வாழ்க்கையை தீர்மானிப்பது கோச்சார பலன்களா? தசா புத்தி பலன்களா?: ஜோதிடம் சொல்வதென்ன?

அனைவராலும் அதிகம் பார்க்கப்படுவது அன்றைய ராசி பலன்கள். இவற்றைக் கேட்ட பிறகு தான் பலர் தங்களுடைய வேலையைத் தொடங்குவார்கள்.
வாழ்க்கையை தீர்மானிப்பது கோச்சார பலன்களா? தசா புத்தி பலன்களா?: ஜோதிடம் சொல்வதென்ன?

அனைவராலும் அதிகம் பார்க்கப்படுவது அன்றைய ராசி பலன்கள். இவற்றைக் கேட்ட பிறகு தான் பலர் தங்களுடைய வேலையைத் தொடங்குவார்கள். அதிலும் ஜோதிட வல்லுநர்களால் கூறப்படும் நேர்மறை வார்த்தை அந்த மனிதருக்கு காலையில் ஒரு பூஸ்ட் சாப்பிட்ட உணர்வு மற்றும் உத்வேகத்தை ஏற்படுத்தும்.

பலராலும் ஆவலுடன் தெரிந்துகொள்ள விரும்புவது அன்றைய தினபலன், குரு, சனி, மற்றும் ராகு கேது, பெயர்ச்சி பலன்கள். நிறைய பேர் "நான் இந்த ராசி எனக்கு இன்று பலன் நன்றாக உள்ளதா" என்று கேட்கிறார்கள். இவை அனைத்தும் அன்றைய கோள்சாரம் அடிப்படையில் காலபுருஷ தத்துவத்தில் கூறப்படுகின்ற பலன்கள். 

இவற்றில் அனைத்து பலன்களும் நூறு சதவீதம் அந்தந்த ராசிக்காரருக்கு நடப்பது கொஞ்சம் கடினம். அது சுமாராக 25% மட்டுமே நடைபெறும், சிலருக்கு அதுவும் நடைபெறாது. காரணம் அது உங்களுடைய ஜெனன ஜாதகத்தின் வாயிலாகச் சொல்லப்படும் பலன் அல்ல. இன்று உங்கள் ராசிக்கு பணமழை என்று கூறப்படும். அன்று உங்களுக்கு சொற்ப பணம் தான் கிட்டும் ஒருசிலருக்கு அதுவும் கிட்டாது. அங்கு ஜோதிடம் மேல் இருக்கும் பார்வை தவறாக முடியும். தினபலன் என்பது அன்றைய கோச்சார சந்திரனை வைத்து பலன் சொல்லப்பட்டது. அதேசமயம் அவரவர் பிறப்பு ஜாதக தசா புத்தியுடன் ஒத்துப்போனால் மட்டுமே கிரகங்களின் பெயர்ச்சி பலன் முழுமையாக நன்கு வேலை செய்யும். நமக்குள் ஒரு கேள்வி ஒன்று கோச்சாரம் அதிகம் வேலை செய்யுமா அல்லது தசா புத்தி அதிகம் வேலை செய்யுமா என்று ஒரு சந்தேகம்.

கோச்சாரம் மற்றும் தசா புத்தி பற்றிய சிறு விளக்கம்

கோச்சாரம் அல்லது கோள்சாரம் என்பது அன்றைய வான்மண்டலத்தில் உள்ள கிரகங்களின் நகர்வு என்று பொருள். கடவுளின் படைப்பனா இந்த பிரபஞ்ச சக்தியின் ஓட்டம் தடைப்படும் வரை கிரகங்களும் கட்டாயம் இயங்கும். ஒவ்வொரு கிரகங்களின் சுற்றும் சுழற்சியின் கால அளவு மாறுபடும். எடுத்துக்காட்டாக சனி, குரு, ராகு கேது அனைத்தும் வருட சுழற்சியும் மற்றவை மாதம் மற்றும் நாள்களின் சுழற்சியாகும். உதாரணமாக கோச்சார சந்திரன் மீது பெண் கிரகமான சுக்கிரன் பயணம் செய்யும்போது தாய் வீட்டிற்குப் பெண் வருவாள் என்பது அன்றைய நிலை. அங்கே சந்திரனுடன் கேதுவும் தொடர்பு பெற்றால் பிரிவு அல்லது நீதிமன்றம் செல்லும் நிலை ஏற்படலாம். இவ்வாராக கிரகத்தின் காரகத்தன்மை 25% அறியலாம். இதே போல் ஒரு ஜாதகத்தில் முக்கிய கிரகங்கள் ஒரு பாவத்தை தொடும்பொழுது அந்த பாவத்தின் பலனை (நல்லதோ அல்லது கெட்டதோ) தந்தே தீருவார்.

