மலேசியா முருகன் கோயிலில் தைப்பூச விழா கோலாகலம்!

மலேசியாவில் உள்ள புகழ்பெற்ற பத்து மலை முருகன் கோயிலில் தைப்பூச விழா புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
பத்து மலை முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தைப்பூச விழாவில் பங்கேற்ற திரளான பக்தர்கள்.
பத்து மலை முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற தைப்பூச விழாவில் பங்கேற்ற திரளான பக்தர்கள்.

மலேசியாவில் உள்ள புகழ்பெற்ற பத்து மலை முருகன் கோயிலில் தைப்பூச விழா புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் குறிப்பாக தமிழர்கள், காவடி எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மலேசியா மட்டுமன்றி இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள முருகன் கோயில்களிலும் தைப்பூச விழா கொண்டாடப்பட்டது. தைப்பூச தினத்தில்தான், அசுரர்களை வெல்ல முருகப் பெருமானுக்கு அன்னை பார்வதி தேவி சக்தி வேல் வழங்கியதாக புராணங்கள் கூறுகின்றன. எனவே, முருகப் பெருமான் அருள்பாலிக்கும் கோயில்களில், தைப்பூச விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்தியா மட்டுமன்றி தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளிலும் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
பத்து மலை முருகன் கோயிலில்...: மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் அருகேயுள்ள புகழ்பெற்ற பத்து மலை முருகன் கோயிலில் தைப்பூச விழா புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, காவடி, பால் குடங்கள் சுமந்தும், அலகு குத்தியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். 272 படிகள் ஏறிச் சென்று, குகைக்குள் வீற்றிருக்கும் முருகப் பெருமானை வழிபட்டனர். 
பத்து மலை முருகன் கோயிலின் வெளிப் பகுதியில் சுமார் 141 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் முருகப் பெருமானின் பிரமாண்ட சிலை உள்ளது. இந்த சிலைதான், உலகிலேயே மிகப் பெரிய முருகன் சிலையாகும். 
தைப்பூச விழாவில் பங்கேற்ற விஜய லட்சுமி விமலன் என்ற பெண் பக்தர் கூறுகையில், 'ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச நாளில் பத்து மலை முருகன் கோயிலுக்கு வந்துவிடுவேன். எனக்கு சமீபத்தில்தான் திருமணம் நடைபெற்றது. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இப்போது கோயிலுக்கு வந்துள்ளேன்' என்றார்.
இதேபோல, இலங்கை, சிங்கப்பூர், மோரீஷஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள முருகன் கோயில்களிலும் தைப்பூச விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com