Enable Javscript for better performance
40 ஆண்டுகளுக்குப் பிறகு அனந்தசரஸிலிருந்து அருள்பாலிக்க உள்ள அத்தி வரதர்!- Dinamani

சுடச்சுட

  

  40 ஆண்டுகளுக்குப் பிறகு அனந்தசரஸிலிருந்து அருள்பாலிக்க உள்ள அத்தி வரதர்!

  Published on : 08th April 2019 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  shrilordperumal


  காஞ்சிபுரத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த, திவ்ய தேசங்களில் ஒன்றாக வரதராஜப்பெருமாள் கோயில் திகழ்கிறது. ராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மூலவராக வரதராஜப்பெருமாளும் பெருந்தேவி தாயாரும் உள்ளனர். வேகவதி ஆறு, அனந்தசரஸ் திருக்குளம் ஆகியவை தீர்த்தங்களாக உள்ளன.

  சந்நிதிகள்: அழகிய சிங்கர், சக்கரத்தாழ்வார், வலம்புரி விநாயகர், தன்வந்திரி, திருவனந்தாழ்வார், கருமாணிக்க வரதர், மலையாள நாச்சியார் என அனைவருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. 

  தலச்சிறப்பு: இக்கோயில் காஞ்சியின் தெற்கே, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. மூலவர் வரதர் மேற்கு பார்த்தவாறு திருநின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தாயார் பெருந்தேவியார் கிழக்கு நோக்கிஎழுந்தருளியுள்ளார். திருவேங்கடம் என்றால் திருமலையையும், பெருமாள் கோயில் என்றால் அது காஞ்சிபுரத்தையும் குறிக்கும் அளவுக்கு இக்கோயில் சிறப்பு வாய்ந்தது. ஐராவதம் யானையே மலைவடிவம் கொண்டு நாராயணனைத் தாங்கி நின்றமையால் இத்தலம் அத்திகிரி என்றும் அழைக்கப்படுகிறது. தங்கப்பல்லி, வெள்ளிப்பல்லி தரிசனம் இக்கோயிலின் மற்றுமொரு சிறப்பாக உள்ளது.

  அனந்தசரஸில் அத்தி வரதர்:

  இக்கோயிலின் மிகச்சிறப்பாக போற்றப்படுவது அத்தி வரதர். இத்திருக்குளத்தின் அடியில் வீற்றிருக்கும் அத்திவரதர் பெருமாளை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும். ஏனெனில் அவர் பக்தர்களின் கண்ணுக்குப் புலப்படாது வீற்றிருப்பது அனந்தசரஸ் திருக்குளத்தின் அடியில். இக்கோயிலின் நூறுகால் மண்டபத்தின் வடக்கில் உள்ள இரண்டு குளங்களில் தென்திசையில் உள்ள நீராழி மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் உள்ள மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு பக்தர்களின் எண்ணத்தோடு அருள்பாலித்து வருகிறார். இக்குளத்தில் நீர் எப்போதும் வற்றுவதில்லை. அதனால் பெருமாள் யார் கண்ணுக்கும் புலப்படமாட்டார். 

  பெருமாளின் திருமேனி மிகப்பெரிய அத்தி மரத்தால் வடிவமைக்கப்பட்டு, பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

  பிரம்மனின் யாகத் தீயில் இருந்து தோன்றியதால் சிறிது பின்னப்பட்டுவிட்டது. எனவே, அசரீரி மூலம் தன்னை ஆனந்த தீர்த்தத்தில் விடவிட்டு பழைய சீவரத்திலிருந்து சிலையை காஞ்சியில் பிரதிஷ்டை செய்யுமாறு பணித்துள்ளார் பேரருளாளன். அதனால்தான், பெரும் உஷ்ணத்தைத் தணிக்கவே தெப்பக்குளத்தில் வாசம் செய்வதாக ஐதீகம். பெருமாளை வெள்ளித்தகடு பதித்த பெட்டியில் சயனக் கோலத்தில் வைத்து அனந்த புஷ்கரணி மண்படத்தின் நடுவே நீரில் வைத்துள்ளனர். 


