Enable Javscript for better performance
பிரம்மோற்சவ ஐந்தாம் நாள்: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா- Dinamani

சுடச்சுட

    

    பிரம்மோற்சவ ஐந்தாம் நாள்: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா

    Published on : 08th October 2016 04:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    shrilordperumal

    திருமலையில் வெள்ளிக்கிழமை இரவு கருட வாகனத்தில் வலம் வந்த மலையப்ப சுவாமி.

    திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான வெள்ளிக்கிழமை இரவு மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் வலம் வந்து சேவை சாதித்தார்.
    முன்னதாக, காலை 9 மணி முதல் 11 மணி வரை ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு, கையில் கிளியுடன் மோகினி அவதாரத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீ கிருஷ்ணர் உடன் வர மாட வீதியில் வலம் வந்தார்.
    இரவு 7.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பிரம்மோற்சவத்தின் மிக முக்கிய சேவையான கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வலம் வந்தார்.
    மூலவருக்கு அணிவிக்கப்படும் 1,008 தங்க காசுகளால் ஆன 5 வரிசை கொண்ட மாலை, லட்சுமி ஆரம், மகர கண்டிகை உள்ளிட்டவை கருவறையிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு உற்சவ மூர்த்திக்கு அணிவிக்கப்பட்டன.
    மேலும், சென்னையிலுள்ள இந்து தர்மார்த்த சமிதியினர் நன்கொடையாக அளித்த திருக்குடைகள் கருடசேவையின்போது பயன்படுத்தப்பட்டது.
    மலையப்ப சுவாமிக்கு சாமந்தி, பச்சை இலை, ரோஜா, சம்பங்கி, மல்லிகை மலர்களைக் கொண்டு தயாரான 60 அடி நீள மாலை அணிவிக்கப்பட்டது.
    வாகன சேவையின் முன், ஜீயர் சுவாமிகள் குழாம் நாலாயிர திவ்யப் பிரபந்தங்களை பாடியபடி சென்றது. பின்புறம், இசைக் கலைஞர்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
    5 லட்சம் பக்தர்கள்: கருட சேவையைக் காண வெள்ளிக்கிழமை காலை முதல் மாட வீதியிலுள்ள கேலரிக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
    சுமார் 5 லட்சம் பக்தர்கள் கருட சேவையைக் கண்டனர்.
    திருமலையைச் சுற்றி ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த அகண்ட தொலைக்காட்சிப் பெட்டிகளில் கருடசேவை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
    திருமஞ்சனம்: பிரம்மோற்சவ காலத்தில் மாட வீதியில் பவனி வரும் களைப்பைப் போக்க வெள்ளிக்கிழமை மதியம் மலையப்ப சுவாமிக்கும், ஸ்ரீதேவி, பூதேவிக்கும் பால், தயிர், தேன், மஞ்சள், சந்தனம், பழங்கள், மூலிகை கலந்த வெந்நீரால் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.
    ஊஞ்சல் சேவை: மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாகன சேவையின் அலங்காரத்துடன் மலைப்ப சுவாமி 1,008 விளக்குகளுக்கு இடையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் சேவை சாதித்தார்.
    நடமாடும் உண்டியல் ரத்து: திருமலையில் பிரம்மோற்சவத்தின்போது, பக்தர்கள் காணிக்கை செலுத்த நடமாடும் உண்டியல்களை தேவஸ்தானம் ஏற்படுத்துவது வழக்கம். ஆனால், தற்போது நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தில் நடமாடும் உண்டியல்களை தேவஸ்தானம் ஏற்படுத்தவில்லை.
    மாட வீதியில் உள்ள பக்தர்கள் நடமாடும் உண்டியலில் காணிக்கையை செலுத்த சில்லரை நாணயங்களை வீசி எறிவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
    எனினும், கோயிலுக்குள் 2 உண்டியல்கள், ஏழுமலையான் கோயில் அகண்டம் அருகில் ஒரு உண்டியல் என மொத்தம் 3 உண்டியல்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai