ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கருட கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது.
திருமலையில் பிரம்மோற்சவம் தொடங்கியதற்கு அடையாளமாக கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கருடக் கொடி.
திருமலையில் பிரம்மோற்சவம் தொடங்கியதற்கு அடையாளமாக கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கருடக் கொடி.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கருட கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது.
திருமலையில் குடிகொண்டிருக்கும் ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் ஆண்டுதோறும் விமரிசையாக நடத்தி வருகிறது. பிரம்மன் முன்னிருந்து நடத்தும் உற்சவம் என்பதால், இதை பிரம்மோற்சவம் என்று அழைக்கின்றனர். அதனால் ஒவ்வொரு வாகன புறப்பாட்டுக்கு முன்பும் பிரம்ம ரதம் முன் செல்லும். பிரம்மன் அரூபமாக அதில் வீற்றிருந்து, பிரம்மோற்சவம் எவ்வித குறையும் இல்லாமல் நடக்கிறதா? என கண்காணிப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அதன்படி, வியாழக்கிழமை மாலை திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றம்
கருட பட்டம், உற்சவ மூர்த்திகள் கோயிலுக்குள் சென்றதும், மலையப்ப சுவாமி முன்னிலையில், பிரம்மோற்சவத்தை தலைமையேற்று நடத்தும் கங்கண பட்டர் கருட பட்டத்தை பெரிய மாலையில் சுற்றி, அதற்கு பூஜை செய்து, தர்பையால் செய்யப்பட்ட பெரிய கயிற்றில் அதைக் கட்டினர். அதன்பின், அஷ்டதிக்பாலகர்களையும், முப்பது முக்கோடி தேவாதி தேவர்களுக்கும் பிரம்மோற்சவத்துக்கு வரும்படி அழைப்பு விடுத்து, மாவிலை, தர்பை புற்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் கருட கொடியை ஏற்றினர். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கருடப் பட்டம்
மகா விஷ்ணுவின் வாகனம் கருடன். மகா விஷ்ணுவின் கலியுக அவதாரமாகக் கருதப்படும் ஏழுமலையானுக்கு கருடாழ்வார் வாகனமாக திகழ்கிறார். அதனால் ஏழுமலையானை தன் முதுகில் சுமக்கும் கருடன் அவருக்கு பட்டமாக (கொடி) விளங்குகிறார். 
அதனால் பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு அடையாளமாக கொடிமரத்தில் ஏற்றப்படும் கொடியில் கருடன் உள்ளார். 
அதற்காக பெரிய வெள்ளை பருத்தி துணியை மஞ்சளில் 2 நாள்கள் ஊற வைத்து, அதை நிழலில் உலர்த்தி அதில் இயற்கை நிறங்களைக் கொண்டு கருடனின் உருவத்தை வரைகின்றனர். இந்த கைங்கரியத்தை தேவஸ்தானத்துக்கு ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தலைமுறை தலைமுறையாக செய்து வருகின்றனர். 

கருட பட்டம் புறப்பாடு
அவ்வாறு தயார் செய்த கருட பட்டத்தை கொடியில் ஏற்றுவதற்கு முன், அதை ஒரு ஸ்டாண்டில் கட்டி மலர் அணிவித்து, கற்பூர ஆரத்தி அளித்து, பக்தர்கள் அனைவரும் காண மாடவீதியில் வலம் வரச் செய்தனர். 

உற்சவ மூர்த்திகள் புறப்பாடு
கருட பட்டம் புறப்பாட்டுக்குப் பின், ஏழுமலையானின் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி தன் நாச்சியார்களுடனும், சேனாதிபதி விஷ்வக்சேனர், அனந்த, சுக்ரீவ, அனுமன் உள்ளிட்டோரும் மாடவீதியில் வலம் வந்து, அஷ்ட திக்பாலகர்களை பிரம்மோற்சவத்துக்கு அழைத்தனர். முதலில் கருட பட்டம், அதன் பின் அனந்த, சுக்ரீவ, அனுமன் முன் சென்றனர். அவர்கள் பின் சேனாதிபதி விஷ்வக்சேனர், அவர் பின் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி என ஒருவர் பின் ஒருவராக உற்சவ மூர்த்திகள் மாடவீதியில் வலம் வந்து கோயிலுக்குள் சென்றனர்.

பெரிய சேஷ வாகனம்


பிரம்மோற்சவத்தின் முதல் நாள் மாலை பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளுவது வழக்கம். பாற்கடலில் மகாவிஷ்ணுவை எப்போதும் தன் உடலால் தாங்குபவர் ஆதிசேஷன். ஆதிசேஷனின் வடிவமாக கருதப்படுவது 7 தலைகள் கொண்ட பெரிய சேஷ வாகனம். 
அதனால் ஆதிசேஷனுக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் முதல் வாகனமாக பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் இரவு நடைபெறும் வாகன சேவையை 9 மணிக்கு பதிலாக இம்முறை 8 மணிக்கு தொடங்கியது. 8 மணி முதல் 10 மணி வரை நடைபெற்ற பெரிய சேஷ வாகனத்தின் முன் நாடு முழுவதிலும் இருந்து வந்திருந்த கலை குழுக்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.
வாகன சேவைக்கு முன் திருமலை ஜீயர்கள் குழு நாலாயிர திவ்ய பிரபந்தங்களை பாராயணம் செய்தது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேவஸ்தான அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

பட்டு வஸ்திரம் சமர்பிப்பு
வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முதல்நாள் ஆந்திர அரசு சார்பில் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்படுவது வழக்கம். அதன்படி, வியாழக்கிழமை மாலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏழுமலையான் கோயில் எதிரில் உள்ள பேடி ஆஞ்சநேயர் கோயிலிருந்து தலையில் பட்டு வஸ்திரத்தை சுமந்து கொண்டு, ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றார். 
அவரிடமிருந்து திருமலை ஜீயர்கள் பட்டு வஸ்திரத்தை பெற்றுக் கொண்டனர். அதற்குப் பின் ஏழுமலையானைத் தரிசித்து திரும்பிய முதல்வருக்கு ரங்க நாயகர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்களை வழங்கினர். 
அப்போது, அச்சிட்ட 2019-ஆம் ஆண்டு நாள்காட்டி மற்றும் கையேடுகளை அவர் வெளியிட்டார். இதில் 2 வகையான கையேடுகள், 4 வகையான நாள்காட்டிகள் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com