கருட சேவை நாளில் நேர ஒதுக்கீடு தரிசனங்கள் ரத்து: தேவஸ்தான செயல் அதிகாரி

திருமலையில் வரும் 17ஆம் தேதி கருடசேவை நடைபெற உள்ளதால் அன்று நேர ஒதுக்கீடு தரிசனங்கள் அனைத்தும் ரத்து
கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி (கோப்புப் படம்)
கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி (கோப்புப் படம்)


திருமலையில் வரும் 17ஆம் தேதி கருடசேவை நடைபெற உள்ளதால் அன்று நேர ஒதுக்கீடு தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி அனில்
குமார் சிங்கால் தெரிவித்தார்.
திருமலையில் வரும் 13ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்குவதை முன்னிட்டு அதற்கான இறுதிக்கட்ட கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்ட நிறைவுக்குப் பின் தேவஸ்தான செயல் அதிகாரி அனில் குமார் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 
திருமலையில் வரும் 13ஆம் முதல் 21ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. அதில் 17ஆம் தேதி கருடசேவை, 18ஆம் தேதி தங்கத் தேர், 20ஆம் தேதி திருத்தேர், 21ஆம் தேதி தீர்த்தவாரி ஆகியவை நடைபெறும்.
பிரம்மோற்சவத்தின் முதல் நாள் மாலை 6.45 மணிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மாநில அரசு சார்பில் பட்டு வஸ்திரத்தை சமர்ப்பிக்க உள்ளார். அன்று மாலை 2019ஆம் ஆண்டின் நாள்காட்டிகள், கையேடுககளை அவர் வெளியிடுகிறார். பக்தர்களின் வசதிக்காக இரவு வாகனச் சேவையின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 9 மணிக்குத் தொடங்கும் வாகன சேவை இனி 8 மணிக்கே தொடங்க உள்ளது. கருடசேவை மட்டும் இரவு 7 மணிக்கே தொடங்கும். 
பிரம்மோற்சவ நாள்களில் சாதாரண பக்தர்களுக்கு ஏற்ப ஆர்ஜித சேவைகள், வி.ஐ.பி தரிசனங்கள், தேவஸ்தானம் வழங்கும் இலவச முதன்மை தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. பிரம்மோற்சவத்தைக் காண வரும் பக்தர்களின் வசதிக்காக காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அன்னதானம் செய்யப்பட உள்ளது. கருட சேவை அன்று 3 லட்சம் மோர் பாக்கெட்டுகளும், 6 லட்சம் தண்ணீர் பாக்கெட்டுகளும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும். 
கருட சேவையை முன்னிட்டு 16 மற்றும் 17ஆம் தேதிகளில் நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. 17ஆம் தேதி விரைவு தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. கருட சேவை அன்று மலைப்பாதையில் செல்ல இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது. பிரம்மோற்சவ நாள்களில் மலைப்பாதைகள் 24 மணிநேரமும் திறந்திருக்கும். 
திருமலையில் 7 ஆயிரம் வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரம்மோற்சவ நாள்களில் திருமலையில் 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். 
வாகனச் சேவையை பக்தர்கள் அனைவரும் காண மாடவீதியில் 19 எல்.இ.டி திரைகள், மற்ற முக்கிய சந்திப்புகளில் 21 திரைகள் வைக்கப்படும். பிரம்மோற்சவத்திற்காக ரூ.9 கோடி செலவில் பொறியியல் பணிகள், ரூ.26 கோடி செலவில் புதிய கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 
வாகனச் சேவையின்போது தமிழ்நாடு, ஆந்திரம், தெலுங்கானா, குஜராத், மணிப்பூர், கர்நாடகம், உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நடனக் குழுக்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்த உள்ளன. பக்தர்களின் வசதிக்காக பிரம்மோற்சவ நாள்களில் 7 லட்சம் லட்டுகளை நிலுவையில் வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com