முகப்பு ஆன்மிகம் கட்டுரைகள்
சப்தாம்சம்: கடந்த பிறவியில் செய்த பாவ, புண்ணியமும் அதனால் விளையும் தாக்கமும்
By தையூர் .சி.வே.லோகநாதன் | Published On : 24th January 2022 04:12 PM | Last Updated : 24th January 2022 05:17 PM | அ+அ அ- |

சப்தாம்சம் என்பது ஒருவரின் ஜாதகத்தில் உள்ள 5ஆம் வீட்டு விவகாரங்களைப் பற்றி முன்னிலைப்படுத்தி அதன் சிறப்பம்சங்களைத் துல்லியமாகக் கூறுவதாகும். இது ஏழாம் பாவத்தின் / வீட்டின் சிறப்பம்சமாகிய திருமணத்திற்குப் பின்னர் நடக்கும் இனப்பெருக்கம் பற்றிய விவரத்தை சொல்வதாகும்.
இந்த சப்தாம்ச விளக்கப்படம் கூறுவது என்னவென்றால், கடந்த பிறவியில் செய்த புண்ணியம் அதனால் விளையும் தாக்கம் பற்றிய விவரங்கள் பற்றிய செய்திகளை அடங்கிய ஓர் பெட்டகம் என்றால் அது மிகையாகாது. இந்த சக்கரம் மூலம், குழந்தைகள் பற்றியும், மந்திர சித்தி பற்றியும், ஊகத்தின் அடிப்படையில் பெறும் நன்மைகள், மாணவர்கள், சீடர்கள் அமைவது, வாழ்க்கை துணைவரின் மூலம் கிடைக்கும் உரிமைகள், படைப்பாற்றல் மற்றும் முடிவுகளை உணருதல் போன்றவற்றைப் பற்றி அறிய முடியும். அதிலும் முக்கியமாக எதிர்கால சந்ததியினரைப்பற்றி முழுவதுமாக அறியமுடியும்.
இந்த சக்கரம், ஒவ்வொரு ராசியையும், ஏழு சம பகுதிகளாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு பாகமும், 4 பாகை, 17 கலை, 8.57 விகலை ஆக இருக்கும்.
இந்த சப்தாம்சத்தில் கிரகங்கள் எப்படி இருக்கும்? என்பதனை இப்போது காணலாம்
அதாவது, ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் D -1 ல் ஒரு ஒற்றைப் படை ராசியில் ஒரு கிரகம், முதல் சப்தாம்சத்தில் (அதாவது முதல் பாகத்தில்) இருந்தால் அதனை அதே இடத்தில் (ராசியில் ) D -7 எனும் சப்தாம்சத்தில் இருக்கும். அதன் அடுத்த சப்தாம்சம் (அடுத்த பாகம்) முன்னர் கூறிய ராசிக்கு நேர்கதியில், அடுத்த ராசியில் இருக்கும். இதே போல் தான் அடுத்தடுத்த பாகங்கள் அதன் ஏழு பாகங்களை அடையச்செய்யும்.
ஆனால், அதே சமயம், ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் D -1ல் ஒரு இரட்டைப் படை ராசியில் ஒரு கிரகம், முதல் சப்தாம்சத்தில் (அதாவது முதல் பாகத்தில்) இருந்தால் அதனை அந்த கிரகம் இருக்கும் ராசிக்கு ஏழாவது ராசியில் தான் அதனை இருக்கச் செய்ய வேண்டும். அதன் அடுத்த சப்தாம்சம் (அதாவது அதன் அடுத்த பாகம் முன்னர் கூறிய ராசிக்கு நேர்கதியில் அடுத்த ராசியில் இருக்கும். இதே போல் தான் அடுத்தடுத்த பாகங்கள் அதன் ஏழு பாகங்களை அடையச்செய்யும்.
இந்த வகை முறைப்படுத்துதல் பொதுவாக, பராசரர் வழிமுறை ஆகும். இது ஒரு சுழற்சி முறை கோட்பாடாகும்.
D -7 எனும் சப்தாம்ச சக்கரம் அட்டவணை
ஒரு கிரகம் D -1 ல், எந்த ராசியில் எந்த பாகையில் உள்ளதோ அதனை அந்த பாகத்துக்குள் உள்ள ராசியில் D -7 ல் எழுதினால், சப்தாம்சம் தயார். தற்போது, தயாராக சில இலவச மென்பொருளில் இது மிகவும் எளிமையாகக் கிடைக்கப்பெறும். அதனை அப்படியே பயன் படுத்திக்கொள்ளலாம்.
இந்த மேலே கூறப்பட்ட அட்டவணையைக் கொண்டு, ஒரு உதாரண ஜாதகம் காணலாம்.
இந்த ஜாதகத்தில் லக்கினம் மீனம் 4 பாகை 07 கலை மற்றும் இந்த லக்கினமானது இரட்டைப் படை ராசியில் அமைந்துள்ளது. இது முதல் சப்தாம்சத்தில் வருவதால், இதனை, சப்தாம்ச சக்கரத்தின் மீன லக்கினத்திற்கு 7ஆம் இடமான கன்னியில் போட வேண்டும். அதேபோல் சூரியன் ஆனது ஒற்றைப்படை ராசியில், மேஷத்தில் - 18 பாகை, 33 கலை கொண்டுள்ளதால் அது 5ஆம் சப்தாம்சத்தில் வரும் என்பதால், அதனை மேஷத்தில் இருந்து 5ஆம் இடமான சிம்மத்தில் எழுத வேண்டும்.
இதே போன்று மற்ற கிரகங்களின் நிலைகளையும், அதாவது ஒற்றைப்படை மற்றும் இரட்டைப்படை ராசியா என அறிந்து அவற்றிற்குரிய சப்தாம்ச ராசியில் எழுதி சப்தாம்ச சக்கரத்தைப் பூர்த்தி செய்திட வேண்டும்.
தொடர்புக்கு : 98407 17857