மோட்ச ஏகாதசி என்றால் என்ன?

விரதங்களில் ஸ்ரேஷ்டமாகக் கூறப்படுவது ஏகாதசி விரதம். தாயிற் சிறந்த கோயிலுமில்லை.
மோட்ச ஏகாதசி என்றால் என்ன?

விரதங்களில் ஸ்ரேஷ்டமாகக் கூறப்படுவது ஏகாதசி விரதம். தாயிற் சிறந்த கோயிலுமில்லை. காயத்திரிக்கு மேலான மந்திரம் இல்லை. காசிக்கு உயர்ந்ததான தீர்த்தம் இல்லை. ஏகாதசிக்கு சமமான விரதம் இல்லை விரதோபவாசங்களில் கூறப்பட்டிருக்கிறது.

ந காயத்ர்யா: பரம் மந்த்ரம்   ந மாத; பாரா தைவதம் |
காஸ்யா; பரமம் தீர்த்தம்   நைகாதச்யா; சமம் விரதம் ||

பொதுவாக  ஒரு வருஷத்திற்கு முந்நூற்று அறுபத்து ஐந்து நாட்கள் கணக்கில், இருபத்து நான்கு பட்சத்திற்கு மேல் சில நாட்கள் மீதி இருக்கும். அதனால் சில வருடங்களில் இருபத்தைந்து ஏகாதசிகள்  வந்து விடும். இந்த இருபத்தைந்து ஏகாதசிகளுக்கும் , உத்தர காண்டத்தில் தனித் தனி  பெயர்கள் கொடுக்கப் பட்டுள்ளன. 

  1. மார்கழி மாதத்தில், வரும் கிருஷ்ண பட்ச ஏகாதசிக்கு  உத்பத்தி ஏகாதசி என்று பெயர்.
  2. மார்கழி மாத  சுக்ல பட்ச ஏகாதசிதான் வைகுண்ட  ஏகாதசி. இதற்கு மோட்ச ஏகாதசி என்றும் பெயருண்டு. இந்த ஏகாதசியில்தான் பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கப்பட்டது. பகவான் கீதை என்னும் ஞானோபதேசத்தைக் கொடுத்ததும் இந்த நாளில்தான் . அதனால் வைகுண்ட ஏகாதசி , கீதா ஜெயந்தி என்றும் போற்றப்படுகிறது.
  3. தை  கிருஷ்ண பட்சத்தில்  வரும் ஏகாதசி ,ஸபலா ஏகாதசி.
  4. தை  சுக்ல பட்ச ஏகாதசி , புத்ரதா ஏகாதசி.
  5. மாசி கிருஷ்ண  பட்ச ஏகாதசி , ஷட்திலா ஏகாதசி .
  6. மாசி சுக்ல பட்ச ஏகாதசி , ஜயா ஏகாதசி.
  7. பங்குனி கிருஷ்ண பட்ச ஏகாதசி , விஜயா ஏகாதசி.
  8. பங்குனி சுக்ல பட்ச ஏகாதசி , ஆமலகீ ஏகாதசி.
  9. சித்திரை கிருஷ்ண பட்ச ஏகாதசி, பாப மோசனிகா ஏகாதசி.
  10. சித்திரை சுக்ல பட்ச ஏகாதசி , காமதா ஏகாதசி.
  11. வைகாசி கிருஷ்ண பட்ச ஏகாதசி, வரூதிநீ ஏகாதசி.
  12. வைகாசி சுக்ல பட்ச ஏகாதசி, மோஹினி ஏகாதசி.
  13. ஆனி கிருஷ்ண பட்ச ஏகாதசி, அபரா ஏகாதசி.
  14. ஆனி  சுக்ல பட்ச ஏகாதசி, நிர்ஜலா ஏகாதசி. பீமன் வருடத்தில் இந்த ஒரு ஏகாதசியில் மட்டும் சுத்த உபவாசம்       இருப்பாராம்.
  15. ஆடி கிருஷ்ண பட்ச ஏகாதசி, யோகினி ஏகாதசி.
  16. ஆடி சுக்ல பட்ச ஏகாதசி, சயனி ஏகாதசி. இந்த ஏகாதசியில்தான் சாதுர்மாஸ்ய ஆரம்பத்தில், ஸ்ரீ மஹாவிஷ்ணு     சயனிக்கத் தொடங்குவாராம்.
  17. ஆவணி கிருஷ்ண பட்ச ஏகாதசி, ஸாமிகா ஏகாதசி.
  18. ஆவணி சுக்ல பட்ச ஏகாதசி, புத்ரதா ஏகாதசி. [ தை சுக்ல பட்ச ஏகாதசிக்கும் அதே பெயர்தான் ]
  19. புரட்டாசி கிருஷ்ண பட்ச ஏகாதசி, அஜா ஏகாதசி.
  20. புரட்டாசி சுக்ல பட்ச ஏகாதசிக்கு, பத்மநாபா ஏகாதசி.
  21. ஐப்பசி கிருஷ்ண பட்ச ஏகாதசி , இந்திரா ஏகாதசி.
  22. ஐப்பசி சுக்ல பட்ச ஏகாதசி , பாபாங்குசா ஏகாதசி. 
  23. கார்த்திகை கிருஷ்ண பட்ச ஏகாதசி, ரமா ஏகாதசி.
  24. கார்த்திகை சுக்ல பட்ச ஏகாதசி, ப்ரபோதினி ஏகாதசி. இந்த ஏகாதசியில் தான் பகவான் விழித்துக் கொள்கிறார்.

இத்துடன் சாதுர்மாஸ்ய விரதம் பூர்த்தி ஆகிறது. 

25. அதிகப்படியாக வரும் ஏகாதசிக்கு, கமலா ஏகாதசி என்று பெயர்.

அஷ்ட வர்ஷாதிக; மர்த்ய; அபூர்ணாசீதீ வத்ஸர;|
ஏகாதச்யாம் உபவசேத் பக்ஷயோ: உபயோ: அபி ||

அதாவது,  மனிதப் பிறவி என்று எடுத்துவிட்டால், எட்டு வயதிற்கு மேலும், எண்பது வயதிற்கு உட்பட்ட எல்லோரும் இரண்டு பட்சங்களிலும் ஏகாதசி உபவாசம் இருக்க வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது. இப்படிச் சொன்னதால் எட்டு வயதிற்கு கீழ் உள்ளவர்களும், எண்பது வயதிற்கு மேற்பட்டவர்களும் ஏகாதசிக்கு உபவாசம் இருக்கக் கூடாது என்பது அர்த்தமில்லை.சிரமம் இல்லாத பட்சத்தில் யார் வேண்டுமானாலும் உபவாசம் இருக்கலாம்.  வருடத்தில், எல்லா ஏகாதசிகளுக்கும் பூரண உபவாசம் இருக்க முடியாவிட்டாலும், வைகுண்ட ஏகாதசியிலாவது பூரண உபவாசம் இருந்து , ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அருட்கடாட்சத்தினைப் பெறுவோம். 

அன்றைய தினம் விஷ்ணு சஹஸ்ரநாமம் , ஸ்ரீஹரி ஸ்தோத்திரம் , போன்ற மஹாவிஷ்ணு சம்பந்தப்பட்ட ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம் .முடிந்தவரை விஷ்ணு காயத்ரியை சொல்லலாம். குறைந்த பட்சம் 108 முறைகளாவது விஷ்ணு காயத்ரியைக் கூற வேண்டும். 

விஷ்ணு காயத்ரி

ஓம் நாராயணாய வித்மஹே 
வாஸுதேவாய தீமஹி 
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com