கோடீஸ்வரனாகனுமா? கோவத்ஸ துவாதசியில் கோ பூஜை செய்யுங்க!

நாளை (4/11/2018) ஞாயிற்றுக்கிழமை கோவத்ஸ துவாதசி விரதம் அனுஷ்டிக்கப்டுகிறது. ஐப்பசி மாத கிருஷ்ணபட்சத்தில் வரும்..
கோடீஸ்வரனாகனுமா? கோவத்ஸ துவாதசியில் கோ பூஜை செய்யுங்க!

நாளை (4/11/2018) ஞாயிற்றுக்கிழமை கோவத்ஸ துவாதசி விரதம் அனுஷ்டிக்கப்டுகிறது. ஐப்பசி மாத கிருஷ்ணபட்சத்தில் வரும் துவாதசிக்கு கோவத்ஸ துவாதசி என்று பெயர். இந்த நாளில் பசு கன்றுக்குட்டி இரண்டையுமே நன்றாகக் குளிப்பாட்ட வேண்டும். பசு கன்று இரண்டையுமே சந்தனம் குங்குமம் இட்டுப் பூ வைத்து அலங்கரிக்கவேண்டும். பசுவுக்குத் தீவனம் வைக்க வேண்டும். அகத்திக்கீரையும் கொடுக்கலாம்.

'கோ' என்றால் பசு. “வத்ஸ”  என்கிற வார்த்தைக்கு மகன் அன்புக்குரிய என அர்த்தம். அதாவது பசுவை அன்புடன் கொண்டாட வேண்டி வழிபட வேண்டிய நாள் இது. தனியாக இல்லை. அதன் கன்றோடு சேர்த்து வழிபட வேண்டும். பசுக்களில் நான் காமதேனு என்கிறான் பகவான் கீதையில். அந்தப் பசுவை கன்றுடன் பூஜித்து பகவானின் அனுக்கிரகத்தைப் பெற வேண்டிய தினம் இந்த கோவத்ஸ துவாதசி. 

ஐப்பசி மாத கிருஷ்ணபக்ஷ துவாதசி

விரதங்களில் முதன்மையானதும் மகிமை வாய்ந்ததுமாகக் கருதப்படுவது கோவத்ஸ துவாதசி விரதமாகும். இந்த நாளில் பசுக்களுக்கு பூஜை செய்து அகத்திக்கீரையை அளித்தால் லட்சுமி கடாட்சம் கண்டிப்பாக நமக்குக் கிட்டும். இந்நாளில் அன்னதானம் செய்தால் நன்மைகள் பல கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த ஒரு நாள் மட்டுமாவது கன்றுக்குட்டியைக் கட்டாமல் தாயிடம் நன்றாகப் பாலருந்தவிட வேண்டும். எப்போதும்போல கொஞ்சம் பாலருந்தியவுடன் பிடித்துக்கட்டுவதுபோல் செய்யக்கூடாது என்பது முக்கியம். மேலும் இன்று பசுவிடமிருந்து பால் கறக்கவும் கூடாது. தவிர இந்த நாளில் நாம் பசுவிடமிருந்து கிடைக்கும் பொருட்களான பால், தயிர், மோர், நெய், வெண்ணெய் உள்ளிட்ட எந்தப் பதார்த்தத்தையும் பயன்படுத்தக்கூடாது. ”கோக்ஷீரம் கோக்ருதம் சவ ததி தக்ரம் ச வர்ஜயேத்” என்று இதற்குத் தடை விதிக்கிறது நிர்ணயஸிந்து!

கோமாதா

நமது நாட்டில் ‘கோ’ எனும் பசு மாட்டைத் தாயாகவும், கடவுளாகவும் வணங்குகின்றோம். பசுவானது தன்னுடைய கன்றுக்கும் பால் கொடுத்து உலகத்திற்கும் பால் கொடுப்பதால் கோமாதாவாகவும், பசுமாட்டின் எல்லா உறுப்புகளிலும் இந்திரன் முதலான தேவதைகள் இருப்பதால் கடவுளாகவும் வணங்குகிறோம். பழைய காலத்தில் ஒரு பழமொழி இருந்தது. “பெண்ணாகப் பிறந்தால் பசுவாகப் பிறக்க வேண்டும்” ஏனென்றால் பால்சுரக்கும் வரையாவது ஒருவரின் ஸம்ரக்ஷணையில் பூஜை புனஸ்கார மரியாதைகளுடன் வாழ்க்கையைக் கழிக்கலாம். ஆகையால் கோ பூஜை, தானம், சேவை முதலானவை நமது நாட்டின் பண்பாடாகவே அமைகின்றது.

கோ தானம்

உயிருடன் தானம் செய்யக்கூடிய ஒரே ஒரு பிராணி பசுமாடு மட்டுமே ஆகும். சுத்தம் செய்யக்கூடிய கழிவுப்பொருள் பசுவினது கோமயம் மட்டுமே ஆகும். கோவதம் என்கிற பசுவினைக் கொல்லும் செயல் பிராயச்சித்தம் இல்லாத ஐந்து மஹா பாபங்களில் ஒன்றாகும். “தாய் – மாத்ரு” “சிசு = குழந்தை” “ப்ராஹ்மணன்” “கரு” ஆகியவற்றை நாசம் செய்தால் அதற்குப் பரிகாரம் இல்லை. அதைப்போல் பசுவைக் கொன்றாலும் அந்தப் பாபத்திற்கு பிராயச்சித்தம் இல்லை.

கோபூஜை

இவ்வளவு குணங்கள் உடையப் பசுமாட்டினை நாம் கடவுளாக வணங்குவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. முதல் கன்று பிரசவித்தவுடன் அதற்கு “கோ” என்று பெயர் கிடையாது. அதற்கு “தேனு” என்று பெயர். “தேனுர் நவப்ரஸுதிகா” என்று அமரகோசத்தில் குறிப்பிட்டுள்ளது. தானத்திற்கோ பூஜைக்கோ தேனுவை உபயோகப்படுத்துவதில்லை என்ற பழக்கம் நடைமுறையில் உள்ளது.

ஆகவே இரண்டாவது கன்றினை ஈன்ற பசுவான “கோ”வை பூஜிப்பதும், தானம் செய்வதும் அஷ்டலக்ஷ்மி கடாட்சத்திற்கும், எல்லாப் பாபங்களையும் போக்குவதற்கும் மிகச் சிறந்த பிராயச்சித்தமாகப் பல தர்ம சாஸ்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது. தமிழ்ப் பண்டிகையான பொங்கலன்று அதாவது மாட்டுப்பொங்கல் நாளன்று கோ பூஜை செய்வது வழக்கமாக நடைமுறையில் இருக்கிறது. பண்டிகை இல்லாமல் காம்யமாகவே கோ பூஜை செய்யலாம்.

கோதானம்

சாஸ்திரங்களில் பலவித தானங்கள் சொல்லப்பட்டிருந்தாலும், பசு தானம் மிகச் சிறப்பிக்கப்படுகிறது. ஒருவரின் வருடப்பிறப்பிலும், ஜென்ம நக்ஷத்திரத்திலும் கோதானம் செய்வதும், கோபூஜை செய்வதும்  மேன்மை தரும் பசுதானம் செய்பவர்களுக்குக் கயிலையில் சிவகணங்களுடன் சிவதரிசனம் செய்யும் பாக்கியம் கிட்டும்.

கோசாலை உள்ள கோவில்களுக்கு பால் கறக்கும் பசுவையும் கன்றினையும்  அளித்தால் கோடி புண்ணியம் கிட்டுவதுடன், அவர்களது வாரிசுகளுக்கும் புண்ணியம் கிட்டும். பசுவையும் கன்றையும் ஓராண்டு பராமரிப்பதற்கான பணத்தைக் கொடுப்பதும் சாலச் சிறந்தது.

