பிள்ளையாருக்கு அருகம்புல் சாற்றுவதால் இவ்வளவு நன்மையா? தூர்வாஷ்டமி கூறும் ரகசியங்கள்!

விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து வரும் சுக்லபக்ஷ அஷ்டமி தூர்வாஷ்டமி எனப்படும்.
பிள்ளையாருக்கு அருகம்புல் சாற்றுவதால் இவ்வளவு நன்மையா? தூர்வாஷ்டமி கூறும் ரகசியங்கள்!

விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து வரும் சுக்லபக்ஷ அஷ்டமி தூர்வாஷ்டமி எனப்படும். இன்று அருகம்புல்லை பூஜை செய்ய தடைகள் விலகி வாழ்வில் சந்தோஷம் பெருகும் என்கிறது சாஸ்திரம். 
ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடி என்றும் நீடூழி வாழ்க எனத் திருமணம் மற்றும் புதுமனை புகுவிழாக்களில் பெரியோர்கள் வாழ்த்துவதைப் பார்த்திருப்பீர்கள்.

அருகம்புல் எவ்வளவு காலம் மழை இல்லாவிட்டாலும் காய்ந்து போய் காணப்படுமே தவிர அழிந்து போகாது. சிறிது மழை பெய்தால் கூட உடனே துளிர்விடும். அதுபோல் எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் அருகம்புல்லை உதாரணமாகச் சொல்லி வாழ்த்துவதைப் பார்க்கும்போதே அதன் மகத்துவம் நமக்குத் தெரியவரும். அருகம்புல் முழுத்தாவரமும் இனிப்புசுவையும் குளிர்ச்சித்தன்மையும் உடையது. உடல் வெப்பத்தை அகற்றும். சிறுநீர் பெருக்கும். குடல் புண்களை ஆற்றும்.

இரத்தை தூய்மையாக்கும் மற்றும் உடலைப் பலப்படுத்தும், அருகம்புல்லை பிள்ளையார் புல் என்று அழைப்பார்கள். வீடுகளில் அருகை சாணம் அல்லது மஞ்சளில் நட்டு வைத்து வணங்குவார்கள். கணபதியின் பூஜைக்கு உரியதானது அருகம்புல். தூர்வை, மேகாரி, பதம், மூதண்டம் எனப் பல பெயர்களால் சிறப்பிக்கப்படும் அருகம்புல் கணநாதருக்கு மட்டும் அல்ல, மூலிகையாக எடுத்துக்கொண்டால் நமக்கும் நலம் பயப்பவை தான். ஆன்மீகத்துடன் மருத்துவத்தைக் கலந்தே நம் முன்னோர்கள் சொல்லிவந்தனர்.

பிள்ளையாருக்கே ஜ்வாலாசூரன் எனும் அசுரனை அழிக்க அவனை அப்படியே விழுங்கியபோது வெப்பம் தாளாமல் பிறகு தவித்தாராம். ஒருமுறை யமனுடைய மகனான ஜ்வாலாசுரன் என்பவன்  வேண்டாத சேர்க்கையினால் தீயவனாகி சாபம் பெற்றான். இதனால் மூர்க்கனாக மாறி தேவர்களை இம்சித்து வந்தான். வரங்கள் பல பெற்றதாலும், பிறப்பிலேயே அவனது உடல் பெரும் அனலைக் கக்கியதால் அவனுக்கு அருகில் கூட யாரும் செல்ல முடியவில்லை. செல்பவர்களை எல்லாம் சாம்பலாக்கினான் ஜ்வாலாசுரன். என்ன செய்வது என்று புரியாத தேவர்கள் பிள்ளையாரை வேண்டி அவரது உதவியை நாடினர்.

