இறக்கும் தருவாயிலும் முக்தி கிடைக்க வழிவகை செய்யும் பெருமாள்!

பெருமானை வழிபடுபவர்களுக்கு இறக்கும் தருவாயிலும் முக்தி கிடைக்க வழிவகை உண்டு என்பர்.
இறக்கும் தருவாயிலும் முக்தி கிடைக்க வழிவகை செய்யும் பெருமாள்!

முற்காலத்தில் தெய்வ சிந்தையே நமது மூச்சாகக் கொண்டு இறைவனை இடையறாது தியானித்துத் தவமியற்றும் தவசிகள் அதிக அளவில் வாழ்ந்து வந்தனர். இத்தகைய நோக்கத்துடன் கானகத்தையடைந்து அந்த அமைதியான சூழலில் மனதை ஒரு நிலைப்படுத்தித் தவமியற்றி வந்தனர். இவ்வாறு தவமியற்றும் ரிஷிகளுக்கு அசுரர்கள், அரக்கர்கள் போன்றவர்கள் கணக்கற்ற தொல்லைகளை அளித்துத் தவம் ஈடேறாமல் இடையூறு செய்து வந்தனர். 

ரோமரிஷியும் அவரது சீடர்களும் தவம்புரிந்து வந்தபோது பிரதூர்த்தன் என்ற அரக்கன் பலமுறை தவசாலைக்கு வந்து தொல்லைகள் கொடுத்து வந்தான். இதனால் வெகுண்ட ரிஷி அவனைப் புலியாக மாறுமாறு சபித்தார். புலியுருவை அடைந்த அரக்கன் கானகத்தில் வாழும் உயிரினங்களை அழிக்க முற்பட்டதுடன் நில்லாமல் முனிவர்களுக்கு முன்னைவிட அதிக அளவில் இன்னல்களை அளித்து வந்தான். வேறு வழியின்றி முனிவர்கள் இந்திரனைச் சரண் அடைந்தனர். முனிவர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்த இந்திரன் தானும் புலியாக உருமாறிப் பிரதூர்த்தனுடன் போரிட்டான். 

இறுதியாக, உயிரிழக்கும் நிலையில் அவனுக்கு நல்லெண்ணம் உதித்தது. செய்த தவறையுணர்ந்த அரக்கன் நற்கதி பெற வேண்டும் என இந்திரனும், தேவர்களும் திருமாலை வழிபட்டனர். திருமாலும் சங்கு, சக்ரம் தாங்கி தேவியருடன் காட்சியளித்து அரக்கனுக்கு நற்கதியளித்தார். அரக்கனுக்கு அருள்புரிந்த அதே கோலத்தில் இத்திருக்கோயிலில் எழுந்தருளுமாறு ரோமரிஷியும், அவரது சீடர்களும் திருமாலிடம் வேண்டிக் கொண்டனர். திருமாலும் அதே கோலத்தில் இங்கு எழுந்தருளினார். பிரதூர்த்தன் நற்கதியடைந்த திருத்தலம் அந்த அரக்கன் பெயரால் "பிரதூர்த்தப்பட்டு' என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் அப்பெயர் மருவி "துத்திப்பட்டு' என்றே வழங்கப்படுகிறது. 

இங்கு எழுந்துள்ள இக்கோயிலை வரதராஜப் பெருமாள் கோயில் என்றே அழைக்கின்றனர். நுழைவாயிலில் 45 அடி உயரமுள்ள ஐந்து நிலை கோபுரம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஒரேயொரு பிரகாரமும் மூன்று கருவறைகளும், ஒரு மகாமண்டபமும், ஒரு முகமண்டபமும் உள்ளன. கொடி மரம், கருடாழ்வார் ஆகியோரைக் கண்ணுற்றவாறே மகா மண்டபம், முதல் மண்டபம் ஆகியவற்றைக் கடந்து மூலஸ்தானத்தை அடையலாம். மூலவர் பிந்து மாதவராய்ப் பெருமாள் (வரதராஜர்) ஆறடி உயரம் கொண்ட மூர்த்தியாக, நின்ற கோலத்தில் அருளாட்சி புரிகிறார். இருமருங்கும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் இடம் பெற்றுள்ளனர். சதுர்புஜங்களைப் பெற்றுள்ளார். மேலுள்ள இரு கரங்களைச் சங்கும், சக்கரமும் அலங்கரிக்கின்றன. கீழ் இடது கரம் கதாயுதத்தை ஏந்தியுள்ளது. கீழ் வலதுகரம் அபய முத்திரையை அளிக்கிறது. உற்சவர் மூன்றடி உயரமுடைய எழிலுருவமாகத் துலங்குகிறார். அவரது உருவமைப்பு மூலவரைப் போலவே உள்ளது. மூலவரின் சந்நிதிக்கு மேல் பதினெட்டடி உயரமுள்ள தேஜோ விமானம் அணி செய்கிறது.

கருவறையை அடுத்து, வெளிச்சுற்றில் பெருந்தேவி, குமுதவல்லித் தாயார் தனிச்சந்நிதியில் எழுந்தருளியுள்ளனர். மறுபுறத்தில் ஆண்டாள் அமைந்துள்ளார். ஸ்ரீதேவி, பூதேவி, சக்கரத்தாழ்வார், நம்மாழ்வார், மணவாள முனிகள் உடையவர் ஆகியோரது திருவுருவங்களும் இக்கோயிலில் இடம் பெற்றுள்ளன. மண்டபச் சுவர் ஒன்றில் இத்தலத்தில் நற்கதியடைந்த பிரதூர்த்தன் மற்றும் ரோமரிஷியின் திருவுருவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப் புண்ணிய பதியில் விஷ்ணு புராணத்தைப் பராசர முனிவர் மைத்ரயே மகரிஷிக்கு எடுத்துரைத்ததாகவும் கூறுவர். இத்தல பெருமானை வழிபடுபவர்களுக்கு இறக்கும் தருவாயிலும் முக்தி கிடைக்க வழிவகை உண்டு என்பர்.

இக்கோயிலில் இருகாலப் பூஜை நடைபெற்று வருகிறது. தை மாதத்தில் சங்கராந்தி பண்டிகையும், வைகாசி விசாகத்தின் போது நடைபெறும் கருடசேவையும், கஜேந்திர மோட்ச விழாவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. காணும் பொங்கல் தினத்தில் உற்சவரை அருகிலுள்ள நிமிஷாசல மலையைச் சுற்றி வலம் வரச் செய்வது வழக்கம். அம்மலையில் ரோமரிஷி இன்றும் தவமியற்றுவதாகவும், நாள் தோறும் பிந்து மாதவப் பெருமாளைப் பூசிப்பதாகவும் ஐதீகம். அத்திமரத்தாலான சிம்மம், ஹம்ஸம், குதிரை, கருடன், சூரியப்பிரபை, யாளி போன்ற வாகனங்கள் ஆலயத்தில் உள்ளன.

பிற்காலத்தில் பழுதுப்பட்டிருந்த இக்கோயிலை விஜய நரசிம்மராயர் புதுப்பிக்கச் செய்ததாகவும் நாள்தோறும் நான்கு வேதங்களையும் பாராயணம் செய்ய அந்தணர்களை நியமித்து, அவர்களுக்கு மானியங்கள் அளித்ததாகவும் கல்வெட்டு தகவல்கள் கூறுகின்றன.

அமைவிடம் : ஆம்பூரில் இருந்து குடியாத்தம், பேர்ணாம்பட்டு ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளில் சென்றால் இக்கோயிலை எளிதில் அடையலாம். 

- இராம.இரவிச்சந்திரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com