விரும்பிய யாவற்றையும் பெற வேண்டுமா? அனுஷ்டியுங்கள் கேதார கெளரி விரதம்!

ஐப்பசி அமாவாசையான கேதார கெளரி தினத்தில் பார்வதி சமேதரான
விரும்பிய யாவற்றையும் பெற வேண்டுமா? அனுஷ்டியுங்கள் கேதார கெளரி விரதம்!

ஐப்பசி அமாவாசையான கேதார கெளரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபட வேண்டும். ஆண்களும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

அன்றைய தினம் நோன்பிருப்பவர்கள் நாள் முழுவதும் உபவாசமிருந்து ஓம் நமசிவாய மந்திரம் ஜெபித்து, அர்த்தநாரீஸ்வரராய், சிவசக்தி சொரூபனாய் முக்கண் முதல்வனை, முப்புரம் எரித்தானை, முத்தலை சூலம் ஏந்தினானை மனதில் தியானம் செய்து மாலை பிரதோஷ காலத்தில் நோன்பை முடிக்க வேண்டும்.

அம்பிகையாலேயே அனுஷ்டிக்கப்பட்டது என்ற சிறப்புடையது இந்த நோன்பு. "கேதார கௌரி விரதத்தை மேற்கொள்பவர்கள் விருப்பங்களை நிறைவேற்றி அருள்பாலிக்க வேண்டும்' என்று தேவி இறைவனிடம் வேண்ட, இறைவனும் அவ்வாறே வரமருளினார். அதன்படியே இவ்விரதம் அனுஷ்டிப்பவர்கள் விருப்பங்கள் நிறைவேறி நலம்பெறுவர். நாமும் ஈசனை இன்று [07-08-18] கேதார கெளரி தினத்தில் வழிபட்டு நலம் பெறுவோம்.

பிருங்கி என்ற மகரிஷி வண்டின் உருவம் பெற்று, பரமேஸ்வரனுக்கும், பார்வதி தேவிக்கும் இடையில் சென்று (பார்வதி தேவியை வணங்காது) பரமேஸ்வரனை மட்டுமே 3 தடவை வலம் வந்து பயபக்தியோடு வணங்கிய நிகழ்வானது சக்தி ரூபமான பார்வதி தேவியை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. சிவனும் சக்தியும் ஈருடலாக (தனித்தனியாக) காட்சி தருவதனாலேயே இத்துன்பம் நேர்ந்தது என்பதை உணர்ந்த பரமேஸ்வரி ஈருடலும் ஓருடலாக தோற்றமளிக்கும் வரம் வேண்டி, சிவனை விட்டுப் பிரிந்து பூலோகம் சென்றார். பார்வதிதேவி பூலோகத்திலிருந்து சிவனை நினைந்து விரதமிருந்து, வழிபட்டு அதன் பலனாக சிவபெருமானின் (இடது பக்க) பாதியுடல் பெற்று, அர்த்தநாரிஸ்வரியாகவும், அர்த்த நாரீஸ்வரராகவும் ஒன்றாகிய விரதமே கேதார கௌரி விரதமாகும்.

"கேதாரம்" என்பது இமயமலைச் சாரலில் உள்ள ஒரு சிவதலம். இத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனை நினைத்து பார்வதி தேவியாகிய "கௌரி' இவ்விரதத்தினை மேற்கொண்டதால் இப்பெயர் உண்டாயிற்று. இத்தகைய சிறப்பு வாய்ந்த விரதத்தினை பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார். இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார்.

இவ்விரதத்தின் மகிமையை இதுதான் என யாராலும் வரையறுத்துக் கூற இயலாது. இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும். வறுமையொழியும், நினைத்த காரியம் கைகூடும் என்பது அனுபவ உண்மை.

இந்நாளில் அம்பிகை சிவனை நோக்கி “எம்பெருமானே இவ்விரத்தை உலகில் யார் செய்தாலும் விரும்பிய யாவற்றையும் பெறுவதற்கு அருள் புரியவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். சிவன் அம்பிகையின் வேண்டுகோளை ஏற்று, அவ்வாறே ஆகுக என்று அருள் புரிந்தார்.

எனவே நாமும் அரிய இந்த நோன்பினை நோற்று பரம்பொருளின் பூரண கடாட்சத்தினைப் பெற்று "வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோமாக!.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com