நான்கு திருக்கரங்களுடன் அருளும் கிருஷ்ணர் எங்குள்ளார் தெரியுமா? 

கண்ணபிரான் துவாரகையை அரசாளும் அரசன். அதனால் இங்கே அவனுக்கு வேளைக்கொரு...
நான்கு திருக்கரங்களுடன் அருளும் கிருஷ்ணர் எங்குள்ளார் தெரியுமா? 

கண்ணபிரான் துவாரகையை அரசாளும் அரசன். அதனால் இங்கே அவனுக்கு வேளைக்கொரு அலங்காரம்... நேரத்திற்கொரு பலகாரம்! அறுசுவை உணவை அடிக்கடி உட்கொள்வதால் சரியான செரிமானத்துக்குத் தேவையான லேகியம் கூட இங்கே அக்கறையுடன் கண்ணனுக்குப் புகட்டப்படுகிறது. துவாரகைக் கோயிலில் மணிக்கொரு முறை அரசன் கண்ணபிரானுக்கு அளிக்கப்படும் நிவேதனத்தை "போக்' என்பர்.

அதிகாலை ஐந்து மணிக்குத் திருப்பள்ளி எழுச்சி நடத்தி மன்னன் கண்ணனுக்கு முகம் கழுவி தங்கப் பல்குச்சியால் பல் தேய்த்து விட்டுச் சந்தனமும் குங்குமமும் இட்டுப் பழங்களை "முதல் போக்' ஆக அளிக்கிறார்கள். ஏழரை மணிக்கு லட்டு, ஜிலேபி என்று தின்பண்டங்களை உண்ணுவதிலிருந்து கண்ணனது போக்யங்கள் தொடங்கி விடுகின்றன. எட்டு மணிக்கு நெய், சர்க்கரை, பால், தயிர் என்று கொண்டு வந்து அவன் முன் வைத்து விடுகிறார்கள். பகல் பன்னிரண்டு மணிக்கு ராஜபோஜனம் தருகிறார்கள். ஐந்து மணி வரை ஓய்வு எடுக்க விடுகிறார்கள்.

இரவில் கடைசி உணவாக பாதாம் பருப்பு வகைகளும் உலர்ந்த பழங்களும் லேகியமும் வைக்கிறார்கள். தினந்தோறும் பதினேழு முறை போகி நிவேதனம் அவனுக்குப் படைக்கப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அவனுக்கு உடையலங்காரத்தை மாற்றிவிடுகிறார்கள்.

பத்துவகை பூஜைகள்: உடுப்பியில் ஸ்ரீ கிருஷ்ணருக்கு நிர்மால்ய விஸர் ஜன பூஜை, உஷத்கால பூஜை, அக்ஷய்ப் பாத்திர பூஜை, பஞ்சாமிர்த பூஜை, உத்வார்த்தன பூஜை, கலச பூஜை, தீர்த்த பூஜை, அலங்கார பூஜை, அவசர பூஜை, மஹா பூஜை ஆகிய பூஜைகள் உண்டு.

நான்கு வகை வழிபாடுகள்: உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாட்டு முறைகள் நான்கு வகையில் பிரிக்கப்படுகிறது. பாலே முகூர்த்தம், அக்னி முகூர்த்தம், கட்டிகே முகூர்த்தம், பக்தா முகூர்த்தம் எனும் நான்கு வேலைகளில் கிருஷ்ணனுக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

முக்கிய உத்ஸவங்கள்: உடுப்பி கிருஷ்ணருக்கு செய்யும் முக்கியமான உத்ஸவங்கள் ரத உத்ஸவம், சுவர்ண பல்லக்கு உத்ஸவம், கருட உத்ஸவம், ரஜத ரஜோத்ஸவம், பிரம்மோத்ஸவம் ஆகியவை முக்கிய உத்ஸவங்களாகும்.

நான்கு திருக்கரங்களுடன் கிருஷ்ணர்: அகமதாபாத்திலிருந்து ராஜ்காட் - ஜாம்நகர் வழியாக துவாரகை திருத்தலத்தை அடையலாம். துவாரகையில் உள்ள கண்ணன் கோயிலை "ஜகத்மந்திர்' என்று அழைக்கிறார்கள். இங்கு மூலஸ்தானத்தில் மேற்கு திசை நோக்கி அருள்புரியும் கிருஷ்ணர் நான்கு திருக்கரங்களுடன் வெள்ளி மஞ்சத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

ஆலிலை கிருஷ்ணர்: பீகாரில் உள்ள ஸ்ரீ கதாதரர் கோயிலின் முன் உள்ள பெரிய ஆலமரத்தின் கீழ் பகவான் கிருஷ்ணன் குழந்தை வடிவில் ஆலிலையில் படுத்துக்கொண்டு வலது கால் கட்டை விரலை வாயில் வைத்துக்கொண்டிருக்கும் சிறிய திருவுருவத்தைத் தரிசிக்கலாம். இவரை தொட்டு வணங்குவது இங்கு வழக்கத்தில் உள்ளது.

- ஆர் மகாதேவன்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com