  அத்தி வரதர் உற்சவம் எப்போது? 

  ஆதி அத்திகிரி வரதர் உற்சவம் என்று அந்நாளில் அழைக்கப்பட்ட பிரசித்தி பெற்ற இந்த உற்சவம் எப்போது நடைபெறும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் தெரிவிக்கப்படவுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ரமணி தெரிவித்துள்ளார்.

  அதன்படி, வரும் ஜூலை, ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்கள் இந்த உற்சவம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  40 ஆண்டுகளுக்கு பிறகு 48 நாள்களுக்கு..

  பழைய சீவரப் பெருமாளை தேவராஜப் பெருமாள் என பிரதிஷ்டை செய்து விட்டனர். இந்த அனந்த தீர்த்தம் என்றும் வற்றாததால் நீரை இறைத்து விட்டு ஆதி அத்தி வரதரை வெளியே கொண்டு வருவர். வெள்ளித் தகடுகள் பதித்த பெட்டியில் சயனக் கோலமாக அனந்தசரஸ் திருக்குளத்தில் மூழ்கியிருக்கும் பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேலே வந்து, சயன மற்றும் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பார்.

  பேரருளாளன் அத்தி வரதரை வசந்த மண்டபத்தில் 48 நாள்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு வைப்பர். அதுபோல், முதலில் சயனக் கோலத்திலும், பிறகு நின்ற கோலத்திலும் தரிசனம் தந்தபின், மீண்டும் அனந்த தீர்த்தத்தில் பெருமாள் சயனிக்கச் சென்று விடுவார். 

  மிகவும் தொன்மையான இந்த அத்தி வரதர் உற்சவத்தில், திருவிழா வழிபாட்டுடன் சேர்த்து மொத்தம் 48 நாள்களுக்கு அத்தி வரதரை கண்குளிர தரிசனம் செய்யலாம்.

  கடந்த 1937, 1979-ஆம் ஆண்டுகளில் இந்த பிரசித்தி பெற்ற வைபவம் நடைபெற்றது. அதன்பிறகு, நிகழாண்டு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


  பிரம்மா பூஜித்த அத்தி வரதர்

  அனந்தசரஸ் புஷ்கரணிக்குள் ஒரு மண்டபம் அமைத்து அதில் ஸ்ரீ அத்தி வரதரை எழுந்தருளியிருக்கும்படி செய்துள்ளார்கள். இவரை இங்கு எழுந்தருளியிருக்கச் செய்தது பற்றி பலவாறு கூறப்பட்டு வருகிறது.

  வெள்ளைக்காரர்கள் ஆட்சிக் காலத்தில் கோயில் சிலைகள் அனைத்தையும் அவர்கள் நாட்டிற்குக் கடத்திச் சென்ற வேளையில், இந்த ஸ்ரீ அத்தி வரதரையும் நாடு கடத்திவிடுவார்களோ என்று அச்சத்தில் அப்போது இதனை ஆராதித்து வந்தவர்கள் இவரை பூமிக்கடியில் பள்ளம் தோண்டி புதைத்திருந்தனர். 

  பிற்பாடு சில காலம் கழிந்து அந்த இடத்தில் பெருமாள் இருப்பது சிலரால் கண்டு பிடிக்கப்பட்டு அவரை அங்கேயே ஆராதித்து வந்தார்கள் என்றும் அவருக்கு அதே இடத்தில் ஒரு மண்டபம் கட்சி அதில் வைத்து பூஜித்ததாகவும் சொல்லப்படுகிறது.

   அந்த மண்டபத்தைச் சுற்றிலும் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கியதனால் அதையே ஒரு குளமாக மாற்றி நிரந்தரமாக தண்ணீருக்குள்ளேயே அவரை வைத்துவிட்டதாகவும், 40 வருடத்திற்கு ஒருமுறை அவரை வெளியே எடுத்து ஒரு மண்டல காலத்திற்கு அவரை பூஜித்ததாகவும், பின்னர் அதற்குள் அவரை வைத்துவிட்டதாகவும் ஒரு சிலரால் கூறப்பட்டு வருகிறது.

  இதைப்பற்றி மற்றொரு சாரார் கூறுவதாவது:

  இப்போது கோயில் இருக்குமிடம் ஒரு காலத்தில் (பல நூற்றாண்டுகளுக்கு முன்) அத்திமரங்கள் சூழ்ந்த மலையாக இருந்ததாகவும், அப்போது பிரம்மா யாகம் செய்து அந்த யாகத்திலிருந்து இவர் (ஸ்ரீ அத்தி வரதர்) வந்ததாகவும், அதிலிருந்து அவரை பிரம்மா பூஜித்து வந்ததாகவும் ஒருசில காலத்திற்குப் பின்னர் ஸ்ரீ அத்திகிரி வரதர் அர்ச்சகர் கனவில் வந்து தான் பிரம்மாவின் யாக குண்டத்திலிருந்து வந்ததால், தனது உடல் எப்போதும் தகிப்பதாகவும், எனவே தன்னை தினந்தோறும் மூன்று வேளையும் நூற்றுக்கணக்கான குடம் நீர்கொண்டு அபிஷேகம் செய்யும்படியும், அவ்வாறு முடியாமல் போனால் நிரந்தரமாக புஷ்கரணியில் (குளத்து நீரில்) எழுந்தருளச் செய்யும்படியும் ஆணையிட்டதாகவும், அவருக்கு தினந்தோறும் மூன்று வேளையும் நூற்றுக்கணக்கான குடம் நீர் கொண்டு அபிஷேகம் செய்வது கஷ்டமாக இருந்ததால் அவரை குளத்தில் எழுந்தருளச் செய்வது என்று முடிவு செய்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. 

  ஆனால், அவரை குளத்தில் எழுந்தருளச் செய்துவிட்டால் மூலவருக்கு எங்கு போவது என்று அந்த அர்ச்சகர் கவலைப்படவே, மீண்டும் வரதர் கனவில் வந்து பக்கத்தில் சில மைல் தொலைவில் "பழைய சீவரம்' என்னும் ஊரில் மலைமேல் தன்னைப்போலவே ஒரு பிரதிபிம்பமாக ஒரு வரதர் இருப்பதாகவும் அவரை கொண்டுவந்து பிரதிஷ்டை செய்து பூஜித்துக் கொள்ளும்படியும், தன்னை 40 வருடங்களுக்கு ஒருமுறை வெளிக்கொண்டுவந்து ஒரு மண்டல காலம் வெளியில் பூஜை செய்து விடும்படியும் ஆணையிட்டதாகவும் அதன்படியே பழைய சீவரத்திற்குச் சென்று பார்த்தபோது அவர்கள் பெருமாள் கூறிய அதே இடத்தில் இவரைப் போலவே ஒரு பிரதிபிம்பமாக இருந்தவரை கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து (தற்போது உள்ள மூலவர்) இவரைத் தண்ணீருக்குள் எழுந்தருளச் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

  தற்போதும் வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தினத்தன்று  காஞ்சியில் உள்ள வரதராஜப் பெருமாள் காஞ்சியிலிருந்து பழைய சீவரத்திற்கு பார்வேட்டை உற்சவமாக சென்று வருவது இதன் அடிப்படையில்தான் என்று கூறப்படுகிறது. காஞ்சிபுரம் கருட சேவையும், தேர் உற்சவமும் மிகவும் புகழ்பெற்றவையாகும். இன்றும் லட்சக்கணக்கான மக்கள் வந்து இந்த சேவையை தரிசித்துச் செல்வதன் மூலம் இதனுடைய சிறப்பு நமக்குப் புலனாகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai