சுடச்சுட

  

  'ஆனித்திருமஞ்சனம்'- அறிவோம் நடராஜ தத்துவம்!

  By எஸ். எஸ். சீதாராமன்  |   Published on : 07th July 2019 04:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Shri-Lord-Chidambaram-9

   

  உலகை தற்போது திகைக்க வைப்பது அணுத்துகள்கள். அணுவின் பலவிதமான சேர்க்கைகளே மூலக்கூறுகள் ஆகும். பஞ்சபூதங்களான நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் அனைத்திலும் இந்த அணுக்கூறுகள் உள்ளன. இதனை புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் எனப் பிரிக்கின்றார்கள். அணுவின் மையப்பகுதியான அணுக்கருவில் சம அளவு எதிரெதிர் மின்சக்தியுள்ள புரோட்டானும், நியூட்ரானும் உள்ளது; எலக்ட்ரான் இதனை சுற்றிவரும். இதன் சக்திகள் ஒன்றையொன்று ஈர்த்து அணுவின் அமைப்பை நிலையானதாக்குகிறது. இந்த அமைப்பே இந்த பிரபஞ்சத்தை செயல்படுத்துகிறது. இதனை, சென்ற நூற்றாண்டில் நம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். 

  நம் மெஞ்ஞானிகள் சித்தர் பெருமகனார்களோ இந்த பிரபஞ்ச சக்தியை மிகத் துல்லியமாக கண்டுபிடித்து, அவன் தூணிலும் உள்ளான் ஒர் அணுத்துகளிலும் உள்ளான் என்று கூறியுள்ளனர். இதனை நடராஜ தத்துவம் தன் ஆட்டத்தின் மூலம் தத்வரூபமாக விளக்குகிறது. நடராஜரின் வலக்கையிலுள்ள உடுக்கை, படைக்கும் ஆற்றலைக் குறிக்கும் (கீழிருக்கும் தாமரையும் பிறப்பிற்கு வழிவகுக்குமென கூறுவர்). இன்னொரு வலக்கையின் உட்புறத்தை காட்டுவது -அருளும் ஆற்றலை குறிக்கும். இடக்கையிலுள்ள நெருப்பு -அழிக்கும் ஆற்றலை குறிக்கும். இன்னொரு இடக்கை துதிக்கைபோல் உட்புறத்தினை மறைத்தவாறு இருப்பது- மறைக்கும் ஆற்றலை குறிக்கும். தூக்கிய பாதமும் ஆணவத்தை மிதித்தாடும்; இன்னொரு பாதமும் தீய சக்திகளிலிருந்து காக்கும் ஆற்றலை குறிக்கும்.

  நம் சித்தர் பெருமகனார் திருமூலர் "உள்ளம் பெருங்கோயில், ஊனுடம்பு ஆலயம், வள்ளர் பெருமானுக்கு வாய் கோபுர வாசல், தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம், கள்ளப்புலன் ஐந்தும் காளா மணி விளக்கே' என சொன்னார். நம் மனித உடலில் 96 தத்துவங்கள் உள்ளது என்று நம் இந்திய சித்த மருத்துவம் கூறுகிறது. நம் சித்தர் பெருமக்களின் அசைக்க முடியாத, ஆதாரபூர்வமான கருத்தென்னவெனில் மனிதன் வேறு, இவ்வுலகம் வேறு என்பது இல்லை; இரண்டரக்கலந்த இரண்டும் ஒன்றே.

  ஐம்புலன்கள் மற்றும் ஞானேந்திரியம் என்பது, பார்த்தல், கேட்டல், நு(மு)கர்தல், ருசித்தல், தொடுதல் ஆகும். கண்மேந்திரியம் என்பது; கை, கால், வாய், காது மற்றும் பிற உடல் உறுப்புகள் ஆகும். கரணம் என்பது, நம் மனம், புத்தி, சித்தம், அகங்காரம், பகுத்தறியும் நம் அறிவு ஆகும். இந்த உடல் மற்றும் அண்ட சராசரங்கள் எல்லாம் ஐந்து வகையான இயக்கங்களைக் கொண்டு, பஞ்சபூதங்கள் தான் ஆள்கின்றன என்பதை உணர்ந்து; இவை எல்லாவற்றையும் சித்த புருஷர்கள் தன் கைப்பிடியில் கட்டுக்குள் வைத்திருந்தனர். அவர்கள் இந்த பஞ்சபூதங்களையும் தன்னாட்சி செய்தனர். வீரசைவர்கள் "திருச்சிற்றம்பலம்' என்று சொல்லித்தான் பின் பேசுவார்கள். அவ்வளவு புனிதமானது இச்சொல். அவர்கள் கோயில் என்றால் அந்த வார்த்தைக்கு "சிதம்பரம்' என்று மட்டுமே பொருள் கொள்வார்கள். 

