சுடச்சுட

  

  கார்த்திகை தீபத்திருநாளில் விளக்கேற்றிக் கொண்டாடுவது ஏன் தெரியுமா?

  Published on : 21st November 2018 03:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Karthigai-deepam

   

  கார்த்திகை மாத பௌர்ணமி நாளும், கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் இல்லங்களிலும், கோயில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுவது தீபத் திருநாளாகும். கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களை விடவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு நாளாகும். கார்த்திகை தீபத் திருநாளில் மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றி மக்கள் அனைவரும் கொண்டாடும் நன்னாளாகும். 

  கார்த்திகை தீப கொண்டாட்டம் ஏன்?

  படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும், காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பல வருடங்கள் போரிட்டனர். இவர்களின் கர்வத்தை அடக்க எண்ணிய சிவபெருமான் இவர்கள் முன் ஜோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும், முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. ஜோதியின் முடியைக் காண அன்னப்பறவை வடிவம் கொண்டு சதுர்முகப் பிரம்மன் விண்ணுலகம் சுற்றினார். அடியைக்காண திருமால், வராக அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அடிமலரடியைத் தேடினார்.

  அடிமுடி காணமுடியாத பரம்பொருளாக விளங்கினார் எம்பெருமான். அதனால் இருவரும் சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட ஜோதியை எல்லோரும் காணும்படி காட்சியருள வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். சிவபெருமான், திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜோதிப்பிழம்பாக காட்சியருளினார். முழுமுதற்கடவுள் சிவபெருமானே என்ற நோக்கில் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

  கார்த்திகை தீப விழாவின் முதன்மையான நிகழ்வு சொக்கப்பனை ஏற்றுதல். பனை மரத்தை பூலோக கற்பக விருட்சம் என்றும், பொற்பனை என்றும் சிறப்பிப்பார்கள். அதை அக்னியின் வடிவம் என்பார்கள். கார்த்திகை தீப நாளில் பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன்னுள்ள முற்றத்தில் வெட்டவெளியில் நடுவார்கள். அதைச் சுற்றி 10 அல்லது 15 அடி உயரத்திற்குப் பனை ஓலைகளைக் கொண்டு கூம்பு போன்று அமைப்பார்கள். மாலையில் ஆலயங்களின் உச்சியில் தீபம் ஏற்றியதும், பஞ்ச மூர்த்திகளுக்குத் தீபாராதனை செய்து, கோவிலுக்கு முன்புறம் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் கூம்புகளுக்கு முன்பாக எழுந்தருளச் செய்வார்கள். பின்னர், சுவாமிக்குத் தீபாராதனை செய்து, அந்தச் சுடரால் இந்த சொக்கப்பனைகளைக் கொளுத்துவர். சுடர் வேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரியும். அந்த ஜோதியை சிவனாகவே எண்ணி வழிபடுவார்கள். இது, அக்னி மய லிங்கமாகும்.

  கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலையில் வீடுகளிலும், ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்னியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் (யாகத்தீயில் தேவர்களுக்காகப் போடப்படும் சாதம்) அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்தசி, பௌர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாகத் தீபம் ஏற்ற வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai