ஏழுமலையானுக்கு ஆந்திர முதல்வர் பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பு

ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில், 12-ஆவது முறையாக பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பதை என் பாக்கியமாக கருதுகிறேன் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்க பட்டு வஸ்திரம் எடுத்து வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்க பட்டு வஸ்திரம் எடுத்து வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.


ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில், 12-ஆவது முறையாக பட்டு வஸ்திரம் சமர்ப்பிப்பதை என் பாக்கியமாக கருதுகிறேன் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
ஏழுமலையானுக்கு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பித்த பின், கோயிலுக்குள் அவர் கூறியதாவது: ஏழுமலையானுக்கு 12-ஆவது முறையாக ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கிறேன். இதை என் பூர்வ பாக்கியமாக கருதுகிறேன். யாருக்கும் கிடைக்காத பாக்கியம் இது. நான் ஆந்திர முதல்வராக பதவியேற்பதற்கு முன்னும், பதவியேற்ற பின்னும் பவித்ரத்திற்கு முக்கியம் அளித்து, விதிக்கு புறம்பான செயல்களைத் தவிர்த்து வருகிறேன். பக்தர்களின் மனோபாவத்துக்கு இழுக்கு ஏற்படாத வகையில் ஆந்திர அரசும், தேவஸ்தானமும் நிர்வாகம் செய்து வருகிறது. பக்தர்கள் வேண்டும் வரத்தை அளிப்பதுடன், அவர்கள் மனதில் உள்ள குறைகளையும் ஏழுமலையான் நீக்கி வருகிறார். திருமலையில் முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் அன்னதான திட்டத்தை தொடங்கி வைத்தார். இன்று அன்னதான அறக்கட்டளைக்கு பக்தர்கள் அளித்த நன்கொடை 1,000 கோடி ரூபாயை எட்டியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல் உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கும் பக்தர்கள் அதிக அளவில் நன்கொடை அளித்து ஏழை, எளிய மக்களுக்கு இலவச மருத்துவம் அளிப்பதில் தேவஸ்தானத்துக்கு உதவ வேண்டும் என்றார்.
கோயிலை விட்டு வெளியே வந்த பின் வாகன மண்டபம் முன் அவர் கூறியதாவது: திருமலைக்கு வரும் போது மலைப்பாதையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் நான் காப்பாற்றப்பட்டது ஏழுமலையான் கிருபை. எனக்கு புனர் ஜென்மம் அளித்தவர் ஏழுமலையான். உலகத்துக்கு ஆந்திர மாநிலத்தை முன்னிருத்தச் செய்வது திருப்பதி. ஆந்திர மாநிலத் தலைநகர் அமராவதியில் கட்டப்பட உள்ள ஏழுமலையான் கோயில் பக்தர்களிடையே மேலும் பக்தி உணர்வை அளிக்கும். நான் மேற்கொண்டுள்ள ஜல தீட்சையால் ஆந்திரத்தில் உள்ள அனைத்து மாவட்டத்துக்கும் குடிநீர், விவசாயம் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கு நீர் தங்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
சித்தூர் மாவட்டத்துக்கும் அடுத்த 2 மாதத்துக்குள் அந்திரி-நீவா திட்டம் மூலம் கிருஷ்ணா நீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com