திருச்செந்தூர் கோயில் ஆவணித் திருவிழா: பச்சை சாத்தி சுவாமி வீதி உலா

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்தார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை (செப். 8)
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா எட்டாம் நாளான வியாழக்கிழமை பச்சை சாத்தி எழுந்தருளிய சுவாமி சண்முகர்.
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா எட்டாம் நாளான வியாழக்கிழமை பச்சை சாத்தி எழுந்தருளிய சுவாமி சண்முகர்.


திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்தார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை (செப். 8) நடைபெறுகிறது.
திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு மிக்க ஆவணித் திருவிழா கடந்த ஆகஸ்ட் 30 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் காலை, மாலையில் சுவாமியும், அம்மனும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர். 
முக்கிய நிகழ்வாக புதன்கிழமை, அருள்மிகு சண்முகப்பெருமான் தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி எழுந்தருளினார். எட்டாம் நாள் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தி சுவாமி எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சேர்ந்தார். தொடர்ந்து, பந்தல் மண்டபத்தில் உள்ள சுந்தரராமசுப்பிரமணிய பிள்ளை வகையறா 8 - ஆம் திருவிழா மண்டகப்படியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு மேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வந்து திருக்கோயிலை அடைந்தார்.
9 -ஆம் நாள் நதிருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு சுவாமி குமரவிடங்கப்பெருமான் தங்க கைலாய பர்வத வாகனத்திலும், வள்ளியம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.
தேரோட்டம்: திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சனிக்கிழமை (செப். 8) நடைபெறுகிறது. காலை 5.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கி, பிள்ளையார் ரதம், சுவாமி தேர் மற்றும் அம்மன் தேர் திருவீதி வலம் வந்து நிலையை அடையும். தேரோட்டத்தையொட்டி, பல்வேறு வழித்தடங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com