பசுவும் தெய்வமே

பசுவின் கொம்புகளில் பீமனும் இந்திரனும், காதுகளில் அசுவினி குமாரர்களும், கழுத்து, தாடைப்பகுதிகளில் ராகு - கேதுவும், இரண்டு கண்களில் சூரிய சந்திரர்களும், மூக்கின் மேல் பகுதியில் விநாயகரும் முருகனும், முன்னிரண்டு கால்களில் பைரவரும் அனுமனும், முகப்பகுதியில் சிவபெருமானும், கழுத்து முதலான பகுதிகளில் பாரத்வாஜர், குபேரன், வருணன், அக்னி, பிரம்மன், கங்காதேவி, நாரதர், வசிஷ்டர், ஜனக குமாரர்கள், பூமாதேவி, சரஸ்வதி, விஷ்ணு, பராசரர், விஸ்வாமித்திரர், அமிர்தசாகரமும், வால் பகுதியில் நாகராஜனும், முன்குளம்புப் பகுதியில் விந்தியம், இமாச்சலபர்வதங்களும், பின்கால் பகுதியில் மந்த்ராசலம், துரோணாசல பர்வதங்களும், மடியில்அமிர்தசுரபி கலசமும், பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமியும் வசிப்பதுடன், இன்னும் பிறதேவர்களும் பசுவின் உடலில் வாசம்செய்வதாக ஐதீகம். ராமபிரான் பூமியில் அவதரிக்க மூலகாரணமே கோ பூஜை தான் என்கிறது புராணம். 

கோதூளி லக்னம்

சாயங்காலத்தில் கோக்கள் மந்தையாக மேய்ந்து முடிந்து கொட்டிலுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது அவற்றின் குளம்படியிலிருந்து பெரிசாகப் புழுதிப் படலம் கிளம்பும். அந்தப் புழுதி உடம்பு முழுவதும் படும்படி நின்றால் அதை புண்ய தீர்த்த ஸ்நானத்துக்கு மேலாகச் சொல்லியிருக்கிறது முகூர்த்த சாஸ்திரம். பசுவின் கழுத்தில் மணி கட்டி இருக்கும். அந்த மணி சத்தத்துடன் வயிறார உண்ட மகிழ்ச்சியுடன் மண் “தூசி” பறக்க தன் இருப்பிடம் வந்து சேரும் நேரம் அஸ்தமன கால கோதூளி லக்னம் எனப்படும். இந்த நேரம் மகாலட்சுமி வரும் நேரம் என்பார். 

அஸ்தமன கால கோதூளி லக்னம் சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்ததாகும். இந்த மஹாலட்சுமி நேரம் கோதூளி லக்னம் எனும் கோதூளி முகூர்த்தத்தில் வீட்டைச் சுத்தம் செய்து நாமும் சுத்தமாக முகம் கை, கால் அலம்பி விளக்கேற்றிவைத்து ஊதுபத்தி மணம் பரப்பி மகாலக்ஷமியின் ஸ்தோத்திரங்கள், ஸ்ரீ அன்னபூர்னாஷ்டகம், சப்த கன்னி தேவியர் ஸ்தோத்திரங்கள் ஆகியவை படித்து ஸ்ரீமகாலக்ஷமியை வரவேற்பது தாரித்திரியத்தை போக்கி சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

கோதூளி லக்னத்தில் கோ பூஜையினால் தரித்திரம், துக்கம் விலகுகின்றன. கோ பூஜை செய்து வந்தால் வியாபாரம் விருத்தியடையும். நிலையான லாபம் கிட்டும். பசுவின் உடலில் சகல தேவர்களும், ஐஸ்வரியம் இருக்கிறது என்று நம் வேத சாஸ்திரம் கூறுகிறது. இந்த நேரத்தில் எல்லாச் சுப காரியங்கள் செய்யலாம். கிரக தோஷம் எதுவும் செய்யாது. எனவே இந்த கோவத்ஸ துவாதசியில் கோ பூஜை செய்து வாழ்வில் அனைத்துச் செல்வங்களையும் குறைவிலாமல் பெறுவோமாக!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com