Enable Javscript for better performance
வாழ்வில் திருப்பங்களை காண திருமயிலாடிக்கு வாங்க!- Dinamani

சுடச்சுட

  
  29570783_1909202405819527_910493856289218749_n

   

  நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது புத்தூர் கிராமம். இங்கிருந்து கிழக்கு நோக்கிப் பிரிந்து செல்லும் சாலையில், 2 கி.மீ. தொலைவு பயணித்தால் திருமயிலாடி எனும் சிவதலத்தையும் அங்கே உள்ள முருகப்பெருமானின் அற்புத கோலம் கொண்ட கோயிலையும் அடையலாம்.

  மயிலாடி எனப் பெயர் வந்தது எப்படி?

  மயிலாடுதுறையில் மயிலாகப் பூஜித்த அம்பிகை இங்கே மயிலாக நடனமாடியதாகக் கூறுகின்றனர். எனவே இந்தத்தலம், திருமயிலாடி என்று பெயர் பெற்றதாகச் சொல்கின்றனர். இங்கே இந்தத் தலத்தில் இறைவன் பெயர் சுந்தரேஸ்வரர். சுந்தரர் என்றால் அழகு என்று அர்த்தம்! இங்கே உள்ள விநாயகரின் பெயர் சுந்தர விநாயகர். 

  கண்வ மகரிஷி இங்கு ஆசிரமம் அமைத்து சிவபூஜையில் ஈடுபட்டார். முன்னதாக ஸ்ரீவிநாயகரையும் பிரதிஷ்டை செய்து வணங்கினாராம். இவர், ஸ்ரீசுந்தர விநாயகர் எனப் போற்றப்படுகிறார். இங்கு வந்து, ஸ்ரீசுந்தரவிநாயகர், ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆகிய இருவரையும் வணங்கி வழிபட்டால், முகத்தில் பொலிவு கூடும்!

  அசுரர் தலைவன் அபிசார வேள்வி ஒன்றை நடத்தினான். அந்த வேள்வியின் ஹோமத் தீயில் இருந்து ஜுரதேவதை வெளிப்பட்டாள். இந்திரலோகத்துக்குச் சென்றாள்.  

  அங்கேயிருந்த தேவர்கள் சிலருக்கு வெப்பு நோய் வந்தது. செய்வதறியாது திகைத்த தேவர்கள், முருகப்பெருமானை வணங்கி கோரிக்கை வைத்தனர், இதையடுத்து, பூலோகத்துக்கு வந்த முருகப்பெருமான், வில்வாரண்ய க்ஷேத்திரத்துக்கு வந்தார். 

  அன்னை பார்வதிதேவிக்குத் திருக்காட்சி தந்த லிங்கமூர்த்தம் அந்த வில்வாரண்யத்தில் இருந்தது. தனது வேலாயுதத்தால் பூமியில் குளம் ஒன்றை உருவாக்கினார் முருகக் கடவுள். அந்தக் குளத்தில் நீராடிவிட்டு, வடக்குதிசை நோக்கி அமர்ந்தபடி, சிவபெருமானை நினைத்து கடும் தவம் புரிந்தார். இந்தத் தவத்தின் பலனாக, சீதளாதேவி அங்கே பிரசன்னமானாள். சீதளாதேவி ஜுரதேவதையை அழித்தார்.

  முருகக் கடவுள் தான் தவம் செய்த திக்கான வடக்குப் பார்த்தபடி, நின்ற திருக்கோலத்தில், ஸ்ரீபாலசுப்ரமணியராக காட்சி தந்து, அருள்பாலித்து வருகிறார். இவரை  வழிபட்டால்... பில்லி, சூனியம், ஏவல் உள்ளிட்ட பிரச்சினைகள் அனைத்தும் நீங்கிவிடும். யோகமும் ஞானமும் தந்தருள்வார்.!

  இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு... 

  இங்கே ஸ்ரீபெரியநாயகி, ஸ்ரீபிரகதாம்பாள் என இரண்டு தேவியரின் சந்நிதிகள் அடுத்தடுத்து காட்சி தருகின்றன. இருவருக்கும் அபிஷேக - ஆராதனைகள் விமரிசையாக நடைபெறுகின்றன.

  ஒன்று சிதிலமானதால் சிறிய சன்னதியில் வைத்து பூஜை செய்கின்றனர், புதியவர் பெரிய சன்னதியில் பூஜிக்கப்படுகிறார். பின் திருமாளபத்தியில் விநாயகர், மற்றும் லட்சுமியின் தனி சிற்றாலயங்கள் உள்ளன. விநாயகர் அருகில் ஏழுதேவியர் வடக்கு நோக்கி பரிவாரங்களுடன் உள்ளனர். பெரிய ராகு கேது சிலைகள் வெளியில் கிடத்தப்பட்டுள்ளன. வடக்கு பகுதியில் பெரிய வன்னி மரம் உள்ளது.

  முருகன் மூலவர் பார்க்க பார்க்க அழகு இங்குள்ள உற்சவர் முருகன் சிறப்பானவர். வழக்கமாக மயிலின் மீது அமர்ந்திருப்பார் முருகக்கடவுள். இங்கு, பாதரட்சைக்குப் பதிலாக மயிலையே காலில் அணிந்திருக்கிறார் முருகன். அதாவது, அசுரனை அழித்து, அவனது ஆணவத்தை மயிலாக்கி காலின்கீழ் மிதித்தபடி காட்சி தருகிறார். இடதுகாலின் பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்குமான இடைவெளியில், தலையைத் தூக்கியபடி, முருகப்பெருமானின் அழகு ததும்பும் முகத்தையே பார்க்கிறது மயில்.

  முருகப்பெருமான் உருவாக்கிய திருக்குளம் கோயிலுக்கு எதிரே உள்ளது. சிவன் கோயிலாக இருந்தாலும் முருகன் கோயிலாகவே அறியப்படுகிறது. கார்த்திகை நாட்கள், சூரசம்ஹார விழா, பங்குனி உத்திரம் என முருகனைக் கொண்டாட திரளாக வந்த வண்ணம் உள்ளனர். சிதம்பரம் மயிலாடுதுறை சாலையில் பயணிக்கும்போது திருமயிலாடிக்கும் வாருங்கள்... திருப்பங்கள், வாழ்வில் காண்பது நிச்சயம்.

  - கடம்பூர் விஜயன்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai