பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாளில் கல்ப விருட்ச, சர்வபூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி

திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாள் காலை பக்தர்கள் தங்கள் மனதில் வேண்டிய வரத்தை அருளும் கல்ப விருட்ச (கற்பக மரம்) வாகனத்திலும், சிம்ம வாகனத்திலும்
பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாளில் கல்ப விருட்ச, சர்வபூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி

திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாள் காலை பக்தர்கள் தங்கள் மனதில் வேண்டிய வரத்தை அருளும் கல்ப விருட்ச (கற்பக மரம்) வாகனத்திலும், சிம்ம வாகனத்திலும் ஏழுமலையானின் உற்சவரான மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார்.
 திருமலையில் கடந்த 13-ஆம் தேதி மாலை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றதுடன் விமரிசையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலையில் பக்தர்கள் தங்கள் மனதில் நினைத்ததை நினைத்தபடி அருளும் கல்ப விருட்ச வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்தார். அப்போது, நாரை போல் உருவெடுத்து வந்த அரக்கனின் வாயைப் பிளந்த ஸ்ரீகிருஷ்ணர் அவதாரத்தில் தன் நாச்சியார்களுடன் அவர் காட்சி அளித்தார். மாடவீதியில் கூடியிருந்த பக்தர்கள் பக்தியுடன் கற்பூர ஆரத்தி அளித்து அவரை வணங்கினர்.
 கல்ப விருட்ச வாகனம்: மேரு மலையை மத்தாக்கி, ஆதிசேஷனைக் கயிறாக்கி பாற்கடலைக் கடைந்தபோது வெளி வந்த புனிதப் பொருள்களில் கற்பக மரமும் ஒன்று. இந்த மரத்தின் அடியில் நின்று கொண்டு யார் எதைக் கேட்டாலும் உடனே அதை அளிக்கும் தன்மை வாய்ந்தது இம்மரம் என்பது ஐதீகம். நமது முந்தைய பிறவிகளின் ஞாபகங்களையும் அருளும் சக்தி கொண்டது. மற்ற மரங்கள் தங்களிடம் பழுத்த பழங்களை மட்டுமே கொடுக்கும். ஆனால் கற்பக மரம் தன்னிடம் உள்ள அனைத்து பலன்களையும் உடனடியாக வழங்கும் தன்மை கொண்டது. அத்தகைய மகத்துவம் வாய்ந்த கற்பக மரம் வாகனத்தில் எம்பெருமான் தன் நாச்சியார்களுடன் 4-ஆம் நாள் காலை மாடவீதியில் எழுந்தருளினார். அவரை தரிசித்தால் மனதில் வேண்டியது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
 சர்வபூபால வாகனம்: பிரம்மோற்சவத்தின் 4-ஆம் நாள் இரவு 8 மணிக்கு சர்வபூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி தன் நாச்சியார்களான ஸ்ரீதேவி பூதேவியுடன் வாகனத்தில் எழுந்தருளினார்.
 சர்வபூபாலம் என்றால் அனைவரும் ராஜாக்கள், என்று அர்த்தம். இதில் எட்டு திசைகளுக்கும் பொறுப்பாளர்களான அஷ்ட திக்பாலர்களும் அடங்குவர். அதன்படி, கிழக்கு திசைக்கு இந்திரன், அக்னி மூலையில் அக்னி பகவான், தெற்கு திசைக்கு எமன், நைருதிக்கு நிருத்தி, மேற்கு திசைக்கு வருணன், வாயு மூலைக்கு வாயு பகவான், வடக்கு திசைக்கு குபேரன், ஈசான்யத்திற்கு (வடகிழக்கு) பரமேஸ்வரன் ஆகியோரே அவர்கள்.
 இந்த அஷ்ட திக்பாலர்களுரம் எம்பெருமானை தங்கள் மனதில் வைத்து தோள்களால் சுமந்து வழிபடுவதாக ஐதீகம். அவ்வாறு அவர்கள் எம்பெருமானை தங்கள் தோளில் சுமக்கும்போது அவரை வழிபடும் பக்தர்கள் அனைத்து செல்வங்களையும் பெறுகின்றனர் என்பது இந்த வாகனத்தின் தத்துவமாகும்.
 வாகனச் சேவைகளில் தேவஸ்தான அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். வாகனச் சேவையின் முன் திருமலை ஜீயர்கள் குழாம் வேதகானம் மற்றும் நாலாயிர திவ்யப் பிரபந்தங்களை பாராயணம் செய்தனர். வாகன சேவையின் பின்னால் நாடெங்கிலும் இருந்து வந்துள்ள கலைக்குழுவினர் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். இது மாடவீதியில் திரண்டிருந்த பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. மாடவீதியில் வாகனங்களில் எழுந்தருளிய உற்சவமூர்த்திகளுக்கு பக்தர்கள் பழங்களை நைவேத்தியமாக சமர்ப்பித்து கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர். மாடவீதியில் வாகன சேவையை காண காத்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் அன்னதானம் செய்யப்பட்டதோடு, குடிநீர், மோர் ஆகியவையும் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com