ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கரம் விழா

திருச்சி ஸ்ரீரங்கத்தில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் காவிரி மகா புஷ்கரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கரம் விழா

திருச்சி ஸ்ரீரங்கத்தில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் காவிரி மகா புஷ்கரம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையொட்டி தமிழகம், ஆந்திரம், கர்நாடகம் மற்றும் தெலங்கானா மாநிலங்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள் காவிரியாற்றில் புனித நீராடினர்.
குருபகவானின் சஞ்சாரத்தின் அடிப்படையில் நதிகளுக்கு புஷ்கரம் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. புஷ்கர நாள்களில் குறிப்பிட்ட நதியில் நீராடினால் அனைத்து புண்ணிய நதிகளிலும் பலமுறை நீராடிய பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மேற்கண்ட புனித நதிகளுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புஷ்கரம் வருகிறது. அந்த வகையில் பிரஹஸ்பதி எனப்படும் குருபகவான் துலா ராசியில் பிரவேசிக்கும் காலமே காவிரி புஷ்கரம் எனப்படுகிறது. 
பொதுவாகவே, துலா ராசிக்கும் காவிரிக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பர். பஞ்சாங்கப்படி குருபகவான் துலா ராசியில் செவ்வாய்க்கிழமை சஞ்சரித்ததால் அன்று காவிரி மகா புஷ்கர விழா தொடங்கியது.
விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கா ரங்கா கோபுரத்திலிருந்து ஆதிநாயக பெருமாள், தாயாருடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்து அம்மாமண்டப சாலையில் காவிரி புஷ்கர பிரம்ம யக்ஞ கமிட்டி சார்பில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலை மண்டபத்தை திங்கள்கிழமை இரவு வந்தடைந்தார்.
இந்நிலையில், மகாபுஷ்கரத் தொடக்க நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை அம்மா மண்டபப் படித்துறை காவிரியாற்றில் வேதவிற்பன்னர்கள், துறவிகள் நீராடி, யாகசாலை மண்டபத்துக்கு புனிதநீர் எடுத்து வந்தனர்.
தொடர்ந்து யாகசாலை மண்டபத்தில் வருண ஹோமம், இஷ்டி ஹோமங்கள், தொடர்ந்து, யாகசாலை மண்டபப் பகுதியில் பிரம்மோத்ஸவத்துக்கு நடைபெறுவது போல துவஜரோஹணம் எனப்படும் கொடியேற்றம் நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் கருடப் படம் கொண்ட கொடியேற்றப்பட்டு நித்யபடி சேவை நடைபெற்றது.
பின்னர், வேத, திவ்யபிரபந்த, ஆதிஹாஸ புராணப் படனமும், ஆழிமலைக் கண்ணா பாசுரத் தொடர் சொற்பொழிவும் நடைபெற்றது. முற்பகல் 11 மணிக்குத் தொடங்கிய பூர்ணாஹுதி ஹோமம் பிற்பகல் 12.30 வரை நடைபெற்றது. பின்னர் தீர்த்த பிரசாத விநியோகம் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு அம்மா மண்டபப் படித்துறையில் காவிரித் தாய்க்கு 24 முகங்கள்கொண்ட மங்களஹாரத்தி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை சாந்தி ஹோமம் நடைபெற்றது.
காவிரியாற்றில் புனித நீராடல்: காவிரி மகா புஷ்கரத்தையொட்டி செவ்வாய்க்கிழமை காலை முதலே மக்கள் காவிரியாற்றில் புனித நீராடத் தொடங்கினர். குறிப்பாக, ஆந்திரம் ,கர்நாடகம், தெலங்கானா மாநிலங்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள் காவிரித் தாய்க்கு பூஜை செய்து நீராடி, சிறியளவிலான கேன்களில் புனித நீரை எடுத்துச் சென்றனர். 
அம்மா மண்டபப் படித்துறை மற்றும் அதற்கு அருகிலுள்ள பகுதிகளிலும் புனித நீராடலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், பக்தர்கள் அம்மா மண்டபப் படித்துறையில் நீராடினர். நீராடச் செல்லவும், வெளியே வரவும் தனித்தனி வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது.
நீராடும் பக்தர்களுக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. வெளிமாநில பக்தர்கள் காவிரியாற்றின் நடுப்பகுதிக்குச் சென்று குடும்பத்தினருடன் புனித நீராடினர். அம்மா மண்டபப் படித்துறை பகுதியில் ஆண், பெண்கள் தனித்தனியே நீராட வசதி செய்யப்பட்டிருந்தது. 
23-ம் தேதி வரை புஷ்கர விழா: மேலும் அவ்வப்பொது ஒலிபெருக்கி வாயிலாக பல்வேறு மொழிகளில் அறிவிப்பும் செய்யப்பட்டது. இம்மாதம் 23-ம் தேதிவரை காவிரி புஷ்கரம் நடைபெறும் என்பதால் பக்தர்கள் 24 மணி நேரமும் காவிரியாற்றில் நீராடும் வகையில் அம்மா மண்டபப் படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குற்றப்பிரிவு போலீஸாரும் சாதாரண உடையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரங்கநாதரைத் தரிசிக்கும் பக்தர்கள்: காவிரியாற்றில் புனித நீராடும் பக்தர்கள் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்குச் சென்று வழிபடுகின்றனர். வழக்கத்தை காட்டிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியதால் ஸ்ரீரங்கம் கோயிலிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com