வடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு வரமா? வேதனையா? மழை பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

மழை மாதம் எனப்படும் ஐப்பசி மாதம் பிறந்து 15 நாட்கள் கடந்துள்ள நிலையில் அக்டோபர் 31 முதல் வடகிழக்கு பருவமழை துவங்கியதை..
வடகிழக்கு பருவமழை தமிழகத்திற்கு வரமா? வேதனையா? மழை பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

மழை மாதம் எனப்படும் ஐப்பசி மாதம் பிறந்து 15 நாட்கள் கடந்துள்ள நிலையில் கடந்த அக்டோபர் 31 முதல் வடகிழக்கு பருவமழை துவங்கியதை அடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையில் நேற்று முன்தினம் காலையில் துவங்கிய மழை இரவு வரை தொடர்ந்தது. இரண்டாவது நாளாக நேற்றும் ஆங்காங்கே விட்டு விட்டு மழைப்பொழிவு காணப்பட்டது. தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டும் மழையால் சென்னை மற்றும் தமிழ்நாட்டிற்கும் பாதிப்பு வருமா என மக்கள் ஆர்வமுடன் ஜோதிடர்களைக் கேட்க துவங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மழை தரும் கிரஹ அமைப்புகள்:

சூரிய நீசம்

சூரியனின் உச்ச நீச்சத்திற்கேற்ப தட்பவெப்ப நிலைகள் அமைகின்றன. சூரியன் சித்திரை மாதத்தில் மேஷத்தில் பயணிக்கும் போது உச்ச ராசியில் நிற்பதாகவும் அதற்கு நேரெதிரான துலா ராசியில் ஐப்பசியில் பயணிக்கும்போது நீச நிலை அடைவதாகவும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அதனையொட்டி சித்திரையில் கடும் வெயில் மற்றும் அக்னி நக்‌ஷத்திரமும், ஐப்பசியில் அடைமழையும் பெய்கிறது. எனவே ஐப்பசி மாதம் முழுவதும் மழை தொடர்ந்துகொண்டேதான் இருக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

கிரஹனங்கள்

கடந்த  ஜூலை மாதத்தில் வெள்ளிக்கிழமை சந்திரனின் நக்ஷத்திரமான திருவோணத்தில் கிரகணம் ஏற்பட்டது அனைவரும் அறிந்ததே. சந்திரன் மற்றும் சுக்கிரனை மழைக்கான காரக கிரஹங்களாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீர் சம்மந்தப்பட்ட விஷயங்களில் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்தும் எனப் பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இயற்கை பேரிடர்கள், உற்பாதங்கள், பிரபலமானவர்கள் மரணம் ஆகியவற்றையும் ஏற்படுத்தக்கூடும் எனக் கூறுகின்றன. நீர் ராசிகளில் ராகு சுக்கிரன் வக்கிர சனி ஆகியவை நின்று கிரஹணம் ஏற்பட்டதால் கடல் சீற்றம், தொடர்மழை, வெள்ள சேதங்கள் ஆகியவையும் இந்த ஆண்டு இறுதி வரை ஏற்பட்ட வண்ணம் இருக்கும் எனப் பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

புதன் - சுக்கிரன் அருகாமை

சுக்கிரனும், புதனுக்கும் உள்ள இடைப்பட்ட தூரம் 8 டிகிரியிலிருந்து 30 டிகிரி வரை இருந்தால், அது புத சுக்கிர அருகாமை எனப்படும். இந்த நெருக்கம், ஜோதிடத்தில் பஹு வர்ஷம் எனப்படும்.

சூரியன், புதன் மற்றும் சுக்கிரன் மூவரும் எப்போதும் ஒன்றாக (சில விதிகளுக்குட்பட்டு) பயணம் செய்வர். எனவே அவர்களை முக்கூட்டுகிரகங்கள் என்பர். சுக்கிரனும், புதனும் சூரியனுக்கு முன்னும், பின்னும் எப்பொழுதும் சுற்றி வரும். சூரியன், புதன், சுக்கிரன் மூன்றும் ஒரே இராசியில் இருந்தால் மழை பொழியும். அவை மூன்றும் ஒரே நவாம்சத்தில் இருந்தால், பலத்த மழை பெய்யும். இராசியும், நவாம்சமும் நீர் சம்மந்தப்பட்டதாக இருந்தால் (கடகம், விருச்சிகம், மீனம்) மிகப் பலத்த மழைபொழியும். அதற்கிணங்கவே மழையைத் தீர்மானிக்க வேண்டும்.

சுக்கிரனும், புதனும் ஒரே இராசியிலும், ஒரே நவாம்சத்திலும் இருந்து, சுக்கிரன் செவ்வாய்க்குப் பின்னால் இருந்தால், அதிகமான மழை பொழியும். சூரியன், பூமி சம்பந்தப்பட்ட இராசியில் (ரிஷப, கன்னி இராசிகள்) இருந்தும், சந்திரன், புதன், சுக்கிரன் நீர் சம்பந்தப்பட்ட இராசி, நவாம்சத்தில் இருந்தும், அந்தச் சமயத்தில் மேற்கே வானவில் தென்பட்டாலும், நிறைய மழை பொழிவு இருக்கும்.
 
சுக்கிரனும், புதனும் எவ்வளவு அருகாமையில் உள்ளனரோ அவ்வளவு மழை பொழியும். இவற்றுக்கிடையே அதிக பட்சமாக 30 டிகிரி தூரம் இருப்பது மழை பொழிய உகந்தது. இவை அடுத்தடுத்து சஞ்சரிக்கும் போது, சுக்கிரன், புதனுக்கு முன்னால் போவது நன்மை. புதன் சுக்கிரனுக்கு முன்னால் சென்றால், மழை மேகங்கள் வந்தாலும், அவை காற்றால் வீசப்பட்டுக் கலைந்து போகும்.

நீர் ராசிகளில் நீர்கிரஹங்கள்

மழைக்கான பருவமும் அமைந்து நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிகளில் நீர் கிரஹங்களான சந்திரன் மற்றும் சுக்கிரன் பயணிக்கும் போது மழை பெய்கிறது. மேலும் நீர் ராசிகளில் நீர் கிரஹங்கள் பயணிக்கும் நீர் ராசிகளில் ஸர்ப கிரஹங்கள் முக்கியமாக ராகு, காற்று கிரஹமான சனி ஆகியவை பயணித்தால் கடும் சூறாவளி காற்று மற்றும் புயல் மழை போன்றவை ஏற்படுகிறது.

கால புருஷ எட்டாவது ராசி

கால புருஷ எட்டாவது ராசி மற்றும் நீர் ராசியான விருச்சிகத்தில் கிரஹங்கள் கடக்கும்போது அந்தந்த கிரஹங்களின் காரகத்திற்கேற்றார்போல் இயற்கை பேரிடர்கள் மற்றும் மக்களைப் பாதிக்கும் நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இதனையொட்டியே பல அசம்பாவிதங்கள் கார்த்திகை மாதத்தில் அரங்கேறிவிடுகின்றன.

இந்த வருடத்திற்கான மேகம் துரோண மேகம்

இந்த விளம்பி வருடத்திற்கான மேகம் துரோண என்று பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேகாதிபதி சுக்கிரனாகி மேகங்கள் தென்கிழக்கில் உருவாகி துரோண மேகம் என்ற பெயருடன் கடுமையான மழையும் அதனால் வெள்ளப்பெருக்கும் ஏற்படும் என ப்ருஹத் சம்ஹிதை போன்ற பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

ஒன்பது விதமான மேகத்தின் தன்மைகள் அந்தந்த ஆண்டின் மழையை தீர்மானிக்கிறது. அதன்படி இந்தாண்டு புயலுடன் கூடிய கடும் மழை பெய்து வெள்ள அபாயமும் ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.  தற்போது வடகிழக்கு பருவநிலை தீவிரமடைந்து இதை உறுதிப்படுத்துவண்ணம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

1. தமோ மேகம் - அபரிமிதமான மழை தரும்.

2. வாயு மேகம் - குறைந்த மழை. பஞ்சம் நிலவும்.

3. வாருண மேகம் - பரவலான, மிகப் பலத்த மழை.

4. நீல மேகம் -  கலப்படமான நிலை. ஒரு இடத்தில் நல்ல மழையும், மற்றொரு இடத்தில் பொய்க்கும்.

