மாறனாருக்கு முக்தியளித்த இளையான்குடி சிவன்! 

இவ்வூர் அறுபத்துமூவரில் ஒருவரான இளையான்குடி மாற நாயனார் முக்தி தலமாக அறியப்படுகிறது.
மாறனாருக்கு முக்தியளித்த இளையான்குடி சிவன்! 

இவ்வூர் அறுபத்துமூவரில் ஒருவரான இளையான்குடி மாற நாயனார் முக்தி தலமாக அறியப்படுகிறது. இவரை சுந்தரமூர்த்தி சுவாமிகள் இளையான்குடி மாறன் அடியார்க்கும் அடியேன் என்று குறிப்பிட்டுள்ளார் என்பதால் சுந்தரருக்கும் முறைப்பட்ட காலம் கொண்டவர் என அறியலாம். இவரது காலம் ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டினை சார்ந்தவர் எனக் கொள்ளலாம்.

இவரது பிறந்த ஊர், முக்தி பெற்ற ஊர் குறித்து பல குழப்பங்கள் உள்ளன. சிவகங்கை அருகில் உள்ள இளையான்குடி என்றும், தொண்டை நாட்டில் உள்ள இளையான்குடி என்றும், சோழ நாட்டு திருநள்ளார் இளையான்குடி என்றும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான், 

மால் அயற்கு அறிய நாதன் வடிவுரு சோதியாக 

சாலவே மயங்கு வார்க்கு சங்கரன் தான்மா கீழ்ந்தே

ஏலவார் குழலாள் தன்னோடு இடபவா கனனாய் தோன்றி

சீலம் ஆர் பூசை செய்த திருத்தொண்டர் தம்மை நோக்கி

என்று  பாடியுள்ளார். இங்கு இறைவன் பெயர் வன நந்தீஸ்வரர் இறைவி ஏலவார் குழலி என்பதால் இத்தலத்திலேயே இறைவன் ஆட்கொண்டார் என்பது திண்ணம்.

சிவகங்கை இளையான்குடியில் நாயனார் பிறந்த வீடு ஒன்று தற்போது மடமாக உள்ளது. அருகில் முளைவாரி நிலம் சர்வ மானிய நிலமொன்றும் உள்ளது. இங்கும் முளைவாரி குட்டை என்று ஒரு  நிலம் ஒன்றும் உள்ளது இறைவி பெயர் ஏலவார்குழலி என்பதனால் நாயனார் சிவகங்கை இளையான்குடியில் பிறந்து  பின்னர் சோழநாட்டில் வந்து தங்கி வாழ்ந்தார் எனக் கொள்ளலாம். 

இனி மாறனாரின் வரலாற்றை காண்போம்

இளையான்குடியில் பிறந்த மாறனார் உழவுத்தொழிலில் வந்த பெருஞ் செல்வமும், சிவனடியாரிடத்து அன்புள்ளமும் உடையவராய்த் திகழ்ந்தார்.

சிவனடியார் தம் இல்லத்திற்கு வந்தால் எதிரே சென்று கைகூப்பி வணங்கி, வரவேற்று அவர்களுக்கு உணவளிப்பார். நாள்தோறும் செய்த மாகேசுவரபூசை என்னும் சிவபுண்ணியத்தால் அவரது செல்வம் நாளுக்குநாள் பெருகிக் குபேரனைப் போன்ற பெரும்  செல்வந்தராக வாழ்ந்து வந்தார்.

அடியார்க்குத் திருவமுதளித்தலாகிய இத்திருப்பணியைச் செல்வக்காலத்திலே மட்டுமன்றி வறுமையுற்ற காலத்திலும் விடாது செய்து வந்தார். தம்மிடமிருந்த நிலங்கள் முதலியவற்றை விற்றும்,  கடன்வாங்கியும் அடியார்க்கு அமுதளிக்கும் பணியை விடாது செய்து வந்தார். இவரை சோதிக்க எண்ணிய இறைவன் மாரிக்காலத்தில் ஒருநாள், நள்ளிரவு நேரத்தில் அடியார் கோலங்கொண்டு மாறனாரது வீட்டிற்குச் சென்று உணவு கேட்கிறார்

அடியார்க்கு உணவளிக்க வீட்டில் ஏதுமில்லையே என வருத்தம் மிகுந்தது. அன்றையப் பகற்பொழுதில் நிலத்தில் விதைக்கப்பட்ட நெற்மணிகளைச் சேகரித்து வந்து, கீரைகளைப் பறித்து, அடுப்பெரிக்க  விறகில்லாமல் வீட்டின் சிதிலமடைந்த கூரையிலிருந்த மரக்கட்டைகளைப் பயன்படுத்தி உணவு சமைத்து மாறனாரும் அவரது துணைவியாரும் சிவனடியாருக்கு அமுது படைத்தனர். இறைவன் அவருக்குக் காட்சியளித்து தம்பதியர் இருவருக்கும் முக்தியளித்த தலம் இது.

திருக்கோயில்

திருநள்ளார் - பேரளம் சாலையில் திருநள்ளாரில் இருந்து இரண்டு கி.மீ தூரத்தில் உள்ள செல்லூர் எனும் இடத்தில் இருந்து வடக்கில் செல்லும் சாலையில் இரண்டு கி.மீ தூரம் சென்றால் பெரிய டைல்ஸ் தயாரிப்பு கம்பெனியை அடுத்து இளையான்குடி கிராமம் உள்ளது. ஊரின் மத்தியில் கிழக்கு நோக்கிய பெரிய கோயிலாக உள்ளது வனநந்தீஸ்வரர் கோயில்.

தரை மட்டத்திலிருந்து ஐந்து அடி உயரமாகக் கோயில் வளாகமே உயர்த்தப்பட்டுள்ளது. முகப்பில் ராஜகோபுரமில்லை, சுதையுடன் கூடிய நுழைவாயிலேயுள்ளது. 12-ம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில்  கருங்கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் பலரால் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. பதினைந்தாம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் காலத்தில் மீண்டும் திருப்பணி செய்யப்பட்டதன் சான்றாக இறைவன்  கருவறையின் வாயிலில் நாயக்க மன்னர் ஒருவர் குதிரையில் செல்வது போன்ற புடைப்பு சிற்பம் உள்ளது. மேலும் அம்பிகை சன்னதியை ஒட்டிய பைரவர் மண்டபம் ஒன்றும் பிற்காலத்தில் மராட்டிய  மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. திருநள்ளார் கோயிலின் கருவறை வடக்கு சுவற்றில் சடையவர்மன் சுந்தரபாண்டியன் இக்கோயிலுக்கு அளித்த நந்தவன கொடை பற்றியதும் இக்கோயிலுக்குப் பெருமை  சேர்ப்பதாகும்.

இறைவன் வன நந்தீஸ்வரர் கம்பீரமான சிவலிங்கமாகக் காட்சியளிக்கிறார். இறைவி ஏலவார்குழலி எனும் பெயர் கொண்டு அருள்புரிகிறார். கருவறை கோட்டத்தில் விநாயகர், தென்முகன் லிங்கோத்பவர்,  பிரம்மன் துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறை அதிட்டானத்தில் பல அரசர்களின் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான சிலைகளில் இடையில் கச்சைகட்டியபடியும், தலையில் பெரும் கொண்டையுடன் காட்சியளிக்கின்றனர். தென்மேற்கில் விநாயகர் சன்னதி பெரியதாய் கட்டப்பட்டுள்ளது. அடுத்து வடபுறத்தில் மாற நாயனாரிடம் பிச்சை கேட்கும் கோலத்தில் பிச்சாடனர் சன்னதியும் அதன் நேர் எதிரில் இளையாங்குடி மாறநாயனாரும் அவரது துணைவியாரும் உள்ள சன்னதியும் உள்ளன. அம்பிகை சன்னதியின் வடபுற மண்டபத்தில் பைரவர், சூரிய சந்திரர்கள் புதிதாய் வடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போதுள்ளதை விடக் கோயில் பல மடங்கு பெரிதாய் இருந்திருக்க வேண்டும், ஏனெனில் சிதிலமடைந்த கோயிலின் பல லிங்கங்களும், சிலைகளும் கோயிலின் மேற்புறத்தில் வரிசையாய்  வைக்கப்பட்டுள்ளன. அதில் நாகர், நந்தி, அமர்ந்த கோல பிச்சாடனர், லிங்க பாணம், ஒரு பெரிய அம்பிகை, தென்முகன், சிறிய நிசும்பசூதனி, சோழமன்னர் சிலை, பெரிய அளவிலான வள்ளி,  தெய்வானை, முருகன் பத்துகர துர்க்கை, சண்டேசர், ஜேஷ்டாதேவி, சூரியன் இன்னும் இரு சிலைகள் உள்ளன. இத்தனையும் இருந்த இக்கோயில் தற்போது சுருங்கி ஒரு கால பூசை கோயிலாக நின்று  விட்டது காலத்தின் கோலம்.

தினசரி பூஜைகளை சிவராமன் எனும் குருக்கள் செவ்வனே செய்கிறார், ஒரு காலம் என்பதால் இவர் கோயிலில் இருக்கும் நேரத்தினை தெரிந்துகொண்டு செல்வது நலம். 
சிவராமன் குருக்கள் - 8903888174    

- கடம்பூர் விஜயன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com