நாம் பிறக்கும்பொழுது அந்த நேரத்தின் கிரகங்களின் நிலை கொண்டு எழுதப்பட்ட ஒன்று ஜெனன ஜாதகக் கட்டம். இங்கு நம்முடைய கடந்த பிறவியின் தொடர் ஆரம்பப் புள்ளி உங்களின் தற்பொழுது தசா மற்றும் புத்தி நாதன் ஆவார். அவற்றின் ஒட்டுமொத்த 9  கிரகங்களின் தசாநாதன் 120 வருடங்களுக்குள் வருவார்கள். இங்கு தற்காலிக நாளின் இயக்கம் அவரவர் ஜாதகத்தில் நிற்கும் கிரகம், அன்றைய கோச்சார கிரகங்களின் பயணம் நமக்கு அவ்வப்போது பலன்களை சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ சுழற்சியைச் சொல்லவல்லது. முக்கியமாக ஜோதிடத்தில் இந்த கிரகங்களின் பெயர்ச்சி நம்முடைய வாழ்வின் முக்கிய மகா சக்தி ஆகும். 

கோள்கள் ஒவ்வொரு சாரத்தை தொடும்பொழுதும் பலன்கள் பல்வேறு மாற்றத்தை ஜாதகருக்கு கொடுக்கும். அதுவே ஜோதிட சூட்சமத்தில் தற்பொழுது சந்திரனின் நகர்வும் ஜெனன ஜாதகத்தைக் கொண்டும் சந்திரநாடி வாயிலாக பலன்கள் சுலபமாக சொல்லப்பட்டு வருகிறது. இவற்றைத் தெரிந்துகொள்ள புத்தங்கள், நிறைய வகுப்பு மற்றும் ஆராய்ச்சிகள் தேவைப்படும். என்னதான் பலன்கள் மாறுபட்டாலும் உண்மையான வெளிப்பாடு என்பது தசா புத்தியுடன் கோச்சாரம் சேர்ந்து ஒத்துபோனால் தான் பலன்கள் 100 சதவீதம் சரியாக இருக்கும். உதாரணமாக  கும்ப லக்கினகாரர்களுக்கு, கோச்சார குரு மகரத்தில் இருப்பது உங்களுக்கு நல்ல சுப செலவுகள், நிம்மதியான தூக்கம் என்று சொன்னால் அது ஏன் நடைபெறவில்லை என்பதற்கு பல்வேறு காரணம் உள்ளன. அவை சிறு விளக்கமாகப் பார்ப்போம்.

ஜெனன ஜாதகத்தில் உள்ள சந்திரன் (ராசி) கொண்டு பலன்கள் சொல்லப்படுகிறது. முக்கியமாக அவரவர் ஜாதகத்தில் லக்கினம் தான் முக்கிய புள்ளி. இவற்றால் ஜாதகரின் பாவத்தின் காரகத்துப் பலன்கள் மாறுபடும்.

ஜெனன ஜாதகத்தில் உள்ள கிரகங்கள்  உங்களுக்கு சரியான நட்பு நிலையில் இல்லையென்றால், அல்லது அஸ்தங்கம் பெற்றால் அன்றைய கோச்சாரம் வேலை செய்யாது. எடுத்துக்காட்டாக உங்களுடைய நண்பர்கள் உங்கள் வீட்டிற்கு வருவது நன்று. அதே சமயம் நம்மை மறைந்திருந்து தாக்கும் வில்லனோ அல்லது பகைவரோ வீட்டிற்கு வந்தால் பிரச்னையே.

முக்கியமாக கோச்சார கிரகம் சில இடங்களில் நீச்சம் பெற்று வலுவிழக்கச் செய்யும். இங்கும் கோச்சாரம் வேலை குறைப்படும். கோச்சார கிரகம் சுபராக இருந்தாலும் அந்தந்த அதிபதி ஜாதகருக்கு மாரகத்திற்கு ஏற்ப கண்டங்கள் செய்பவனோ  அல்லது பாதகாதிபதியாகவோ இருந்தால் அவர் கட்டாயம் அசுப வேலையை தான் செய்வார். அதுவும் அவர் அஷ்டமாதிபதியாக மாறிவிட்டால் எதிர்மறையாக பலன்கள் அதிகம் செயல்படுத்துவார் என்பது ஜோதிட சூட்சம விதி. 

எடுத்துக்காட்டாக ஜாதகத்தில் சுபர் என்னும் குரு பாதகம் செய்பவராக இருந்தால் அவருடைய தசையும் புத்தியும் அதோடு அன்றைய கோச்சாரமும் ஒரே கிரகத்தை நோக்கிச் சென்றால் பாதகம் செய்தே தீருவார். குருப்பெயர்ச்சியின்போது குரு  வந்துவிட்டார் ஆஹா ஓஹோ என்று சொல்லும் நேரம் அதற்கு எதிர்மறையாக வேலை செய்ய முற்படுவார். என்னடா இது யூ-டியூபில் (YouTube) சொன்ன அனைத்தும் பலிக்கவில்லையே என்று வருத்தப்படுவதுதான் மிச்சம்.

ஜெனன ஜாதகத்தில் கோச்சார கிரகங்கள் வரும் பாவத்தில் உள்ள கிரகங்களின் மேல் பயணிக்கும் பொழுது கிரகங்களின் சாரம் மற்றும் பாகையின் அளவு கொண்டு பலன்கள் மாறுபடும். அதிலும் அந்த பாவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் எவற்றை கோச்சார கிரகம் முதலில் தொடுகிறதோ அந்த கிரகத்தின் பலனை முதலில் செய்யும். முக்கியமாக கோச்சார கிரகம் முதலில் அந்த பாவத்தில் உள்ள கிரகத்தின் வேலையைச் செய்யும். அந்த பாவத்தின் அதிபதி வீட்டின் காரக வேலையைக் குறைத்துச் செய்யும்.

ஒரு ஜாதகருக்கு கோச்சாரம் நன்றாக இருந்தாலும், அன்றைய தசை புத்தி உங்களுக்கு சரியாக அமையவில்லை என்றால் பலன் மிக மிக சொற்பமே. தசா புத்தியிலும் ஒரு செக் பாயிண்ட் உள்ளது. ஒவ்வொரு தசா நாதனும் ஒவ்வொருவருக்கும்  காரகன் /பாசகன்/ போதகன்/வேதகன் என்பவர் உண்டு. அன்றைய காலகட்டத்தில் ஜாதகரின் தசைனாதன் நட்புமுறையிலிருந்தால் ஜாதகருக்கு குறிப்பிட்ட தசையில் நற்பலன்கள் ஜாதகர் பெறுவார்.

அன்றைய ஜெனன ஜாதகத்தில் உங்கள் ராசி/ லக்கினத்திற்கு பாவ கிரக பார்வை, வக்கிரம், பரிவர்த்தனை மற்றும் பல்வேறு கிரகங்கள் சேர்க்கை இருந்தாலும் பலன் என்ற விதியை மாற்றிச் செய்யும்.

ராஜகிரகங்கள் கோச்சாரத்தில் ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் அது பாகை அடிப்படையில் ஒன்றையொன்று கிரகத்தைத் தொடும்பொழுது அவற்றின் காரகத்துவத்திற்கு மற்றும் பாவத்திற்கு ஏற்ப ஒன்றொன்றாக தன் வேலையைச் செய்யும். அவற்றில் ஆழ்ந்து பார்த்தால் ஜாதகருக்கு நட்பு கிரகமாக இருந்தால் நட்பாகவும், பகை கிரகமாக இருந்தால் அதெற்கெற்ப கெட்ட பலன்களைத் தரவல்லது.

கோச்சாரத்தில் நாட்களின் நகரும் கிரகங்களை விட, வருடக் கிரகங்களான குரு, சனி, ராகு கேது கிரகங்களின் பலன்களை செயல் அதீதமான மாற்றங்களை ஏற்படுத்தும். கோச்சாரத்தை விட ஜெனன ஜாதக விதிப்படி தசாபுத்தி அந்தரம், சூட்சமம். அதிகம் வேலை செய்யும். அதிலும் தசானாதனை விட புத்திநாதன் வேலை அதிகம்.

ஜாதகருக்கு கோச்சார தொடர்பு என்பது ஒரு மின்னல் வேக பலன். அவற்றோடு அதே கிரகமும் தசை புத்தியில் தொடர்பு இருக்க வேண்டும். கோச்சாரம் கிரகங்களின் தொடர்பும் தசை புத்தியின் கிரகங்களின் தொடர்பும் சரியான பாதையிலிருந்தால் 90% கட்டாயம் பலன்கள் நடக்கும். அவை சுப பலன்களா அசுப பலன்களா என்று அவரவர் ஜாதகம் மூலம் பலன்கள் வெளிப்படும். கோச்சார கிரகம் உங்கள் ஜெனன ஜாதக கிரகத்தின் பலம் முக்கியம். அவர் எந்த பாவத்தில் எந்த நட்சத்திர பாதத்தில் அமர்ந்துள்ளார் என்று பார்க்க வேண்டும். அன்றைய தசை புத்தி என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும். பிறந்த கால கிரகம் ஒரு சுப கிரகம் உடன் சேரும்போது சுப தன்மையும், அவர் பலம் அற்று பாவத்துவம் பெற்றால் ஜாதகருக்கு கெட்ட அசுப தன்மையைத் தருவார்.

கோச்சார சுபக் கிரகங்கள் ஒருசில குறிப்பிட்ட நாட்கள் நமக்கு நன்மை கட்டாயம் தரும். அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் நாம் கடினமான உழைப்பு மற்றும் நற்செயலை முதலீட்டாக போட்டு தொடர்ந்து போராடினால் கிரகங்களும் அவரவர் தசா புத்திகளும் நமக்கு நல்வழி காட்டுவார். மற்றவர்களுக்கு தீங்கு நினைக்காமல், அமைதியான முறையில் தங்களால் முடிந்த தானம் தர்மங்கள் மூலமாக கடவுள் அனுக்கிரகம் பெற்று, நமக்கு ஏற்படும் மாரகத்திற்கு ஒப்பான கண்டதையும் கடந்து செல்லலாம். 

-ஜோதிட சிரோன்மணி தேவி 

Whatsapp:8939115647
vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com