திருக்கணித பஞ்சாங்கபடி இன்று பெயர்ச்சியாகிறார் குருபகவான்! 

திருக்கணித பஞ்சாங்கபடி இன்று (11-10-2018) குரு பகவான்  துலா ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
திருக்கணித பஞ்சாங்கபடி இன்று பெயர்ச்சியாகிறார் குருபகவான்! 

திருக்கணித பஞ்சாங்கபடி இன்று (11-10-2018) குரு பகவான்  துலா ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார். வாக்கிய பஞ்சாங்கபடி கடந்த அக்டோபர் 4-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு அனைத்து சிவாலயங்கள், குரு பரிகாரஸ்தலங்களிலும் சிறப்பு பரிகார பூஜைகள் நடத்தப்பட்டது. 

நவக்கிரகங்களில் சுபக்கிரகமாக விளங்கும் குருபகவான் தனுர் மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதியாகவும், கடக ராசியை உச்சம் பெறும் வீடாகவும், மகர ராசியை நீசம் பெறும் வீடாகவும் கொண்டவர். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி குருபகவானின் ஆதிக்கம் நிறைந்த நட்சத்திரங்களாகும். மேலும் குரு பகவான் புத்திர காரகனாகவும் தன்காரகனாகவும் விளங்குவதால் வாழ்வில் ஒருவன் சிறப்புகள் பெற வேண்டுமானால் குருபகவானின் அருட்பார்வை நிறைந்திட வேண்டும். 

குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர். குரு ஒன்பது கோள் தேவதைகளில் ஐந்தாம் இடத்தைப் பிடித்ததோடு ஐந்தாம் பாவமான புத்திரகாரகன் என்ற அந்தஸ்தை பெறுபவர் குருபகவான் ஆகும். குருவுக்கு அதிதேவதை இந்திரன். பிரத்யதி தேவதை பிரம்மதேவன். ஒருவருடைய ஜாதகத்திலுள்ள கிரக தோஷம் குருபகவானின் பார்வையினால் விலகுகிறது. அதனாலேயே ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று ஜோதிட சாஸ்திரத்தில் சிறப்பாகக் கூறப்படுகிறது. 

தேவ குருவாக இந்திர சபையில் வீற்றிருக்கும் இவர் கல்வியில் சிறந்தவர், நுண்ணறிவு மிகுந்தவர், சாத்வீக குணம் மிகுந்தவர். மங்களமே வடிவானவர். சர்வ வியாபகர். வாக்குக்கு அதிபதி, இந்திரன் முதலானவர்களின் வழிபாட்டிற்கு உரியவர். திருமால் முதலானவர்களால் புகழ் பெறுபவர், வஜ்ராயுதம் கொண்டவர், கற்பகம் போல வேண்டியவற்றை அருள்பவர். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல ஓராண்டு காலமாகும். ஒருவருடைய ஜாதகத்தில் குரு உச்சம் பெற்றாலும் ஆட்சிபெற்றாலும் அந்த ஜாதகனுக்கு நல்லொழுக்கம், சாஸ்திர ஆராச்சி, தர்ம சிந்தனைகள் ஏற்படும் என்பது சாஸ்திர விதியாகும்.

தன்னைப் பணிந்து விரதமிருந்து வழிபடும் அடியவர்க்கு அவரவர் வேண்டும் வரங்களைத் தந்து, குற்றங்களைக் களைந்து ஆபத்துக்களைப் போக்கி, நோய் நொடிகளை அகற்றி வேண்டிய செல்வங்களையும் கெளரவத்தையும், நல்ல சந்ததி ஏற்பட சற்புத்திர பாக்கியத்தையும் தருபவர் குருபகவான். 

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் போது புஷ்கரம் நடைபெறுகிறது. இன்று நிகழும் புஷ்கரமானது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா புஷ்கரமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இடத்தில் புஷ்கரம் நடத்தப்படும். அதன்படி இந்தாண்டு விருச்சிக ராசி என்பதால், நெல்லை தாமிரவருணியில்  புஷ்கரம் நடைபெற்று வருகின்றது. 

திட்டை, ஆலங்குடி உள்ளிட்ட பிரசித்தி பெற்ற குருபகவான் கோயில்களில் அக்டோபர் 4-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா பெரும் விமரிசையாக வழிபாடு செய்யப்பட்டது. 

குருப் பெயர்ச்சியின் மூலம் நன்மை பெறும் ராசிகள்:

மீனம், ரிஷபம், கடகம், துலாம், மகரம்

குருப் பெயர்ச்சி பரிகாரத்தின் மூலம் பயன்பெறும் ராசிகள்:

மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com