சப்த மங்கைத் தலங்கள் (பகுதி 6) - பசுமங்கை

தஞ்சாவூர் கும்பகோணம் நெடுஞ்சாலையில் 14வது கிமீ தொலைவில் உள்ள பசுபதிகோயில் பேருந்து நிறுத்தத்திலிருந்து தெற்கில் அரை கிமீ தொலைவில் உள்ளது.
சப்த மங்கைத் தலங்கள் (பகுதி 6) - பசுமங்கை

தஞ்சாவூர் கும்பகோணம் நெடுஞ்சாலையில் 14வது கிமீ தொலைவில் உள்ள பசுபதிகோயில் பேருந்து நிறுத்தத்திலிருந்து தெற்கில் அரை கிமீ தொலைவில் உள்ளது. இக்கோயில் அமைந்துள்ள இடம் கள்ளர் பசுபதிகோயில் என்றழைக்கப்படுகிறது. பசுபதி கோயில் ஊராட்சியில் மூன்று மங்கை தலங்கள் உள்ளன.

சப்த மங்கையரும் காளிதேவிக்குத் துணையாகப் போருக்குச் செல்லுமுன் ஒவ்வொருவரும் ஒவ்வோர் தலத்தில் சிவபூஜை செய்தனர். 

சக்கரப்பள்ளி- சக்ரமங்கை, 
ஹரிமங்கை- அரிமங்கை, 
சூலமங்கலம்- சூலமங்கை, 
நல்லிச்சேரி- நந்திமங்கை, 
பசுபதிகோவில்- பசுமங்கை, 
பசுபதிகோவில் -தாழமங்கை, 
பசுபதிகோவில் –திருப்புள்ளமங்கை

இந்த எழு தலங்களிலும் மங்கைப் பருவ தேவியர் சிவ பூஜை செய்து சிவதரிசனம் பெற்ற ஏழு தலங்களும் சப்த மங்கைத் தலங்கள் எனப்பட்டன. ஏழு தலங்களும் தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகில் உள்ள தலங்கள். 

கள்ளர் பசுபதி கோயிலே மங்கை தலங்கள் ஏழினுள் பெரியது.

கிழக்கு நோக்கிய ஏழு நிலை ராஜகோபுரம், ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் உயர்ந்த தளத்தில் அடுத்தடுத்து இரு கருவறைகள் உள்ளன. 12 படிக்கட்டுக்கள் கொண்ட தளத்தில் முதல் சன்னதியில் உசிஷ்ட்டகணபதியும், மற்றொரு சன்னதியில் மூலவரும் உள்ளனர். மாடக்கோயில் கருவறையின் கோட்டங்களில் தெய்வங்கள் ஏதும் இல்லை, கீழ் பிரகாரத்தில் தென்மேற்கில் ஜெஷ்ட்டாவுக்கும், கஜலட்சுமிக்கும் சன்னதிகள் உள்ளன. வடகிழக்கில் பைரவர் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. இக்கோயில் கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில்களில் ஒன்றாகும். வடமேற்கில் பெரிய மாவிலங்கை மரம் உள்ளது. கோபுர வாயிலில் பல சிற்ப செதுக்கல்கள் உள்ளன.

பிற்காலத்தில் காவிரி வெள்ளத்தாலும் மாலிக்காபூர், ஆற்காடு நவாப் போன்றவர்களின் படையெடுப்பின் காரணமாகவும் பேரழிவினைச் சந்தித்துள்ளது. தென்மேற்கு மூலையில் சிற்றாலயத்தில் உள்ள ஜேஷ்டாதேவியின் சிற்பமும் சோழர் காலம் என்பதை உணர்த்துகின்றன. கடைசியாக தஞ்சாவூர் மராட்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள உச்சிஷ்ட கணபதி ஓர் அழகிய படைப்பாகும்.

சப்த மாதர்களில் வாராகி- பூஜை செய்து மற்ற மங்கைகளுடன் வழிபட்ட தலம். காமதேனுவும், அகத்தியரும் வழிபட்டது. அதனால் பசுபதிகோவில் - பசுமங்கை என அழைக்கப்படுகிறது.

இறைவன்- பசுபதீஸ்வரர். இறைவி- பால்வளநாயகி, காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கிணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் ஐந்தாவதான அரிவை எனப்படும் தாய்ப் பருவத்தினளாக காட்சி கொடுத்த இடம்.

வராகி உபாசனை உள்ளவர்களிடம் வாதாடக்கூடாது என்பதற்கேற்ப வழக்குகளிலிருந்து விடுபடவும், எலும்பிற்கு அதிதேவதையான வராகியை வழிபட்டு உபாதை நீங்கப் பெறலாம். பஞ்சமி தினத்தன்று கிழங்கு வகைகள் சமைத்து பூசனை செய்து, விநியோகம் செய்தால் முன் வினைகள் அகலும். 5 பஞ்சமி / ஞாயிறு தினங்களில் நெய் விளக்கேற்றி தேங்காய் உடைத்து வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும்.

கோயில் பெரும்பாலும் பூட்டப்பட்டே இருக்கும், குருக்கள் மாலை நேரத்தில் மட்டுமே வருகிறார். பிற சமயங்களில் செல்வோர் கோயிலின் வடபுறத்தில் மதில் சுவற்றினை ஒட்டிய ஓர் குடிசை வீட்டில் ராஜேஸ்வரி எனும் பெண்மணியின் வீட்டில் சென்று கூப்பிட்டு வந்து திறக்க வேண்டும்.

-  கடம்பூர் விஜயன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com