சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு! 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாத பூஜைக்காக செப்.16-ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது. 
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு! 


சபரிமலை ஐயப்பன் கோயிலில் புரட்டாசி மாத பூஜைக்காக செப்.16-ம் தேதி கோயில் நடை திறக்கப்படுகிறது. 

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றவை. இதைத் தவிர, ஒவ்வொரு மலையாள மாதம் (தமிழ் மாதத்தில்) முதல் 5 நாட்களிலும், விஷூ, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா நாட்களிலும் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகிறது. 

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை செப். 16-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 17-ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி பூஜை, நெய் அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். 21-ம் தேதி படிபூஜைகள் நடத்தப்பட்டு அன்றிரவு கோயில் நடை அடைக்கப்படுகிறது. 

சமீபத்தில் பம்பையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, சாலைகள் பெரும் சேதடைந்துள்ளன. எனவே, பம்பையில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால், பக்தர்கள் வரும் தனியார் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.  

நிலக்கல்லில் இருந்து பம்பா செல்ல கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகள் கிடைக்கும். பேருந்தில் நடத்துநர் இல்லாததால் நிலக்கல்லிலேயே பம்பா வரை சென்றுவர கூப்பன்கள் வாங்க வேண்டும். 

பம்பா வந்தடைந்தபின் த்ரிவேணி பாலம் மற்றும் அய்யப்பன் பாலம் வழியாக சர்வீஸ் சாலை அடைய வேண்டும். அங்கிருந்து மருத்துவமனை வழியாக கணபதி கோயில் வந்தடைய வேண்டும்.

பம்பையாற்றின் மேலான நடை பாலம் மூடப்பட்டுள்ளது. த்ரிவேணி முதல் ஆராட்டுக்கடவு வரை அதிக இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் மண் ஈரப்பதத்துடன் காணப்படுவதால் பக்தர்கள் யாரும் மண்ணில் இறங்கி நடக்கக் கூடாது. 

மேலும், பக்தர்கள் அங்கிருக்கும் செக்யூரிட்டிகள் கூறும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பம்பா காவல் நிலையம் எதிர்ப்புறம் உள்ள ஹில்டாப் பார்க்கிங் பழுதடைந்துள்ளது. எனவே, அங்குப் பக்தர்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பம்பா பெட்ரோல் பங்க் பக்கத்தில் உள்ள சுவர் த்ரிவேணி முதல் ஆராட்டுக்கடவு வரை இடிந்துள்ளதால் அந்தப் பக்கம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காட்டுப்பகுதியில் நிறைய பாம்புகள் உலா வருவதால் பக்தர்கள் ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பம்பையில் பிளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி, அங்குள்ள உணவகங்கள் மூடப்பட்டுள்ளது. எனவே, பக்தர்கள் தங்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் ஆகியவற்றை தாங்களே எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் நிலக்கல்லில் மட்டுமே தங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்கும். 

பம்பையில் முன்பிருந்த கழிப்பறைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால்,  நிலக்கல்லில் மட்டுமே பயோ டாய்லெட் வசதிகள் உள்ளன. நிலக்கல் தாண்டி டாய்லெட் வசதிகள் குறைவாகவே உள்ளது. 

எனவே, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள் இந்த முக்கிய விதிகளைப் பயன்படுத்துமாறு தேவஸ்தானம் கட்டுப்பாடு விதித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com