  பஞ்சபூதத்தலங்களில் இது ஆகாயத்தலம் ஆகும். சிதம்பரம் நகரத்தின் நடுநாயகமாக இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு சபாநாயகர் திருக்கோயில் என்று பெயர். நடராஜர் சிவகாமியுடன் தெற்கு பார்த்து ஆடுகின்ற இடத்தினை சிற்சபை, கனகசபை, சிவநடராஜ சபை என்றும் கூறுகின்றனர். சிதம்பரம் கோயிலுக்கு 4 திசைகளிலும் 4 கோபுர வாயில்கள் உண்டு. மாணிக்க வாசகர், ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் இந்த நடராஜப்பெருமானை வழிபட்டனர். பதஞ்சலி, வியாக்ரபாதர் போன்ற முனிவர்களும், தேவர்களும் இந்த ஈசனின் ஆட்டத்தை காணமாட்டோமா என்று தவமாய் தவமிருந்து பெரும் பேற்றினைப் பெற்றனர். இதன் கோபுரங்களில் பரத நாட்டியத்தின் 108 முத்திரைகளும் சிலை வடிவில் உள்ளன. இங்கு மொத்தம் ஐந்து பிரகாரங்கள் இருந்தாலும், நான்காவது பிரகாரத்தின் வழியாக உள்ளே சென்றால் நடராஜ மூர்த்தியின் சிற்சபை உள்ளது. சிற்சபைக்கு வெளியே கனக சபை உள்ளது. இங்கு தான் அபிஷேக ஆராதனைகளெல்லாம் நடைபெறுகிறது. 

  நடராஜரின் சிற்சபையின் ஓடுகள் மொத்தமும் தங்கத்தினால் வேயப்பட்டது. சிதம்பரம் கோயில் மற்றும் சிற்சபையை மனித உடலாக கூறுகிறார்கள். அவை: சிற்சபையின் மேற்கூறை 21,600 தங்க ஓட்டினால் வேயப்பட்டது. இது சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு விடும் மூச்சுக் காற்றின் அளவு. இதன் ஓடுகள் 72,000 தங்க ஆணிகளால் பொருத்தப்பட்டுள்ளது. இது நம் உடம்பிலுள்ள, ரத்தத்தை கொண்டு செல்லும்; கண்ணிற்குத் தெரியாத நாடிகளின் எண்ணிக்கை. நம் இடப்புறம் இதயம் உள்ளது போல் அவன் ஆடும் சந்நிதியும் இடப்புறம் ஒதுங்கியுள்ளது. 

  நம் உடலை இயக்கும் ஒன்பது சக்தியைப் போன்று, இந்த சிற்சபையின் மேல் ஒன்பது கலசங்கள் உள்ளன. ஆயக்கலை அறுபத்தி நான்கினை குறிக்குமுகமாக, இந்த சபையின் விட்டத்தின் குறுக்கு 64 மரங்களால் ஆனது. பொன்னம்பலத்தை 28 ஆகம சாஸ்திரங்கள் 28 தூண்களாக நிற்கின்றது. பதினெட்டு புராணங்களை குறிக்குமுகமாக இந்த அர்த்த மண்டபத்தை சுற்றி 18 தூண்கள் உள்ளன. "நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை குறிக்கும் வகையில் ஐந்து படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிற்சபையின் கூரையைத்தாங்கும் நான்கு பெரிய தூண்கள், நான்கு வேதங்களாக நிற்கின்றன. இக்கோயிலுக்கு ஒன்பது வாயில்கள், நம் உடம்பிலுள்ள ஒன்பது ஓட்டைகளைக் குறிக்கின்றது. இதன் கொடிமரம்; சூக்க்ஷம நாடி என்று சொல்லப்படும் மூலாதாரம், சஹஸ்ராரம் ஆகியவற்றை தூண்டி பேரின்பத்தைத் தரக்கூடியது.

