திருமலையில் வைகுண்ட ஏகாதசி : சொர்க்கவாசல் திறப்பு: லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம்

திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.20 மணிக்கு சர்வ தரிசனம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து லட்சத்துக்கும் மேற்பட்ட
திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற தங்கத்தேர் புறப்பாடு. (உள்படம்) தங்கத் தேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி.
திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற தங்கத்தேர் புறப்பாடு. (உள்படம்) தங்கத் தேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி.

திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.20 மணிக்கு சர்வ தரிசனம் தொடங்கியது. அதைத் தொடர்ந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வைகுந்த வாயில் வழியாக வெளியே வந்தனர்.
திருமலையில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுந்த வாயில் திறக்கப்பட்டு பக்தர்கள் அவ்வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுவர். அதன்படி செவ்வாய்க்கிழமை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 12.05 மணிக்கு ஏழுமலையான் கோயிலை ஒட்டியுள்ள வைகுந்த வாயில் (ஏழுமலையான் கருவறையை ஒட்டியுள்ள உள்பிரகாரம்) திறக்கப்பட்டது. 
ஏழுமலையானை தரிசித்து திரும்பிய பின் அதன் வழியாக முதலில் திருமலை ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் விஐபி-க்கள் உள்ளிட்டோர் சென்றனர். வைகுந்த வாயில் மலர்கள், மின்விளக்குகள் உள்ளிட்டவற்றால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
ஆண்டுக்கு இரு தினங்கள் மட்டும் திறந்திருக்கும் வைகுந்த வாயில் வழியாகச் செல்ல பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுவர். அதனால் அந்த தினங்களில் விஐபி-க்களின் எண்ணிக்கையைக் குறைத்து தேவஸ்தானம் சர்வ தரிசன பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. 
அதன்படி அதிகாலை 12.30 மணிக்கு தொடங்கப்பட்ட விஐபி தரிசனம் அதிகாலை 4.20 மணியுடன் நிறைவு பெற்றது. அதைத் தொடர்ந்து சர்வ தரிசனம் தொடங்கியது. காத்திருப்பு அறைகளிலும், தரிசன வரிசைகளிலும் 27 மணி நேரம் காத்திருந்த பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசனம் கிடைத்தது.
விஐபி-க்கள்: ஆந்திர - தெலங்கானா ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மனைவி ஷோபா ராவ், முன்னாள் பிரதமர் தேவே கௌடா, அவரது மகனும் கர்நாடக முதல்வருமான குமாரசாமி, அவரது சகோதரர் ரேவண்ணா மற்றும் ஆந்திர, தெலங்கானா மாநிலங்களின் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், நீதிபதிகள், எம்எல்ஏக்கள் உள்பட 51 பேர் தங்கள் குடும்பத்தினருடன் ஏழுமலையானை தரிசித்தனர். அனைவரும் வைகுண்ட ஏகாதசியின்போது ஏழுமலையானை தரிசித்து வைகுந்த வாயில் வழியாகச் சென்றது மனதுக்கு மகிழ்ச்சி அளித்ததாகத் தெரிவித்தனர். 
திருமலையில் கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியைக் காட்டிலும் இந்த ஆண்டு ஏகாதசியின்போது பக்தர்களின் கூட்டம் குறைவாகக் காணப்பட்டது. தரிசனம் தொடங்கியவுடன் வெளிவட்டச் சாலையில் காத்திருந்த பக்தர்கள் கூட்டம் மெதுவாக நகரத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தங்கத்தேர் புறப்பாடு
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் செவ்வாய்க்கிழமை காலை தங்கத் தேர் புறப்பாடு நடைபெற்றது.
ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி அன்று காலையில் திருமலையில் தங்கத்தேர் புறப்பாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை தங்கத் தேர் புறப்பாடு நடைபெற்றது. அதில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி மாட வீதியில் எழுந்தருளி அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு சேவை சாதித்தார். மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய தங்கத்தேரை பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். 
இந்த நிகழ்வில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தங்கத் தேருக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com