கணநாதரும் அவனை ஒழித்து தேவர்களை காக்க அவனிருக்கும் இடம் சென்றார். அங்கு கணபதியின் கணங்கள் எல்லாம் வெம்மை தாங்காமல் ஓலமிட்டன. இதனால் கணபதியின் கோபம் எல்லை கடந்தது. ஜ்வாலாசுரனை பெரும் அனல் வடிவம் கொண்டு கணபதி தாக்கினார். அந்த அசுரன் ஓய்ந்துபோன தருணத்தில் அவனைப் பிடித்து விழுங்கி விட்டார் கணபதி. காரணம் அவனது பூத உடல் கூட பெரும் வெப்பம் கொடுத்தது உயிர்களை வாட்டும் என்பதுதான். அனலோடு அவன் விழுங்கப்பட்டதால், கணபதியின் வயிறு எரிந்துகொண்டிருந்தது.

உஷ்ணம் தாங்காத கணநாதர் சக்தியை எண்ணி வணங்கினார். தேவர்கள் யாவரும் கணநாதரை குளிர்விக்கும் வகையில் என்ன என்னவோ செய்துபார்த்தார்கள். கங்கை நீரை ஊற்றினார்கள். பனிப்பாறையைப் பெயர்த்தெடுத்து கணபதியின் தலையில் வைத்தார்கள். எதிலுமே தீ தணியவில்லை. இதனிடையே, சப்த ரிஷிகள் எனப்படும் அத்திரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கவுதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் ஆகிய எழுவரும் சேர்ந்து ஒரு சாண் அளவுள்ள இருபத்தொரு அருகம்புற்களைக் கொண்டு வந்து கணபதியின் தலையில் வைத்தனர். இதனால் கணபதியின் உடல் குளிர்ந்து, வயிற்றில் இருந்த அனல் தணிந்தது. இதனால் விநாயகர் மகிழ்ந்தார். அதுமுதல் தனக்கான பூஜைப்பொருள் அருகம்புல்லே என்று மனம் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டார். 'இனி தன்னை பூஜிக்க இருப்பவர், வரத்தைப் பெற விரும்புவோர் அனைவரும் அருகம்புல் கொண்டு வணங்கினால் மகிழ்வேன்' என்று வரமளித்தார் பிள்ளையார். இந்தப் புராணக்கதை மூலம் நம் முன்னோர் நமக்குக் காட்டிய வெப்பம் குறைக்கும் வழியாகும்.

ஜோதிடத்தில் அருகம்புல்:

ஜோதிட சாஸ்திரப்படி விநாயகர் கேதுவின் அம்சம். கேதுவால் ஏற்படும் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம் ஆகியவற்றை நிவர்த்தி செய்யக்கூடியவர். சந்திரனால் ஏற்படக்கூடிய தடைகள், தோஷங்களைப் போக்க கூடியவர் விநாயகர். 

சந்திர திசை, கேது திசை நடப்பவர்கள் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியிலும், விநாயகர் சதுர்த்தியிலும், தூர்வாஷ்டமியிலும் பிள்ளையாரை அருகம்புல் சாற்றி வழிபட்டால் அனைத்துவிதமான தோஷங்களும் விலகும்.

அறியாமை என்னும் இருளில் இருந்து ஞானம் என்னும் ஒளியை நோக்கி அழைத்துச் செல்லும் ஞான பண்டிதன் கணேசர். அவரை மாணவர்கள் பக்தி சிரத்தையுடன் வழிபட்டால் தடைகள் நீங்கி கல்வியில் ஏற்றமும், ஞானமும், புலமையும் ஏற்படும்.

கொடி போன்ற புல் வகை தாவரங்களுக்கு அதிபதி கேது பகவான் என ஜோதிட சாஸ்திரம். ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் கேது இருந்துவிட்டாலோ அல்லது சந்திரன் கேதுவுடன் சேர்ந்து நின்றுவிட்டாலும் மற்றும் கேதுவின்  அஷ்வினி, மகம் மற்றும் மூலம் நக்ஷத்திர பாதங்களில் பிறந்துவிட்டாலும் அவர்களுக்கு ஞாபக மறதியோடு குழப்பமும் ஒருவித பய உணர்வும் எப்போதும் இருக்கும். அத்தகைய அமைப்பினர் விநாயகரை அருகம்புல் கொண்டு கேதுவின் அஷ்வினி, மகம் மற்றும் மூலம் ஆகிய நாட்களில் வணங்கிவரக் குழப்பங்களும் பய உணர்வும் நீங்கும்.

ஞாபக மறதியைப் போக்கினால் மனிதனின் அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். ஞாபக சக்தியைத் தூண்ட அருகு சிறந்த மருந்தாகும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

கடன் வாங்கிவிட்டுக் கலங்குபவர்களின் வருத்தத்தைச் சொல்லி மாளாது. கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என கம்பர் ராமாயணத்தில் கடன் தொல்லையை உவமையாகச்  சொல்லியிருக்கிறார். கடன் தொல்லையை காலைச் சுற்றிய பாம்பு என்பர்.

ஒருவர் எத்தகைய நிலையில் கடன் வாங்கியிருந்தாலும் கடன் தீர்ப்பதில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் மிகவும் பெருபங்காற்றுகின்றனர். கேதுவின் அதிதேவதை விநாயகரை வணங்குவது, செவ்வாயின் அதிதேவதை முருகனை வணங்குவது, கேது செவ்வாய் சேர்க்கை பெற்ற மைத்ர முகூர்த்தத்தில் கடன் அடைப்பது விரைவில் கடன் அடையச் சிறந்த வழிகளாகும்.

ஒருவர் ஜாதகத்தில் லக்னத்திற்க்கு பத்தாமிடத்தில் கர்ம/ஜீவன ஸ்தானத்தில் கேது நின்றுவிட்டாலும், கர்ம காரகன் சனியுடன் சேர்க்கை பெற்று நின்றாலும் அவர்களுக்கு வேலை மற்றும் தொழில் ஒரு போராட்டமாகவே அமைந்துவிடும். மேலும் கோசாரத்தில் சனி ஜெனன கேதுவை தொடர்பு கொண்டாலும் கோசாரக கேது ஜெனன சனியை தொடர்பு கொண்டாலும் இது போன்ற நிலை நீடிக்கும். அத்தகைய அமைப்பினர் விநாயகருக்கு சனிக்கிழமைகளில் அருகம்புல் சாற்றி அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வரத் தொழில் மற்றும் வேலையில் ஏற்படும் பிரச்னைகள் விலகி நிம்மதி ஏற்படும்.

தோல் நோய்களுக்கு காரகர் கேதுபகவான் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தோல் நோய்களைக் குணப்படுத்த கூடியதும், கண் எரிச்சல், வயிற்றுப்போக்கைச் சரி செய்யக்கூடியதும், புண்களை ஆற்றவல்லதுமான அருகம்புல் வயல்வெளி, புல்வெளியில் வளரக் கூடியது. எளிதில் கிடைக்கக்கூடிய அருகம்புல்லில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இதன் மீது நடப்பதால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது. 

நரம்பு நாளங்களைத் தூண்டக்கூடியது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. அருகம்புல்லை பயன்படுத்தி தோல் நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம். அருகம்புல்லை சிறு துண்டுகளாக வெட்டி பசையாக அரைத்து எடுக்கவும். இந்தப் பசையுடன் மஞ்சள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதைப் பூசுவதால் அரிப்பு, சொரி சிரங்கு, படர்தாமரை, வியர்க்குரு சரியாகிறது. தோல் நோய்களுக்கு மருந்தாகும் அருகம்புல், அக்கி கொப்புளங்கள், சொரியாசிஸ்சை குணப்படுத்துகிறது.

இன்று கேது பகவானுக்குரிய மூல நட்சத்திரம். தூர்வாஷ்டமியாகவும் இருக்கிறது. பிறகு என்னங்க! கடனடைக்க கணநாதரை வணங்கிவிட்டு கிளம்புங்கள். எப்படிப்பட்ட கடனாக இருந்தாலும் அடைந்துவிடும். மேலும் தோல் நோய் குணமாவதோடு வேலை மற்றும் தொழிலில் ஏற்பட்டுள்ள முடக்கமும் தீரும். கவலையை விடுங்க!!

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

9498098786

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com