5. காள மேகம் - புயலுடன் கூடிய மழை.

6. துரோண மேகம் - கடுமையான பேய் மழையும், வெள்ளமும்.

7. புஷ்கல மேகம் - பலத்த மழை.

8. சங்க வர்த்த மேகம் - குறைந்த மழையும், பலத்த காற்றும்.

9. ஆவர்த்த மேகம் -  பூமியை நனைக்கும் சொற்பமான மழை.

கார்கடக சந்திரயோகம்

கார்த்திகை மாதத்தில் கடகத்தில் சந்திரன் பயணிக்கும் காலத்தை கார்கடக சந்திர யோகம் எனப்படுகிறது. முக்கியமாக சந்திர பகவான் சனியின் சாரமான பூச நக்‌ஷத்திரத்தில் பயணிக்கும்போது கல்லையும் துளைத்துவிடும் அளவு வேகம் கொண்ட மழை பெய்யும் எனச் சாஸ்திரங்களில் கூறப்படுகிறது.

இன்னும் மழை தொடருமா? 

மேற்கண்ட கிரஹ அமைப்புகளைக் கொண்டு பார்க்கும் போது இதுவரை தமிழ்நாட்டில் பருவ மழையே ஆரம்பிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். இந்த ஆண்டின் இறுதி வரை மழை தொடரும் என  எதிர்பார்க்கலாம். எனவே இந்த ஆண்டு விருச்சிகத்தில் சுக்கிரன், சந்திரன் போன்ற கிரஹங்கள் பயணிப்பது மற்றும் பஹு வர்ஷம் எனப்படும். புத சுக்ர சமிபம் ஏற்படுவது போன்றவை எதிர்பாராத அளவில் கனமழை ஏற்படுத்த வாய்ப்புள்ளதைத் தெரிவிக்கின்றது.

இந்த ஆண்டின் இறுதி வரை அதிக மழை பொழிய வாய்ப்புள்ள நாட்கள்

13/11/2018 - சூர ஸம்ஹாரம் முன்னும் பின்னும் மூன்று நாட்கள்

17/11/2018 - முடவன் முழுக்கு

22/11/2018 - திருவண்ணாமலை கார்த்திகை தீபம்

26/11/2018 - கார்கடக சந்திர யோகம்

27/11/2018 - கார்கடக சந்திர யோகம்

16/12/2018 - பிரளய கல்பாதி  பிரளயத்திற்கொப்பான மழை பெய்யும். முன்னும் பின்னும் மூன்று நாட்கள் வரை மழை பெய்யும்

28/11/2018  முதல் 30/01/2019 வரை - பஹு வர்ஷம் (புத சுக்ர இணைவு)

இவை தவிர திருவண்ணாமலை கார்த்திகை தீப கொடியேற்றம், கார்த்திகை சோம வாரங்களில் சங்காபிஷேகம் ஆகிய தினங்களில் மழை பெய்யும். மேலும் இந்த வருடத்தின் மந்திரியாகத் தர்ம கர்மாதிபதியான சனைச்சரபகவான் விளங்குவதால் தர்மத்தை நிலைநாட்டும் விதமாக மழையை அருள்வார் எனக் கூறினால் மிகையாகாது. கால புருஷ எட்டாம் வீட்டில் தர்மாதிபதி குருவும், இந்தியாவின் ஜாதகத்தின் எட்டாம் வீட்டில் கர்மாதிபதி சனியும் நிற்பதால் தர்ம சாஸ்தாவின் சீற்றத்தையும் இந்த ஆண்டு காணும் நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

யதா யதா ஹி தர்மஸ்ய க்ளானிர் பவதி பாரத 

அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்

பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்

தர்ம ஸம்ஸ்தாப னார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே...!

எனவே இந்த ஆண்டின் இறுதி வரை மழைக்காலங்களுக்கான முன்னேற்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். மேலும் தற்போது பெய்துவரும் கனமழையை சேமிக்கும் விதமாக நாமும் நமது சுற்றுச்சூழலை பேனிகாத்து நீராதாரங்களை பெருக்கிக்கொள்வது வரும் ஆண்டின் நீர்தேவையை பூர்த்தி செய்யும் விதமாக அமையும்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com