Enable Javscript for better performance
கோயில்களில் பங்குனி உத்திர விழா- Dinamani

சுடச்சுட

    
    muruga

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, வெள்ளி மாவடி சேவையில் திருவீதியுலா வந்த உற்சவர்.

    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, வியாழக்கிழமை இரவு வெள்ளி மாவடி உற்சவம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
    பஞ்சமூர்த்தி ஸ்தலங்களில் மண் தத்துவத்தின் ஸ்தலமாக விளங்கும் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயிலில், பங்குனி உத்திர திருக் கல்யாணப் பெருவிழா மார்ச் 21-ஆம் தேதி தொடங்கியது. 
    இதையடுத்து, பல்வேறு விசேஷ வாகனங்களில் பகல், இரவு என அடுத்தடுத்த நாள்களில் உற்சவர் ராஜ வீதிகளில் புறப்பாடு சேவை நடைபெற்றது. இதில், 63 நாயன்மார்கள், வெள்ளித் தேர், திருத்தேர் உற்சவம் விமரிசையாக நடைபெற்றன. 
    இதைத்தொடர்ந்து, கோயிலின் மற்றொரு முக்கிய உற்சவமான, ஏகாம்பரநாதர் கோயிலின் ஸ்தல புராணத்தை விளக்கும் வெள்ளி மாவடி சேவை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது, ஏலவார்குழலி அம்மன் ஏகாம்பரநாதர் சுவாமியை வெள்ளி மாமரத்தின் அடியில் கட்டித் தழுவியபடி, மின்னொளி ஜொலிக்க எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்பு, நான்கு ராஜ வீதிகளில் திருவீதியுலா பவனி வந்து அருள்பாலித்தார். 
    ராஜவீதிகளில் வலம் வந்த போது, பல்வேறு வகையான வண்ண வாண வேடிக்கை, அதிர்வேட்டை நடத்தப்பட்டது. 
    இதையடுத்து, வெள்ளிக்கிழமை சபாநாதர் தரிசன உற்சவத்தையொட்டி, ஏலவார் குழலியம்மன் ஒக்கபிறந்தான் குளத்துக்கு எழுந்தருளி வீதி உலா மண்டகப்படி சேவை நடைபெற்றது. தொடர்ந்து, விஷேச உற்சவமான பங்குனி உத்திர திருக்கல்யாணம் இரவு நடைபெற்றது. 
    இந்த உற்சவத்தைக் காண, காஞ்சிபுரம், அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் வழிநெடுகிலும் நீண்ட நேரம் காத்திருந்து, உற்சவரை தரிசித்தனர்.
    திருத்தணியில்...
    பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, திருத்தணி முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மயில் காவடிகள், பால்குடம் எடுத்து மூலவரை வழிபட்டனர்.
    திருத்தணி முருகன் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தங்க வேல், தங்கக் கிரீடம், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. 
    தொடர்ந்து காலை, 10 மணிக்கு நகரத்தார் திருத்தணி பாத யாத்திரை அறக்கட்டளை சார்பில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், மயில் காவடிகள் எடுத்தும், 250 பெண்கள் பால்குடங்களை தலையில் சுமந்து, மலையடிவாரத்தில் உள்ள திருக்குளத்தில் இருந்து படிகள் வழியாக மலைக்கோயிலுக்கு சென்றனர்.
    பின்னர் காவடி மண்டபத்தில் உற்சவர் முருகனுக்கு, விபூதி, நாட்டு சர்க்கரை, பஞ்சாமிர்தம் மற்றும் 250 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. 
    மதியம் ஒரு மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு உற்சவர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    பங்குனி உத்திரத்தையொட்டி மலைக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். பொதுவழியில் மூலவரைத் தரிசிக்க 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு வசதியாக மலைக் கோயில் வளாகத்தில் வெள்ளை வர்ணம் பூசப்பட்டிருந்தது. 
    விழாவில் அரக்கோணம் எம்.பி. திருத்தணி கோ.அரி, முன்னாள் நகர்மன்றத் தலைவர் டி.சௌந்தர்ராஜன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் இ.என்.கண்டிகை எ.ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர். 
    இதே போல், திருத்தணி சுந்தர விநாயகர் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, உற்சவர் சிவகாமி சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில், திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    வரதராஜ பெருமாள்கோயிலில்...
     மதுராந்தகத்தை அடுத்த அரசர் கோயில் கிராமத்தில் உள்ள பெருந்தேவி உடனுறை வரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, வெள்ளிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. 
    விழாவையொட்டி, கோயில் வளாகத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது. 
    திருக்கல்யாண நிகழ்ச்சியானது, கோயில் தலைமை அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் தலைமையில், வேதவிற்பன்னர்கள் மேளதாளம் முழங்க நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் தியாகராஜன் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
    சிவா விஷ்ணு கோயிலில் திருக்கல்யாணம்...
     திருவள்ளூர் சிவா விஷ்ணு கோயிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 
    திருவள்ளூர் பூங்கா நகரில் உள்ள சிவா விஷ்ணு கோயிலில் பங்குனி உத்திர விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு திருக்கோயில் வளாகத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு பூங்குழலி அம்பிகைக்கும், புஷ்பவனேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 12.30 மணிக்கு பத்மாவதி தாயாருக்கும், சீனிவாச பெருமாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. 
    இதைத்தொடர்ந்து, பூங்குழலி அம்பிகை சமேத புஷ்பவனேஸ்வரரும், பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாளும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் சுவாமிகளை வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் மங்களப்பொருள்கள் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 
    இதேபோல், தீர்த்தீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமிக்கு பால், தேன் , தயிர், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நிகழ்வில், சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை யுகன் ஆன்மிக பக்த அறக்கட்டளையின் நிறுவனர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் செய்திருந்தனர். 
    செங்கல்பட்டு கோயில்களில்...
    செங்கல்பட்டு கோயில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரம், திருக்கல்யாண உற்சவமும் வீதியுலாவும் நடைபெற்றது. 
    செங்கல்பட்டு ராஜாஜி சாலை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், நத்தம் கைலாசநாதர் கோயில், அன்னை நகர் எல்லையம்மன்கோயில், ரத்தின விநாயகர் கோயில், ராமபாளையம், காட்டுநாயக்கன் தெருவில் செம்மலை முருகன் கோயில், மேட்டுத் தெரு செங்கழுநீர் விநாயகர் கோயில், என்ஜிஜிஓ நகர் சித்தி விநாயகர் கோயில், உள்ளிட்ட கோயில்களில் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 
    பெரிய நத்தம் பகுதியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் கமலாம்பிகை, கைலாசநாதர் திருக்கல்யாண உற்சவம் அன்னதானத்துடன் விமரிசையாக நடைபெற்றது. இதையடுத்து உற்சவமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai