வேளாங்கண்ணியில் ஆண்டுப் பெருவிழா அலங்காரத் தேர் பவனி

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி, அலங்கார திருத்தேர் பவனி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
வேளாங்கண்ணி ஆண்டுப் பெருவிழாவில் பக்தர்கள் கூட்டத்துக்கு நடுவே வலம் வரும் அலங்காரத் தேர்கள்.
வேளாங்கண்ணி ஆண்டுப் பெருவிழாவில் பக்தர்கள் கூட்டத்துக்கு நடுவே வலம் வரும் அலங்காரத் தேர்கள்.
Updated on
2 min read


நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவையொட்டி, அலங்கார திருத்தேர் பவனி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
கீழைநாடுகளின் லூர்து எனப்படும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், பசலிக்கா அந்தஸ்து பெற்றது. இந்தப் பேராலயத்தின் ஆண்டுப் பெருவிழா ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. 
தினசரி விழா நாள்களில் தமிழ், ஆங்கிலம், கொங்கனி, தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன் தினசரி பகல் 12 மணியளவில் பேராலய கீழ்கோயிலில் மாதா கொடியேற்றமும், இரவு 8 மணியளவில் திருத்தேர் பவனியும் நடைபெற்று வருகின்றன. 
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான அலங்காரத் தேர் பவனி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக, வியாழக்கிழமை மாலை தஞ்சாவூர் மறைமாவட்ட ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, சிறப்புக் கூட்டுத் திருப்பலி ஆகியன நிறைவேற்றப்பட்டன.
பின்னர் இரவு 7.30 மணியளவில் மைக்கேல் சம்மனசு, புனித செபஸ்தியார், புனித அந்தோணியார், புனித சூசையப்பர், புனித அமலோற்பவ மாதா, புனித உத்திரிய மாதா ஆகிய 6 சப்பரங்கள் ஆலயத்தை விட்டு வெளியில் நிலை நிறுத்தப்பட்டன. பின்னர் குழந்தை இயேசுவுடன் புனித ஆரோக்கிய மாதா காட்சியளிக்கும் திருவுருவம் தாங்கிய அலங்காரத் திருத்தேர், ஆலய வாயில் முன்பு நிறுத்தப்பட்டது. 
இதையடுத்து தஞ்சை மறை மாவட்ட ஆயரால், தேர் புனிதம் செய்விக்கப்பட்டது. பின்னர் மரியே வாழ்க என்று பக்தர்கள் முழக்கங்கள் எழுப்ப, இரவு 8 மணிக்கு தேர் பவனி தொடங்கியது. 
பேராலய முகப்பிலிருந்து தொடங்கிய தேர் பவனி, கடற்கரைச் சாலை, ஆர்யநாட்டுத் தெரு, கடைவீதி வழியே ஊர்வலமாகச் சென்று, மீண்டும் 8.50 மணிக்கு பேராலய முகப்பில் நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில் பேராலய அதிபர் ஏ.எம்.ஏ. பிரபாகர், துணை அதிபர் எஸ்.ஏ. சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம், உதவி பங்குத் தந்தை டேவிட் தன்ராஜ் மற்றும் உதவிப் பங்குத் தந்தையர்கள் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.
இதில் நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மேலும் வெளிநாடுகள் மற்றும் பல்வேறு வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோரும் விழாவில் பங்கேற்றனர். 
திரளானோர் பாதயாத்திரையாக வந்திருந்து, திருத்தேர் பவனியில் பங்கேற்றனர்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வேளாங்கண்ணிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com