  இங்கிருந்து மூன்றாவது பிரகாரத்தில் நிருத்த சபை, தேவ சபை என இரு மண்டபங்கள் உள்ளது. இதைத் தாண்டி சென்றால் மகாலஷ்மிக்கு தனி சந்நிதி உள்ளது. அதனருகில் தான் இக்கோயிலின் சிவலிங்க சொரூபம் கொண்ட கருவறை உள்ளது. நான்காவது பிரகாரத்தில் திருமண மண்டபம் மற்றும் ஆயிரம்கால் மண்டபம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இங்கு தான் ராஜ சபை, சிவகாம சுந்தரி அம்மன், முக்குருணி விநாயகர் மற்றும் சுப்ரமணியர் சந்நிதியெல்லாம் உள்ளது. 

  இக்கோயிலின் சரித்திரப் பின்னணி பல ஆராய்ச்சியாளர்களால் பரிசீலிக்கப்பட்டாலும்; விடை காணாத புதிராகத்தான் ஆரம்ப காலம் தொட்டு இருக்கின்றது. நாம் முதலிலேயே கூறிய ஐந்து மதில் சுவர்களைக் கொண்ட பிரகாரங்கள் நம் உடம்பின் ஐந்து கோசங்களைக் குறிக்கின்றது. முதல் கோசம், அன்னமய கோசம் - இது நம் உடலைக் குறிக்கின்றது. இரண்டாவது, பிராணமய கோசம் - இது நம் உடலிலுள்ள உயிர் சக்தியைக் குறிக்கின்றது. மூன்றாவது, மனோமய கோசம் - இது நம் மனதின் ஓட்டத்தைக் குறிக்கின்றது. நான்காவது, விஞ்ஞானமய கோசம் - இது நம் புத்திசாலித்தனத்தை குறிப்பது. ஐந்தாவதும், கடைசியானதும் ஆனந்தமய கோசம் - நம் பரிபூரண சந்தோஷமான ஆனந்தத்தைக் குறிக்கின்றது. 

  இவை அனைத்தையும் தற்போது இணைத்துப் பார்த்த நாசா விஞ்ஞானிகள் பிரமிப்பின் எல்லையில் உள்ளனர். தினமும் நடக்கும் பூஜைகளை இதன் தலைமை தீஷிதர் இறைவனாகவே - "சிவோகம்பவ' என்ற தத்துவத்தை விளக்கும் முகமாக வழிபாடு செய்கிறார். சிவ, அகம் என்றால் நான்/ நாம், பவ என்றால் ஒருநிலைப்படுதல். எனவே "நீ உன் மனதை ஒரு நிலைபடுத்தி சரணாகத தத்துவத்தில் அவன் பாதம் பணிந்தால், உன் உள்ளே இருக்கும் கர்ம வினைகளை அவன் பிடிங்கி வெளியே தூக்கி எறிந்து பரிபூரண சந்தோஷத்தை அளிப்பான்' என்பதே ஆகும். 

  ஆண்டுதோறும் தில்லையம்பலத்தானுக்கு முக்கியமாக ஆறு திவ்ய அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அவையாவன: 1) சித்திரை திருவோணம், 2) ஆனித் திருமஞ்சனம், 3) ஆவணி சதுர்த்தசி, 4) புரட்டாசி சதுர்த்தசி, 5) மார்கழி ஆருத்ரா, 6) மாசி சதுர்த்தசி ஆகும். கடுமையான வெயிலின் தாக்கம் சென்று, குளிர்ச்சியான மழை பொழியும் காலம் ஆனி மாதம். அதனால் நம்மை ரட்சிக்கும் ஆடல்வல்லான் நடராஜனுக்கு அவனது தகிக்கும் உடல் சூட்டை தணித்தால் இப்பூவுலகம் குளிர்ந்து சுபிட்சம் அடையும் என்பதால் இந்த ஆனித்திருமஞ்சன உற்சவம் ஒவ்வொரு வருடமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது (இந்த வருடம் ஆனி மாதம் 23 - ஆம் தேதி (8-7-2019) திங்கட்கிழமை வருகிறது). அருகில் இருக்கும் ஆலயங்களிலுள்ள நடராஜரை இந்த நாளில் பணிந்து வழிபட்டு அவனருள் பெறுவோம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai