
இன்னும் அக்னி நக்ஷத்திரம் கூட ஆரம்பிக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் கடைசியிலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கிவிட்டது. கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. அக்னி உக்கிரமடைவதற்கு முன்னரே வெயில் நம்மை மிரட்டத் தொடங்கிவிட்டது. அடுத்த மூன்று மாதங்களுக்கு அனல், அரிப்பு, வியர்வை, சோர்வு என்று பல தொல்லைகளும் சேர்ந்துகொள்ளும். முக்கியமாக வெயில் காலத்தில் பலருக்கும் நீர்க் கடுப்பு நோய் எனப்படும் சிறுநீர்ப்பாதை தொற்று (யூரினரி டிராக்ட் இன்பெக்க்ஷன் - யூடிஇ) ஏற்படுவதைக் காணலாம். வெயிலில் அலைபவர்கள் மார்கெட்டிங் வேலையில் இருப்பவர்கள் போன்றவர்களுக்கெல்லாம் இந்த நீர்க்கடுப்பு நோயினால் கஷ்டப்படக்கூடும்.
நீர்க்கடுப்பு
கோடையில் சிறுநீர்க் கடுப்பு அதிகத் தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு முக்கியக் காரணம். உட்கொள்ளும் தண்ணீரின் அளவு குறையும்போது சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால், சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி, சிறுநீர்ப் பாதையில் படிகங்களாகப் படிந்துவிடும். இதன் விளைவுதான் நீர்க்கடுப்பு. நிறையத் தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்னை சரியாகிவிடும்.
இந்த அவஸ்தையான வியாதி வந்துவிட்டால் சொல்லவும் முடியாது. மெல்லவும் முடியாது. அப்படி ஒரு அவஸ்தை. அதுதாங்க. நீர்க்கடுப்பு எனும் நீர்ச்சுருக்கு நோய். கோடைக்காலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச் சத்து ஆகாரங்களைக் குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது எரிச்சல் வலி, கடுப்பு ஏற்படலாம்.
சிறுநீரகம், யூரேட்டர், சிறுநீர்ப்பை, சிறுநீர் குழாய் போன்றவற்றில் ஏற்படும் கிருமித் தொற்றுகளை சிறுநீர்ப்பாதை நோய் என்கிறோம். 50 சதவீத பெண்கள் இந்நோயினால் பாதிப்படைகின்றனர். குறிப்பாக 20 முதல் 30 சதவீத பெண்களுக்கு அடிக்கடி நோய்த் தொற்று ஏற்படுகிறது. ஆண்களுக்கு மிக அரிதாகக் காணப்படுகிறது. காரணம் ஆண்கள் மற்றும் பெண் உறுப்புகளின் மாற்றமே. பெண்களுக்கு ஆசன வாய்க்கும், யூரித்திராவிற்கும் இடைவெளி குறைவு. எனவே பெண்களை நோய் பலவிதத்தில் பாதிக்கிறது. கருவுற்ற காலத்தில் இந்நோய் பாதிப்பு தொற்றினால் சிறுநீரக பாதிப்புகூட ஏற்படும்.
கோடைக்காலங்களில் ரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ நெடுந்தூரப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் நாம் நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலம் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இந்த மாதிரியான நேரங்களில் சிறுநீர் பாதையிலுள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது. இது ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிக அளவில் வருகிறது.
நோய்க்கான அறிகுறிகள்
நீர்க் கடுப்பு எனும் நீர்ச்சுருக்கு உள்ளவர்களுக்கு சிறுநீர் போகும்போது வலி ஏற்படும் அல்லது அதிகமாகப் போக வேண்டும் என்றும், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படும். அப்படி முயற்சி செய்யும்போது எரிச்சல் அல்லது கடுப்புடன் சிறுநீர் வெளியேறும். லேசாக அடிவயிற்றில் வலியும் ஏற்படும்.
குழந்தைகள் தன்னை அறியாமல் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். நோய் அதிகமாகும்போது சிலருக்கு பயங்கர குளிருடன் கூடிய காய்ச்சல் ஏற்படும். கோடைக்காலத்தில் நீர் சரியாகப் பருகாத காரணத்தால் சிறுநீர் வெளியேறும் அளவு குறைவாகும். இதனால் சிறுநீரகத்தில் செயல்பாட்டால் உப்பு கலந்த கழிவுப் பொருட்கள் முழுமையாக வெளியேறாமல் கொஞ்சம், கொஞ்சமாகப் படிந்து அது கல்லாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.
இந்த பிரச்னை வராமல் தடுப்பதற்குச் சிறந்த வழி கோடைக் காலத்தில் தேவையான அளவு நீர்ச் சத்துள்ள பானங்களைக் குடிப்பதுதான். அப்பொழுதுதான் சிறுநீர் சரியான அளவில் வெளியேறி சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகளும், சிறுநீரில் உள்ள உப்புகளும் வெளியேற வாய்ப்புகள் ஏற்படும்.
நீர்ச் சுருக்கு நோயிற்கான ஜோதிட காரணங்கள்
நீர்ச்சுருக்கு நோய்க்குக் காரண பாவங்களாக கால புருஷனுக்கு ஏழு மற்றும் எட்டாம் வீடுகளையும் அதன் அதிபதிகளையுமே காரணம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்த விதத்தில் இதற்கு முக்கிய காரணகர்த்தா நம்ம சுக்கிரன் தாங்க. கால புருஷனுக்கு ஏழாம் வீடு எனும் துலா ராசி சிறுநீரகத்தினையும் அதனால் ஏற்படும் நோய்களையும் குறிக்கிறது. எனவே சிறுநீரக கோளாறுகளுக்குக் காரக கிரகம் சுக்கிரனாவார்.
கால புருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகம் பிறப்புறுப்பில் ஏற்படும் நோய்களைக் குறிக்கிறது. அதன் அதிபதி செவ்வாயும் முக்கியத்துவம் பெறுகின்றார். அரிப்பு எரிச்சல் கடுப்பு போன்றவற்றைக் குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். உடம்பின் நீர் தேவையினை தெரிவிக்கும் கிரகம் சந்திரனாகும். நீர்ச் சத்து குறைவினால் நீர்ச் சுருக்கு நோய் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் நீர்ச் சுருக்கு நோயாக ஆரம்பித்து அதனை கவனிக்காமல் விடும்போது உள்ளாடைகளில் ஏற்படும் ஈரத்தின் காரணமாகக் கிருமித் தொற்று ஏற்பட்டு யூரினரி இன்பக்ஷன் எனும் மூத்திர தாரை நோயாக மாறுகிறது. அந்த நிலையில் சனி மற்றும் கேதுவின் தொடர்பு பெற்றுவிடுகிறது.
நீர்ச்சுருக்கினை ஏற்படுத்தும் கிரக அமைப்புகள்
1. மேஷம், சிம்மம், தனுசு ஆகிய உஷ்ண ராசிகளை ராசியாகவோ லக்னமாகவோ கொண்டவர்களுக்கு நீர்க்கடுப்பு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதிலும் லக்னமோ லக்னாதிபதியோ நெருப்பு கிரகங்களான சூரியன், செவ்வாய் கேது ஆகிய கிரகங்களின் சாரத்தில் நின்றுவிட்டால் அவர்கள் படும் அவஸ்தையைச் சொல்லி மாளாது.
2. எந்த ராசி/லக்னகாரர்களாக இருந்தாலும் கால புருஷ ஏழு எட்டு அதிபதிகளான சுக்கிரனும் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்று நின்று அந்த கிரகங்களைக் கோசார சூரியன், செவ்வாய் கடக்கும்போது நீர்ச்சுருக்கு நோய் ஏற்படுகிறது.
3. நீர் கிரகமான சந்திரன் எட்டாமிட தொடர்பு பெற்றுவிட்டால் நீர்ச்சுருக்கு அதிகம் ஏற்படுகிறது. ஜெனன ஜாதகத்தில் சந்திரன் எட்டாமதிபதியாக நிற்பது, எட்டாமதிபதியோடு சேர்ந்து நிற்பது, கால புருஷனுக்கு எட்டாவது ராசியில் சந்திரன் நீசமடைந்து கேதுவோடு இணைந்து நின்றாலும் நீர்ச் சுருக்கு நோய் ஏற்படுகிறது.
4. நீர் கிரகங்களில் முக்கியமாகச் சுக்கிரனோடு செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற அசுப கிரக தொடர்பு பெற்றுவிட்டால் நீர்ச்சுருக்கு நிச்சயம். நமது உடம்பில் சிறுநீரகத்தின் காரகர் சுக்கிரன் என்பது குறிப்பிடத்தக்கது.
5. செவ்வாய் சுக்கிரனின் நட்சத்திரங்களில் நின்று அவருக்கு சனியின் பார்வை சேர்க்கை ஏற்பட்டால் சிறுநீரக அழற்சி மற்றும் நீர்ச்சுருக்கு நோய் ஏற்படுகிறது.
