ஆசிரியர் தினம்: ஆசிரியர் ஆகும் ஜாதக அமைப்பு உங்களுக்கு இருக்கா?

இந்த ஆசிரியர் தின நன்நாளில் எல்லா நேரங்களிலும் எனக்கு கற்பித்து வரும் எண்ணிலடங்கா அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் எனது குரு வணக்கத்தை செலுத்தி இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறேன்! 
ஆசிரியர் தினம்: ஆசிரியர் ஆகும் ஜாதக அமைப்பு உங்களுக்கு இருக்கா?

இந்த ஆசிரியர் தின நன்நாளில் எல்லா நேரங்களிலும் எனக்கு கற்பித்து வரும் எண்ணிலடங்கா அனைத்து ஆசிரியர் பெருமக்களுக்கும் எனது குரு வணக்கத்தை செலுத்தி இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறேன்! 

தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான இன்று செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

இன்று கல்வி கண்களை திறந்த ஆசிரியர்களை சிறப்பிக்கும் வண்ணம் ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுகிறது. வருடம் முழுவதும் எத்தனையோ விஷேச நாட்கள் வருகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக, அதன் முக்கியத்துவத்தைப் பொறுத்து அனுசரிக்கப்படுகின்றன. ஆனால், வருங்கால தலைமுறையினரான மாணவர்கள், அந்த வருங்காலத்தை, தங்களுக்குள் நிர்மாணிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் குருவான ஆசிரியர்களுக்காக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு வைபவமாக கொண்டாடுவது ஆசிரியர் தினம். அந்த வகையில், மற்ற சிறப்பு தினங்களோடு ஒப்பிடுகையில், இந்த ஆசிரியர் தினமானது மாறுபட்டு நிற்பதோடு முக்கியத்துவமும் பெறுகிறது.

ஆசிரியர் தினம்: 

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்தந்த நாட்டை சேர்ந்த சிறந்த கல்வியாளரை கெளரவிக்க அல்லது அந்தந்த நாட்டில், கல்வி தொடர்பாக ஏற்பட்ட ஒரு சிறப்பான மாற்றத்தை நினைவுகூற என்ற காரணங்களுக்காக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதால், ஒவ்வொரு நாட்டிலும் தேதி மாறுபடுகிறது.

இந்தியாவில் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நமது நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி திரு. ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளையே ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். அவர் ஒரு ஆசிரியராக இருந்தவர். சிறந்த தத்துவமேதை என்று பெயர் பெற்றவர். நல்ல கல்வியாளர். ஒருமுறை அவரது மாணவர்கள் சிலர், அவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டபோது, அவர் பின்வருமாறு கூறினார், "எனது பிறந்தநாளை தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதைவிட, அதையே ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால், நான் பெருமையாக உணர்வேன்" என்றார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க, கடந்த 1962ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

வேதம் போற்றும் குரு:

குருவின் நாளில் அமைந்துள்ள ஆசிரியர் தினத்தில் நமக்கு ஏட்டுக்கல்வியை கற்பித்தவர் மட்டுமல்லாது வாழ்க்கை கல்வியை கற்பித்த அனைத்து குருவின் சிறப்பையும் உணர்ந்து போற்றவேண்டும் என்பதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்!

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வர:
குரு சாட்சாத் பரப்ரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நம:
குருவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவ ரோகிணாம்
நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே நம:

எவர் குருவோ அவரே பிரம்மா! அவரே விஷ்ணு! அவரே சிவன்!  குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை. குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை. குருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை குருவிற்கு சமமான உயர்வுமில்லை.

சிருஸ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள் எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டேஇருக்கும் என சாஸ்திரங்கள் குருவை போற்றுகிறது. மாதா பிதா குரு தெய்வம் என வேதம் போற்றுகிறது. தெய்வத்தின் காரகர் ஆசார்யன் எனப்படும் குரு. தெய்வத்தை காண்பிப்பவர் குரு.

ஜோதிடத்தில் குருவின் சிறப்பு: 

குருவை காண்பிப்பவர் யார்? பெற்றெடுத்த தந்தை. அறிவுலக குருவை அறிமுகம் செய்பவர் தந்தை! தந்தையை காண்பிப்பவர் தாய். அவரே ஆதி குரு. நமக்கு முதல் குரு நமது தந்தையாவார். இந்த உலகத்தை நமக்கு உணர்த்துபவரும் நமது தந்தைதான் என்பது அனைவரும் அறிந்ததே!  அதன் பிறகு குரு நமக்கு அனைத்து நன்மை தீமைகளையும் தந்தை ஸ்தானத்தில் நின்று போதிப்பதால் குரு நமது மற்றோரு தந்தையாகிறார். இதை விளக்கும் புராண கதை இராமாயணத்தில் உள்ளது.

விஸ்வாமித்திரர். சீதையின் தந்தை ஜனகரிடம் ராமரை அறிமுகப்படுத்தும்போது தசரதர் செய்த புத்திர காமேஷ்டி யாகத்தின் பலனாக ராமன் பிறந்ததைக் கூறினார். எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, இந்த ராமன் தசரதருக்குப் பெயரளவில் மட்டுமே புத்திரன். ராம சகோதரர்கள் நால்வரையும் வளர்த்த பெருமை, அவர்களது குலகுரு (ஆசிரியர்) வசிஷ்டரையே சாரும், என்று புகழ்ந்தார். 

ப்ரச்நோபநிஷத் என்னும் உபநிஷதத்தில் சீடர்கள், த்வம் ஹி ந: பிதா என்று சொல்லி குருவை வணங்கினர். இதற்கு நீங்கள் அன்றோ எங்களின் தந்தை என்று பொருள். இந்த ஸ்லோகத்தின் அடிப்படையிலும், விஸ்வாமித்திரரின் சொல்லின் அடிப்படையிலும் ஆசிரியரும் தந்தை ஸ்தானத்துக்கு சமமானவர் என்பது தெளிவாகிறது.

ஜாதகத்தில் நாலாம் பாவம் மாத்ருஸ்தானம் எனப்படுகிறது. ஒன்பதாம் பாவம் பித்ருஸ்தானம் எனப்படுகிறது.  புத்திரம் உதிக்குமிடம் தாயின் கருவறையில். புத்திரகாரகன் உச்சமாகுமிடம் காலபுருஷனுக்கு நான்காம் பாவமான தாயின் மடியான கடகத்தில்.

ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் பித்ரு ஸ்தானம். தனுசு ராசி கால புருஷனுக்கு ஒன்பதாமிடம் குருவின் ஆட்சி மற்றும் மூல திரிகோண வீடு. குருவின் மற்றொரு ஆட்சி வீடு மீனம். தாய் தந்தையரை வணங்கினால் தெய்வத்தின் அருள் எனும் மோக்ஷத்தை வழங்குமிடம். காலபுருஷனுக்கு அயன சயன போக மோக்ஷ ஸ்தானம். குருவிற்கு மட்டுமே தாயின் வீடாகிய கடகம் ஒரு திரிகோண வீடாகவும் தந்தையை குறிக்கும் சூரியனின் வீடாகிய சிம்மம் ஒரு திரிகோணமாகவும் அமைந்திருக்கிறது.

ஜோதிடத்தில் ஆசிரியராகும் கிரஹ அமைப்பு யாருக்கு?

ஆசிரியரை குறிக்கும் கிரஹம் குருபகவான் ஆகும். ஒருவர் ஜாதகத்தில் குரு ஆட்சியோ உச்சமோ வர்க பலமோ பெற்றுவிட்டால் அவர்கள் வாழ்நாளில் ஒரு நாளாவது ஆசிரியராக விளங்கும் அமைப்பு ஏற்பட்டுவிடும். 

1. ஒருவர் ஜாதகத்தில் கர்ம காரகன் சனி பத்தாம் பாவாதிபதி மற்றும் குரு இருவரையும்  தொடர்பு கொண்ட அமைப்பை பெற்றவர்கள் மற்றவர்களுக்கு கற்பிக்கும் அமைப்பை பெற்றிருப்பார்கள். இவர்களோடு வித்யாகாரகன் புதன் தொடர்பு கொண்டிருந்தால் பள்ளி,கல்லூரிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களாக இருப்பார்கள். சூரியனும் தொடர்பில் இருந்தால் அரசு பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர்களாக பணிபுரியும் அமைப்பை பெற்றிருப்பார்கள்.

