்டப் பகுதி:

வள்ளலாரால் தெய்வமணி மாலை 31 பாடல்கள் பெற்ற திருத்தலம் சென்னை கந்தகோட்டம்.  வள்ளலார் இங்குள்ள திண்ணை பள்ளியில்தான் மகாவித்துவான் காஞ்சிபுரம் சபாபதி முதலியாரிடம் பாடம் கற்க அனுப்பப்பட்ட இடம்.

2. திருவொற்றியூர் பகுதி:

வள்ளலார் முறையான ஞான வாழ்வை தமது 12வது வயதில் துவக்கினார். திருவொற்றியூர் இறைவன் தியாகராஜரையும் வடிவுடைநாயகியையும் தினசரி வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். வள்ளலார் திருவொற்றியூர் வழிபாட்டு காலங்களில் பாடிய திருவருட்பா பாடல்கள் எல்லாம் இரண்டாம் திருமுறையில் உள்ளன. 103 பதிகங்கள் 1388 பாடல்கள் இரண்டாம் திருமுறையில் உள்ளன.  அத்தனைப் பாடலும் திருவொற்றியூர் இறைவன் இறைவிப் பற்றிய பாடல்கள் ஆகும்.

திருவொற்றியூரில் நடந்த நிகழ்வுகள்:

தினசரி தியாகராஜர் வழிபாடு
வடிவுடையம்மன் வழிபாடு
பட்டினத்தார் சமாதி வழிபாடு
நிர்வாண சாமியார் (தோபாசாமிகள்) வள்ளலாரை
உத்தம மனிதன் போகிறான் என சான்றளித்த இடம்
இறைவனால் அமுது அளிக்கப்படுதல்
மணலை சிவலிங்கம் ஆக ஆக்கியது.

தொடரும்....

கட்டுரையாக்கம்: அருட்செல்வர் ஜோதிட மாமணி - சுவாமி சுப்பிரமணியம், M.Sc.,Ph.D.

தொடர்புக்கு - 9444281429 / 9382166019

www.vallalarswami.org

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com