6. சந்திரன் கேது சாரம் பெற்று அவரை உஷ்ண கிரகங்கள் கடக்கும்போதெல்லாம் நீர்ச்சுருக்கு நோய் ஏற்படுகிறது.
7. சூரியனின் நட்சத்திரங்களான கிருத்திகை, உத்திரம், உத்திராடத்தில் லக்னமோ அல்லது ராசியோ அமைந்து அந்த அந்த நக்ஷத்திரங்களை சுக்கிரன் அல்லது செவ்வாய் கடக்கும்போது நீர்ச்சுருக்கு நோய் ஏற்படுகிறது.
8.
நெருப்பு ராசிகளான மேஷம், சிம்மம், தனுசு 6/8/12. வீடுகளாக அமையப்பெற்றவர்களுக்கு அந்த வீடுகளைக் கோசாரத்தில் சுக்கிரன் கடக்கும்போது நீர் சுருக்கு நோய் ஏற்படுகிறது.
9. சந்திரன் 6/8/12 அதிபதிகளாகி அவர் கோச்சாரத்தில் நெருப்பு கிரக சேர்க்கை பெறுவது மற்றும் நெருப்பு ராசிகளைக் கடக்கும்போது நீர்ச்சுருக்கு நோய் ஏற்படுகிறது.
10. பொதுவாகவே எந்த ராசியாக இருந்தாலும் ஜெனன சந்திரனை கோசாரக சூரியன் மற்றும் செவ்வாய் கடக்கும்போது நீர்ச்சுருக்கு நோய் ஏற்படுகிறது.
ஜோதிட பரிகாரங்கள்:
1. சென்னையில் இருப்பவர்கள் மயிலாப்பூரிலிருந்து திருவல்லிக்கேணி செல்லும் டாக்டர் நடேசன் சாலையில் அமைந்துள்ள தீர்த்தபாலீஸ்வரர் ஆலயத்திற்கு திங்கள் கிழமையில் சென்று வணங்கி வர நீர்க் கடுப்பு நோய் ஏற்படுவது குறையும். மேலும் அபிஷேகத்திற்கு இளநீர், பால் வாங்கி தருவது கூடுதல் பலனாகும்.
2. நீர்ச் சுருக்கு நோயிற்கு சந்திரனின் காரகமான நீரை நிறையக் குடிப்பது மற்றும் நீர் மோர் நிறையக் குடிப்பது சிறந்த பரிகாரமாகும்.
3. சுக்கிரனின் காரகம் பெற்ற இளநீர் மற்றும் பழரசம் அருந்துவது சிறந்த பரிகாரமாகும்.
4. பெண்கள் வெள்ளிக் கிழமையிலும் ஆண்கள் சனிக்கிழமையிலும் எண்ணைத் தேய்த்துக் குளிப்பது.
5. சுக்கிரனின் காரகம் பெற்ற குங்கிலிய பற்பம், நன்னாரி சர்பத், வெட்டிவேர் கலந்த நீர் பருகுவது.
6. நெருஞ்சில் கஷாயம், நீர்முள்ளி கஷாயம் சந்திரபிரபா வடி போன்ற மருந்துகளை உட்கொள்வது.
7. பானகம், நீர் மோர், இளநீர் போன்றவற்றை சுக்கிரனுக்கு நிவேதனம் செய்து வினியோகம் செய்வது.
8. சந்திரனின் காரகம் பெற்ற குளியல் தொட்டியில் சிறிதுநேரம் நீரில் அமிழ்திருப்பது.
9. சந்திரனின் காரகம் பெற்ற பி-2 எனப்படும் ரிபோஃப்ளோவின் எனும் மாத்திரை எடுத்துக்கொள்வது.
10. சுக்கிரனுக்கு குங்கிலிய தூபம் ஏற்றுவது.
11. சனியின் காரகம் பெற்ற சுண்ணாம்பைக் கால் கட்டை விரலில் தடவிக்கொள்வது மற்றும் விளக்கெண்ணெய்யை உள்ளங்காலில் தடவிக்கொள்வது போன்றவை நீர்ச்சுருக்கு நோயை உடனடியாக குறைக்கும்.
12. வீட்டில் பறவைகள் அருந்த வசதியாக நீர் வைப்பது.
13. சனி சந்திர சேர்க்கை பெற்ற மண்பானை நீரைக் குடித்தால் உடல் உஷ்ணம் உடனே தணிந்து நீர்க் கடுப்பு நோய் அதிவிரைவில் குணமாகும்.
- அஸ்ட்ரோ சுந்தரராஜன்
Mobile 9498098786
WhatsApp 9841595510