Enable Javscript for better performance
கே.சி.எஸ் ஐயர் கணித்த குருப்பெயர்ச்சி பலன்கள்: (சிம்மம் முதல் விருச்சிகம்)- Dinamani

சுடச்சுட

  

  கே.சி.எஸ் ஐயர் கணித்த குருப்பெயர்ச்சி பலன்கள் 2018: (சிம்மம் - விருச்சிகம்)

  Published on : 12th October 2018 11:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  guru_bhagavan

   

  தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் (சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம்) ஆகிய நான்கு ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயனடைவோம். 

  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

  11.10.2018 முதல் 11.04.2019 வரை உள்ள காலகட்டத்தில் உடல் ஆரோக்கியம் மேம்படும். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் இணக்கமாக இருப்பார்கள். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். நெடுநாட்களாகத் தள்ளிப்போயிருந்த குடும்ப பாகப் பிரிவினை சாதகமாக முடிவடையும். பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும். தர்மகாரியங்களுக்காகவும் சிறிது செலவு செய்வீர்கள். உங்கள் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும். எதிரிகளின் முட்டுக் கட்டைகளைத் தகர்த்தெறிந்து வளர்ச்சி அடைவீர்கள். 

  சமுதாயத்திலும் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். மந்தமாக நடந்து வந்த விஷயங்கள் வேகமாக நடக்கத் தொடங்கும். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றுவார்கள். பேச்சில் கண்ணியம் நிறைந்து காணப்படும். மனதில் இருந்த சோர்வு அகன்று தெளிவுடன் காணப்படுவீர்கள். தடைப்பட்டு வந்த திருமணம் கைகூடும். செல்வமும் செல்வாக்கும் கூடும். புதியவர்களும் முக்கியமான பொறுப்புகளை உங்களுக்கு வழங்குவார்கள். உங்கள் அந்தஸ்து உயரக் காண்பீர்கள்.

  12.04.2019 முதல் 12.08.2019 வரை உள்ள காலகட்டத்தில் எதிர்ப்புகளை தனக்கு சாதகமாக்கி அதில் வெற்றி பெற்று பெயர் புகழ் பெறுவீர்கள். எந்தச் செயலையும் பிறகு செய்து கொள்ளலாம் என்று ஒத்திப் போடாமல் உடனுக்குடன் செய்து முடிக்கவும். பயணங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். உடல் ஆரோக்கியத்தில் சிறிது குறை ஏற்பட்டாலும் உடனுக்குடன் வைத்தியம் செய்து கொண்டால் சரியாகிவிடும். எவரையும் பகைத்துக் கொள்ளாமல் சாதுரியமாகப் பேசிப் பழகவும். எவருக்கும் வாக்கு கொடுப்பதோ அல்லது முன்ஜாமீன் போடுவதோ இந்தக் காலகட்டத்தில் கூடாது. வம்பு வழக்குகளிலிருந்து ஒதுங்கி இருக்கவும். எவரையும் ஓரளவுக்கு மேல் நம்ப வேண்டாம்.

  13.08.2019 முதல் 05.11.2019 வரை உள்ள காலகட்டத்தில் நீங்கள் நினைத்ததுபோல் துரிதமாக காரியங்கள் நடக்கும். உங்கள் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கலாம். உங்கள் தெளிந்த சிந்தனைகளால் பிறருக்கு தகுந்த அறிவுரைகளை வழங்குவீர்கள். உங்களைச் சார்ந்தவர்களுக்கும் நம்பிக்கை கூட்டுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உபரி வருமானத்தை வருங்காலச் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். புதிய வாய்ப்புகளை நன்கு ஆராய்ந்து தேர்வு செய்வீர்கள். அதிக ஆசைப்பட்டு ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபட வேண்டாம். பழைய வழக்குகள் முடிவதில் காலதாமதமாகும்.

  உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பினால் அனைத்து இடையூறுகளையும் தாண்டி வந்து விடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு வரும். கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு பலன் அடைவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். கொடுக்கல் வாங்கல்கள் சாதகமாக முடியும். விவசாயிகள் விளைச்சலைப் பெருக்கி லாபத்தை அள்ளுவீர்கள். உரங்களுக்கும் பூச்சிக்கொல்லி மருந்துக்கும் அதிக செலவு செய்வீர்கள். விவசாயப் பணியாளர்களை அரவணைத்துச் செல்லவும். கால்நடைகளால் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள்.

  அரசியல்வாதிகள் சிரமப்படாமல் காரியமாற்றலாம் என்று நினைத்து செயலில் இறங்குவது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கொப்பானது. கட்சித் தலைமையிடம் கவனமாக இருக்கவும். கலைஞர்களுக்கு சக கலைஞர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதனால் படிப்படியான வளர்ச்சி அடைவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். சிறு தடங்கல்களுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்மணிகள் கூடுதல் வருமானத்தால் ஆடம்பரப் பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு அவரின் அன்பைப் பெறவும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்க வாய்ப்பு உண்டாகும். மாணவமணிகள் படிப்பில் சிரத்தைக் குறைந்து காணப்பட்டாலும் உரிய நேரத்தில் பாடங்களை மனதில் நிறுத்தி மதிப்பெண்களை சிறந்த முறையில் பெறுவீர்கள். மருத்துவச் செலவுகள் கூடுமாதலால் உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாகப் பழகவும்.

  பரிகாரம்:  பார்வதி பரமேஸ்வரரை வழிபட்டு வரவும்.

  {pagination-pagination}
  கன்னி (உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)

  11.10.2018 முதல் 11.04.2019 வரை உள்ள காலகட்டத்தில் சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைத்து செய்தொழில் மேலோங்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். உங்களைத் தவறாகப் புரிந்து கொண்டிருந்த நண்பர்கள் மனம் மாறி நட்புடன் பழகுவார்கள். கடினமான வேலைகளைச் சுலபமாக செய்து முடித்து நல்ல பெயர் வாங்குவீர்கள். 

  சமூகத்தில் பெரியோர் நண்பர்களாவார்கள். இதனால் அந்தஸ்து கூடும். சிலருக்கு அடிக்கடி வெளியூர், வெளிநாடு செல்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய சூழ்நிலைகளில் வாழ உங்களைத் தயார் படுத்திக்கொள்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் உடனடியாக நிறைவேறி இலக்குகளை அடையும். பொருளாதார வளம் மேம்படும். பின்னடைவுகள் நீங்கி, உங்களை முன்நோக்கி உந்தித் தள்ளும் இறையருள் உண்டாகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. 

  12.04.2019 முதல் 12.08.2019 வரை உள்ள காலகட்டத்தில் உங்களை இளைய உடன்பிறப்புகள் அனுசரித்து நடந்து கொண்டாலும் பெரிய நன்மை இல்லை. பிரச்னைகள் என்று எதுவும் ஏற்படாது. அலைக்கழித்து வந்த எதிரிகள் மறைந்து போவார்கள். வெளிவிளையாட்டுகளில் ஈடுபட்டிருப்பவர்கள் போட்டி பந்தயங்களில் எளிதில் வெற்றியடைவார்கள். சிலருக்கு இந்தக் காலகட்டத்தில் விருதுகளும் கிடைக்கும். நீங்கள் செய்யும் பிரார்த்தனைகளால் தெய்வ பலன் கூடும். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான சூழ்நிலை உண்டாகும். சிலருக்கு உதவி தொகையுடன் வெளிநாடுகளில் படிக்க வாய்ப்பு உண்டாகும்.

  13.08.2019 முதல் 05.11.2019 வரை உள்ள காலகட்டத்தில் தந்தையின் உடல்நலத்தில் மேன்மை உண்டாகும். பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்னைகள் தீர்ந்து வருமானம் வரத்தொடங்கும். குடும்பத்துடன் சுற்றுலா சென்றுவரும் வாய்ப்புகளும் கிடைக்கும். எதிர்பாராத வகையில் செயல்களில் வெற்றி உண்டாகி அதனால் அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் பெறுவீர்கள். பொது ஜனத்தொடர்பும் நன்மையைத் தரும். எதிர்பார்த்த பொறுப்புகளும் கிடைக்கும். வருமானம் உயரத் தொடங்கும். குல தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். சிலர் புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வார்கள்.  எதிலும் பதற்றப்படாமல் நிதானமாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டிய காலகட்டமிது என்றால் மிகையாகாது.

  உத்தியோகஸ்தர்கள் கவனமாக பணியாற்றி உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்களால் சில பிரச்னைகள் உண்டாகுமாகையால் கவனமாக இருக்கவும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு இரண்டையும் பெறுவீர்கள். அலுவலக ரீதியான பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். வியாபாரிகளுக்குக் கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சிறப்பாகவே முடியும். கூட்டாளிகள் நட்புடன் பழகுவார்கள். புதிய சந்தைகளை நாடிச்சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். 

  சிறிய முதலீடுகளிலும் வருமானத்தைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு வரவேண்டிய குத்தகை பாக்கிகள் வசூலாகும். பயிர்களில் எந்த பாதிப்பும் ஏற்படாது. குடும்பத்தில் சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். மாற்றுப் பயிர் செய்வதன் மூலம் மேலும் லாபத்தை அள்ளுவீர்கள். 

  அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். முக்கியப் பிரச்னைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ளவேண்டாம். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கலைத்துறையினர் அதிக முயற்சிகளுக்குப்பிறக்கே ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். ரசிகர்களின் பாராமுகத்தால் வேதனை அடைவீர்கள். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவ மாட்டார்கள். 

  பெண்மணிகள் கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதனால் நிதானத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப நிலைமை உயரும். மாணவமணிகளுக்குப் படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். விளையாட்டுகளிலும் பங்கேற்று வெற்றிவாகை சூடுவீர்கள்.

  பரிகாரம்:  குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

  {pagination-pagination}

  துலாம் (சித்திரை 3-ஆம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)

  11.10.2018 முதல் 11.04.2019 வரை உள்ள காலகட்டத்தில் உழைப்புக்கேற்ற வருமானம் கூடத்தொடங்கும். உங்களின் செயல்களைத் திட்டமிட்டுச் சரியாகச் செய்து முடித்து விடுவீர்கள். வசிக்கும் வீட்டைப் புதுப்பிப்பீர்கள். ஏழை எளியவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். தெய்வ வழிபாடுகளில் மனம் ஈடுபடும். புதிய இடங்களில் சிறப்பான வரவேற்புகள் கிடைக்கும். ஆடம்பரக் கேளிக்கைகளில் குடும்பத்தாருடன் பங்கேற்று மகிழ்வீர்கள். 

  உடன்பிறந்தோரிடம் எதிர்பார்த்ததற்கும் மேலாக உதவிகளைச் செய்வீர்கள். முதலீட்டை விட இருமடங்கு லாபம் கிடைக்கும் தொழிலில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். அனைத்துப் பிரச்னைகளையும் நுட்பமாக ஆராய்ந்து தீர்க்கமாக முடிவெடுப்பீர்கள். பழைய கடன்களை திருப்பி அடைப்பீர்கள். தோற்றத்தில் பொலிவும் நடையில் மிடுக்கும் உண்டாகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. 

  12.04.2019 முதல் 12.08.2019 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவீர்கள். உங்களை மதிக்காமல் நடந்தவர்கள் இப்போது உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பர். பேச்சில் ஏதும் தவறு ஏற்பட்டாலும் அதை எவரும் பெரிது படுத்தமாட்டார்கள். 

  குடும்பத்தில் நிம்மதி நிறையும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். மனக்கவலைகள் மறைந்து எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கைகள் பலப்படும். அரசு திகாரிகள் உங்கள் கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலிப்பார்கள். செய்தொழிலில் புதிய யுக்தியுடன் செயல்பட்டு லாபத்தைப் பெருக்குவீர்கள். பெரியோர்களின் ஆதரவினால் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். படாடோபமில்லாமல் அடக்கத்துடன் பணியாற்றுவீர்கள். சமுதாயத்தில் உங்கள் நிலையை உயர்த்திக் கொள்வதற்கு ஏதுவான காரியங்களைச் செய்வீர்கள். நிர்வாகத் திறமை பளிச்சிடும். 

  13.08.2019 முதல் 05.11.2019 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் மழலை பாக்கியம் உண்டாகும். அனைத்து சுபகாரியங்களையும் நடத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவு வராது. 
  தொழில் ரீதியாக அதிக பயணங்களைச் செய்ய நேரிடும். அரசாங்கத்தால் பாராட்டப்படுவீர்கள். ஆன்மிகத்தில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். புத்துணர்ச்சியுடனும் வைராக்கியத்துடனும் செயல்படுவீர்கள். பூர்வீகச் சொத்துகள் வகையில் இருந்த வில்லங்கம் விலகி, சுமுகமான பாகப்பிரிவினை உண்டாகும்.  

  உத்தியோகஸ்தர்கள் சிறப்பாக பணியாற்றி உழைப்பிற்கேற்ற பலன்களை அடைவீர்கள். சக ஊழியர்களிடம் பல பிரச்னைகள் உண்டாகுமாதலால் அவர்களிடம் கவனமாக நடந்து கொண்டால் மகிழ்ச்சி நிலைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு இரண்டையும் பெறுவீர்கள். மேலிடத்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள். அலுவலக ரீதியான பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். 

  வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்கள் சுமுகமாக முடியும். புதிய சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். வாகனங்களுக்குச் சிறிது பராமரிப்பு செலவு செய்ய நேரிடும். விவசாயிகள் சலிப்பில்லாமல் உழைத்து வருமானம் ஈட்டுவீர்கள். கால்நடைகளாலும் லாபம் உண்டாகும். சக விவசாயிகளுக்கு உதவுவீர்கள். 

  அரசியல்வாதிகளுக்கு நல்ல பெயரும் புகழும் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொண்டு கட்சிப் பணிகளை ஆற்றுவீர்கள். புதுத்தெம்புடன் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கலைத்துறையினருக்குப் புகழும் பாராட்டும் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டாலும் திட்டமிட்ட வேலைகளில் பொறுப்புடன் நடந்துகொண்டு நற்பெயர் எடுப்பீர்கள். 

  பெண்மணிகளுக்கு கணவருடன் ஒற்றுமை கூடும். உறவினர்களுக்கு உதவுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் ஈடுபட்டு பொழுதை மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள். தாய் வீட்டுச் சீதனமும் வந்து சேரும். மாணவமணிகள் படிப்பில் முழுமையான கவனத்தைச் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். படிப்பில் முழு கவனத்தைச் செலுத்தி முன்னேற எண்ணுவீர்கள். விளையாட்டிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.

  பரிகாரம்:  திருவேங்கடமுடையானை வழிபட்டு நலன்கள் பல பெறவும்.

  {pagination-pagination}

  விருச்சிகம் (விசாகம் 4-ஆம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

  11.10.2018 முதல் 11.04.2019 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் பளு அதிகரித்தாலும் சரியாகத் திட்டமிட்டு பணிகளைச் செய்து முடித்து விடுவீர்கள். உடன் பிறந்தோர் நண்பர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். செய்தொழில் ரீதியான பயணங்களின் மூலம் ஓரளவுக்குத்தான் நன்மைகள் கிடைக்கும். செய்தொழிலை வேறு ஊருக்கு மாற்றம் செய்வீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் கௌரவத்திற்கு  எந்தக் குறைவும் வராது. பிரச்னைகளைச் சாதுரியமாகச் சமாளிப்பீர்கள். 

  மனதில் இருக்கும் பயத்தை வெளியில் காட்ட மாட்டீர்கள். செயல்களைக் காலம் தாழ்த்தாமல் உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். உங்களுக்குக்கீழ் பணிபுரிபவர்கள் அலட்சியப்படுத்தினாலும் கவலை வேண்டாம். வெளியில் கொடுத்திருந்த தொகை கிடைக்கத் தாமதமாகும். மனதில் எதிர்நீச்சல் போடும் நிலை உண்டாகும். 

  12.04.2019 முதல் 12.08.2019 வரை உள்ள காலகட்டத்தில் புதிய செலவினங்கள் ஏற்பட்டாலும் வருமானத்தைப் பல விதங்களில் பெருக்கிக்கொள்ள முனைவீர்கள். தைரியத்துடன் போட்டிகளை எதிர்கொள்வீர்கள். வைராக்கியத்தைக் கண்டு எதிரிகளும் அஞ்சுவார்கள். முயற்சிகளில் முழு ஆற்றலை வெளிப்படுத்துவீர்கள். பணவிரயத்தில் கொடுத்த வாக்கை சரியாகக் காப்பாற்றுவீர்கள். தர்மசிந்தனையோடு செயலாற்றுவீர்கள். மனிதநேயம் வெளிப்படும். குடும்பத்தில் சூழ்ந்திருந்த பிரச்னைகள் விலகி, தெளிவு பிறக்கும். குறிக்கோளை எப்பாடுபட்டேனும் எட்டிவிடுவீர்கள். பணக்கஷ்டம் நீங்கும். பொதுக்காரியங்களில் உங்கள் நேரத்தைச் செலவிடுவீர்கள். பெற்றோரிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டிவிருந்து நல்ல தகவல் வந்து சேரும். அவ்வப்போது வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் தோன்றி மறையும். 

  13.08.2019 முதல் 05.11.2019 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். சட்டப் பிரச்னைகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்வீர்கள். வம்பு வழக்குகளை விட்டுக்கொடுத்து சமரசமாக முடித்துக் கொள்வீர்கள். குடும்பத்தினருடன் விருந்து கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். குழந்தைகள் சிறப்பான வளர்ச்சியை அடைவார்கள். வாழ்க்கைத் துணையின் மூலம் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். சிலருக்கு அசையாச் சொத்துகள் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகள் தேடி வரும். எவருக்கும் உங்கள் பெயரில் கடன் வாங்கித் தரவேண்டாம்.

  உத்தியோகஸ்தர்கள் வேலைப்பளு அதிகரித்தாலும் செயல்களை செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள்  நேசக்கரம் நீட்டுவர். அலுவலக ரீதியான பயணங்களின் மூலம் ஓரளவுக்குத்தான் நன்மைகள் கிடைக்கும். உங்கள் கௌரவத்திற்கு எந்த பங்கமும் ஏற்படாது. சிலருக்கு விரும்பிய ஊர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

  வியாபாரம் நன்றாகவே நடந்தால் பொருளாதார நிலையில் அபிவிருத்தியைக் காண்பீர்கள். புதிய முதலீடுகளில் கவனத்துடன் ஈடுபடவும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். விவசாயிகள் அமோகமான விளைச்சலைக் காண்பீர்கள். முதலீட்டைவிட இருமடங்கு லாபம் கிடைக்கும். நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்ளுங்கள். புதிய நிலங்களை வாங்கும் யோகம் உள்ளது. 

  அரசியல்வாதிகள் தடைகள் ஏற்பட்டாலும் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றியடையும். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். பல வழிகளிலும் வருமானம் பெருகும். தொண்டர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். கலைத்துறையினர் மனச்சோர்வு நீங்கி எதையும் சாதிக்கும் அளவுக்குத் திறமைகள் பளிச்சிடும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். நெடுநாளைய கனவுகள் பலிக்கும் பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும்.

  பெண்மணிகளுக்கு இது மகிழ்ச்சி நிறைந்த காலமாகவே காணப்படும். கணவர் மதித்து நடப்பார். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். விரும்பிய பாடப்பிரிவுகளையும் பெறுவார்கள். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறக் காண்பீர்கள்.

  பரிகாரம்: ஆஞ்சநேயப் பெருமானை வழிபட்டு வரவும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai