திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்தார் மயில்வாகனன்! 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி முக்கிய..
திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்தார் மயில்வாகனன்! 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

கோயில் கடற்கரையில் நடைபெற்று வரும் இந்நிகழ்வை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 8-ம் தேதி  விழாயக்கிழமையன்று கந்த சஷ்டி விழா காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு கோயில் நடை அதிகாலை ஒரு மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு  உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, அதிகாலை 4 மணிக்கு காலசந்தி பூஜை நடைபெற்றது. வைர கிரீடம், தங்க அங்கி அணிந்து சர்வ அலங்காரத்தில் காட்சியளித்த மூலவரை விரதமிருக்கும் பக்தர்கள் கடலில் புனித நீராடியும், அங்கப்பிரதட்சிணம், அடிப்பிரதட்சணம் செய்தும், காவடி எடுத்தும் தரிசனம் செய்து வருகின்றனர்.

இன்று காலை 6 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளினார். அங்கு ஹோமங்கள் நடந்து, சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. மதியம் மூலவரான சுப்பிரமணியருக்கு சஷ்டி சிறப்பு தீபாராதனையும், உச்சிகால தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர், யாகசாலையில் இருந்த ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனையாகி, சுவாமி அம்பாளுடன் தங்கச்  சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாசம் வந்தார். அங்கு மகா தீபாராதனை நடைபெற்றது. 

பின்னர் சுவாமி ஜெயந்தி நாதர் திருவாவடுதுறை ஆதீன கந்த சஷ்டி மண்டபத்துக்கு வந்து, அங்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சர்வ அலங்காரமாகி மாலை 4.30 மணிக்கு தங்க மயில் வாகனத்தில் சூரசம்ஹாரத்துக்குப் புறப்பட்டார். முன்னதாக, சூரபத்மன் தனது பரிவாரங்களுடன் மேலக் கோயிலான சிவன் கோயிலிலிருந்து புறப்பட்டு உள், வெளி மாடவீதிகள் மற்றும் ரதவீதிகள், சந்நிதித் தெரு  வழியாக கோயில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார். 

மாலை 4.55 மணிக்கு கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதற்கு பின், 5.05 மணிக்கு ஆணவம் அடங்காத சூரபத்மன் சிங்கமுகமெடுத்து அமைதியின் திருஉருவமான முருகப்பெருமானை மூன்று முறை சுற்றி வந்து போர் புரிந்தார். முருகன் தனது வேலால் சிங்கமுக சூரனை வதம் செய்தார்.

இறுதியாக 5.20 மணிக்கு சூரபத்மன் தனது சுயரூபத்துடன் போர் புரிய வந்தார். அவரை முருகப்பெருமான் வதம் செய்தார். அதன்பிறகும் ஆணவம் அடங்காத சூரபத்மன் கடைசியாக மாலை 5.35 மணிக்கு மாமரமாக உருவெடுத்து மீண்டும் போருக்கு வந்து, சூரபத்மனின் ஆணவத்தை ஆட்கொண்டு அவரை சேவலாகவும், மயிலாகவும் உருமாறச் செய்து அவரை சூரசம்ஹாரம் செய்தார்.

ஒவ்வொரு முறையும் முருகப்பெருமான் சூரபத்மனிடம் போர் புரியும் போது வானில் கருடன் வட்டமிட்டதைக் கண்ட பக்தர்கள், பக்திப் பரவசத்தில் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்ற பரவசம் பொங்க கோஷம் எழுப்பி முருகப்பெருமானை வழிபட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com