2. பத்தாம் அதிபதி புதனாகவோ, சூரியனாகவோ இருந்து குருவின் நவாம்சத்தில் நின்றாலும் ஆசிரியர்களாகும் அமைப்பை பெறுவார்கள்.

3. உபய ராசிகளை லக்னமாக  கொண்டவர்களுக்கு பத்தாம் வீடு குருவின் வீடாகவோ அல்லது புதனின் வீடாகவோ வருவதால் அவர்களுக்கு ஆசிரியராகும் அமைப்பு அதிகமாக காணப்படும். அதிலும் லக்னாதிபதி, மற்றும் பத்தாமதிபதியாக வரும் குருவும், புதனும் ஆட்சி உச்சமாகிவிட்ட்டால் ஆசிரியர் பணியை உறுதி செய்துவிடலாம்.

4. ஒருவரது ஜாதகத்தில் பத்தாமதிபதி, பத்தாம் வீடு, கர்ம காரகன் சனைச்சரன், காரகாம்சத்தில் நிற்கும் கிரஹம் போன்ற கிரஹங்களின் காரகங்களில் ஆசிரியராக விளங்குவார், உதாரணமாக பத்தாமதிபதி புதனாக இருக்கும் பட்சத்தில் கணிதம், ஜோதிடம், வான சாஸ்திரம், தத்துவம் மற்றும் கலை சார்ந்த துறைகளில் ஆசிரயராக விளங்குவார்கள்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் ஜாதகம்:

பிரஹஸ்பதி எனும் தேவ குருவின் வீடான தனுர் ராசியையே லக்னமாக கொண்டு வித்யாகாரகன் புதனின் கன்னிராசியை கர்மஸ்தானமாக கொண்டு பிறந்த திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் ஜாதகத்தில் புதன் ஆட்சி, உச்ச மூல திருகோன வீட்டில் நின்றது அவருக்கு  தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி. ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம். ஏ. பட்டமும் பெற்றுதந்தது. தத்துவத்திற்கான காரகர் புதன் என்பதும் தத்துவத்திற்கான பாவம் கால புருஷனின் ஒன்பதாம் பாவமான தனுசு என்பது குறிப்பிடத்தக்கது.

சாஸ்திர கல்வி மற்றும் உயர்கல்வியின் காரகரான சுக்கிரன் பத்தாம் வீட்டில் நீசபங்கம் அடைந்து நிற்பது ஒன்பதாம் அதிபதி தனது வீட்டில் ஆட்சி பலத்துடன் நிற்பதும்,  குரு பகவான் விருச்சிக ராசியில் சனிஸ்வர பகவானின் அனுஷ நக்ஷத்திரத்தில் நின்று தனது திரிகோண பார்வையால்  சனியை தொடர்பு கொள்வதும் சனீஸ்வர பகவான் தனது மூன்றாம் பார்வையால் வித்யாகாரகன் புதனையும், சுக்கிரனையும் தொடர்பு கொள்வதும் திரு ராதாகிருஷ்ணன் அவர்களை  சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர வைத்ததோடு அல்லாமல் இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரர் ராமானுஜர், மத்வர்வர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார்.

கேந்திர திரிகோணாதிபதிகளான குரு பகவானும் செவ்வாயும் இணைந்து காலபுருஷனுக்கு எட்டாம் வீடாகிய விருச்சிகத்தில் குரு மங்கள யோகமும் ராஜ யோக அமைப்பும் பெற்று நின்றதும் அது அவருக்கு பன்னிரெண்டாம் வீடானதும் இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுக்க காரணமாக அமைந்தது. மேலும் இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ எனும் பெரும் புகழை ஈட்டித்தந்தது. மேலும் அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டதற்க்கும் காரணமானது.

ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் ஆசிரியர். மேலும், மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞராக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஒரு மாணவன் தொடர்ந்து படித்து எந்த ஒரு உயர்ந்த நிலைக்கும் சென்றுவிடுவர், ஆனால் ஒரு ஆசிரியர் கடைசி வரை ஆசிரியராகவே இருப்பர் என்பது அவர்களின் தியாகத்திற்க்கு ஒரு சான்றாகும்.

Astro Sundara Rajan
Mobile 9498098786
WhatsApp 9841595510
Email: astrosundararajan@gmail.com
Web: www.astrosundararajan.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com